தொடங்கிய இடத்திலேயே நிற்கின்றனவா கணினித் தமிழ்ப் பணிகள்! …
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கிய #கணினித்தமிழ்_ஆய்வு_வள_மையத்தில்
2000 முதல் 2003-ஆம் ஆண்டு வரை #ஆய்வு_வளமையராகப் பணியாற்றினேன்.
இந்தக் கணினித்தமிழ் திட்டத்திற்கான நிதியை அப்போதைய நடுவண் அரசு வழங்கியிருந்தது. இதன்மூலம், #சொல்வலை, #தேடுபொறி, #உருபனியல்_உருவாக்கி, #உருபனியல்_பகுப்பி, #தரவுத்தளம், #பிழைதிருத்தி, #உரையொலி முதலான 20க்கும் மேற்பட்ட கணினித்தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
கணினித் தமிழுக்கு அது கன்னி முயற்சி என்பதால் ஒவ்வொரு திட்டத்தின் விளைவும் 40 முதல் 60 விழுக்காடு அளவினதாக இருந்தது. கணினித் தமிழ் சார்ந்த அனைவராலும் அம்முயற்சி வெகுவாகப் பாராட்டப் பெற்றது. இப்பணிகளுக்காக எங்களுடைய ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர் டி.வி.கீதா அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு அறிவியல் தமிழ் விருது வழங்கிச் சிறப்பித்தது.
அதுபோல, நாங்கள் உருவாக்கிய மூன்று கல்விசார் குறுந்தகடுகள் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டன. அணு விஞ்ஞானியாக ஓய்வு பெற்றிருந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராகப் பணியேற்கும் முன்பாக அண்ணா பல்கலையில் சிறப்பு நிலைப் பேராசிரியராக அப்போது அமர்த்தப்பட்டிருந்தார். இச்சூழலில், நாங்கள் மேற்கொண்டிருந்த கணினித்தமிழ் திட்டப்பணிகளை வெகுவாகப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். நிற்க.
ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு முன்பாக கணினித் தமிழ் தொடர்பில் நாங்கள் எதைப் பேசினோமோ, எதையெல்லாம் தேவையென்று முன்னிறுத்தினோமோ, கணினித்தமிழ் வளர்ச்சிக்கு எவையெவை சிக்கல்கள், தடைகள் என்று அடையாளம் காட்டினோமோ அவையெல்லாம் இன்றும் அதே நிலையில் இருப்பது என்பது… வியப்பும் அதிர்ச்சியும் ஆதங்கமும் நிறைந்த உண்மை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட #பயன்பாட்டுத்_தமிழ் நிகழ்ந்தனவும் நிகழ வேண்டியனவும் கலந்தாய்வு நிகழ்வு இதனை உணர்த்தியது. எனில், கணினித்தமிழ் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லையா என்றால் ஒருசில இருக்கின்றன. ஆனால் அவையும்கூட பொதுவில் இல்லை (அ) திறந்த அணுகல் முறையில் (Open source ) இல்லை (அ) பயனாளர் நட்பு நிலையில் (user friendly) இல்லை என்ற நிலை.
விளைவு:
மீண்டும் மீண்டும் நாம் பேசியவற்றையே பேசுகிறோம், செய்தவற்றையே செய்கிறோம், நின்ற இடத்திலேயே நிற்கிறோம், அதுவும் தனித்தனித் தீவுகளாக நிற்கிறோம். அதனால், பெரு நிறுவனங்கள் மொழிப் புரிதலின்றி, பண்பாட்டுப் புரிதலின்றி சேவைகளை வாரி வழங்கி, பயனாளர்களை ஆட்கொள்கின்றன. தவறுகளை உண்மையென்று நம்ப வைக்கின்றன. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இது இன்னும் சிக்கலடையும். பொய்கள் உண்மைகளாகும்…

தேவை:
அரசின் வழிகாட்டுதலில் கணினி வல்லுநர்கள், மொழியியலாளர்கள், தமிழியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட முறையான #கணினித்தமிழ்ப்_பேரமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இதன் ஆக்கங்கள் அனைத்தும் திறந்த அணுகல் முறையில் பயனாளர்களுக்குச் சேரவேண்டும்.
குழுவின் மேற்பார்வையில் யார் வேண்டுமானாலும் ஆக்கங்களைத் தரம் உயர்த்தலாம் என்ற நிலை வேண்டும் (Open source).
இதுவரையில் தனியரால் மேற்கொள்ளப்பட்ட கணினித்தமிழ் ஆக்கங்கள் குறித்து நுண்ணாய்ந்து, உரிய தொகைகொடுத்து அதன் உள்ளீடுகள் பெறப்படுதல் வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் சில பணிகள் விரைந்து நடைபெறுதல் வேண்டும்.
-ஆ.மணவழகன்
04.09.2025
Add comment