தமிழர் மேலாண்மையியல்
(கோட்பாடுகள் – இலக்கிய அணுகுமுறைகள்)
ஆசிரியர் – முனைவர் ஆ.மணவழகன்
மேலாண்மை என்பது மனித வாழ்வியலின் அனைத்து நிலைகளிலும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. ஒருவர் அல்லது ஒன்றின் வெற்றி என்பது சிறந்த மேலாண்மையியல் செயற்பாடுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. ‘மேலாண்மை’ என்ற கலைச்சொல்லும் மேலாண்மையை ஒரு முறைப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் அறிவியல் முறையில் தனித்துவமாக அணுகும் ‘மேலாண்மையியல்’ எனும் துறையும் இந்த நூற்றாண்டுக்கு உரியவை. எனினும், இதன் தொன்மையானது மனித இனத்தின் நாகரிகத் தொன்மையோடு தொடர்புடையதாக உள்ளது.
மனித இனம், விலங்காண்டி நிலையிலிருந்து காட்டுமிராண்டி நிலைக்கு மாறிய சமூக யுகத்திலேயே அவனின் மேலாண்மையியல் செயல்பாடுகளும் முகிழ்க்கத் தொடங்கின எனலாம். கூடிவாழ்தல், குழுவாக வேட்டையாடுதல், வாழ்விடங்களைத் தெரிவுசெய்தல், நிலைத்த குடியிருப்புகளை உருவாக்குதல், உணவு உற்பத்தி முதலிய தொடக்ககால முன்னெடுப்புகள் யாவும் மனித இனத்தின் மேலாண்மையியல் செயல்பாடுகளே. தேவை மற்றும் இன்றியமையாமையின் விளைவால் மேலாண்மையியல் என்பது இன்று முறைப்படுத்தப்பட்ட ஒரு கல்விமுறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன காலத்தில் மேலாண்மை என்பது நிறுவனம் சார்ந்த ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு, கோட்பாடுகளின் வழி முன்னெடுக்கப்படுகிறது. அதனால், ‘நிருவாகத்தின் இதயமே மேலாண்மைதான்’ என்று சுட்டப்படுகிறது. எனினும், இன்றைய சூழலில் தனியோர், குடும்பம், சமூகம் என்ற அனைத்து நிலைகளிலும் மேலாண்மைச் செயல்நெறி மிக இன்றியமையாததாக உள்ளது. தனியோரின் வெற்றி, குடும்பத்தின் மேன்மை, அரசின் நல்லாட்சி, நிறுவனத்தின் வளர்ச்சி என யாவும் சிறந்த மேலாண்மையின் விளைவே.
இவ்விதம், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கும் மேலாண்மையியல் குறித்தும் தொல்தமிழரின் மேலாண்மையியல் செயல்பாடுகளையும் இடைக்கால இலக்கியங்கள் வழி அறியலாகும் மேலாண்மையியல் கூறுகளையும் நவீனக் கோட்பாடுகளின் வழி விளக்குவதை நோக்கமாகக் கொண்டு, ‘தமிழர் மேலாண்மையியல் (கோட்பாடுகள்-இலக்கிய அணுகுமுறைகள்)’ என்ற இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற நூல், சங்க இலக்கியத்தை மேலாண்மையியல் நோக்கில் அணுகிய தமிழின் முதல் நூல் ஆகும். இந்நூலில், சங்க இலக்கியத்தின் அடையாளப்படும் துறைகளுள் சில துறைகள் மட்டும் மேலாண்மையியல் நோக்கில் அணுகப்பட்டிருந்தன. ‘தமிழர் மேலாண்மையியல்’ எனும் இந்நூல், மேலாண்மையியல் வரலாறு, கோட்பாடுகள், பண்புகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குவதோடு, பரந்துபட்ட நோக்கில் தமிழர்தம் மேலாண்மையியல் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விளக்கி உரைக்கிறது. சங்ககாலம் தொடங்கி இடைக்காலம் வரையான தமிழரின் அறிவு மரபை, மேலாண்மையியல் செயல்பாடுகளைத் துறைதோறும் முறைப்படுத்தி வழங்குகிறது.
தமிழரின் பன்முக மேலாண்மையியல் சிந்தனைகளை முழுமையாக அறிய இந்நூல் வழிவகுக்கும். தமிழியலின் துறைசார் கோட்பாடுகளைப் பிறதுறைக் கோட்பாடுகளோடும் மேலாண்மையியல் சிந்தனைகளோடும் ஒப்பிட்டு அறியவும் ஆய்வு மேற்கொள்ளவும் இந்நூல் அடிப்படைத் தரவகமாக அமையும். தமிழரின் மேலாண்மையியல் சார்ந்த பல்வேறு புதிய ஆய்வுக் களங்களையும் இதன்வழி அறிந்துகொள்ள முடியும்.
நூலில் முதல் அலகான மேலாண்மையியல் என்பது, மேலாண்மை அறிமுகம் – மேலாண்மைக்கு வழங்கப்படும் விளக்கங்கள் – மேலாண்மையின் தொன்மை மற்றும் வளர்ச்சி – மேலாண்மை யுகங்கள் – மேலாண்மையின் இன்றியமையாமை – வரையறைகள் – கோட்பாடுகள் – பண்புகள் – மேலாண்மையியலுக்கும் நிருவாகவியலுக்குமான வேறுபாடுகள்- இலக்கியத்தில் மேலாண்மைக் கூறுகளை அணுகும் முறைகள் ஆகியவற்றை இயம்புகிறது.
சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்துவமான வாழ்வியலைப் பேசுபவை. இயற்கையே அதன் முதன்மைக் களம். எளிய மக்களின் வாழ்வியல் முதல், பெருவேந்தர்களின் வாழ்வியல் வரையான அனைத்தும் அதன் பாடுபொருள்கள். தமிழர் நாகரிகத் தொன்மை, பண்பாட்டுத் தொன்மை, அறிவு மரபின் தொன்மை போன்றவற்றிற்கான முதல் மற்றும் முதன்மைச் சான்றுகளாக விளங்குபவையும் சங்க இலக்கியங்களே. அவ்வகையில், தமிழரின் மேலாண்மையியல் சிந்தனைகளுக்கும் இவையே முதன்மைத் தரவுகளாய்த் திகழ்கின்றன. எனவே, நூலின் இரண்டாவது அலகு, சங்கத் தமிழரின் வேளாண் மேலாண்மை, நெசவுத் தொழில்நுட்ப மேலாண்மை, கட்டடக் கலையியல் மேலாண்மை, மருத்துவவியல் மேலாண்மை, நீர்மேலாண்மை ஆகியவற்றை நவீன மேலாண்மையியல் சிந்தனைகளின் அடிப்படையில் விரிவாகப் பேசுகிறது.
“திட்டமிடத் தவறுபவர்கள் தோல்வி அடைவதற்குத் திட்டமிடுகிறார்கள்” என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். திட்டமிடுதல் என்பது, ‘கூடி வினைபுரிதல்’ என்ற நிறுவனம்சார் செயல்பாடு மட்டுமல்ல, அது தனியோரின் நடத்தையியல் சார்ந்ததாகவும் இருக்கிறது; அவரின் வெற்றிக்கும் வழிவகுக்கிறது. அவ்வகையில், நூலின் மூன்றாம் அலகானது திருக்குறளைக் களமாகக்கொண்டு தனிமனித மேலாண்மை, குடும்ப மேலாண்மை, அரசியல் மேலாண்மை, தொழில்துறை மேலாண்மை, கல்வியியல் மேலாண்மை, வாணிக மேலாண்மை, ஆட்சியியல் மேலாண்மை ஆகிய மேலாண்மையியல் கூறுகளை விளக்கி உரைக்கிறது.
சங்க இலக்கியங்களை நோக்கின் காப்பிய இலக்கியங்கள் பிற்காலத்தவை. தன்மையிலும் பாடுபொருள்களிலும் சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபடுபவை; இவை, புறச் சமயங்களின் எழுச்சியால் விளைந்தவை. காப்பியங்கள் ஒவ்வொன்றும் தனக்கென ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஆயினும் இவை, தமிழ்ச் சமூகத்தையும் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எதிரொலிக்கத் தவறவில்லை. அவ்வகையில், நூலின் நான்காவது அலகு, காப்பியங்களைக் களமாகக் கொண்டு, உணவு உற்பத்தி மேலாண்மை, உடை உற்பத்தி மேலாண்மை, உறைவிட மேலாண்மை, கலையியல் மேலாண்மை ஆகிய கூறுகளை முன்னிறுத்துகிறது.
நூலின் ஐந்தாவது அலகானது, பன்முக மேலாண்மையியல் நோக்கில் இடைக்கால இலக்கியங்களை அணுகுகிறது. இப்பகுதியில், பக்தி இலக்கியங்களில் உளவியல் மேலாண்மை, சித்தர் இலக்கியங்களில் உடல்நல மேலாண்மை, சிற்றிலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் மேலாண்மையியல் கூறுகள் அணுகப்பட்டுள்ளன. நிறைவாக, மேலாண்மையியல் கலைச்சொற்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ (ஆ.மணவழகன்) என்ற நூல், சங்க இலக்கியத்தை மேலாண்மையியல் நோக்கில் அணுகிய தமிழின் முதல் நூல் ஆகும். இந்நூலில், சங்க இலக்கியத்தின் அடையாளப்படும் துறைகளுள் சில துறைகள் மேலாண்மையியல் நோக்கில் அணுகப்பட்டிருந்தன. ‘தமிழர் மேலாண்மையியல்’ எனும் இந்நூல், மேலாண்மையியல் வரலாறு, கோட்பாடுகள், பண்புகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குவதோடு, பரந்துபட்ட நோக்கில் தமிழர்தம் மேலாண்மையியல் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விளக்கியுரைக்கிறது. சங்ககாலம் தொடங்கி இடைக்காலம் வரையான தமிழரின் அறிவு மரபை, மேலாண்மையியல் செயல்பாடுகளைத் துறைதோறும் முறைப்படுத்தி வழங்குகிறது.
தமிழரின் பன்முக மேலாண்மையியல் சிந்தனைகளை முழுமையாக அறிய இந்நூல் வழிவகுக்கும். தமிழியலின் துறைசார் கோட்பாடுகளைப் பிறதுறைக் கோட்பாடுகளோடும் மேலாண்மையியல் சிந்தனைகளோடும் ஒப்பிட்டு அறியவும் ஆய்வு மேற்கொள்ளவும் இந்நூல் அடிப்படைத் தரவகமாக அமையும். தமிழரின் மேலாண்மையியல் சார்ந்த பல்வேறு புதிய ஆய்வுக் களங்களையும் இதன்வழி அறிந்துகொள்ள முடியும்.
பதிப்பகம்:
அய்யனார் பதிப்பகம்
சென்னை, 600 088.
நூல் பெற – 9789016815 / 9080986069