ஆ.மணவழகன் – அறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன் (Dr.A.Manavazhahan) அவர்கள், இளந்தலைமுறை தமிழாய்வாளர். தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியம், கணினித்தமிழ் ஆகிய துறைகளில் சிறந்த ஆய்வுகளோடு, படைப்பிலக்கியத்திலும் திறன் படைத்தவர். சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த இவர், பள்ளிக் கல்வியைக் கெங்கவல்லி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்றார். பின்னர், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், திருச்சி, தேசியக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்வழி முதுகலை சமூகவியல் பட்டமும் பெற்றுள்ளார்.

கணினித்தமிழில் ஆர்வம் உள்ள இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். அதன்பின் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இங்குத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள  ‘பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின்’ பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார்.

பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’(2005), ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’(2007), ‘தொலைநோக்கு’(2008), ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்’(2010), ‘தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’(2013),  ‘பதினெண் கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’(2015), ‘பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு’(2016), ‘தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும்‘(2020), ‘பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையையும்’ (2020),  ‘Ancient Tamils Lifestyle and Multifactorial Management‘ (2020) ஆகிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ‘கூடாகும் சுள்ளிகள்’ (2010) என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

பதிப்பாசிரியராக, தமிழ்மொழி வரலாறு (இந்திய ஆட்சிப்பணி கருவிநூல்) முதலிய சுமார் 15 நூல்களைப் பதிப்பித்துள்ளார். தேசிய மற்றும் உலக அளவிலான கருத்தரங்குகள் பலவற்றில் 75-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். மேலும், மலேசியா, அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.  ‘உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்)’, ‘காந்தள் (தமிழ் மொழிக் கையேடு)’, ‘சொல்லோவியம் (படவிளக்க அகராதி)’ போன்ற கணினித்தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதியுதவியோடு 1.பழந்தமிழர் வாழ்வியல், 2.பழந்தமிழர் நீர்மேலாண்மை, 3.பழந்தமிழர் மருத்துவம், 4.பழந்தமிழர் ஆட்சித்திறன், 5.பழந்தமிழர் போரியல், 6.பழந்தமிழர் ஐந்திணை வாழ்வியல், 7.பழந்தமிழர் வேளாண் மேலாண்மை, 8.பழந்தமிழர் கட்டடக்கலை, 9.பழந்தமிழர் நெசவுத் தொழில்நுட்பம், 10.பழந்தமிழர் மரபுக் கலைகள்  ஆகிய ஆவணப் படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக 2007-2008 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வறிஞர் விருது’ இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மூலம் ‘இளம் படைப்பாளி’யாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய ‘தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’ என்ற நூல், தமிழக அரசின் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த திறனாய்வு நூலுக்கானப் பரிசினையும், ‘பதினெண் கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ என்ற நூல், தமிழக அரசின் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த திறனாய்வு நூலுக்கானப் பரிசினையும் பெற்றுள்ளன. சிறந்த தமிழியல் ஆய்வுப் பணிகளுக்காக ‘இளம் ஆய்வு அறிஞர் விருதினை’ தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு இவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகளால் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது, ‘கவிச்செல்வர்’ விருது, ‘புலியூர் கேசிகன்’ விருது, ‘நற்றமிழ்ச் செல்வர்’ விருது,  ‘இலக்கியச் செம்மல்ய விருது’, யபண்பாட்டுக் காப்பாளர் விருது போன்றவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவருடைய நெறியாளுகையின்கீழ் ஐந்து மாணவர்கள் முனைவர் பட்டமும் 35 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர்.

தமிழியல்.காம் என்பது இவரது இணையப் பக்கமாகும்.

https://ta.wikipedia.org/s/13a2

error: Content is protected !!