உலகிற்கு வேளாண்மையைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள்

உலகிற்கு வேளாண்மையைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600113.

(தினத்தந்தி நாளிதழ், 04.09.2019)

            இப்பூமியில் மனித இனம் தோன்றி பல இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. தோன்றிய காலம்முதல் மனித இனம் கடினமான வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தது. நாடோடிகளாய் அலைந்து திரிந்தும், விலங்குகளை வேட்டையாடியும், தாவரங்களை உண்டும் உயிர் வாழ்ந்திருந்தது. இப்போராட்ட வாழ்க்கையை மாற்றியமைத்து, மனித இனம் அமைதியுடன் கூடி வாழவும், பல்கிப் பெருகவுமான மாபெரும் நுட்பத்தைக் கண்டறிந்தது. அதுதான் வேளாண்மை. உலகின் பல்வேறு கண்டங்களில் வாழ்ந்திருந்த மனித இனம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்னால் 11 இடங்களில் முதன்முதலாக வேளாண்மை செய்யச் தொடங்கினார்கள். அவற்றில் ஒன்று தென்இந்தியா என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

            தமிழ்நாட்டில் பயிரிடப்படும் சாகுபடிப் பயிர்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், “சிறுதானியங்களான கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், தினை, சாமை பயிறு வகைகளான பாசிப் பயிறு, உளுந்து, அவரை போன்றவை தமிழ்நாட்டில்தான் முதன்முதலாகச் சாகுபடி செய்யப்பட்டு உலகிற்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று உறுதி செய்துள்ளனர். அதேபோன்று, நெற்பயிரும் இங்கேதான் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது. “அரிசி” என்ற தமிழ்ச் சொல்லே உலகின் அதிக மொழிகளில் ‘நெல்’ தானியத்தை குறிக்கும் சொல்லாக வழங்கி வருகின்றது. மேலும், தமிழ்நாட்டின் ‘ஆதிச்சநல்லூரில்’ மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் நெற்பயிர் வரையப்பட்ட பானை ஓடு கண்டறியப்பட்டது. அங்கு, நெல் மற்றும் சிறு தானியங்களின் உமியும் கிடைத்தது. பழனிக்கு அருகிலுள்ள ‘பொருந்தல்’ கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் சுமார் 2 கிலோ நெல் கிடைத்தது. இந் நெல்மணிகளை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வகம் இது, கிறித்துப் பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவித்தது. இதுவே இன்றுவரையிலும் கிடைத்துள்ள மிகப் பழமையான தொல்லியல் நெல் சான்று ஆகும். இது, அக்காலத்தில் பழந்தமிழர் சமூகமாய் கூடி வாழ்ந்து, வேளாண்மையில் திறனுடன் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிவிக்கிறது.

            வேள் என்றால் மண்; வேளாண் என்றால் உதவி. வேளாண்மை என்றால் மண்ணை ஆளுதல். வேளாண்மை செய்து, உலகிற்கே உணவிட்டு, உயிர்கொடுத்து உதவிய  உழவுக் குடியைப் பழந்தமிழ்ச் சமூகம் போற்றியது. நீர்வளத்தைப் பெருக்கியும் அங்கு உழவுக் குடியை அமர்த்தியும் நாட்டின் வளம் பெருக்கினர் அரசரும். பண்டைத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டும் செவ்வியல் இலக்கியங்களும் உழுதல் தொடங்கி அறுவடை வரையிலான பல்வேறு வேளாண்மை மரபு நுட்பங்களைப் பதிவுசெய்துள்ளன.

            உலகத் தொழில் அனைத்திலும் உயிர்வாழத் தேவையான முதன்மைத் தொழிலாக வேளாண்மையைப் பழந்தமிழர் போற்றினர். எனவே,

                     “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

                      உழந்தும் உழவே தலை” என்றார் வள்ளுவர்.

உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க புதர்களையும், கரம்புகளையும் காடுகளையும் அழித்து, பண்படுத்தி விளைநிலம் உண்டாக்கினர். அவ்விடங்களில் நீர் நிலைகளை ஏற்படுத்தினர். அங்குக் கோயில்களை அமைத்து, வேளாண் குடிகளை அமர்த்தினர். இவற்றை, காடுகொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி என்று பதிவு செய்கிறது பட்டினப்பாலை. பண்டைய உழவர்கள் தம் தொழிலில் திறம்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். நிலத்தின் தன்மை அறிந்து பயிர்செய்து நாட்டின் வளம் பெருக்கினர். தான் பயிர்செய்யும் நிலத்தின் தன்மையை அறிந்திருப்பவரே சிறந்த உழவர் என்கிறது நான்மணிக்கடிகை.

            உழவர்கள் தமக்கு உரிமையுடையதாக எருதுகளை வைத்திருந்தனர். அவ்வாறு வைத்திருப்பவரே உயர்வாகக் கருதப்பட்டார். அவருடைய வேளாண்மை,                “ஏருடையான் வேளாண்மை தானினிது” என்று சிறப்பிக்கப்பட்டது.  உழவர்கள் எருதுகளைக் கிடைத்தற்கரிய துணைவர்களாகப் போற்றிப் பாதுகாத்தனர். எருதை அரிய பொருள் என்கிறது திரிகடுகம்.  

            உழவியல் நுட்பங்களில் முதன்மையானது உழுதல் நுட்பம். ஆழ உழுதல், பலமுறை உழுதல், ஊறிய நிலம் உழுதல், ஆறப்போடுதல், கட்டிகளைக் களைதல், சமன் செய்தல் எனப் பல்வேறு நுட்பங்களைக் காட்டுகின்றன பழந்தமிழ் இலக்கியங்கள்.  கலப்பையின் கொழு ழுமுவதும் மூழ்கும் அளவில் ஆழமாக உழ வேண்டும் என்பதை,  ”நாஞ்சில், உடுப்பு முக முழுக்கொழு மூழ்க ஊன்றி”  என்கிறது பெரும்பாணாற்றுப்படை. ஆழ உழுவதைப் போலவே, பூமி நெகிழும்படி பலமுறை நன்கு உழுத பின்னரே விதைக்க வேண்டும். அவ்வாறு உழும்போது மண் வளமடைவதோடு, மண்ணே எருவாகவும் மாறும் என்பது முன்னோர் கண்ட வேளாண்மை நுட்பம். இதனை, “பலகாலும் உழுதலால் பயன்படும் நிலம் போல” என்கிறது ஐங்குறுநூறு. நிலத்தினை ஆழமாகவும், மண் மேல்-கீழ் புரளும்படியும் பலமுறை உழுவதோடு, உழுது உடனே பயிரிடாமல், நிலத்தினை நன்கு ஆறப்போட வேண்டும், அவ்வாறு விடுவதால் அம்மண்ணே எருவாக மாறும் என்ற உழவியல் நுட்பத்தினை அறிவிக்கிறார் வள்ளுவரும்.

          வறட்சியான நிலத்தில் மேலோட்டமாக உழுவதால் எந்தப் பயனும் இல்லை.   ஆழமாக உழுவதற்கும், விதைப்பதற்கும் ஈரம் தேவை. எனவேதான், ஈர நிலத்தில் உழுது விதைத்தலை  நல்லோர் சொல் கேட்பதற்கு ஒப்பாக காட்டுகிறது நாலடியார். எனவே, நல்ல மழை பெய்து, நிலம் ஊறிய காலை வேளையில், நொச்சியின் தழைகளைச் சூடிக்கொண்டு புனங்களில் ஏருழுதனர். ஈரம் காய்வதற்குள் நிலத்தை உழுதுப் பண்படுத்திட வேண்டும் என்ற விரைவில் உழுதுகொண்டிருக்கும் உழவனை “ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து, ஓரேர் உழவன் போல” என்கிறது குறுந்தொகை.

       உழுது பண்படுத்திய நன்செய் நிலத்தில் கட்டிகளை உடைக்கவும் மண்ணைச் சமன் செய்யவும் ‘தளம்பு’ என்ற கருவியைப் அக்கால உழவர்கள் பயன்படுத்தினர். இக்கருவியைப் பயன்படுத்தியபோது அதில் வாளை மீன்கள் மாட்டி வெட்டுப்பட்டதைப் புறநானூறு பதிவுசெய்கிறது. இவ்விதம் பண்படுத்தப்பட்ட நிலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல வித்துகள் விதைக்கப்பட்டன. எப்படிப்பட்ட வறுமை நிலையிலும் விதைதானியங்களைச் சமைத்து உண்டுவிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறது இனியவை நாற்பது.

            பயிருக்கு நீர் என்பது உடலுக்குக் குருதிபோல. பயிருக்குத் தேவையான அளவில் நீர்ப் பாய்ச்சுதலும் நீர்மேலாண்மை திட்டங்களை மேற்கொள்வதும்  வேளாண்தொழிலில் உயிர்நாடி. பழந்தமிழர் இவற்றில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்ந்தனர். நீர்ப்பாய்ச்சுவதால் விளைநிலம் செழிப்படையும் என்பதை, “நீரான் வீறெய்தும் விளைநிலம்” என்கிறது நான்மணிக்கடிகை. வேளாண்மையே இந்த உலகம் உயிர்த்திருக்க அடிப்படை. வேளாண்மைக்கு நீரே அடிப்படை என்பதால், வரப்புகள் உயர்வாக அமைக்க அறிவுறுத்தப்பட்டது. ‘வயல்களின் வரப்பானது உயர்த்திருக்க நீர் நிலைத்து நிற்கும்; அங்ஙனம் நீர் மிகுந்து உயர்ச்சி அடைந்தால், நெற்பயிரானது வளர்ந்து உயர்வடையும். நெல் நல்ல விளைவைக் கொடுக்கக் உழுகுடி செழிப்படையும். உழுகுடி உயர்வடைந்தால் அரசனும் உயர்வான்’ என்று, இந்தச் சமூகத்தின் வளர்ச்சியே நீரைக் காப்பதிலும் ஏரைக் காப்பதிலும்தான் உள்ளது என்பதை உலகிற்கு வலியுறுத்துகிறது சிறுபஞ்சமூலம்.

      பயிரிலிருந்து களைகளைப் பிரித்தறிந்து நீக்கினால்தான் விளைச்சலைப் பெருக்கமுடியும். எனவே, பயிரை ஒழுங்கு செய்வதற்கும், களையெடுப்பதற்கும் பலக் கிளைகளையுடைய சிறிய வகைக் கலப்பை பயன்படுத்தப்பட்டது. களைகளைக் களையப் பயன்படும் ‘துளர்’ என்ற கருவியை, “தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை’ என்கிறது பெரும்பாணாற்றுப்படை. வள்ளுவரோ, கொலைத் தொழில் புரியும் கொடியவரை அரசன் தண்டிப்பதைப் போன்றதே விளைநிலத்தில் தோன்றும் களைகளை அழிப்பது என்கிறார்.

            விளைச்சலைப் பெருக்குவதற்கு இன்றியமையாதது எரு இடுதல். “தாது எரு மறுகின்”,  “பைந்தாது எருவின்”“தாது எரு மறுகின் மூதூர்”, “இடு முள் வேலி எருப் படு வரைப்பின்” என்பன போன்ற இலக்கியக் குறிப்புகள், ஆவினங்களின் கழிவுகளையும் தழைகளையும் பதப்படுத்தி,  பாதுகாத்து, பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்திய நுட்பங்களைத்  தெரிவிக்கின்றன.  “ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின், நீரினும் நன்றதன் காப்பு” என்கிறது குறள். மேலும், நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து நிலத்திற்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அந்நிலம் மனைவி போல் தன்னுள் வெறுத்து பிணங்கி விடும் என்றும் அறிவுறுத்துகிறார். பண்டைத் தமிழர் வேளாண் மேலாண்மை நுட்பத்தினால், ஒரு பெண் யானை படுத்துறங்கும் சிறிய இடத்தில் ஏழு ஆண் யானைகள் உண்ணத்தக்க விளை பொருளை உற்பத்தி செய்யும் ஆற்றலையும் நுட்பத்தினையும் பெற்றிருந்ததை, “ஒரு பிடி படியும் சீறிடம், எழு களிறு புக்கும் நாடு” என்று புகழ்கிறது புறநானூறு.

             கலப்பு மற்றும் சுழற்சிமுறை வேளாண்மையே மண்வளத்தைப் பேண சிறந்த வழி என்கிறது இன்றைய வேளாண் அறிவியல். இத்தகைய ஊடுபயிர்முறையும் சுழற்சிமுறை வேளாண்மையும் அக்காலத்து வேளாண் நுட்பமாக இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. சுழற்சிமுறையில் நெல் மற்றும் தினை போன்றவற்றிற்கு அடுத்து உழுந்து பயிரிடப்பட்டது. வேளாண் தொழிலில் நீர்ஏற்றக் கருவிகள், உழுக் கருவிகள் முதலாகப் பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெரியவகை எந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட செய்தியினையும் காணமுடிகிறது. கரும்பிலிருந்து, கரும்புச்சாற்றைப் பிரித்தெடுக்க யானையின் பிளிரலைப் போல ஒலியெழுப்பும் ‘கரும்பு பிழி எந்திரங்கள்’ வடிவமைக்கப்பட்டிருந்தன.

            விளைநிலம் விரிவாக்கம், நீர்நிலை உருவாக்கம், மண்வளம் பேணுதல், வித்துக்களைத் தேர்ந்தெடுத்தல், பயிருடுதல், பாத்திக்கட்டி நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப்பாதுகாப்பு, உரிய நேரத்தில் அறுவடை, தானியங்கள் சேமிப்பு, கருவிகள் மற்றும் எந்திரப் பயன்பாடு என்று வேளாண் மேலாண்மையில் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கியதை மேற்கண்ட சான்றுகளின்வழி அறியமுடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உழுகுடியை அக்காலச் சமூகம் போற்றியது. உழுகுடி உயர்ந்தால் அரசு உயரும் என்பதை அரசனும் உணர்ந்திருந்தான்.  ஆம்! உழுகுடியைக் காப்பது நம் உயிரைக் காப்பது.

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!