தொல்தமிழர் அறிவுத் துறைகள்
என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் பேராசிரியர் ஆ.மணவழகன்
பழந்தமிழ் இலக்கியங்கள், தமிழரின் வாழ்வியல் விழுமியங்களை நுட்பமாகப் பதிவு செய்துள்ளன. வாழ்வியல் நெறிகளை அகம்-புறம் என இரு நெறிகளாகப் பகுத்து, இரண்டுக்குமான செல்நெறிகளை முறைப்படுத்துகின்றன. அவற்றோடு, அக்கால மக்களின் வேளாண்மையியல், நெசவுத் தொழில்நுட்பவியல், கட்டடக் கலையியல், மருத்துவவியல், உலோகவியல், வானியல் முதலான பல்வேறு அறிவுத் துறைகளையும் தொழில்நுட்பங்களையும், மேலாண்மையியல் சிந்தனைகளையும் நுட்பமாக வழங்குகின்றன.
பழந்தமிழரின் இவ்வகை அறிவுத் தடத்தை இன்றைய மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக 04.03.2025 அன்று, சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பங்கேற்று, ’தொல்தமிழர் அறிவுத் துறைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். நிகழ்வினை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் நாட்டு நலத்திட்ட அலுவலர், உதவிப் பேராசிரியர் முனைவர் சேகர் அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்தார்.