
இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்
உலகத் தமிழ்ச் சிறகத்தின் இரண்டாமாண்டு கலை இலக்கிய வரலாற்று விழா இந்தோனேசியாவில் மேடான் நகரில் ஆகத்து 9,10,11 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, இலங்கை, நார்வே, நெதர்லாந்து, அமேரிக்கா, பிரான்சு முதலான பல்வேறு நாடுகளில் வாழும் தமிழன்பர்களும் இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முதல் நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் மேடான் நகரில் கிட்டத்தட்ட 60 வருடங்கள் பள்ளியாக இயங்கிவந்த குருபக்தி மையத்தில் உலகத் தமிழ்ச் சிறகத்தின் சார்பில் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ. மணவழகன் (இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பொறுப்பாளர் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், சென்னை) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்றைய தலைமுறை தமிழ் குழந்தைகள் கலந்து கொண்டனர். இனி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தமிழ் வகுப்புகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் உலகத் தமிழ்ச் சிறகம் அமைப்பின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும்.
இந்த விழாவிற்குப் புதுவைப் பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்புமிகு க.இலட்சுமி நாராயணன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்களும், தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் திருமிகு இராம. சுகந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்தோனேசியத் தமிழர்களான மேனாள் தூதரக அதிகாரியான திரு.சிவாஜிராஜா, மருத்துவர் அசோகன், திரு. சுபேந்திரன், திரு. மதியழகன், திரு. செல்வராஜா போன்றோர் உலகத் தமிழ்ச் சிறகத்தின் செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.


