உடன்போக்கும் தனிமனித ஒழுங்கும்

உடன்போக்கும் தனிமனித ஒழுங்கும்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

(பன்னாட்டுக் கருத்தரங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (ம)ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி. 27,28, 29-12-2017)

            தமிழர் வாழ்வியலை அகம், புறம் என்று இரு கூறுகளாக்கி, இருவகைப்பட்ட வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுக்கிறது தொல்காப்பியம். அதிலும், அக வாழ்வியலான குடும்ப வாழ்வியலில் களவு, கற்பு என்ற இரு நிலைகளையும் மிக நுட்பமாக நெறிப்படுத்துகிறது. பண்டைத் தமிழரின் சமூக வாழ்வும் குடும்ப வாழ்வும் தொல்காப்பிய நெறிவழியே இன்று அறியப்படுகிறது.

            தொல்காப்பியம் தவிர்த்து பழந்தமிழ்ச் சமூகத்தை அறிய சான்றுகளாய் அமைவன சங்க இலக்கியங்களே. சங்க இலக்கியப் பாக்கள் நீண்டகாலப் பரப்பை எல்லைகளாகக் கொண்டவை. பல நூற்றாண்டுகளைத் தம்முள் அடக்கியவை. இவை, தமிழ்ச் சமூகத்தின் அக-புறப் படிநிலை மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், வாழ்வியல் நெறிகள், பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றைப் பறைசாற்றுவன.  பண்டைத் தமிழரின் இல்லற மற்றும் சமூக வாழ்வியல் நெறிகளை முழுமையாக உணர்வதற்குத் தொல்காப்பியமும் சங்க இலக்கியமுமன்றி வழியில்லை.

            ‘காதல் உடலுக்கு நல்லது, உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கே நல்லது. அந் நல்ல காதல் எது? அஃறிணையுயிர்களின் காதலாவது கல்லாக் காமம், இயற்கை வீறு. மொழி பேசும் மக்களினத்தின் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் கல்வியில் வளர்வது. அவ் வளர்ச்சிக் கல்வி எது? காதலையும் அதன் உணர்வையும் அதன் கல்வியையும் தெளிய வேண்டின், தெளிவுக்கு வேறிடம் இல்லை. தமிழ்ப் பேரின் கண்ட அகத்திணையை நாடுக. தொல்காப்பியம் சங்கவிலக்கியம் திருக்குறள் என்று முத்தமிழ் நூல்களைக் கற்க முந்துக’ என்கிறார் வ.சுப.மாணிக்கனார் (த.கா.,முகவுரை). அவ்வகையில், மேற்கொண்ட இலக்கண இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்கத் தமிழர் அகவாழ்வியல் ஒழுக்கத்தின் ஒரு கூறான ‘உடன் போக்கும் தனிமனித ஒழுங்கும்’ குறித்து காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

உடன்போக்கு

          உடன்போக்கு, அகப்பொருள் இலக்கணத்தில் இடம்பெறும் ஒரு துறையாகும். உடன்போக்கு என்னும் தொடர் ’உடன்போக்குகை’ எனப் பொருள்படும். இது தலைவன் தலைவியரிடையே தோன்றிய களவு வெளிப்படுதற்குரிய கிளவிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவி, பெற்றோர் அறியாது தோழியின் உதவியால் தலைவனோடு வேற்றிடம் செல்வது உடன்போக்காகும் (க.க., ப.784).

            தலைவன் தலைவியரிடம் முகிழ்த்த களவுக் காதல் மணம் செய்துகொண்டு, கற்பாக மலர வேண்டும் என்பது தமிழர் கண்ட அகவாழ்வுக் கோட்பாடாகும். களவுமணம் கற்புமணமாக ஆவதற்கு இடையூறு தோன்றுமாயின், அதனை நீக்கி, தான் காதலித்த அத்தலைவனையே மணப்பதற்கான முயற்சியினைத் தலைவியும், அவளுக்கு உற்ற துணையான தோழியும் மேற்கொள்வர். அம் முயற்சி அறத்தொடு நிற்றல் எனப்படும். தோழி முதலானோர் அறத்தொடு நிற்றலால் தலைவன் தலைவி உறவினை அறிந்த பெற்றோர் அவர்களுக்கு மணஞ்செய்விப்பர். அறத்தொடு நிற்கத் துணிவில்லாமையாலும் அறத்தொடு நின்று அதற்குப் பயனில்லாமையாலும் உடன்போக்கினால் களவு கற்பாவது உறுதியாகும். உடன்போக்கினைத் தொல்காப்பியம் ‘கொண்டு தலைக்கழிதல்’, ‘போகிய திறம்’ (தொல்.அகத்.17; 39) என்று குறிப்பிடுகிறது.

            களவு வாழ்வில் அலர், இற்செறிப்பு, நொதுமலர் வரைவு, வரைவு கொடாமை போன்ற இடையூறுகள் ஏற்படும் பொழுது, தோழியின் உதவியுடன், தலைவியின் உறவினர் யாரும் அறியாவண்ணம் இல்லறவாழ்வை மேற்கொள்ளும் பொருட்டுத் தலைவியைத் தலைவன் தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். இவ் உடன்போக்கும் இதனைச் சார்ந்த நிகழ்வுகளும் ‘போக்கு அறிவுறுத்தல், போக்கு உடன் படாமை, போக்கு உடன்படுத்தல், போக்கு உடன்படுதல், போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல் என்று எட்டு வகைப்படும்’ என்கிறது இலக்கண நூலான அகப்பொருள் விளக்கம் (அகப்.181).

            ஓர் இளம்பெண் பெற்றோரைத் துறந்து, பழகிய சூழலை மறந்து புதிய ஆடவனோடு(காதலன்), துன்புறுத்தும் பாலை வழியில் செல்ல முற்படும் உடன் போக்கினைப் பற்றியும், உடன்போன பின்னர் நற்றாய் இரங்குதல் பற்றியும் அமைந்த பாடல்கள் பயில்வோர்களின் உணர்ச்சியினைத் தூண்டுவனவாக உள்ளன என்கிறது கலைக்களஞ்சியம்(ப.785). சங்க அகப்பாடல்களுள் 122 பாடல்கள் இத்துறையில் அமைந்துள்ளதாக அறியப்படுகிறது. கயமனார் பாடிய 22 பாடல்களில் 20 பாடல்கள் உடன்போக்கு பற்றியும் தாயிரங்கல் பற்றியுமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

            உடன்போக்கு என்பது தலைவன் – தலைவி தொடர்பான ஒழுக்கம் என்றாலும் தோழி, நற்றாய், செவிலி போன்றோர் இந்நிகழ்வோடு நெருங்கிய தொடர்புடையவர்களாகவும், மிகுந்த தாக்கத்திற்குள்ளாவோராகவும் இருக்கின்றனர். இவர்களின் கூற்றுகள் வழியேயே உடன்போக்கில் தனிமனித மற்றும் சமூக ஒழுகலாறுகளை முழுமையாக அறிய முடிகிறது.

தலைவனும் உடன்போக்கு ஒழுக்கமும்

      தலைவனும் தலைவியுமே உடன்போக்கு ஒழுக்கத்தின் முதன்மை மாந்தர்கள். இவர்களை மையமிட்டே இவ்வொழுக்கமும் இதுசார்ந்த நிமித்தங்களும் அமைகின்றன. களவொழுக்கத்தில் இருக்கும் தலைவனைப் பொறுத்தவரையில் உடன்போக்கு குறித்து முதலில் வலியுறுத்துபவனாகவோ, வழிநடத்துபவனாகவோ அறியப்படவில்லை. உடன்போக்கில் தயக்கம் காட்டுபவனாகவே காணப்படுகிறான். அதற்கான காரணங்களை அவனுடைய கூற்றுகளாக அமைந்த பாடல்கள்  புலப்படுத்துகின்றன.

        உடன்போக்கும் அதனைச் சார்ந்த நிகழ்வுகளிலும், உடன்போக்கைத் தவிர்த்தல் அல்லது தள்ளிப்போடல், வழியில் தலைவிக்கு ஏற்படப் போகும் துன்பத்தை எண்ணி எச்சரித்தல் – வழிப்போக்கில் தலைவியைப் பாதுகாத்தல் – தன்னால் தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு இரங்குதல் – தலைவியின் உறவினர் எதிர்ப்படின் தலைவியை அவர்களிடத்து விட்டு விலகல் – தலைவி தனக்கு உரிமையானதை எண்ணி மகிழ்தல் – தன் பெற்றோரிடம் தலைவியைச் சேர்ப்பித்தல் – தன் இல்லத்தில் மணம் முடித்தல் ஆகியவை தலைவனின் ஒழுகலாறுகளாக அமைகின்றன.

         தலைவன் தலைவியோடு உடன்போக்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தோழியால் மிகுதியும் வலியுறுத்தப்படுகிறது. ஆயினும், தலைவியும் தலைவனிடத்து உடன்போக்கு போகவேண்டுமென வலியுறுத்தும் இடங்களும் உண்டு. உடன்போக்கு செல்லவேண்டும் என்று வலியுறுத்தும் தலைவியிடம், ‘பெரிய புகழையுடைய தந்தையின் பெரிய இல்லத்தில், பெற்ற தாயோடு பிரியாது வாழும் மிக்க இளமையுடையவளே! துன்பம் தரும் மாலைப்பொழுதிலே யான் தனியே இருத்தல் ஆற்றேன் என்று கூறி, நீர் வடியும் கண்களோடு என்னைப் பார்த்து, ‘உம்மொடு வருவேன்’ என்று கூறுகிறாய். யான் செல்லும் வழியில், வேனிற் காலத்தில் இத்தி மரத்தின் நெடிய விழுதுகள், காற்று வீசும்தோறும் ஊசல் போல ஆடி, அம் மரத்தின் கீழே துயிலும் பிடியானையை வருடும். அக்காட்டில் செல்வது உனக்கு முடியுமோ? முடியாது’ (நற்.162) என்று கூறுகிறான். தலைவி வாழும் செல்வச்செழிப்பு மிக்க சூழலையும், கொடிய விலங்குகள் திரியும் காட்டின் துன்பத்தையும் சுட்டி உடன்போக்கைத் தவிர்க்கிறான்.

            சூழலின் நெருக்கடி காரணமாக தலைவியுடன் உடன்போக்கு நிகழும் நிலையிலும் அவளின் மென்மைத் தன்மைக்கு வருந்துவதும், மிகவும் பாதுகாப்பாக அவளை அழைத்துச் செல்ல வேண்டுமே என்பதில் கவனம் கொள்வதும், அவளின் துன்பங்கண்டு அதற்குக் காரணமானோமே என்று இரங்குதலும், வழியிடையில் அவளை ஓய்வெடுக்கவும் விளையாடவும் ஆற்றுப்படுத்துதலும், அவள் தனக்கு உரியவளானாள் எனப் பெருமகிழ்வு கொள்வதும் என தலைவனின் இயல்பும் ஒழுக்கமும் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

        தலைவியின் வீட்டுச் சூழல், களவு வாழ்விற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, தலைவியை இழந்துவிடுவோமோ என்ற அச்சம், தலைவியைப் பிரிந்தால் அவளின் பெற்றோர் வருந்துவரே என்ற கலக்கம், உடன்போக்கில் தலைவிக்குத் தீங்கேதும் நிகழ்ந்துவிடக் கூடாதென்ற தவிப்பு ஆகிய தலைவனின் மன உணர்வுகள் கூற்றுகளாக வெளிப்படுகின்றன. ஆயினும், உடன்போக்கு தொடர்பாக தலைவனின் கூற்றுகளும், செயல்களும் அவன், தான் மேற்கொண்டிருக்கும் இவ்வொழுக்கம் சரியா தவறா என்ற தடுமாற்ற நிலையிலிருப்பதை நுண்ணிதின் உணர்த்துகின்றன.

          உடன்போக்கிலே, ‘வெண்மையான பற்களையுடையவளே! நிலைத்த நற்செயல்களை முயன்று செய்து முடிக்கும் ஆர்வமுள்ள மக்கள், தாம் வழிபடும் தெய்வத்தைக் கண்ணெதிரே கண்டது போல என் மனச்சுழற்சித் துன்பம் நீங்க உனது அழகிய தோள்களை அடைந்து விட்டேன்’ (நற்.9) என்று தலைவியினிடத்தும், ‘நாணத்தை விட்டு அருந்துன்பத்தை அடைந்து யான் வருந்தியபோது, மருந்து கிடைத்தது போல மடவோள் நம்மோடு நடந்து வருவதைக் காண்பாயாக’ (நற்.384) என்று தன் நெஞ்சிடத்தும் உரைக்கும் தலைவனின் சொற்கள், தலைவியை அவன் அடைந்துவிட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் உச்சத்தைக் காட்டுபவை.

      வழியில், ‘மேகம் மழைத்துளிகளைப் பொழிந்த காட்சிக்கினிய காலை நேரம். வெயில் இல்லாத இப்போதே சிறிது விரைவாகச் செல்வாயாக’(நற்.264) என்று தலைவியை விரைவுபடுத்தும் தலைவன்,  ‘வரும் மழை மறைந்தது. அதனால் வெண்ணிற வானத்திலிருந்து விழும் நுண்ணிய துளிகள் மாறிப்போயின. காற்றுள்ள அழகிய காட்டில் ஆலமரத்தின் நிழலிலே தங்கி, தளர்ச்சி நீக்கி என்னோடு வருவாயாக. யான் உன்னோடு இருப்பதால், அஞ்சுவன கண்டாலும் அஞ்சாது வருக. இளைப்பாற வேண்டியவிடத்தில் இளைப்பாறி வருக. என்னோடு வருந்தாது வருக’(நற்.76) என்றும் ஆற்றுப்படுத்துகிறான். மேலும், ‘நும்மூரில் புன்னை மரத்தின் அரும்பும் மலரும் உதிர்ந்து கிடக்கும். அதனாலே தேன்போல மணப்பதும் புலால் மணப்பதுமான கானலிலேயுள்ள நீண்ட மணலிலே நடந்து பழகிய உன் மெல்லிய அடிகள், இங்கே கல்லில் நடந்து சிவந்து போயின. அவை வருந்தாமல் இருக்கும் பொருட்டு மெல்லச் செல்க’ என்றும் வழிநடத்துகிறான்.

            தம் ஊர் எல்லைவரை அன்றி இதுவரை வேற்றிடம் அறியாதவள் தலைவி. இளமையும் மென்மையும் வாய்ந்தவள். அப்படியானவள் தலைவனோடு உடன்போக்கில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும். நடந்தறியாத கால்கள் தளர்ச்சி கொள்ளும். பாலையின் வெம்மையால் உடல் சோர்வு ஏற்படும். இச்சூழலில் அவளுக்கு உடல் சோர்வும் மனத் தளர்ச்சியும் கொடிய விலங்குகளால் அச்சமும் ஏற்படாதவாறு அவளை அழைத்துச் செல்வதில் தலைவன் மிகுந்த கவனம் கொள்கிறான். 

                 உடன்போக்குச் செல்லும் தலைவனின் உயர் பண்பைக் காட்டும் பாடலடிகளாக,

அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்

நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே (நற்.362)

என்ற அடிகளைச் சுட்டலாம். இதில், ‘கைவேலைத் திறமையமைந்த பாவை ஒன்று நடந்து வந்தது போல், உன் தந்தையின் இல்லத்தின் எல்லையைக் கடந்து என்னோடு வந்துவிட்டாய், வருந்தாதே. இந்த அகன்ற காட்டில் உன் உடல் வருத்தம் நீங்க சற்றே இளைப்பாறுக, விளையாடுக. யான் வேங்கை மரத்தின் பின்னால் மறைந்திருப்பேன். இங்கே தங்கியிருக்கும்போது வழிப்பறி செய்வோர் முதலானோர் போர் செய்ய வந்தால் அஞ்சாமல் எதிர்த்துப் போர் செய்து அவர்கள் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்வேன். அதேவேளை, உன் சுற்றத்தார் உன்னைத் தேடி வந்தால் யான் மறைந்து கொள்வேன்’ என்கிறான். போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை’ (கலி.133:7) என்று அக வாழ்வு ஒழுக்கம் சமூகத்தில் வலியுறுத்தப்பட்டது என்றாலும், தான் விரும்பி மணம்செய்ய விரும்பிய பெண்ணின் உறவினர் தனக்கும் உறவினர்; அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அது தலைவிக்கும் தனக்குமானது என்றெண்ணும்  தலைவனின் ஒழுக்கம் இதில் விளங்குகிறது.

போக்கறி வுறுத்தல் வரவறி வுறுத்தல்
நீக்கம் இரக்கமொடு மீட்சி யென்றாங்கு
உடன்போக் கிடையீ டொருநால் வகைத்தே
  (நூ.197)

என்ற அகப்பொருள் விளக்கத்தில், உடன் போக்கில் நான்கு வகையான இடையீடுகள் உள்ளதென்றும், அவற்றுள், தலைவியின் சுற்றத்தார் தலைவியை மீட்கச் செல்லலும் உண்டு என்றும் சுட்டப்படுகிறது.


தலைவியும் உடன்போக்கு ஒழுக்கமும்

         களவு வாழ்வில் மிகுந்த நெருக்கடிகளுக்கு ஆளாகும் பாத்திரமாகத் தலைவி காட்டப்படுகிறாள். களவு ஒழுக்கத்தால் தலைவியின் உடலில் தோன்றும் மாற்றங்கள், அலரால் ஊரில் எழும் தூற்றல்கள், தாயின் கடிசொல், தந்தையின் இச்செறிப்பு, பிற ஆடவனுக்கு மணம்செய்யும் முடிவு போன்றவை தலைவனோடு உடன்போக்கு என்ற நிலைக்குத் தலைவியை இட்டுச்செல்கின்றன. இதிலும்கூட, உடன்போக்கு மேற்கொள்ள தயக்கம், உடன்போக்கு தவிர்த்தல், தலைவனிடம் உடன்போக்கு வலியுறுத்தல், தாயைத் தூற்றுதல், உடன்போக்கில் மகிழ்தல் என மாறுபட்ட பலநிலைகளில் தலைவி பாத்திரத்தின் எண்ண ஓட்டத்தையும் ஒழுக்கத்தையும் அறியமுடிகிறது.   

            நட்புப் பூண்ட தலைவன் தலைவி பிரிவு என்பது சாதலுக்கு ஒப்பானது என்பதை,

            ……………… யாக்கைக்கு

          உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்

          வாழ்தல் அன்ன காதல்

          சாதல் அன்ன பிரிவரி யோளே           (அகம்.339)

என்கிறது அகநானூறு.

            தலைவன் சேரும்முன் அல்லது சேர்ந்து பிரியுமுன் சூள் உரைத்து தலைவிக்கு நம்பிக்கை அளிக்கிறான். தலைவன் வரைவு நீட்டித்த போதும், வரைவு இடையிட்ட போதும் தோழி தலைவனின் சூளில் ஐயம் கொள்கிறாள். தலைவியோ, தலைவன் வாய்மை தவற மாட்டான் என நம்பிக்கை கொள்கிறாள். இங்குச் சூள் பொய்த்தல் ஒழுக்கமற்றதாகக் கருதப்படுகிறது. தலைவன், தன் வாய்மையில் பொய்த்தானோ என ஐயுறும் தோழிக்கு,

          குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய் தோன்றில்

          திங்களுள் தீ தோன்றியற்று               (கலி.41)

எனப் பதில் மொழிகிறாள் தலைவி. மேலும், இவ்வுலகம் தன்நிலை பெயர்ந்து மாறினாலும் காதலர் தான் சொன்ன சொல் மாறமாட்டார் என்பதை,

அம்ம வாழி தோழி! காதலர்

நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய

சொல்புடை பெயர்தலோ இலரே                 (நற். 289)

என்று நம்பிக்கை மொழி பேசுகிறாள்.

            தனிமனித ஒழுக்கம் சமூகத்தோடு பொறுத்திப் பார்க்கப்பட்டது. தனி வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் அறத்திற்கு எதிரான செயல் சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்குமென அஞ்சப்பட்டது. தலைவி, தாம் உயிராகக் காதலிக்கும் தலைவனுக்குத் தன்னை மணமுடிக்காமல் அயலவர்க்கு தம் பெற்றோர் மணமுடிக்க எண்ணுவதை அறமற்ற செயல் என்கிறாள். இந்த அறமில்லாத செயலால் வள்ளிக் கிழங்கும் கீழ்வீழாது; மலையின்மீது தேனுந்தோன்றாது என்று எண்ணுகிறாள் (கலி.39:11-14). இந்த அறமற்ற செயலைச் செய்யத் துணியும் வீட்டாரையும் ஊராரையும் தூற்றுகிறாள். முடிவில் உடன்போக்கைக் கைகொள்கிறாள்.

            களவு வாழ்க்கையை அனுமதிக்காத அன்னை, தலைவியின் பார்வைக்கு அறம் அற்றவளாகப் படுகிறாள். தினைப்புனம் காக்கச் சென்றால் தலைவனைச் சந்திக்கலாம்; ஆனால் தாய், தலைவியைத் தினைப்புனம் காக்க அனுமதிக்கவில்லை. அனுமதிக்காத அன்னையைத் தலைவி ‘அறனில் அன்னை’ என்கிறாள்(அகம்.302). தலைவன்-தலைவி உறவு பற்றி ஊரில் அலர் தோன்றுகிறது; அதனால் அன்னை தலைவியை இற்செறிக்கிறாள்; அலர் கூறும் ஊரும் அறமில்லாதது; இற்செறிக்கும் அன்னையும் அறமற்றவள் (குறு.262; நற்.63) என்பது தலைவியின் கோபம். ‘இற்செறித்து வைத்திருப்பது அறநெறி அன்று. இதனை இற்செறித்து வைத்திருக்கும் அன்னையிடம் யாரேனும் கூறமாட்டார்களோ’ என்று தலைவி கேட்கிறாள்(நற்.68). ‘புலிகள் வழங்கும் மலைகள் பிற்பட, உன்மகள் சுரங்களைக் கடந்து தலைவனுடன் சென்றனள் என்று அறனில் அன்னைக்குக் கூறுங்கள்’ என்று வழிப்போக்கரிடம் கூறுகிறாள் உடன்போக்கு மேற்கொண்ட ஒரு தலைவி (ஐங்.385). இதில் தலைவியின் மனநிலையையும் சினத்தையும் அறியமுடிகிறது.

            உடன்போக்கில் தலைவனோடு மிகவும் மகிழ்ச்சியாகச் செல்லும் தலைவியையும், அன்னையையும் ஊரையும் வசைபாடும் தலைவியையும் காட்டும் பாடல்களுக்கிடையே உடன்போக்கினை முடிவு செய்தபிறகும் பெற்றோரை எண்ணி அதனைத் தவிர்த்த தலைவியையும் இலக்கியப் பதிவு காட்டுகிறது.

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்

பாசம் தின்ற தேய் கால் மத்தம்

———— ———————– ——–

‘இவை காண்தோறும் நோவர்மாதோ

அளியரோ அளியர் என் ஆயத்தோர்!’ என

நும்மொடு வரவு தான் அயரவும்

தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே (நற்.12)

என்கிற பாடல் தலைவியின் மனநிலையை தெள்ளிதின் காட்டுகிறது. இதில், தலைவனோடு உடன் போக்கில் செல்ல விரும்பிய தலைவி தன்னைப் பிறர் பார்த்துவிடாதபடி மறைத்துத் தன் காலில் அணிந்திருந்த பரலொடு சேர்ந்த சிலம்புகள் இரண்டையும் விளாம்பழம் கமழும் பானையில் வைக்கச் செல்கிறாள். அப்போது ‘நான் பிரிந்தால் இவை இரண்டினையும் என் ஆயத்தார் காணும்தோறும் என்னை நினைத்து வருந்துவர். அவர் இரக்கப்பட்டத் தகுந்தவர். அவர் வருந்தும்படியான செயல் என்னால் செய்ய முடியாது’ என்று தீர்மானித்தாள். ஆயத்தார் வருத்தத்தை நினைத்து அவள் கண்கள் கலங்கின. உடன்போக்கைத் தவிர்த்தாள் என்று தலைவனிடன் கூறுகிறாள் தோழி. இதில், தலைவனோடு வாழும் தாம் விரும்பிய வாழ்வைத் தானே அமைத்துக்கொள்ள முடிவெடுக்கும் தலைவி, தான் பிரிந்தால் தன் பெற்றோருக்கு ஏற்படும் துன்பத்தை எண்ணி உடன்போக்கைத் தவிர்க்கிறாள். இருவகை உறவுகளையும் விட்டுக்கொடுக்க முடியாது தவிக்கும் தலைவியின் மனநிலை இதில் வெளிப்படுகிறது.

தோழியும் உடன்போக்கு ஒழுக்கமும்

      களவு வாழ்வின் இயக்கியாக தோழி அறியப்படுகிறாள். களவைக் கற்பாக மாற்றுவதிலும் தோழியின் பங்கு முதன்மையானது. அறத்தொடு நிற்றல் என்ற தமிழர் அகவாழ்வு விழுமியம் தோழி மூலமாகவே செயலாக்கம் பெறுகிறது.   

            கொளற்குரி மரபினரான தலைவனின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள, கொடைக்குரி மரபினரான தலைவியின் குடும்பத்தினர் கொடுக்க ஏற்படும் திருமணத்தையே முதல் நிலையில் வைக்கிறார் தொல்காப்பியர். அடுத்த நிலையையே உடன்போக்கின்வழி காதலர்கள் தாமே ஏற்படுத்திக்கொள்ளும் வரைவிற்கு வழங்குகிறார். இதனை,

            கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்

          கொளற்குரி மரபின் கிழவன் கிளத்தியை

          கொடைக்குரி மரபினர் கொடுப்பக் கொள்வதுவே (தொல்.1088)

என்பதிலும்,

            கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

          புணர்ந்து உடம்போகிய காலையான (தொல்.1089)

என்பதிலும் அறியலாம். ‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே’ என்பது விதியாக இல்லாமல், விதிவிலக்காக அமைகிறது. உடன்போக்கிலும் ஒழுக்கக் கேடுகள் நிகழ்ந்த்தால் வரைவு கட்டாயமாக்கப்பட்டதாக அறிஞர் மொழிவர் (அ.கோ.ச.அ.க.ம.).

            தலைவியை அவள் விரும்பிய தலைவனுக்கு மணம் முடிக்காது மாற்றானுக்கு மணம்முடிக்க எண்ணும் சூழலிலும், தலைவனைப் பிரிந்து தலைவியால் வாழமுடியாது என்பதையுணர்ந்த நிலையிலும் தலைவியைத் தோழி உடன்போக்கிற்கு ஆற்றுவிக்கிறாள். முதலில் தயங்கும் தலைவி, தோழியின் தொடர் மனமாற்ற சொற்களால் இறுதியில் ஒத்துக்கொள்கிறாள். ஆனால், தலைவனை உடன்போக்கிற்கு ஆற்றுவிக்க தோழி பலவாறு முயலவும் அதிகப்படியான முயற்சியை மேற்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. தலைவியின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட தோழியின் செயல்பாடுகள் அவளின் கூற்றுகளின் வழி வெளிப்படுகின்றன.

        தோழி தலைவியை உடன்போக்கிற்கு வலியுறுத்திய சூழலை,

                                      சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

                                      மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி

                                      மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற

                                      சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப

                                      அலந்தனென் வாழி தோழி!  (நற்.149)

என்ற நற்றிணைப் பாடல் தெளிவாகக் காட்டுகிறது. இதில், சிலரும் பலரும் கடைக்கண்ணால் பார்த்து, மூக்கின் உச்சியில் சுட்டு விரலைச் சேர்த்துத் தெருவில் நின்று பெண்கள் அம்பல் தூற்றுவர். அதை உண்மை என நம்பி அன்னையும் சிறிய கோலைச் சுற்றி உன்னை வருத்துவாள். இதைக் கண்டு நான் துன்புற்றேன். விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தி நடுநாளில் வரும் அழகிய தேரையுடைய தலைவனோடு நீ உடன்போவதற்கு யான் ஏற்பாடு செய்தேன். நீ எழுக! நீ சென்றபின் இவ்வாராவாரமுடைய ஊர் அலரைச் சுமந்து ஒழிக! என்று ஊரைச் சபிக்கிறார்.

            தலைவனோடு தலைவியை உடன்போக்கிற்கு வழிவகுத்த தோழி, தலைவியைத் தலைவனுடன் சேர்ப்பிக்கும்போது அவனிடத்துக் கூறும் வார்த்தைகள் மிகவும் கூர்ந்து நோக்கத்தக்கவை. தலைவியின்பால் தோழி கொண்டிருக்கும் அன்பை உணர்த்துபவை. தலைவனிடம்,

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்

நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர  (நற்.10)

என்கிறாள். வேல் போன்ற உன் பிழையாத நல்ல சொற்களை நம்பித் தெளிந்தவள் இவள். இவளது அழகிய கொங்கைகள் தளர்ந்து சாய்ந்த காலத்திலும், பொன் போன்ற இவளது மேனியிலே கருமணி போலத் தாழ்ந்து தொங்கும் நல்ல நீண்ட கூந்தல் நரையோடு முடிக்கப்படும் முதுமைக் காலத்திலும் இவளைக் கைவிடாது காப்பாயாக என்று வேண்டுகிறாள். பின்னாளில் எழுந்த,

‘’புதுமலர் அல்ல; காய்ந்த / புற்கட்டே அவளுடம்பு / சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி  / மதியல்ல முகம் அவட்கு / வறள்நிலம்! குழிகள் கண்கள் /

எது எனக்கு இன்பம் நல்கும் / இருக்கின்றாள் என்பதொன்றே’’

என்று, முதியோர் காதலை நயம்பட உரைக்கும் பாரதிதாசனின் பாடல் சுவையும் கருத்தும் கருதி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

உடன்போக்கும் தாயின் நிலையும்

         தலைவியின் உடம்போக்கு ஒழுக்கத்தால் மிகவும் பாதிப்பிற்குள்ளாவது தாயே. தாய் என்பது இங்குத் தலைவியின் தாயைக் குறித்து நின்றது. தலைவியைப் பிரிந்ததால் தன்னிலை பிறழ்ந்த மனநிலைக்குத் தாய் தள்ளப்படுகிறாள். தாயின் புலம்பல்கள் படிப்போர் மனத்தில் இரக்கத்தை வரவழைக்கக்கூடியன. மகளின் இழப்பு அவளுக்கு ஈடுசெய்யமுடியாததாக உள்ளது. மகளைப் பிரிந்த தாயின் புலம்பல்களுக்கும் வினாக்களுக்கும் உறவினரிடத்தும் ஊராரிடத்தும் சான்றோரிடத்தும்கூட விடைகள் இல்லை.

         தலைவனோடு சென்ற தலைவியின் இளமையை எண்ணியும், அவள் சென்ற காட்டின் கொடுமையை எண்ணியும் தாய் மிகவும் வருந்துகிறாள். தன்மகள் இளையவள் என்பதும் ஏதும் அறியாதவள் என்பதும் தலைவனே அவளை மயக்கிக் கூட்டிச்சென்றான் என்பதும் தாயின் குற்றம்சாட்டுகள். ஆதலால், தலைவனை ’அறனிலாளன்’ என்று சபிக்கிறாள். இதற்குக் காரணமாக ஊழினையும் சபிக்கிறாள்.

           தலைவியின் இளமையும் பாதையின் கொடுமையும்

           நற்றாய், செவித்தாய் மற்றும் தலைவன் ஆகியோர் கூற்றுகளின் வழியே உடன்போக்கு செல்லும் பாலைநிலத்து வழியின் கொடுமையினை உணரமுடிகிறது. தாயின் பாடல்களில், பாலைநிலத்து வன்மையையும் அங்குச் சுற்றித் திரியும் விலங்குகளின் கொடுமையையும் எண்ணி, அவ்வழியே செல்லும் மகளின் நிலை என்னவாகுமோ என்று வருந்தித் துடிக்கும் மனநிலை காணப்படுகிறது.

          ‘மென்மையான உடல் வருந்துமோ என்று நினைத்து யான் படுக்கையில் அணைத்திருந்த கையை நெகிழ்ந்துவிட, அதற்கே அவள் கண்கள் நீர் வடிய அழுது வெய்ய பெருமூச்சு விடுவாள். நிலைத்த வேனிற் காலத்தில் வாடிய காந்தளுடைய, அழல் வீசும் நீண்ட வழியில், நிழலிருக்குமிடம் கிடைக்காமல் குட்டிகளை ஈன்று அவற்றோடு கிடந்த பெண்புலி மிகவும் பசித்ததென்று மயங்கின மாலை வேளையில், வழிப்போவாரைக் கொல்லும் பொருட்டு ஆண்புலி வழியைப் பார்த்துத் தங்கியிருக்கும் புல்லிய வழியாகிய சிறிய பாதையில் எப்படி அவள் போக முடிந்தவளாய் இருப்பாளோ?’ (நற்.29) என்று வருந்துகிறாள் ஒரு தாய்.

          ‘பூமாலை நெருக்கினாலும், குறிய வளையல்கள் கழன்றாலும், காஞ்சி என்னும் அணி அணிந்த அல்குலில் பொற்காசுகள் முறை வேறுபட்டாலும், மாட்சிமைப்பட்ட நலம் கைவிட்டுப் போனதென அழும் என் மாமை நிறமுடைய இளமகளின் மலர் போன்ற கண்கள் பாலையின் வெம்மையில் ஒளி குறைந்து மாறுபட்டனவோ?’(நற்.66) என்று புலம்புகிறாள் ஒரு தாய்.

        தலைவியை நினைவூட்டும் பொருட்கள்

        தலைவி விளையாடிய பொருட்களையும், தலைவி வளர்த்த செடி-கொடிகள், விலங்குகளையும், தலைவியின் தோழியர் கூட்டத்தையும் காணுந்தோறும் தாயின் மனவேதனை மேலும் மேலும் அதிகரிக்கிறது. அவற்றோடு புலம்புகிறாள். நுட்பமான உளவியல் அடிப்படையில் ‘மனைமருட்சி’ என்கிற துறை சார்ந்த இவ்வகைப் பாடல்கள் அமைந்துள்ளன. கயமனார் என்ற புலவரே அதிகமானப் பாடல்களின்வழி தாயின் மன உணர்வுகளை மிக நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார்.

                 தாயொருத்தி, ‘யான் வருந்தி மெலிவேனாக. புதிதாகக் கொண்டு வந்த மணல் பரப்பிய அழகிய இல்லத்தின் முற்றத்தில் ஓரை விளையாடும் தோழியர் கூட்டத்தையும், விளையாடும் இடத்திலுள்ள நொச்சி வேலியையும் காணுந்தோறும் விரைந்து கண்ணீர் ஒழுகும் கண்ணோடு அழுகின்றேன். அவள் வளர்த்த கிளிகளும் என்னைவிட மிகக் கூடிக் கத்துகின்றன. உறவு முறைசொல்லி அவளை விளித்துக் கூவுகின்றன. என் இளமகள் குற்றமில்லாதவள். அம்பல் மிகுந்து இந்த மூதூரில் அலர் தூற்றும் வாயுடைய பெண்டிர் கூடி இன்னா இன் உரை கூறக் கேட்ட பின் சில நாள் வரையிலாவது ஒன்றும் அறியேன் போல் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்கக் தவறினேன். ‘உன் கூந்தலின் நறுமணம் கமழ்கின்றதே’ என்று கேட்டு விட்டேன்’ (நற்.143) என்று புலம்புகிறாள். அனைத்தையும் மறந்து அவனோடு செல்வாள் என்பதை அறிந்திருந்தால் அவளுடைய தவறுகளைக்கூட கேட்டிருக்க மாட்டேனே எனும் தாயின் சொற்கள் விரக்தியின் வெளிப்பாடாக அமைகின்றன.

       ஆனால் மற்றொரு தாயோ, ‘ஊரார் பலர் அலர் தூற்றியும் அதைப் பற்றித் தன் மகளிடம் எதுவும் கேட்காமல், கேட்டால் அவள் மனம் நோவாளே என்று தனக்குள்ளேயே மறைத்துவருகிறாள். ஆனாலும், அவளுக்கும் இதே நிலைதான். பழி கூறும் பெண்டிர், ‘உன் மகள் இன்ன தன்மையள்’ என்று பல நாள் என்னிடம் வந்து கூற, அச்செய்தியை நான் என் மகளுக்கு உரைக்கவில்லை. உரைக்கும் துணிவு கொண்டிலன். அவள் நாணம் கொள்வாளே என்று மறைத்து ஒழுகினேன். ஆனால், இப்போது இந்த இல்லத்தில் நான் தனித்து இருப்ப, அவள் காளை ஒருவனுடன் சென்றாள். நான் அவர்களுக்கு முன்னம் போய் அவர்களை உண்பிக்கும் இல்லத்து மூதாட்டியாய் ஆவேனாக! (அகம்.203) என்று வேண்டுகிறாள்.

        மற்றொரு தாய் தலைவியின் தோழியிடம்,மகளே கேள்! உன்தோழி என் மகள். அவள் காதலனோடு போய்விட்டாள். அவள் விளையாடும் வரி அழகுள்ள பந்தும், வாடிய வயலைக் கொடியும், மயில் அடி போன்ற இலையையும் சிறந்த பூங்கொத்தையும் உடைய நொச்சியும் பாதுகாப்பான அகன்ற இல்லத்தில் காணும்படி தோன்றுகின்றன. மலை குறுக்கிடும் வழியில், விடலையோடு போன என் மகள் வருத்தம் கொள்வாளோ என்று எனக்கு வருத்தம் உண்டாகிறது’ என்கிறாள்.           அதேபோல, ‘தலைவி பாலையும் உண்ணாள்; பந்துடனும் விருப்பங் கொள்ளாள்; விளையாடும் ஆயமகளிரோடும் விளையாட வருந்துவாள்; ஓமையைக் குத்திய களிறு குன்றின் தாழ்வாரத்து இடிபோலப் பிளிறும் அரிய வழியில் அவனோடு செல்லுதலை எளிதென்று கருதினாளோ?’ (குறு.396)  என்கிறாள் ஒரு தாய்.

      தலைவன் –அறனிலாளன்

      மகளை இழந்த தாயின் வருத்தம் தலைவன் மீது கடுஞ்சினமாக வெளிப்படுகிறது. என் மகளை என்னைவிட்டுப் பிரித்துச் சென்ற தலைவன் அறனிலாளன் என்கிறாள். மகளின் உடன்போக்கினைக் குறிப்பிடும்பொழுது,

 அறனி லாளனொடு இறந்தனள் (அகம்.219)

என்கிறாள். என் மகள் தன் இல்லத்தில் காற்சிலம்பு ஒலிக்க நடந்து விளையாடும் மகளிருடன் பந்து சிறிது எறிந்து விளையாடினாலும், ‘மகளே, இங்கு வருவாயாக’ என்று அழைத்துப் பாராட்டி, பகன்றையின் வெண்மையான பூ பனி நிறைத்தாற் போன்று பால் பெய்யப் பெற்று கிண்ணத்தைக் கைக் கொண்டு, ‘தாயே இப்போது நீ உண்டது என் பகுதிப் பாலாகும். இனி உன் தந்தைப் பகுதிப் பாலை உண்பாயாக’ என்று சொல்லி யான் ஊட்டுவேன். இப்போது, அறநெறியற்றவனுடனே சென்று விட்டாள். காட்டுவழியின் கொடுமையையும், அவள் மென்மையையும் எண்ணி வருந்துகிறேன் என்கிறாள். மேலும், அறனிலாளன் தோண்ட… (அகம்.207) என்பதில், என் மகள் முன்பு தேன் வார்த்த பாலை உண்பிக்கவும் உண்ணாதவள். அறனிலாத தலைவன் அழைத்துச்சென்றான். இப்போது தன் தலைவன் மலைவழியில் வற்றிய கூவலில் முகந்த நீரைப் பெருமூச்சுடன் பருகினள் போலும் என்கிறாள்.

         உடன்போக்கால் மனம் வருந்தும் தாயை ஊரார் தேற்றுகின்றனர். சான்றோர் ஆற்றுப்படுத்துகின்றனர். அவர்களை நோக்கித் தாய் கூறும் வார்த்தைகள் வேதனையின் வெளிப்பாடாக அமைகின்றன. ஊரவரையும் சான்றோர்களையும் நோக்கி, ‘கண் உடையவரே! யான் என் மகளைக் கண்டிப்பேன். அவள் இன்சொல் கூறுவாள். அத்தகையவள் இன்று அயலான் ஒருவனை நம்பி அவனுடன் போய்விட்டாள். அவள் தன் சிறந்த விரல்களால் கட்டிய இம்மணல் வீட்டைக் காண்பீராக!’ (அகம்.275) என்கிறாள். கண்டால் எம்மைப் போல் நீங்களும் துன்பம் அடைவீர் என்பது பொருள். மேலும்,

ஒரு மகள் உடையேன் மன்னே! அவளும்

செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு

பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்

‘இனியே தாங்கு நின் அவலம்’ என்றிர்; அது மற்று

யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே

உள்ளின் உள்ளம் வேமே – உண்கண்

மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்

அணி இயற் குறுமகள் ஆடிய

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே (நற்.184)

என்கிறாள். இதில், ‘அறிவுடையீர்! யான் ஒற்றை மகளை உடையவள். அந்த ஒரு மகளும் காளை ஒருவனோடு பெரிய மலையிலுள்ள அரிய வழியில் நேற்று சென்று விட்டாள். ‘இனி, உன் துயரத்தைப் பொறுத்துத் தாங்கிக் கொள்க’ என்று ஆறுதல் சொல்கின்றீர்கள். என் மையுண்ட கண்ணின் கருமணியில் வாழும் பாவை வெளியே வந்து நடை கற்றது போல, என் அழகிய தன்மையுடைய இளமகள் விளையாடிய நீலமணி போன்ற நொச்சியையும் திண்ணையையும் கண்டபின்பும் தாங்கிக் கொள்வதும் என்னால் எவ்வாறு முடியும்?, அவளை நினைத்தால் உள்ளம் வேகின்றதே’ என்கிறாள். பெயர் அறியப்படாத புலவன் வாயிலாகத் தாய் கேட்கும் இக் கேள்விகளுக்கு இன்றுவரை விடையில்லை.

         தலைவன் மீது தலைவி கொண்டிருந்த விருப்பத்தினை முன்பே அறிந்திருந்தால் அவர்கள் இருவருக்கும் மணம்முடித்து வைத்திருப்பேனே என்று புலம்பும் தாயையும் காணமுடிகிறது. ‘கதிரவன் காய்ந்தமையால் வறண்ட பாலை வழியில் என்மகளை அழைத்துக்கொண்டு போனான் ஒரு காளை. என் மகள் அவனிடம் கொண்டிருந்த அன்பை நான் முன்பே அறிந்திருந்தேனாயின் என் இல்லம் விளங்க மணம் செய்து வைத்து மகிழச் செய்திருப்பேனே’ (அகம்.263) என்கிறாள்.

       என் மகளின் சிலம்பு கழி நோன்பு என் மனையில் யான் கண்டுகளிக்க நடவாமல் பிறர் மனையில் பிறர்கண்டு களிக்க அது நடக்கவேண்டியதாயிற்று என்று வருந்துகிறாள் ஒரு தாய்(நற்.279). எப்படியோ உடன்போக்கு நிகழ்ந்துவிட்டது, பரவாயில்லை. இனி அடுத்ததாக மணச்சடங்குகள் நிகழ்த்தப்படவேண்டும். அழைத்துச் சென்றவன் முதலில் என் வீட்டிற்குத்தான் வரவேண்டும் என்று தெய்வத்தை வேண்டி நிற்கிறாள் ஒரு தாய். ‘என் இளைய மகள் காளை ஒருவனுடன் வருவாள் என்று அக்காளையை ஈன்றவள் தன் இல்லத்தை அலங்கரிப்பாள் என்று அறிந்தவர் உரைப்பர். நான் அவளை வளர்த்தவள். இதனை அந்தக் காளை அறியின் நன்று. வேலனே! அவன் முதலில் என் வீட்டுக்கு வருவானோ, அல்லது தன் வீட்டுக்குச் செல்வானே, அவன் குறிப்பு யாது? நின் கழங்குகளைக் கொண்டு குறிபார்த்து அறிந்து கூறுவாயாக’ (அகம்.195) என்கிறாள்.

       உடன்போக்கால் வருத்தமுற்ற தாய் திருமணச் சடங்கு முடிக்கவாவது தன்னைத் தேடி வருவர் என்று எண்ணுகிறாள். எதிர்ப்பார்ப்பு ஏமாற்றமாகிறது. தாயின் சினம் தலைவன்மீது மட்டுமல்ல தலைவனை ஈன்றவள் மீதும் திரும்புகிறது.

பூங் கண் ஆயம் காண்தொறும் எம்போல்

பெரு விதுப்புறுகமாதோ – எம் இற்

பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ

கொண்டு உடன் போக வலித்த

வன்கண் காளையை ஈன்ற தாயே (நற்.293)

என்று, ‘விழா நடக்கும் பழைய வெற்றியை உடைய மூதூரில் என் மகளின் விளையாட்டுத் தோழியரைப் பார்க்கும் போதெல்லாம் யான் நடுங்கித் துன்புறுவேன். எம் இல்லத்திலிருந்த அழகிய கூந்தலையுடைய என் மகளைத் தன்மொழியால் தன் வயப்படுத்தி, உடன் கொண்டுபோனவன் காளை போன்ற இளைஞன். வன்கண்மையுடைய அவனை ஈன்றதாய் என்னைப் போல நடுங்கி வருந்துவாளாக’ என்ற சபிக்கிறாள்.

       தேற்றுதல், ஆற்றுப்படுத்துதல் என்பவையெல்லாம் மனநலம் காக்கும் மருத்துவ முறைகள் என்றாலும், தாயின் இழப்பு பெரிதாகலின் அவளை அவ்வளவு எளிதில் இயல்பிற்குக் கொண்டுவர இயலவில்லை என்பது தெரிகிறது. மிகவும் மனநலம் பாதிகப்பட்ட ஒரு தாய்,

மா இருந் தாழி கவிப்ப

தா இன்று கழிக எற் கொள்ளாக் கூற்றே (நற்.271)

என்கிறாள். ‘செழுமையான குளிர்ந்த மனையில் எம்மை இங்கே ஒழியும்படி செய்துவிட்டுச் சென்றாள் என் மகள். என் மகளைப் பிரிந்த யான் இறந்து தாழியிலிட்டுக் கவிழ்க்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்கு என் உயிரைக் கூற்று கவரவேண்டும் என்கிறாள். தனக்குச் சாவு வரக் கூற்றுவனை வேண்டும் தாயின் மனநிலை வேதனையின் உச்சம். இதற்கு கால ஓட்டந்தான் மருந்து.

செவிலியும் உடன்போக்கு ஒழுக்கமும்

          பொதுவாகச் சங்க இலக்கியப் பாடல்களில் வரும் செவிலியின் கூற்றுகள் தாயின் கூற்றுகளாகவே அமைகின்றன. இருவரின் மனநிலையையும் வேறுபடுத்திப் பார்த்தல் அரிது. தலைவியை ஊர்ப் புறம்வரைத் தேடிச்செல்லுதல் தொடங்கி, இருக்குமிடம் அறிந்து அவர்களின் இல்லறவாழ்வைக் கண்டு அமைதிகொள்ளுவரை அவள் ஓய்வதில்லை..

        ‘தான் விளையாடும் பாவை கைதவறி கீழே விழுந்துவிட்டால்கூட அதற்காக வயிற்றில் அடித்துக்கொண்டு அழும் சிறுமியாக நேற்றுவரை தலைவி இருந்தாள். யானும் அவள் தாயும் தேனொடு கலந்து ஊட்டும் இனிய பாலை உண்ணாமல் விம்மியழுதாள். இன்றோ காளை ஒருவனோடு உடன்போக்கு சென்றுவிட்டாள். யான் எவ்வாறு ஆற்றியிருப்பேன்’ (நற்.179) எனும் செவிலியின் சொற்கள் வழி, தாயைக் காணமுடியும். தலைவியைத் தேடிச்செல்லும் ஒரு செவிலித்தாய் செயலற்ற நிலையில் கூறும்,

காலே பரிதப் பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந் தனவே

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே (குறு.44)

என்ற வார்த்தைகள் அவளின் மனநிலையையும் உடல்நிலையையும் அறிவிக்கும். ‘கால்கள் நடப்பதற்கு முடியாமல் அடி தப்புகின்றன. என் மகள் இவளோ என்று நோக்கி நோக்கி என் கண்கள் ஒளி இழந்துவிட்டன. என்னைப் போல் துன்பத்தில் அகப்படாதார் அகன்ற கரிய விசும்பிடத்து காணும் மீன்களைவிடப் பலராவார்’ என்கிறாள். மேலும், காளையோடு அரிவை சென்ற சுரத்தில், கதிரவன் காயாமல், மரத்தின் நிழல் உண்டாகி, மலைவழியில் கால் நோகாவாறு மணல் மிகப் பரந்து, குளிர்ந்த மழை பெய்வதாகுக எனத் தெய்வத்தை வேண்டும் செவிலியின் உள்ளம் தாயன்பு மிக்கதாய் உள்ளது(குறு.378).

உடன்போக்கும் சமூக ஒழுங்கும்

            “களவு இருவழிகளால் கற்பு மணம் எய்தும். ஒன்று அறத்தொடு நிலை; பிறிதொன்று உடன்போக்கு. முன்னது மென்முறை; பின்னது வன்முறை. எனினும், அன்றைய சமூகத்தில் உடன்போக்கை மறுத்தலும் இல்லை; ‘மறு’ என ஒறுத்தலும் இல்லை” என்கிறார் க.ப. அறவாணன் (அ.நா.கா.வீ., ப.129). அதேபோல, “அகத்தில் பாலை என்னும் திணை பெற்றோர் அறியாமல் விரும்பும் பெண்ணைக் கடத்திச் செல்லுதலேயாம்; இதனை அடுத்துத் தலைவனுக்கும் தலைவியின் உறவினர்களுக்கும் சச்சரவு நிகழும். இச்சச்சரவு பெரிய போராகவும் மாறலாம்” (ச.வா.,ப.170) என்கிறார் ந.சுப்பிரமண்யன்.

            சங்க இலக்கியங்கள் சுட்டுகிற களவு வாழ்க்கையில் அறம் எது, அறம்  அல்லாதது எது என்பது குறித்த எதிர்நிலை கருத்துகள் காணப்படுகின்றன. ‘அறனில் அன்னை’ என்ற சொல்லாட்சியும் ‘அறனிலாளன்’ என்ற சொல்லாட்சியும் உடன்போக்கு நிகழ்வில் நோக்கப்படவேண்டியவை. ‘அறனில் அன்னை’ என்பது உடன்போக்கு மேற்கொண்ட தலைவி தன் அன்னையைச் சுட்டுவது, ‘அறனிலாளன்’ என்பது தன்மகளை உடன்போக்கு கொண்டுசென்ற தலைவன் குறித்து நற்றாய் சுட்டுவது(த.செ.நூ.அ.அ.ச.,ப. 99). இங்கு ஒழுக்கம் என்பது அவரவர் பார்வைக்கும் உறவுநிலைக்கும் வேறுபடுவதைக் காணமுடிகிறது.            

            களவு வாழ்க்கையில் உடன்போக்கு என்பது காதலர் பார்வையில் அறமாகக் தெரிகிறது; பெற்றோர் பார்வையில் அது அறமற்றதாகத் தெரிகிறது. உடன்போக்கு மேற்கொள்ளும் தலைவன், தலைவியின் பெற்றோர் பார்வையில் ஒழுக்கமில்லாதவன் ஆகிறான். களவு வாழ்க்கையைத் தடைசெய்யும் தாய் தலைவியின் பார்வையில் அறமற்றவள் ஆகிறாள். இந்நிலையில் அறம் எது ஒழுக்கம் எது என்ற வினாக்கள் எழுகின்றன. உடன்போக்கு மேற்கொண்ட தலைவியைச் தேடிச்செல்லும் செவிலியிடத்து, ‘பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை / மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?’ (கலி.09) என வினவும் சான்றோர்கள் வார்த்தைகளும், களவு வாழ்வு தெரிந்திருந்தால் திருமணம் முடித்திருப்பேனே என்று புலம்பும் தாயின் சொற்களும் கவனத்தில் கொள்ளத்தக்கன.

            காதலை ஏற்ற சமூகம் உடன்போக்கை முழுவதுமாக ஏற்கவில்லை என்பதே இத்தனை புலம்பல்களுக்கும் துன்பத்திற்கும் காரணம் என்பதை அறியமுடிகிறது. தலைவி களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் தோழியின் செயற்பாட்டை ‘அறத்தொடு நிற்றல்’ என்கிறது இலக்கணம். இங்கு அறத்தொடு நிற்றல் என்பது களவு வாழ்க்கையைப் படிப்படியாக கற்பு வாழ்க்கையை நோக்கி நகர்த்துதல் ஆகிறது; தலைவியின் காதலை செவிலிக்கும் நற்றாய்க்கும் தமையன்களுக்கும் தந்தைக்கும் முறையாக உணர்த்துதலும் மனமொப்ப மணமுடித்தலும் ஆகும். எனவே, அறத்தொடு நிற்றலும் அதன்வழி வரைவும் மனவருத்தமின்றி மணம் முடிக்க தமிழரால் வகுக்கப்பட்ட ஆகச் சிறந்த நெறியானதை அறியமுடிகிறது.  

பயன் நூல்கள்

 அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும், பெ.மாதையன், பாவை பதிப்பகம்.

அகப்பொருள் விளக்கம், க.ரா.கோவிந்தராச முதலியார், கழக வெளியீடு

அற்றை நாள் காதலும் வீரமும், க.ப.அறவாணன், மெய்யப்பன் தமிழாய்வகம்.

கலைக்களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

சங்க இலக்கியத்தில் உளவியல், து.சிவராஜ், சிவம் பதிப்பகம்.

சங்க இலக்கியத் தொகுப்புகள், அ.மாணிக்கனார் உரை, வர்த்தமானன் பதிப்பகம்.

சங்ககால வாழ்வியல், ந.சுப்ரமண்யன், நியூசென்சுரி.

சங்க நூற் காட்சிகள் தொகுதி – 1, கி.வா.ஜகன்நாதன்

தமிழ்க் காதல், வ.சுப.மாணிக்கம், பாரி நிலையம்.

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம் அறிவியல் சமூகம், ஆ.மணவழகன், உலகத் தமிழாராய்ச்சி           நிறுவனம்.

தொல்காப்பியம் – உரைவளம், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!