திணை வாழ்வைத் தேடும் கவிதைகள்…
கவிஞர் இரா.பச்சியப்பன்
07.03.2024
வாழ்க்கை என்பதை என்னவாகப் புரிந்துகொள்வது? நிகழ்வுகள் தோற்றுவிக்கும் உணர்வுகளையும் அது தந்த நினைவுகளையும்தான் நாம் வாழ்க்கை என்று புரிந்துகொள்கிறோம் எனத் தோன்றுகிறது. நம்மினும் படைப்பாளன் உணர்வுக் கூர்மையுடையவன். இந்த உணர்வுகளின் ஆழத்தைத் தரிசிக்கிறான். மானுடத்திற்குப் பொதுவான உணர்வுகளாக அவற்றை இரசவாதம் செய்கிறான்.
இங்குதான், உலகியல் வழக்கு, நாடக வழக்கு ஆகியன விசித்திரமான வேதியியல் வினைபுரிந்து, புலனெறி வழக்காகப் பாடலுள் ஜீவன்கொண்டு கண்மலர்ந்துத் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலுள் நாம் காண்பது என்ன? படைப்பாளன் அனுபவத்தையா, நமது அனுபவத்தையா? அனுபவம் நிலமும் பொழுதும் தருவதுதானே. இவற்றின் கூட்டுக் கலவையால் நம்மைச் சுற்றியுள்ள, நம்மோடு பிணைப்பைக் கொண்டுள்ள கருப்பொருள்களின் ஊடாகத்தானே இந்த அனுபவத்தில் திளைக்கிறோம்.
எனவே, படைப்பாளன் தனது படைப்பின் உரிப்பொருள்களை முதற்பொருளின் அடித்தளத்தில் கருப்பொருள்களின் துணையோடு எண்ணற்ற இசைக் கோர்வையாக, படைப்பாக நமக்கு அள்ளி வழங்குகிறான். முதற்பொருளோடும் கருப்பொருளோடும் பிணைந்திருக்கும் நமக்கு அது அனுபவமாகக் கேட்கிறது.
இந்தப் படைப்பை ஆழ உணர்ந்த நம் முன்னோன் திணைக் கோட்பாடாக இலக்கணப்படுத்தியுள்ளான். நம் மண்ணைப் பாடுவது எனில் ஊர்ப்புறத்தைப் பாடுவது மட்டும் எனலாகாது; நம் நிலத்தில் விளையும் அத்தனை அனுபவங்களையும் பாடுவது ஆகும். அடிப்படையில் அவை இரண்டு கூறுகளை உடையவை என்று தொல்காப்பியர், தன் முன்னோர் வழிநின்று வகைப்படுத்தித் தந்திருக்கிறார். அகமென்றும் புறமென்றும் வகை கண்டு, அவற்றுள் எல்லா அனுபவங்களையும் அடக்க முற்பட்டிருக்கிறார். இது மானுடப் பொதுமையானது. இது, தமிழர் கண்ட இலக்கியக் கோட்பாடு.
சங்க இலக்கியங்களில்தாம் திணைக் கோட்பாட்டை முன்வைத்து அதிகமாகப் பேசுகிறோம். ஏனெனில், அவை தமிழர் வாழ்வை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. அப்படி வெளிப்படுத்தும் போக்கு பிற்காலங்களில் மங்கி, சிலபோழ்து முற்றிலும் அயல்நெறிக்கு ஆட்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் மீண்டும் அந்த எழுச்சி தொடங்குகிறது. இதனைத் தீவிரமாகத் தொடங்கிவைத்தவர் கவிஞர் பழமலய். அவரைத் தொடர்ந்து இளம் படைப்பாளிகள் பலர் தொகைதொகையாய் எழுத வந்தனர். அவ்வகைக் கவிஞருள் தன்னையுணர்ந்து, படைப்புச் செயல்பாட்டில் தீவிரமுள்ளவர் கவிஞர் ஆ. மணவழகன். இவர் ஏற்கெனவே, ‘கூடாகும் சுள்ளிகள்’ எனும் கவிதை நூலைத் தந்தவர். ‘புளிசாங்கொடி’ இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
காலத்திற்கேற்றவாறு விரிவாக்கம் செய்யப்படாத எதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிவிடும் ஆபத்து உள்ளது. திணைக் கோட்பாடு என்பது, திணை வாழ்க்கைமுறை சிதையாமல் இருந்த சங்ககாலத்தில் தோன்றிய கவிதைகளுக்கு மட்டுமானது என்று தோன்றவில்லை. எல்லையற்ற வாழ்வைத் தமது மண்ணின் தன்மைக்கேற்பப் பாடும் எல்லாக் காலத்திற்குமானது எனவும் கொள்ளலாம்.
நிலமும் காலமும் ஆகிய முதற்பொருளும் அது தோற்றுவிக்கும் கருப்பொருளும் தொண்ணூறுகளுக்குப் பின்வந்த கவிதைகளில் தீவிரமாக இயங்குகின்றன. நவீனப் பாடுபொருள்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை அகம் புறமாகவே வெளிப்படுகின்றன.
கவிஞர் மணவழகனின் இத்தொகுப்பில் அகத்திணைக் கவிதைகளும் புறத்திணைக் கவிதைகளும் கலந்தே உள்ளன. எனினும், புறத்திணைக் கவிதைகளே மிகுதியாக உள்ளன என்பதை எப்படிப் புரிந்துகொள்வது. அகவாழ்க்கையினும் புறவாழ்க்கை நம்மை அலைக்கழிக்கிறது எனலாமா? இவற்றிலும், காஞ்சித் திணைக் கூறுகள் மிகுந்திருப்பதை எவ்வகையில் புரிந்துகொள்வது. நமது வாழ்க்கைக் கண்ணீரால் புதைந்துள்ளது எனக் கொள்ளலாமா? வாகைத் திணையும் பாடாண் திணையும் சிலக் கவிதைகளில் வெளிப்படுகின்றன. இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அல்லது வாழவேண்டியத் தேவைக்கான ஆதாரமாக இவை உள்ளன என்று கொள்ளலாமா? இவ்வகையில்தான் இத்தொகுப்பை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம்.
இத்தொகுப்பில் உள்ள ‘ஒப்புசான் மலை’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். ‘முதுகுடி மகளிரின் திறல்மிகு வாகை’ என்பதை, ச.பாலசுந்தரம் ‘மனைநிலை வாகை’ என்று பாடங்கண்டு உரை கண்டவாறோ, ‘அனை நிலை வாகை’ என்று இளம்பூரணர் பாடங்கொண்டு, ‘பிறவும் அன்ன’ என்று உரை கண்டவாறோ இக்கவிதையை நோக்கலாம். ‘காமம் நீத்த பாலினாலும்’ என்று வாகைத் திணையின் துறையாக இக்கவிதைக்குத் துறை வகுக்கலாம்.
இன்பம் துன்பம் எதுவாயினும் அடைக்கலமாவது பாட்டியிடமும் ஒப்புசான் மலையிடமும்தான்
என்று இக்கவிதையில் வருபவர் பேசுகிறார். அப்போது ஒப்புசான் மலையும் பாட்டியும் ஒன்றாகவே இணைந்து, நம்முன்னே பெரும் ஆகிருதியாய் நிற்கின்றது.
காயாகக் கனியாகக் கொடியாகத் தழையாக ஏதாவதொன்றை எனக்காக வைத்து...
என்று அந்த மலையின் கருணை வரிகளில் விரிகிறது.
வளமனைத்தையும் இழந்து நின்ற பெருங்கோடையிலும்...
ஒப்புசான் மலையின் அடிமடியில் ஏதேனும் ஒன்று பசியாற்றும். வறட்சியின்போதும் நாடிவரும் உயிர்களுக்காக ஏதேனும் கொடுத்துப் பசியாற்றும் இதன் அடிவாரம் பாட்டியின் அடிமடியைப் போன்றது. ‘அடிமடி’ என்று கவிஞன் ஆளும் சொல் மிக முக்கியமானது. இங்குதான், ‘அருளொடு புணர்ந்த அகற்சியானும்’ என்று தொல்காப்பியன் கண்டது நினைவுக்கு வருகிறது அல்லது முதுகுடி மகளிரின் திறல் வெளிப்படுகிறது.
பாட்டியின் அடிமடி ஓர் அமுத சுரபி. பாட்டியின் வயிறு காய்ந்திருந்தாலும் பேரப்பிள்ளைகளுக்கு அடிமடி நிறைந்தே நிற்கும். நைந்து கிழிந்தப் பழம்புடவையின் ஒருமுனையில் ஏதேனும் ஆகாரம் முடிச்சிட்டு, அடிமடியில் செருகியிருக்கும். அது பார்ப்பவர்க்குத் தெரியாது. பேரனின் பசியறிந்து, கருணைமிகு கரங்களுக்கு வெளிப்படும். மடியவிழ்க்கும் முன்னே பேரப்பிள்ளைகள் கரங்கள் பறிப்பதுமுண்டு.
பாட்டியினதும் ஒப்புசான் மலையினதும் அருளைவிட்டு விலகி, வாழ்க்கைப் பாட்டிற்காக நெடுந்தொலைவு வந்துவிட்டான் பெயரன். வந்த இடத்தில் குறிஞ்சி நிலத்திற்கு விளக்கம் சொல்லியாகவேண்டிய நிலை. அப்போதெல்லாம் நினைவிலாடுகிறது ஒப்புசான் மலை. குறிஞ்சி வாழ்க்கை வாழ்ந்தவன் வெற்று விளக்கத்தில் திகைத்து நிற்கிறான். ஏனெனில், ஒப்புசான் மலை திடுதிப்பென அருகில் நிற்கிறது. இது ஒரு பிரமைதான். ஆனால் மனம் குறிஞ்சி நிலத்தில் அலைகிறது. ஒப்புக்கு விளக்கம் சொன்னால் ஒப்புசான் மலை விடுமா?
இக்கவிதையில் நிலம், பொழுது துல்லியமாக உள்ளது. குறிஞ்சி நிலத்தைப் பேசிவிட்டு வாகைத் திணைக் கவிதை என்கிறீர்களே என்று கேட்கத் தோன்றும். ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ அல்லவா. வாகை எல்லாப் புறத்திணைக் கூறுகளையும் உள்ளடக்கியது ஆகும். ‘தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப’ என்கிறார் தொல்காப்பியர். ஒப்புசான் மலையினது, பாட்டியினது அருள் வாழ்க்கையை விதந்து பேசுகிறது இக்கவிதை.
“கொற்றவை கண்விழிக்கிறாள்’ என்ற கவிதை சமகால அரசியலை வெளிப்படுத்தும் உச்சம். திணைவாழ்வை, அதன் மேன்மையை, திணைக்குடிகளின் விழுமியங்களைப் பேசுகிறது. உட்பகையால் சிதைந்தக் கோட்டையின் அவலத்தைப் பாடுகிறது. தமிழன் கண்ட விழுமியத்தை வீழ்த்த நடந்த சூழ்ச்சிகளை வெளிப்படையாக விவாதிக்கிறது. நிறங்களின் குறியீட்டோடு அறிமுகமான தத்துவங்கள் எல்லாம் எப்படி எம் மக்களுக்கு எதிராய் நிற்கின்றன என்று புரியவைக்கிறது.
இந்தக் கவிதையில் இயங்குகிற காலம் – பொழுது தற்காலம் ஆகும். காலத்தை விரிவாக்கம் செய்து இக்கவிதையை வாசித்தால் பல நுட்பங்கள் வெளிப்படுகின்றன. இதில்வரும் கொற்றவை இக்காலத்தைப் பாலை எனப் புரிந்துகொள்ள உதவுகிறாள். பல ஊழி கண்மூடிக்கிடந்தவள் கண்திறந்து பார்க்கிறாள். எல்லாம் வறண்டு கிடக்கிறது. ‘வாகைதானே பாலையது புறனே’ என்கிறார் தொல்காப்பியர். நமது மேன்மைகளைச் சொன்னால்தான் இளம் தலைமுறைக்கு வீறுணர்ச்சி எழும். வாழ்க்கை மீளும்.
‘மானாவாரி’ கவிதை அற்புதமான குறிஞ்சித்திணைக் கவிதை. தலைவியின் சொற்கள் தினையாய் விளைந்து கிடக்கின்றன. அருவடைக்கேனும் வருவாள் எனத் திணைப்புனத்து அருகில் தலைவன் காத்துக்கிடக்கிறான்.
நடவுவயல் அழித்து வழித்தடம் அமைக்கும் கொடூரத்தை, கால்களில் ஒட்டியிருக்கும் புழுதி மண்ணை, எங்கு வீசினும் வேர் பிடிக்கும் தேன்பசலையை, நாம் கண்ட ஐவன நெல்லை, ஒப்புசான் மலையில் அடர்ந்து செழித்திருக்கும் செடி, கொடிகளை, தூய்மை இந்தியாவின் போலிமுகத்தை, விவசாயியின் பிள்ளை என நினைக்கவும் கூச்சப்பட்ட முதல் தலைமுறையை, தீநுண்மிச் சூழலை, சென்னையின் பெருவெள்ளத்தை, இரவல் புறாக்களுக்கு உணவிடும் அயல்வாழ்வை… என நமது வாழ்வின் அத்தனைப் பக்கங்களையும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பேசுகின்றன.
செய்யுளை நாடுங்காலை நமக்குத் திணை வெளிப்படுவது போல பிற அழகியல் கூறுகளும் இத்தொகுப்பில் மிளிர்கின்றன. குறிப்பாக, உள்ளுறை உவமம். கருப்பொருள் வாயிலாகத் தாம் சொல்லவந்ததை நமக்கு ஆழ உணர்த்திச் செல்லும் பாங்கு அலாதியானது.
‘இடனறி’ என்ற கவிதையை இங்குக் காணலாம். நம்பி வளையை விட்டு வெளியே வருகிறது நண்டு. சிறு நரியின் சூழ்ச்சி அது அறியாது. விடிந்தபோது பார்த்தால் சில்லு சில்லாய் நொறுங்கிக் கிடக்கிறது நண்டு.
நண்டு என்பது யாது? யார்? வாழ்வை ஏமாற்றி நொறுக்கிய நரி எது? யார்? இப்படிப் பல கவிதைகளில் கருப்பொருள் வழியாக உள்ளுறை உவமம் பொதியப்பட்டுள்ளது.
வலம் இடம் முறைமாறிப் பூட்டிக்கொண்டு சால் பிடிக்கும் வாகு அறியாமல் தவித்து நிற்கின்றன... மணமுறிவு மன்றங்களில் மாநகர எருதுகள்!
என்பது ஒரு சிறு கவிதைதான். ஆனால், தற்காலத்தில் காணலாகும் மிகப்பெரிய சமூக அவலத்தை உள்ளுறை உவமமாகச் சுட்டி நிற்கிறது.
நிழல் தின்று செரித்துப் பருத்த கடுங்கோடை ஞாயிற்றின் வெண்கதிர்கள் உன் சொற்கள்!
***
உதிர்ந்த இதழ்களைச் சேகரித்து ரோசாப்பூ தைக்க எண்ணும் அப்பாவிச் சிறுமியாய்...!
***
மழைநீர் வாய்க்கப்பெற்ற மானாவாரியாய்...!
போன்ற வாழ்வியல் உவமைகள் தொகுப்பெங்கும் அணிசெய்து, மனத்தில் காட்சிப் படிமங்களாய் நிறைந்து நிற்கின்றன.
கவிதைகள் பெரும்பாலும் ஆசிரிய நடையில் இயங்குவது தவிர்க்க முடியாததாகிறது. வடிவ ஒழுங்கால் அல்ல; ஆனால், அந்தக் குரல். முன்னிலையாக ஒருவரை நிறுத்தி தான்வாழ்ந்த வாழ்வை, தற்கால நிலையை உரைப்பது மாதிரியான தொனி.
இவ்வகையில் நமது தொன்மைக் கோட்பாடான திணைக் கோட்பாடுவழி ‘புளிச்சாங்கொடியை’ நோக்குகையில் நம் மண்ணுக்கு நாம் மீண்டதான உணர்வு வருகிறது. இன்றைய புற உலகம் நமக்கு அயல் மண்ணில் அகதி வாழ்க்கை போன்ற ஒன்றைத் தந்துள்ளதிலிருந்து சிறு மீட்சி.
கவிஞர் ஆ. மணவழகள் தெளிந்த சங்கப் புலவனாய் தற்காலத்தில் இயங்குகிறார். அவரது ஆய்வு உலகம் போலவே படைப்பு மனமும் வற்றாத ஜீவிதத் தன்மை கொண்டது. பல தொகுப்புகள் மூலம் இவர் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நூல் : புளிச்சாங்கொடி ஆசிரியர் : கவிஞர் ஆ.மணவழகன் அய்யனார் பதிப்பகம் சென்னை 600088 9789016815 / 9080986069 விலை ரூ.140
Add comment