இளம் தமிழறிஞர் முனைவர் ஆ.மணவழகன்

இளம் தமிழறிஞர் முனைவர் ஆ.மணவழகன்

முனைவர் க.ஜெயந்தி, தடம் பதித்த தமிழறிஞர்கள் – பன்னாட்டு மாநாடு, இசுலாமியக் கல்லூரி, வானியம்பாடி. சூலை 27, 2017)

        சமகாலத்தில் வாழ்ந்து வரும் தமிழறிஞர்களையும் அவர்தம் பணிகளையும் அறியும் வாய்ப்பைப் பெறுவதென்பது தமிழார்வலர், ஆய்வாளர், மாணவர் என அனைத்துத் தரப்பினர்க்கும் மிகுந்த பயன் அளிக்கக்கூடியதாகும்.

அவ்வகையில், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், கணினித் தமிழ் என மரபையும் நவீனத்தையும் தமது ஆய்வும் களமாகக் கொண்டு இயங்கி வரும் ’இளம் ஆய்வறிஞர்’ முனைவர். ஆ.மணவழகன் அவர்களது பணிகளை இவண் பதிவு செய்வதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். நமது முன்னோர் விட்டுச் சென்றுள்ள அறிவுப் பெட்டகங்களை இளந்தலைமுறையினர்க்கு உணர்த்தும் வகையில் பல கோணங்களில் விளக்கியும், இக்காலத்திலுள்ள பல அறிவுத் துறைகளுக்கும் பழந்தமிழர் தம் சிந்தனைகளே உயிரளித்துள்ளன என்பதை அவர்க்கு எடுத்துக்காட்டும் வகையிலும் தமிழ்த் தொண்டாற்றிவருபவர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். இவர், செவ்வியல் இலக்கியங்களைச் சமூகவியல், அறிவியல் நோக்கோடு ஆய்வு செய்யும் அறிஞர் என்பதோடு, கவிதைத் துறையிலும் தம் பங்களிப்பைச் செய்துள்ளார்.

கல்வியும் ஆய்வும்

        12:06:1977-இல் சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் பிறந்தார். பெற்றோர் மா.ஆறுமுகம்-பெரியக்காள். பள்ளிப்படிப்பைக் கெங்கவல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவு செய்தார். ஆத்தூர் அரசு  கலைக்கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.  திருச்சி தேசியக் கல்லூரியில் (பல்கலைக்கழகத் தரத்துடன்) முதுகலைப் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றார். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர்.அன்னி தாமசு அவர்களின் நெறிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழி முதுகலை – சமூகவியல் பட்டம் பெற்றார். கல்வெட்டியலில் பட்டயமும் பெற்றுள்ளார்.

        முதுகலையில் ’பதிற்றுப்பத்துக் காட்டும் பழந்தமிழர் வாழ்வியல் முறைகள்’ என்ற தலைப்பிலும், ஆய்வியல் நிறைஞரில் ’இதழ்களில் சிறுகதைகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்தில் ’பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு’ என்ற தலைப்பிலும் தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

பணிகள்

தமிழியல் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தமக்கிருந்த கணினி அறிவுத் திறத்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித் தமிழ் ஆராய்ச்சி அலுவலராகத் தம் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு சென்னை இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றிய இவர், சென்னை எஸ்.ஆர்,எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக 2005 முதல் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது எஸ்.ஆர்.எம் குழுமத்தால் தொடங்கப்பட்ட ’புதிய தலைமுறை’ வார இதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு அறிவுரைஞர் மற்றும் மொழி ஆளுகைப் பணிகளையும் மேற்கொண்டார்.

2011-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் உதவிப்பேராசிரியராக இணைந்தார். தற்போது அப்புலத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும்  தமிழகத்தின் மேனாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பின் பேரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூட’த்தின் பொறுப்பாளராகவும் உள்ளார்.

இயற்றியுள்ள நூல்கள்

        கவிதைத் தொகுப்பு

        கூடாகும் சுள்ளிகள் (அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010)

        ஆய்வு நூல்கள்

        1.பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (காவ்யா பதிப்பகம், சென்னை, 2005), 2.சங்க இலக்கியத்தில் மேலாண்மை (காவ்யா பதிப்பகம், சென்னை, 2007),   3.தொலைநோக்கு (அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010) 4.பழந்தமிழர் தொழில்நுட்பம் (அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010), 5.தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம் (தமிழக அரசின் விருது பெற்ற நூல்) (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2013), 6.பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2015),   7.பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2016).

       ’திருமணம் செல்வகேசவராய முதலியார்’ என்ற நூலில் ‘செல்வக்கேசவராய முதலியார் – படைப்புத் திறன்’ என்ற பகுதியையும் ’இந்திய ஆட்சிப்பணி – தமிழ் முதன்மைத் தாள்’ என்ற நூலில் இரண்டு அலகுகளையும் இவர் இயற்றியுள்ளார்.

        பதிப்பித்த நூல்கள்

        ’இந்திய ஆட்சிப்பணி – தமிழ் முதன்மைத் தாள்’ என்ற நூலைப் பதிப்பித்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறவனப் பொதுப் பதிப்பாசிரியராக, ஆதி சைவம், உதயணகுமார காவியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள், கிரேக்கக் காப்பியத்தில் மகாபாரதத் தமிழர், கிறித்தவக் காப்பியங்கள், மறைமலையடிகளாரின் பன்முகப் பார்வை, சங்கத் தமிழ்க் குழவிக்குச் செவிலியாகும் சிவப்பிரகாசர், புறநானூற்றில் பண்பாட்டியல், வரலாற்றில் அதியமான், தனித்தமிழ் இயக்கக் கட்டமைப்பில் செல்விலக்கியத் தாக்கம் ஆகிய ஒன்பது நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

கணினித் தமிழ் ஆக்கங்கள்

        கணினித் தமிழ் ஆக்கங்களாக, சொல்லோவியம் (படவிளக்க அகராதி), காந்தள்(தமிழ்மொழிக் கையேடு), உயிரோவியம்(சங்க இலக்கிய காட்சிகள்) முதலிய கணினித்தமிழ் தொகுப்புகளை (குறுந் தகடுகள்) உருவாக்கியுள்ளார்.

ஆய்வுத் திட்டங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள்

        உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ’தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’, பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ ஆகிய தலைப்புகளில் ஆய்வுத் திடங்களை நிறைவு செய்துள்ளார். மேலும், ‘பழந்தமிழர் உடல்நல மேலாண்மையும் மனவள மருத்துவமும்’ என்ற தலைப்பில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பல்துறை அறிவும் துறைசார் மேலாண்மையும்’ என்ற தலைப்பிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் மூலம் (யு.ஜி.சி) ’தமிழ்ச் செவ்வியல் நூல்களில் புழங்குபொருள் பண்பாடு மற்றும் சொற்களஞ்சியம் உருவாக்குதல்’ என்ற தலைப்பிலும் இருபெரும் திட்டப்பணிகளை நிறைவு செய்துள்ளார்.

        முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் ஆய்வு மாணவராக இருந்தபொழுது மூதறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் உலகத் தமிழ்க் கல்வி இயக்க கருத்தரங்கில் கலந்துகொண்டு ’சமூகத் தொலைநோக்கு அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் தன் முதல் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். அக்கட்டுரை முனைவர் ச.வே.சு., முனைவர் க.ப.அறவாணன் போன்ற தமிழ் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதுதொடங்கி தற்போதுவரை தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் எழுபதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இவர் வழங்கியுள்ளார்.

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் அமைப்புப் பணி

       தமிழக அரசின் மூலம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்’ அமைப்புப் பணியில்  சிறப்பான பங்களிப்பினை இவர் ஆற்றியுள்ளார். கருத்துரு, காட்சித் தேர்வு, காட்சி வடிவமைப்பு, நெறியாள்கை, கலைப்பொருள்கள் சேகரிப்பு, வலைதள வடிவமைப்பு முதலானப் பணிகளை இவர் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொண்டார். இவருடைய பழந்தமிழர் தொழில்நுட்பம், சங்க இலக்கியத்தில் மேலாண்மை, பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை ஆகிய நூல்களைக் கருவி நூல்களாகக் கொண்டு இக்காட்சிக்கூடம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அசைவூட்டு ஆவணப் படங்கள்

       பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் திரையரங்கில் ஒளிபரப்புவதற்கென ‘தமிழர் நீர் மேலாண்மை’, ‘பழந்தமிழர் மருத்துவம்’, பழந்தமிழர் போரியல்’, பழந்தமிழர் ஆட்சித் திறன்’, பழந்தமிழர் வாழ்வியல்’ ஆகிய குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்படங்களுக்கு தரவு, எழுத்துரு மற்றும் நெறியாள்கை பணிகளைச் செய்துள்ளார். மேலும், மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின், ‘சங்க இலக்கியக் காட்சிக்கூட’த்தில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியக் காட்சிகளையும் பொருண்மைகளையும் தேர்வு செய்ததில் முக்கியப் பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

பிற தமிழ்ப் பணிகள்

       சிறப்புப் பொழிவுகளாக, ’கணினித் தமிழ், பல்லூடகத்தில் தமிழ், கணினித் தமிழ் உள்ளீடுகள், இக்கால கல்வி முறைகளின் அணுகுமுறைகள், குறுந்தொகை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் சமூக மதிப்பீடுகள், தமிழ் அறிவு நுட்பங்கள்- ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும், தமிழின் மேன்மை தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில்’ முதலிய 11  சிறப்புப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.

        அறக்கட்டளை பொறுப்பாளர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெருந்தலைவர் காமராசர், தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார், வ.அய்.சுப்பிரமணியன், வா.செ.குழந்தைசாமி, முனைவர் மு.தமிழ்க்குடிமகன், கலாநிலையம் டி.என்.சேசாசலம், கிறித்துவமும் தமிழும் ஆகிய பெயர்களில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளுக்கு பொறுப்பாளராக இருந்து சுமார் பத்து சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார்.

            நூல் மதிப்புரைகள்

     அப்பாவின் பெருவிரல், நீயும் நானும் நாமும், தேவதையல்ல பெண்கள், தமிழ்ச் செவ்வியல் நூல்கள்-தொல்காப்பியம், தமிழ்ச் செவ்வியல் நூல்கள்- எட்டுத்தொகை முதலிய 14 நூல்களுக்கு மதிப்புரை வழங்கியுள்ளார்.

        கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள்

தமிழ்க் கவிதை, சங்க இலக்கியம்–பன்முகப் பார்வை, தமிழக நிகழ்த்துக்கலை மரபுகளும் எடுத்துரைப்பியலும், தமிழர் மரபு கலைகளும் நவீன மாற்றங்களும், இக்கால இலக்கியங்களில் சமூகப் பண்பாட்டுப் பதிவுகள், சங்க இலக்கிய வாழ்வியல் ஆகிய தேசியக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். மேலும், கலைகளும் கலைஞர்களும் (நவீன நாடகம் குறித்தது), தூரிகை அரங்கு-2016 முதலிய ஆறு பயிலரங்குகளை நடத்தியுள்ளார்.

விருதுகள் மற்றும் சிறப்புகள்

        குடியரசுத் தலைவர் விருது – இளம் ஆய்வறிஞர் (2007-2008)

செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திற்காகவும் நூற்புலமைக்காகவும் முதன் முதலாக அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வறிஞர்’ விருதினைப் பெற்றார்.

        தமிழக அரசின் ‘சிறந்த திறனாய்வு நூல்’ (2013)

’தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’ என்ற இவருடைய நூலிற்காகத் தமிழக அரசின் ‘சிறந்த திறனாய்வு’ நூலுக்கானப் பரிசினைப் பெற்றார்.

இளம் படைப்பாளி (2005)

மொழிகள் நடுவம் நிறுவனத்தால் (புவனேஸ்வர்) கவிதைத் துறைக்கான ‘இளம் படைப்பாளி’யாக தேர்வுசெய்யப்பட்டார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது (2016)

நீதியரசர்முனைவர்வள்ளிநாயகம்அவர்களின் கரங்களால் வாழ்நாள்சாதனையாளர்விருதினைப்பெற்றார்.    

நெறியாளர் பணி

       ஆய்வுப் பணிக்கு இணையாக நல்லாசிரியராகவும் இவர் விளங்கிவருபவர். சங்கப் பாடல்களைச் சுவைபட எடுத்துரைப்பதில் வல்லவர். மாணவர்களைத் தன் பிள்ளைகளாகக் கருதி வழிகாட்டும் இயல்பினையுடைவர். இவரது நெறிகாட்டுதலில் 23 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். ஒரு மாணவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  ஒன்பது மாணவர்கள் முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

       எடுத்த செயலைச் செம்மையுறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பும், தமிழ் மீது  பெரும்பற்றும் உடையவராக முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் விளங்குவதால் தமிழ்சார் பணிகளை அவர் பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் இடையீடின்றிச் செய்து வருகிறார். தமிழ் உள்ள அளவும் அவர்தம் பணிகள் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.

*****

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!