நூலறி புலவன் நுண்ணிதின் கயிறிட்டு வகுத்த நெறி (தமிழர் கட்டடக்கலை மேலாண்மை)

நூலறி புலவன் நுண்ணிதின் கயிறிட்டு வகுத்த நெறி

(தமிழர் கட்டடக்கலை மேலாண்மை)

(அரிமா நோக்கு, பன்னாட்டு ஆய்விதழ். சனவரி 2022, பக். 5-12)

 முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை – 113.

மனிதகுல வரலாறு கற்கருவிகளைப் பயன்படுத்தியதில் தொடங்குகிறது என்றால், அவன் நாகரிக வரலாறு உடை உற்பத்தியிலும் உறையுள் தேட்டத்திலும் தொடங்குகிறது. மரப்பொந்துகளிலும், கற்குகைகளிலும் தன்னை ஒடுக்கியிருந்த மனிதன், தனக்கான இருப்பிடத்தைத் தானே அமைத்துக்கொள்ள முனைந்தபோது அவனின் நாகரிகம் முகிழ்க்கத் தொடங்கியது. மனிதன், சேர்ந்து வாழவும் பாதுகாப்பிற்கும் இனத்தை விருத்தி செய்துகொள்ளவும் தம் உடைமைகளைப் பாதுகாக்கவும் இருப்பிடம் என்ற ஒன்று தேவைப்பட்டது.  இருப்பிடம் அமைத்தல் என்பது வெறும் தற்காலத்தேவை மட்டுல்ல, அதுவொரு வாழ்வியல் முறை; மனிதன் கண்டெடுத்த இயற்கை அறிவியல். இடத்தேர்வு, சூழலியல் மேலாண்மை, வளம் என அனைத்தையும் ஆய்ந்து, நிலைத்த குடியிருப்பை ஏற்படுத்தியது மனிதனின் மரபு அறிவு. இம்மரபு அறிவு வளர்ச்சியே கட்டடக்கலை நுட்பங்களாகப் பின்னாளில் வளர்ந்தது.

பழந்தமிழ்ப் பாடல்களில் தமிழர் தங்கி வாழ்ந்த இடங்கள், ‘அகம், இல், இல்லம், உறையுள், உறைவிடம், கல்லளை, குடில், குரம்பை, குறும்பு, நெடுநகர், புக்கில், மனை, மாடம்’ எனப் பலவாறு குறிக்கப்படுகின்றன. தமிழர் வகுத்த அறுபத்து நான்கு கலைகளுள் கட்டடக் கலையும் ஒன்று. ‘சிற்பத் தொழில்’ என்பதனைக் கலைஞானம் அறுபத்துநான்கின் ஒன்று எனக் குறிப்பிட்டு ‘இல்லமெடுத்தல், கோயில் முதலியனக் கட்டுஞ் சாத்திரம்’ என மதுரைத் தமிழ்ப் பேரகராதி விளக்குகிறது. செதுக்குவேலை, கல்வேலை, கற்சிற்ப வேலை என இதற்கு விரிவும் கூறப்படுகிறது.

இத்தொழில் செய்வோரைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று ‘கண்ணுள் வினைஞர்’ என்பது. இயற்கைப் பொருள்களாலான திணைசார் இருப்பிடங்களில் தொடங்கும் தமிழரின் கட்டடக்கலை நுட்பங்களானது அடிப்படைத் தேவைக்கான உறையுள் என்பதோடு நின்றுவிடாமல், எழில்மிகு அரண்மனைகள், உயர் மாளிகைகள், எழுநிலை மாடங்கள், அகல்நெடுந் தெருக்கள், வடிவார்ந்த ஊர்கள், திட்டமிட்ட பெருநகரங்கள், வளம்மிகு பட்டினங்கள், உறுதியான கோட்டைகள், ஏற்றமிகு அரண்கள், பயன்மிகு நீர்நிலைகள், விண்ணளக்கும் கலங்கரை விளக்கங்கள், கலைகள் வளர்க்கும் அரங்குகள், ஆன்மீகம் வளர்க்கும் கோயில்கள் எனப் பரந்துபட்டவை.

திணைசார் குடியிருப்புகள்

            குறிஞ்சி நில மக்களின் குடியிருப்பு

மனிதனின் புகலிடமாகத் தொடக்கத்தில் மலைகள் இருந்தபோது குகைகளும், மரப்பொந்துகளும் அவனுக்குப் பாதுகாப்பளித்தன. சூழலைத் தன்வயப்படுத்தியும் சூழலுக்குத் தான் இயைந்தும் வாழக் கற்றுக்கொண்ட மனிதன், மலைகளில் தனக்கான நிலைத்த இருப்பிடத்தை அமைக்கத் தொடங்கினான். மலைசார்ந்த இயற்கை பொருள்களைக் கொண்டு உருவாக்கிய இருப்பிடத்தில் கூட்டமாக வாழத் தொடங்கிய அவன், வாழும் நிலத்திற்கேற்ப தனித்த வாழ்வியலையும் வகுத்தான். மலைசார்ந்த வாழ்வியலைக் ‘குறிஞ்சி’ எனப் பெயரிட்டு அழைத்தான் தமிழன். வாழும் சூழல், காலநிலை, தொழில்நிலை என்பவற்றிற்கு ஏற்பவும், திணைசார் பொருள்களுக்கு ஏற்பவும் அவனின் இருப்பிடங்களின் தன்மைகள் அமைந்தன.

குறிஞ்சி நிலக் குடியிருப்புகள் குடில்கள் எனப்பட்டன. இவற்றில் அணிலும், எலியும் உள்நுழையாதபடி ஈந்தின் இலைகளைக் கொண்டு கூரைகள் வேயப்பட்டிருந்தன. இவை, முள்ளம்பன்றியின் முதுகைப் போன்ற புறத்தை உடையன. நெளிந்து நெளிந்து அழகிய தோற்றத்தில் வேயப்பட்ட கூரைகள் ஆற்றின் நுண்மணல் போன்ற தோற்றத்தை ஒத்திருந்தன.

நீள் அரை இலவத்து அலங்குசினை பயந்த
பூளை அம் பசுங்காய் புடைவிரித்து அன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
ஆற்று அறல் புரையும் வெரிந் உடைகொழுமடல்
வேல் தலையன்ன வைநுதி நெடுநகர்
ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை(பெரும்பாண்.83-88)

முல்லை நிலத்து ஆயர் குடியிருப்பு

வன் நிலமான காட்டுப்பகுதியில், திருத்தப்படாத, முள் நிறைந்த காடுகள் சூழவுள்ள நிலப்பரப்பில் முல்லை நிலத்து மக்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. இக்குடியிருப்புகள், அவர்களின் தொழில்சார் கருவிகளுக்கு இடமாகவும், ஆநிரை நிற்பதற்குத் தொழுவமாகவும், உணவுப் பொருள்களின் கிடங்குகளாகவும் பன்முகத் தன்மைகளோடு உருவாக்கப்பட்டிருந்தன. ஆநிறைகள் வளர்க்கும் தொழுவங்கள், பெண் யானைகள் நிற்பதைப் போன்ற தோற்றங்கொண்ட குதிர்களையுடைய முன்றில், யானையின் பெரிய கால்களைப் போன்ற ‘திரிகை’ நட்டு நிற்கும் பந்தர், குறுகிய சகடத்தின் உருளைகளும் கலப்பையும் சார்த்தி வைக்கப்பட்ட கொட்டில், வரகு வைக்கோலால் வேயப்பட்ட கூரை ஆகியவற்றைக் கொண்ட முல்லை நிலத்துப் பரந்த இருப்பிடத்தைச் சங்க இலக்கியம் காட்டுகிறது.

-- -- -- ---  ----  முள் உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்
----------- ------------- ---------- 
கருவை வேய்ந்த கவின் குடி (பெரும்பாண்.184 -191)

மருத நிலத்து உழவர் குடியிருப்பு

மருதநிலத்து உழவர்களின் இருப்பிடங்கள் உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகளை வைத்துப் பாதுகாக்கவும், உழவுத் தொழிலின் உற்ற நண்பனான எருதுகளை நிறுத்தவும், விளைபொருள்களைச் சேமிக்கவுமாக பரந்துபட்ட வளமனைகளாக அமைக்கப்பட்டிருந்தன. இவை, தென்னையின் ஓலையால் வேயப்பட்டவையும், மஞ்சள் நிறைந்த முற்றத்தையுடையவையும், தோப்புகள் தோறும் தனித்தனியே உள்ளவையுமாகிய வயல்வெளி மனைகளாக இருந்தன. இவற்றில், எருதுகளோடு கன்றுகள் கட்டப்பட்டிருந்தன. இங்கு, ஏணிகளுக்கும் எட்டாத மிக நெடிய வடிவத்தையுடைய குதிர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

தண்பணை தழீஇய தளரா இருக்கை
பகட்டா ஈன்ற கொடுநடைக் குழவிக்
கவைத் தாம்பு தொடுத்த காழூன்று அல்குல்
ஏணி எய்தா நீள்நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவில் (பெரும்பாண்.242-247)

மேலும், நெல் முதலானவற்றை உலர்த்துவதற்கு ஏற்ற அகன்ற களங்கள் வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்தன. அக் களங்கள் தானியங்கள் உலர்த்துவதோடு, சிறுவர்கள் சிறுதேர் உருட்டி விளையாடும் அளவில் அகன்றவையாக இருந்தன (பட்டின.20-25).

 நெய்தல் நிலத்து பரதவர் குடியிருப்பு

நெய்தல் நிலத்துக் குடியிருப்புகள், மூங்கில், கருப்பந்தட்டை, வெள்ளிய மரக்கொம்பு, நாணற்புல், தாழை போன்ற கடற்கரை நிலத்துக்கிடைக்கும் இயற்கைக் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. இக்குடியிருப்புகளின் வெளிப் பகுதியில் புன்னை மரக் கொம்புகளால் பந்தர் அமைக்கப் பட்டிருந்தது. பந்தரின் மேல் சுரை, பாகல் போன்ற கொடிகள் படரவிடப்பட்டன. வேழக்கோலை வரிசையாய் நிறுத்தி, வெண்மையான மரக்கொம்புகளை இடையிடையே வைத்துக் கலந்து, தாழை நாரால் கட்டித் தருப்பைப் புல்லால் வேய்ந்து குடியிருப்பை அமைத்தனர்.

வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிரைக் குரம்பை பறியுடை முன்றில்
கொடுங்கால் புன்னைக்கோடு துமித்து இயற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர் (பெரும்பாண்.263-274)

பாலை நிலத்துக் குடியிருப்பு

பாலைநிலத்து வாழ்வோருக்கு ஆறலைத்தல் முதன்மைத் தொழிலாக அமைந்தது. எனவே, அத்தொழிலுக்கேற்பத் தங்கள் குடியிருப்புகளையும், அரண்களையும் அமைத்துக்கொண்டனர். பெரும்பாலும் இந்நிலத்து எயினர்கள், தங்களின் தொழில் நிமித்தமாகக் கூட்டமாக வாழ்ந்தனர். ஊரினைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திக்கொண்டனர். அவர்களின் தொழிலுக்குத் தேவையான கருவிகளை ஒவ்வொரு வீடுகளிலும் காணலாம்.

ஊகம் புல்லால் வேயப்பட்ட உயர்ந்த மதில், மலையில் உள்ள தேன்கூடு போன்ற குதையையுடைய அம்புக்கட்டு, துடிகள் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தர், சங்கிலியால் நாய்கள் கட்டி வைக்கப்பட்ட, காவலையுடைய வீடுகள், உயிர்முள் வேலியையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டையும் உடைய பக்கம், உருண்ட கணைய மரம் இட்ட கதவு, நெடிய முனையை உடைய வலிய கழுக்களையுடைய ஊர்வாயில் ஆகிய பாதுகாப்புகளை உடையதாக எயினர் அரண் சுட்டப்படுகிறது.

வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட்
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனகர்
ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின
---------- ---------- ----------- ---------- 
வாயிற்கொடுவில் எயினக் குறும்பில் (பெரும்பாண்.119-129)

 பழந்தமிழகத்து ஊர்களின் அமைவிடம்

பழந்தமிழகத்து ஊர்கள் ஆறு, கான்யாறு, பொய்கை முதலான நீர்நிலைகளை ஒட்டித் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. ஊர்களின் அகக் கட்டமைப்பானது நெருக்கமான குடியிருப்புகள், தெருக்கள், மன்றம், பொதியில் என்று வடிவழகுடன் ஏற்படுத்தப் பட்டிருந்தது. குறிப்பாக, நீர்வளமும், நிலவளமும் தமிழர்தம் ஊர்களை ஏற்படுத்திக் கொள்ள முதன்மைக் காரணிகளாக அமைந்தன.

ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகான் யாறே    (குறு.113:1-2)

பெருநகர வடிவமைப்பு

நகர் என்னும் சொல் இருப்பிட வகையில் மிகவும் வளமான இருப்பிடத்தையும், நகரத்தையும் குறித்தது.

வரைகுயின்றன்ன வான்தோய் நெடுநகர் (அகம்.93)
விண் பொரு நெடுநகர் (அகம்.167)

போன்ற தொடர்களும், ‘நெல்லுடை நெடுநகர்’ (அகம்.176; புறம்.287), ‘பொன்னுடை நெடுநகர்’ (அகம்.385), ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ (பெரும்பாண்.405), ‘கடியுடை வியல் நகர்’  (நெடுநல்.49) முதலிய தொடர்களும் நெடுநகர் குறித்த அறிமுகங்களாக உள்ளன. இவை, நெடுநகர்களின் கட்டுமானச் சிறப்பையும், பாதுகாப்பையும், அழகையும், வளத்தையும் இயம்புகின்றன.

மதுரை  மாநகரின் வடிவமைப்பு உத்தி

மதுரை நகர் ‘தாமரை வடிவில்’ அமைந்திருந்ததாகப் பரிபாடல் கூறுகிறது. இந்நகரில், பாதாள வடிநீர் வழிக்காக பூமிக்கடியில் யானைகள் நுழையுமளவு பெரிய புதைகுழாய்கள் பதித்திருந்ததைச் சிலம்பு உரைக்கிறது. மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூவோடு ஒத்த சிறப்புடையது மதுரைப் பேரூர் என்கிறது பரிபாடல். அப்பூவின் அக இதழ்களைப் போன்றவை மதுரைத் தெருக்கள் என்றும், அவ்விதழ்களின் உட்புறமாக விளங்கும் மையத்தைப் போன்றது பெருமையில் சிறந்தவனாகிய பாண்டியனின் கோயில் என்றும், அப்பூவிற்பொருந்தியுள்ள தாதினைப் போன்றவர் தண்தமிழ் மொழியைப் பேசும் மக்கள் என்றும், அத் தாதை உண்ணுகின்ற வண்டினைப் போன்றவர்கள் மதுரைக்கண் வந்து பரிசில்பெற்று வாழ்கின்றவர்கள் என்றும் வருணிக்கிறது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையும் சீர்ஊர் பூவின்
இதழகந்து அனைய தெருவம் அண்ணல்கோயில்
தாதின் அனையர் நன்தமிழ்க் குடிகள்     (பரி.8:1-5)


நகரத்தில், பெரிய, சிறிய இல்லங்கள் எதுவாயினும் காற்றோட்ட வசதியுடனும், சுகாதார வசதியுடனும் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. இல்லங்களிலிருந்து கழிவுநீரைப் புதைச்சாக்கடை வழியாக வெளியே கொணர்ந்து, அங்குள்ள பல இல்லங்களின் கழிவுநீரை ஒன்றாகத் திரட்டி, ஊருக்கு வெளியே கொண்டு செல்லும் அமைப்பு அக்காலத்தில் இருந்தது. வெளியேறும் நீர் சுருங்கைவழி சென்று ஓரிடத்தில் விழும் காட்சி, யானை தன் தும்பிக்கையின் வழியே நீரினைப் பீய்ச்சி அடிப்பது போலுள்ளதாகப் பரிபாடல் சுட்டுகிறது.

நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து
கடுமாக் களிறணத்துக் கைவிடுநீர் போலும்
நெடுநீர் மலிபுனல் நீர்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும் பொழுது       (20:104-107)


பூம்புகார் மாநகரின் வடிவமைப்பு

தமிழரின் நகரமைப்புக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது பூம்புகார் நகரம். இந்நகரை முழுமையாகக் கடல்கொண்டது என்றாலும் வரலாறும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய இலக்கியங்களும் இதன் அமைப்பையும், சிறப்பையும் நன்கு உணர்த்துகின்றன. முதல் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க பயணி தாலமி காவிரிப்பூம்பட்டின நகரமைப்பின் சிறப்பைப் பாராட்டிக் கூறியுள்ளார். அந்நாளைய மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதிய ‘பெரிப்ளுஸ்’ என்னும் நூலிலும் காவிரிப்பூம்பட்டினம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ (பட்டினப்.218)  என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பூம்புகாரைப் பாடுகிறார்.

கடல் வாணிகச் சிறப்பால் அன்றைய பூம்புகார் ஒரு பன்னாட்டு நகரமாகவும் விளங்கியுள்ளதை அறியமுடிகிறது. இந்நகருக்குப் பல பெருமைகள் இருந்துள்ளன. இந் நகரத்துக்குச் செல்லும் முதன்மைச் சாலை சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் ‘பட்டினப் பெருவழி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரைவிட ஆயிரம் மடங்கு சிறப்புற்று விளங்கியதாக வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் புகழ்கிறார். காவிரிப்பூம்பட்டினப் பெருநகர், 1.மருவூர்ப்பாக்கம், 2.பட்டினப்பாக்கம் 3.நாளங்காடி என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததை அறியமுடிகிறது. இந்த மூன்று பிரிவுகளும் அடுத்தடுத்து திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த விதம் நகர வடிவமைப்பின் உச்சமாகக் கருதப்படுகிறது.

பண்டையத் தெருக்களின் வடிவமைப்பு

பழந்தமிழகத்துப் பெருநகரங்களிலும் பட்டினங்களிலும் தெருக்கள் ஒழுங்கமைவுடன், திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. தெருக்களின் இருபுறத்தும் ஓங்கியுயர்ந்த மாடமாளிகைகள் இருந்தன. வான் அளாவி ஓங்கிய, தென்றல் காற்று ஒலிக்கின்ற, சாளரங்களுடன்கூடிய வீடுகளைக் கொண்ட, ஆறு கிடந்தது போன்ற அகன்று நீண்ட பெரிய தெருக்களை மதுரைக்காஞ்சி காட்டுகிறது.

மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
——– ———— ————— —-
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் (மதுரைக்.351-359)

மதுரை நகரமைப்பில் வணிகர் வாழும் கடைவீதிகள் பற்றிச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. வணிகர் கடை வீதிகளிலுள்ள திண்ணைகள் நீல மணிகளால் ஒளிபெற்று விளங்கின. சுவர்கள் பளிங்கின் ஒளியை உமிழ்ந்தன. தூண்கள் வயிரத்தால் செய்யப் பெற்றிருந்தன. அத்தூண்களில் இடையிடையே முத்துத் தாமங்கள் நிரல்படத் தொடுத்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. கருநிறக் கம்பளம் வேய்ந்த சட்டத்தின்மேல் வரிசை வரிசையாகப் பவள மாலைகளும் முத்து மாலைகளும் பொன் மாலைகளும் தொங்கவிடப் பட்டிருந்தன. அவை கண்கொள்ளாக் காட்சிகளாய்த் தோன்றின.        வணிகர் வீதிகளின் வீடுகளின் கதவங்கள் செம்பொன்னாலும், தாழ்ப்பாள்கள் வயிரத்தாலும் செய்யப்பட்டிருந்தன என்ற செய்திகளை இலக்கியங்கள் காட்டுகின்றன.

அரசர் வீதியில் குதிரைக் கூடங்களும், யானைக் கூடங்களும் மிகுதியாக இருந்தன. பல்வேறு படைக்கருவிகளையும் கொண்ட கொற்றவையின் கோயிலுடன் கூடிய படைக் கொட்டாரங்கள் இருந்தன. அரசிளங்குமாரரும், அவரை ஒத்த பிறரும் போர்ப் பயிற்சி பெறும் பல இடங்களும் இருந்தன என்பதை அறியமுடிகிறது.

கட்டுமானப் பொறியியல் நுட்பங்கள்

இக்காலக் கட்டடக் கலை வல்லுநரும் வியக்கும் பொறியியல் நுணுக்கங்கள் பலவற்றைப் பழந்தமிழர் கட்டடக் கலையில் காணமுடிகிறது. தெருக்களின் இரு புறங்களிலும் பெரிய பெரிய இல்லங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கான நுட்பங்களுடன் எழுப்பப்பட்டிருந்தன. வானை முட்டும்படியான உயர்ந்த நல்ல இல்லங்களில், நிலாமுற்றமும், ஆங்காங்கே காற்றோட்டத்திற்கான சாளரங்களும் அமைத்துக் கட்டப்பட்டிருந்தன.

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்

மான்கண் காலதர் மாளிகை இடங்களும் (சிலம்பு.5:7-8)

செம்பினால் செய்யப்பட்டது போன்ற தன்மையைக் கொண்ட நெடிய சுவர் அமைந்திருந்ததையும், அச்சுவரில் அழகிய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்ததையும் நெடுநல்வாடை காட்டுகிறது

செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ் சுவர்
உருவப் பல் பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்பின் நல் இல் (112-114)

அதேபோல, மரகதம், வயிரம் ஆகிய உயர்ந்த மணிகள் வைத்துப் பதித்த பவளத் தூண்களுடன் கூடிய திண்ணைகளை உடைய நெடுநிலை மாளிகைகளைச் சிலப்பதிகாரம் பதிவுசெய்கிறது.

மங்கல நெடுங்கொடி வானுற வெடுத்து
மரகத மணியொடு வயிரங் குயிற்றிப்
பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகை (5:146-149)

கட்டடத் தொழில்நுட்பத்தில் உச்சமாக, பலமாடிக் கட்டடங்கள் இருந்ததையும்  அவற்றில் கோடைக்காலம், குளிர்காலம் எனப் பருவநிலைக்கேற்ப உறையும் தளங்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததையும் நெடுநல்வாடை உரைக்கிறது.

வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை திரியாது திண் நிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப (60-63)

இதைப்போலவே, ஒரே இல்லத்தில் வேனிற் காலத்திற்கும், கூதிர்க் காலத்திற்குமான, தனித்தனியே வடிவமைக்கப்பட்டிருந்த தளங்கள் பற்றிய செய்தியைச் சிலப்பதிகாரமும் காட்டுகிறது.

வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண்அடைத்து (சிலம்பு.4:60-61)

வேயாமாடம் என்பது நிலாமுற்றமாகும். இது, மகளிர் பந்தாடுமிடமாகப் பரந்த அமைப்பைக் கொண்டிருந்தது. மலைபோன்று உயர்ந்தும், விண்ணை முட்டுமளவிலும் உள்ள மாடங்களையும், இடத்தால் அகன்ற மாடங்களையும், வரிசைபட அமைக்கப்பட்ட மாடங்களையும், ஏழு நிலைகளைக்கொண்ட மாடங்களையும் பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன.

வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ(பெரும்பாண்.333)
விண்பொர நிவந்த வேயா மாடத்து (பெரும்பாண்.348-49)
விண்தோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த (பெரும்பாண்.369-70)

அரண்மனை – மாடங்கள் எல்லாம் வெள்ளி போன்ற சுண்ணச் சாந்தினால் பூசப்பட்டிருந்தன. நீலமணி போன்ற கரிய திரண்ட தூண்கள் ஆங்கங்கே காணப்பட்டன. செம்பினால் செய்து அமைத்த நீண்ட உட்புறச் சுவரிலே அழகிய பல பூக்களைக் கொண்ட பூங்கொடிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன.

புதுப்பிறையன்ன சுதை செய் மாடத்து 
பனிக்கயத்தன்ன நீள்நகர்           (புறம்.378)
சுதை மாடத்து அணிநிலாமுற்றம் (கலி.96)

 

பாதுகாப்பு அரண்கள்

பாதுகாப்பு அரண்களுக்குப் பண்டைய அரசர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். பழங்கால மதில்கள் அமைப்பில் கட்டடக்கலை நுட்பமும் இயந்திரத் தொழில்நுட்பமும் இராணுவப் பொறிகள் நுட்பமும் சேர்ந்து விளங்கின. மதிலும் கோபுரமும் சுருங்கையுமாகிய அரணுடைமையால் அது அரண்மனை எனப்பட்டது. அதற்குக் கோயில், பள்ளி, நகர், மாளிகை என வேறு பெயர்களும் உண்டு. பிறர் கொள்ளுதற்கு அரிய உயர்வு, அளக்க முடியாத அகலம், அழிக்க இயலாத திண்மை, அணுகுவதற்கு இயலாத அருமை ஆகிய நான்கும் அமைந்ததே அரண் எனப்பட்டது.

ஒரு தலைநகருக்கு ஐவகை அரண்கள் உண்டு. அவை: மதிலரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலையரண் ஆகும். இவற்றுள் கட்டடக் கலையோடு தொடர்புடைய மதிலரண் பொதுவில் ‘புரிசை’ என்று கூறப்பட்டாலும், இது மதில், எயில், இஞ்சி, சோ என்று நால்வகைப்படும். புறமதிலின் பல திசைகளிலும் ‘அட்டாலை’ என்னும் சிறுசிறு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப் பதும் உண்டு. இக்கோபுரங்களைக் காப்பார் ‘அட்டாலைச் சேவகர்’ எனப்பட்டார். மதில் காவலர் ’மதில் நாயகர்’ எனப்பட்டார்.

நால்வகை மதில் அரண்களில் உயரம் ஒன்றே உடையது மதில். உயரத்தோடு அகலமும் உடையது எயில்.  உயரம், அகலம், திண்மை இவற்றோடு பகைவர் நெருங்க அரியது சோ. இஞ்சு+இ=இஞ்சி என்றாயிற்று; இஞ்சுதல் எனில் இறுகுதல்; இஞ்சியது இஞ்சி; செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதில் இஞ்சி எனப்பட்டது. உயரம் அகலம் இவற்றோடு திண்மையும் உடையது இஞ்சி. வான் தோய, அரைத்த மண்ணால் ஆக்கப்பட்ட இஞ்சி ‘அரைமண் இஞ்சி’ என்னும் வழக்குப்பெற்றது (புறம்.341:5; பதி.58:6; மலைபடு.92; அகம்.35:2). இஞ்சிகள் மண் பூசி அழகுபடுத்தப்பட்டதால், ‘மண்புனை இஞ்சி’(பதி.58:6), ‘புனைமாண் இஞ்சி’ (அகம்.195:3) எனக் குறிக்கப்பட்டன. உயர்வு, அகலம், திண்மை, அருமை என்ற நான்கும் உடைய, மலையென மருளும் மாண்பால் ‘கோடுறழ் இஞ்சி’, ‘வரைபோல் இஞ்சி’ எனவும் குறிக்கப்பட்டது  (பதி.16:1; 62:10).

         திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின்
         வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி (மலைபடு.90-91)

இஞ்சியில், பகை நோக்க, பகை தாக்க ஏற்ற வளைந்த பார்வை நிலைகளான கண்காணிப்புக் கோபுரங்கள் பல இருந்தன. அஞ்சத்தகும் பெருங்கை வீரர்கள் பலர் அவ்விஞ்சிகளைக் காத்து நின்றனர் (புறம்.350:1,2; பதி.62:10; பதி.16:1; பதி.62:11).

பழந்தமிழர், செம்பை உருக்கி ஊற்றி பாதுகாப்பு அரண்களை எழுப்பும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தனர். ‘செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை’(புறம்.201:9), ‘செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி’(அகம்.375:13) என்பனவற்றில் செம்பால் செய்யப்பட்ட புரிசையை இலக்கியங்கள் காட்டுகின்றன. உயர்ந்த மதில்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களும், வெளியில் அறியமுடியாவண்ணம் பொருத்தப்பட்ட படைக்கருவிகளும், அவற்றை இயக்கும் எந்திரங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

காவற்காடும், அகழியும், வளைந்து தானே எய்யும் விற்பொறிகளும், கருவிரலுடைய கருங்குரங்கு போன்ற பொறிகளும், கல்லினை வீசும் கவணும், மதிலைப் பற்றுவார் மீது சொரிவதற்காக எண்ணெய் கொதிக்கும் மிடாக்களும், செம்பினை உருக்கும் மிடாக்களும், இரும்பினைக் காய்ச்சி உருக்குதற்கு அமைத்த உலைகளும், கல் இடப் பெற்ற கூடைகளும், தூண்டில் வடிவாக அமைந்த கருவிகளும், கழுத்தை முறுக்கும் சங்கிலிகளும், பறவை தலை போல் உருவம் கொண்ட அடுப்புகளும், மதிலைப் பற்றி ஏறும்போது தள்ளுகிற கவறுபட்ட கொம்புகளும், கழுமரமும், புதைகுழியும், அம்புக் கட்டுகளும், ஆள் அறியாமல் மறைந்து கொண்டு போரிடும் ஏவறைகளும், நெருங்கினார் தலையைத் திருகும் மரங்களும், மதிலின் உச்சியைப் பற்றுவார் கையைத் துளைத்துத் துன்புறுத்தி அப்புறப்படுத்தும் ஊசிப் பொறிகளும், பகைவர் மீது பாய்ந்து தாக்கும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறிகளும், மதிலில் ஏறியவரைக் கோட்டால் கிழித்தெறியும் பன்றிப் பொறிகளும், கதவிற்கு வலிமை சேருமாறு கதவின் குறுக்கே உட்பக்கத்தில் அமைக்கப்படும் கணையம் போன்ற பொறிகளும், களிற்றுப்பொறி, புலிப்பொறி முதலான பிறவும் மிகுதியாக நெருங்கிச் சிறப்புற்று விளங்கும் மதுரையின் பாதுகாப்பு மிக்க கோட்டையை இளங்கோவடிகள் காட்டுகிறார்.

மிளையும் கிடங்கும் வளைவில் பொறியும்
------- -------- ------------- ---------- 
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும்
வாயில்          (சிலம்பு.15:201-219)

அரண்மனை வடிவமைப்பு நுட்பம்

சங்க காலத்து அரண்மனைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்லும் எவையும் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. எனினும், பூம்புகார், மதுரை ஆகிய நகரங்களில் இருந்த, அரசர் இருக்கைகளைப் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகளும், கட்டுமான நுட்பங்களும் இன்றைய கட்டடப் பொறியியல் வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை.

நெடுநல்வாடையில் நக்கீரர் குறிப்பிடும் அரண்மனைக் கட்டுமான உத்தி இன்றைய நவீன யுகம் வியந்து பார்க்கக்கூடியது. சித்திரைத் திங்கள் பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள்வரை உள்ள நாட்களில் ஏதேனும் ஒருநாளில், பகல் பதினைந்து நாழிகையில் ஞாயிற்று மண்டிலம் நிலத்தில் நடுவில் இயங்கும் என்றும், அவ்வாறு இயங்கும் நாளில், இரண்டு நேரான கோல்களை நட்டு, அக்கோல்களின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் அந்தக் கோல்களிலேயே பதினைந்து நாழிகை அடங்கும் காலம் ஆராய்ந்து, அப்படி நின்ற நேரத்தில் வழிபாடுகள் செய்து, அரண்மனை கட்ட அடிக்கல் நாட்டுவர் பொறியியல் நூல்களை நன்குப் படித்துத் தேர்ந்த கட்டுமானப் பொறியாளர் என்கிறது நெடுநல்வாடை. இந்த நிழல் இல்லா நேரம் (Zero shadow) பற்றி அறிவியல் உலகம் இன்று வியந்து பேசுகிறது. ஆனால், தமிழன் அந்நாளில், அந்நேரத்தைத் தேர்ந்தெடுத்து, அரண்மனைக்கு அடிக்கல் நாட்டிய அறிவியலின் மர்மத்தை இன்றுவரை அறியமுடியவில்லை.

....................மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து(நெடுநல்.72-78)

 நடன அரங்கு வடிவமைப்பு

பின்னாளைய மேலைநாட்டு நாடக அரங்குகளின் அமைப்பு உத்திகளையெல்லாம் விஞ்சுகிற அரங்கு அமைப்புகளைத் தமிழ்க் காப்பியங்கள் காட்டுகின்றன. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அரங்க அமைப்பு உத்திகளை மிக நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். தேர்ந்த சிற்ப நூலாசிரியர் வகுத்த நெறியில் சிறிதும் பிறழாது, அரங்கம் அமைப்பதற்குப் பழுதற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, பின் பொதியமலை முதலான புண்ணிய மலைச்சாரலில் ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையில் ஒரு சாண் இடைவெளியுடன் ஓங்கி வளர்ந்த மூங்கில்களை வெட்டிக் கொணர்ந்து, நூல் நெறிப்படி அமைந்த கைப்பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவு இருக்குமாறு அம்மூங்கிலைத் துண்டு செய்தனர். பிறகு அதனையே அரங்கம் அளக்கும் கோலாகக் கொண்டு, ஏழுகோல் அகலம், எட்டுக்கோல் நீளம், ஒருகோல் உயரமாக நடன அரங்கத்தை அமைத்தனர். தூண்களின் நிழல் அரங்கிலும் அவையிலும் விழாதபடி நிலை விளக்குகளை ஆங்காங்கே பொருத்தினர். உருவு திரையாக ஒரு முக எழினியையும், பொருமுக எழினியையும், கரந்து வரல் எழினியையும் வேலைப்பாட்டுடன் அமைத்தனர். ஓவியத்துடன் கூடிய மேல் விதானமும் அமைத்து, புகழ்மிக்க முத்து மாலைகளான சரியும், தூக்கும், தாமமும் என்னும் இவற்றை எங்கும் அழகுபடத் தொங்கவிட்டனர் (சிலம்பு.3:95-112).

அரங்கில் அளவுக்குப் பொருந்த வகுத்த இரண்டு வாயில்கள் இருந்ததைப் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதனைப் புகச் சமைத்த வாயிலும், புறப்படச் சமைத்த வாயிலும் அதாவது, உள் நுழையவும் வெளியேறவுமான வாயில்கள் என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் நச்சினார்க்கினியர். தூண்களின் நிழல் விழாத வடிவமைப்பு, இருவகை வாயில்கள், மூவகைத் திரைச்சீலைகள் போன்ற நுணுக்கங்களெல்லாம் இந்நூற்றாண்டின் மேலை நாட்டு அரங்கு அமைப்பு உத்திகளையும் விஞ்சியவையாகவே பார்க்கப்படுகின்றன.

கோயில் கட்டுமானம்

தமிழர் கட்டடக் கலை என்றவுடன் இன்று நம் கண்முன் காட்சிதருபவை தமிழகம் மட்டுமல்லாது தமிழன் கால்பதித்த இடமெல்லாம் வானுயர நிமிர்ந்து நின்று, எந்நாட்டவரையும் வியப்பில் ஆழ்த்தும் கோயில் கட்டுமானங்களேயாகும். எண்ணற்ற பெருங்கோயில்களைத் தமிழர்கள் கட்டினார்கள். வைணவ ஆழ்வார்களால் பாடப்பட்ட நூற்றெட்டுத் திருப்பதிகக் கோயில்களும், சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்தைந்தும் இருந்தன என்கின்றனர் ஆய்வாளர்கள். தமிழகம் தாண்டியும் ஏன் இந்தியாவிற்கு வெளியேயும் தமிழர்களின் கோயில் கட்டுமானங்கள் இன்றும் உலக அதிசயங்களாக வியப்பூட்டி நிற்கின்றன. இவை தமிழரின் பழம்பெரும் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கட்டடக்கலை நுட்பத்தையும் விளக்கும் கண்முன் சாட்சிகளாகத் திகழ்கின்றன.

கொடிக்கூடம், மரநிழல், காவணம், குடில், மண்தளி, சுடுமண் தளி, மரப்பலகைகளாலான அம்பலம், குடைவரை, ஒற்றைக் கற்றளி, கருங்கற்கோயில் என்று கோயில் கட்டுமானங்கள் படிப்படியாக வளர்ந்தோங்கின. மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்தில் புணரியல் விதி வகுக்கும் நூற்பாவால் ‘கோயில்’ என்னும் சொல்லுக்குப் புணர்ச்சி விதி கூறப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. வழிபடுபவர்களில் முன்னவராகிய கடவுளுக்கும், அதற்கடுத்த நிலையில் அரசருக்கும் சிறப்பான இடங்களில் சிறப்பான முறையில் வாழிடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழரிடத்தில் இருந்தது. ஆகவே, கோயில்களும், அரண்மனைகளும் மிகப் பெரியதாகவும் வியக்கத்தக்க வகையிலும் அமைக்கப்பட்டன.

 

பெரும்பாலான மலைநாட்டுக் கோயில்கள், சிதம்பரம் சபாநாதர் மண்டபம் ஆகியவை முழுமையாக மரத்தினாலேயே கட்டப்பட்டன. தில்லைக் கோவிலில் உள்ள ஊர்த்துவதாண்டவ மூர்த்தி கோயில் முதலில் மரத்தினாலேயே அமைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில்தான் கருங்கல்லுக்கு மாற்றப்பட்டது. மரக்கூரை, தூண்கள் கெட்டுப் போகாத வண்ணம் செம்பிலும், தங்கத்திலும் தகடுகள் வேயப்பட்டன. பின்பு மரக்கோயில்களில் சுடுமண்ணாகிய செங்கலும் சுண்ணாம்பும் கொண்டு பெரும்பகுதி கட்டி, உத்தரம், கதவு முதலியவற்றுக்கு மட்டுமே மரங்களைப் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது. கி.பி. 600-க்கு முற்பட்ட தமிழ் நாட்டுக் கோயில்கள் யாவும் செங்கற் கட்டடங்களே என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.

கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தை ஆண்ட பல்லவப் பெருவேந்தனான மகேந்திரவர்மப் பல்லவன் ஆட்சி செய்தபோது கோயிற் கட்டடக் கலையில் புதுமையினைச் செய்தான். பெரிய கற்பாறைகளைக் குடைந்து, எழில் வாய்ந்த குகைக் கோயில்களான ‘பாறைக் கோயில்கள்’ அமைத்தான். கற்பாறைகளைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அப்பால் கருவறையையும் அமைக்கும் பாறைக்கோயில் முறை இவன் காலத்திலேயே ஏற்பட்டது.

பாறைக்கோயில்களை அடுத்துக் கற்றளிகள் எனப்படும் கற்கோயில்களின் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மனாகிய இராசசிம்ம பல்லவன் காலம் முதல் தொடங்கியது. நீளமாகவும், அகலமாகவும் தேவைக்கேற்பவும் தரித்து எடுத்த கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயிலே கற்றளி. சுண்ணம் சேர்க்காமலே பெரும்பாலும் இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டன. மாமல்லபுரக் கடலோரமாக உள்ள கற்றளியும், காஞ்சியில் கைலாசநாதர் கோயில் என்று இப்போது கூறப்படும் இராசசிம் மேசுரம் என்ற கற்கோயிலும், பனைமலையிலுள்ள கற்கோயிலுமே முதன்முதலில் கட்டப்பட்டன.

ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளை உடைய ‘மாடக்கோயில்கள்’ குறித்து சிற்ப சாத்திரங்கள் விவரிக்கின்றன. யானை முதுகு போல் மேற்பகுதி அமைந்த கோயில்கள் தூங்கானை மாடக்கோயில்களாகும். ஆனால் இக்காலத்தில் ஒன்பது நிலைகளும் நிறையக் கட்டப்பெற்ற கோயில்களைக் காண்பது அரிதாகும். இரண்டு அல்லது மூன்று நிலைகள் உள்ள கோயில்களே பெரும்பாலும் காணப்படுகின்றன. மாமல்லபுரத்து அருச்சுனன் இரதம், தருமராசர் இரதம் ஆகியவை மாடக் கோயில்கள் போன்ற அமைப்பினவே. காஞ்சி பரமேசுவர விண்ணகரம் என்னும் வைகுந்தப் பெருமாள் கோயிலும், கி.பி. 730 முதல் 795 வரை ஆண்ட நந்திவர்ம பல்லவன் கட்டிய உத்தரமேரூர் மாடக் கோயிலும் குறிப்பிடத்தக்கவை.

இராசராச சோழன் கட்டிய தஞ்சைப் பெரியகோயில் கோபுரத்தின் உயரம் சுமார் 216 அடி. கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள கல் மட்டும் இருபத்தைந்தரை அடிச் சதுரம் உடையது. இதன் எடை இன்றைய அளவுமுறைப்படி எண்பது டன். இதற்குப் ‘பிரமந்திர தளக்கல்’ என்று பெயர். ‘பாரம் தூக்கி மேலே ஏற்றி வைக்கக்கூடிய புதிய எந்திரங்கள் எவையும் இன்றுபோல இல்லாத காலத்தில், இவ்வளவு பெரிய கல்லை எவ்வாறு 216அடி உயரத்திற்கு ஏற்றினர்’ என்று காண்பவர் வியக்க, இன்றும் பல்வேறு யூகங்களுக்கு இடமளித்து, தமிழனின் அடையாளமாய், இராசராசனின் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது இக்கோயில்.

அகழாய்வுகளில் – தமிழர் கட்டடக் கலை

மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளின் அகழ்வாராய்ச்சியில் கண்ட சிந்துவெளி நாகரிகக் கலையே தமிழர்க் கட்டடக் கலைதான் என்று மேலை நாட்டறிஞர்களும் உடன்படுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்பகுதிகளில் காணப்படும் கட்டட அமைப்புகளும், நகர அமைப்பு முறைகளும், அறிவியலில் உச்ச நிலையடைந்துள்ளதாகக் கருதப்படும் இன்று, அனைத்துப் பயன்பாடுகளுடனும் திட்டமிட்டுக் கட்டப்படும் கட்டடங்களையும், நகர அமைப்பு முறைகளையும் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வுண்மை மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கட்டடக் கலையில் தலைசிறந்து விளங்கினர் என்பதற்கும், தமிழனின் கட்டடக் கலை என்பது, அழகியலும் அறிவியலும் கலந்து மிளிர்வது  என்பதற்கும் தக்க சான்றாகின்றது.

கொற்கையில் நிகழ்ந்த அகழாய்விலும் உறையூரில் மேற்கொண்ட அகழாய்விலும் கி.பி.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில கட்டடப்பகுதிகள் கிடைத்தன. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கங்கை கொண்ட சோழபுரத்தின் ஒரு பகுதியை அகழ்வாய்வு செய்தபோது, நகரின் பகுதியான உள்கோட்டையில் முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்து வாழ்ந்த அரண்மனைப் பகுதி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் மதுரைக்கு அருகில் கீழடி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு தமிழர் நகர நாகரிகத்திற்கு மிகச் சிறந்த சான்றாய் அமைந்துள்ளது. இலக்கிய சான்றுகளை மட்டுமே நம்பியிருந்த பழந்தமிழர் கட்டடக்கலை நாகரிகம் இன்று அகழாய்விலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கீழடியில் உறைகிணறுகள், நீண்ட செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பானையோடுகள், குறிப்பாக, பதிமூன்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு, இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணிகள், சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தாலான தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் அணிகலன்கள், நெசவுக் கருவிகள், திமிலுடன் கூடிய விலங்கின் (காளை) எலும்பு உட்பட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், சூதுப் பவளம், பளிங்கு, பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி, பொன்னணிகலன்கள் எனப் பல்வேறு தொல்லெச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற எழுத்துப் பொறிப்புகளின் வழி ‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனியரின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன.

கீழடியில் கண்டறியப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட கட்டடங்கள், ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு வலுவான சான்றுகளாகத் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறும் நகரங்களில் அமைந்திருந்த ‘நீர் வழங்கல்’ மற்றும் ‘கழிவுநீர்’ அகற்றலுக்கான குறிப்புகளுக்குச் சான்றுகளாய் கீழடியில் ’சுடுமண் குழாய்’ மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இங்குக் காணப்படும் பழங்கால சுடுமண் உறைகிணறுகள் பட்டினப்பாலை கூறும் ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற தொடருக்குச் சான்று பகர்வனவாக உள்ளன. எங்கும் இல்லாத அளவில் ஒரு நீண்ட இரட்டைச் சுவர் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. ‘நாகரிகத்தின் மலர்ச்சிக் காலம், பழந்தமிழரிடமிருந்தே தொடங்குகிறது’ எனும் ஆய்வாளர்களின் கூற்றைக் கீழடி தற்போது உறுதிசெய்துள்ளது.

தமிழர் நிலமெங்கும் சிதைந்தும் புதைந்தும் கிடப்பவை வெறும் கட்டடங்களல்ல; அவை, தமிழன் கண்டெடுத்த கட்டுமான நுட்பங்களும் நாகரிகங்களும். தமிழனின் இவ்வகையான மரபு நுட்பங்களும் கலைகளும் மேலெழும்போது, உலகின் மனிதகுல வரலாறு மாற்றி எழுதப்படும் என்பது உறுதி.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!