தமிழர் வளர்த்த திறனாய்வுக் கலை

தமிழர் வளர்த்த திறனாய்வுக் கலை

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

            உலகில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் பல மொழிகளும் தோன்றிராத காலத்திலேயே மொழி வளர்க்கவும், மொழிக்குப் புதியனவற்றைத் திறனாய்வு செய்யவும், அரசை வழிநடத்தவும் அவைக்களத்திலே புலவர் கூட்டத்தை வைத்திருந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு.

            தான் மேற்கொள்ளும் போரில் வெற்றிபெறவில்லை என்றால் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு இயங்கும் புலவர் குழாம் என்னைப் பாடாது போகட்டும் என்று வஞ்சினம் மொழிகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைகென் நிலவரை (புறம்.72)

            மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது, அவனது முன்னோர்களாகிய பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி போலவும், நிலந்தரு திருவின் நெடியோன் போலவும் இனிது வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி நல்லாசிரியர்களைக் கூட்டி அவர்களுக்கு உணவளிக்கும் நல்வேள்வி செய்தவன் என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் என்பவன் நல்லாசிரியர்களைக் கூட்டி ‘புணர்கூட்டு’ அவையை நடத்தினான் எனவும் குறிப்பிடுகிறார்.

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் ( மதுரைக் காஞ்சி,761-763)

புணர்கூட்டு என்பது புலவர்கள் கூடும் அவை. இந்த அவை  கூடி, புதிதாக புனையப்படுகிற பாடல்களின் தன்மையை ஆய்வு செய்யும்.

திறனாய்வாளன் தன்மை

            மன்னனை வழிநடத்துவதற்கு உரிய சொற்களைத் தீதின்றி தேர்ந்தெடுத்து கூறுபவனவே நல்ல அமைச்சன். அவர்களைப் போல், நூல்வல்ல ஆசிரியர்களால் திறனாய்வு செய்து நல்ல சொற்களைத் தேர்ந்து, பொல்லாத சொற்கள் இடையில் புகாதவாறு விலக்கி, அறிவுடைய நா என்னும் ஏரால் உழுது உண்ணுபவர்களே புலவர்கள் என்கிறது கலித்தொகை (68).

            திறனாய்வாளனுக்கு வேண்டப்படுகிற தகுதிகளில் முதன்மையானது நடுநிலைமை. அதாவது, தன் விருப்பு வெறுப்பின் காரணமாக ஒருதிறம் சாராது, துலாக்கோல் போல் சமநிலையில் நின்று  திறனாய்ந்து உரைத்தல். இதனை, குறுந்தொகையில் இறையனார் எனும் புலவர் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

என்பது அப்பாடல். தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்ற தலைவன் கேட்பதாக பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

            தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா?  என்கிறான். இதில் பூவின் மீது கொண்டு விருப்பத்தின் பேரில் ஒருதிறம் நின்று கருத்துச் சொல்லாதே என்று வண்டைப் பார்த்துக் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது பாடல்.

            திறனாய்வாளர் என்பவர் பல மலர் அணையும் வண்டைப் போன்றவர். பல நூல்களைப் பயின்றாலும் தமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒருதிறம் சாராமல், நூற்திறம் அறிந்து உள்ளதை உள்ளபடி உரைக்கவேண்டும் என்பது இதன் உட்பொருள்.

சங்கப் பாடலும் புராணச் செய்தியும்

          கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசன் சிவபெருமானைச் சங்கத்தோடு இணைத்துப் போற்றிப் பாடுகிறார். தருமி என்னும் ஏழைப் புலவனுக்கு, ’கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்றப் பாடலை எழுதிக்கொடுத்தார் என்பதை,

நன்பாட்டுப் புலவரனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண்

என்று கூறுகிறார்.

            திருநாவுக்கரசருக்குப் பின்வந்த பல்வேறு இலக்கிய ஆசிரியர்களும் தமிழாயும் புலவர் கூட்டத்தைக் குறிக்கும் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். சின்னமனூர்ச் செப்பேடு, சங்கத்தில் இலக்கியம் இயற்றும் பணியோடு, மொழிபெயர்ப்புப் பணியும் நடைபெற்றதாக ஒரு செய்தியைக் கூறுகிறது. இதில்,

                   மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

                   மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்று குறிப்பிடப்பிடுகிறது.

            வள்ளுவரும் திறனாய்வின் தன்மையைப் பல இடங்களில் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார். அவர், ஒன்றின் உண்மைத் தன்மையக் காண்பது குறித்து,

                    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

                  மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றும்,

                      எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 

                      மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்றும் குறிப்பிடுகிறார். மேலும்,

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின் ஊங்கு இல் (குறள்-644)

என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

            ஆக, நடுநிலை நின்றல், தானே நுண்மான் நுழைபுலம் கொண்டு ஒன்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிதல், அறிந்தவற்றைத் தெளிவாக உலகிற்கு உரைத்தல் என்ற திறனாய்வுக் கலையின் மையக் கோட்பாடுகளைப் பழந்தமிழர் நன்கு வரையறுத்து வைத்திருந்னர் என்பதும், திறனாய்வுக் கலையை உலகிற்கு இவர்களே வழங்கினர் என்பதும் தெளிவு.

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!