பொ.வே.சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரைத்திறன்

பொ.வே.சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரைத்திறன்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600 113.

(கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (ம) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், கோவை. சனவரி 04, 2014)

தமிழுக்குத் தம் வாழ்நாளை ஈந்து, தமிழின் வளர்ச்சியே தம் வளர்ச்சியாக மகிழ்ந்திருந்த சான்றோர் பலர். அச்சான்றோருள் குறிப்பிடத்தக்கவர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தானும் ஒரு விவசாயியாக வாழ்ந்து, ஏழ்மையிலும் தமிழ்ப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்ப் பெருமகனார் இவர். அவர்தம் தமிழ்ப் பணியையும் உரைநடையில் குறிப்பாக, குறுந்தொகை உரைச் சிறப்பையும் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

இளமை வாழ்க்கை

       பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை என்னும் ஊரில், 1909ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்தவர். இவர்தம் தந்தையார் வேலுத்தேவர். தந்தையார் உழவர். திண்ணைப்பள்ளி வரையில் கல்வி கற்றவர். தம்மகனையும் திண்ணைப் பள்ளிவரை கற்க வைத்தார். அக்காலத்தில் திண்ணைப்பள்ளியில் வழக்கமாகக் கற்பிக்கப்படும் அரிச்சுவடி, ஆத்திசூடி, வெற்றிவேற்கை, நிகண்டுநூல்கள், நைடதம், கிருட்டிணன்தூது, அருணாசலப்புராணம் முதலான நூல்களைக் கற்கும் வாய்ப்பினை முதல் ஐந்தாண்டுகளில் போ.வே.சோ. பெற்றார். அதன்பிறகு இவருக்குக் கற்கும் ஆர்வம் இருந்தாலும் குடும்பச் சூழல் அதற்கு இடம்தரவில்லை. சோமசுந்தரனாரை உழவுத்தொழிலில் ஈடுபடுத்தவே தந்தையார் விரும்பினார். ஆனால் சோமசுந்தரனார்க்குக் கற்கும் ஆர்வம் மிகுதியாக இருந்ததால், பெற்றோர்க்குத் தெரியாமல் மடம், கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று தனித்திருந்து படித்தார். இராமாயணம், பாரதம் முதலான நூல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார்.

 
       சோமசுந்தரனாரின் பத்தாவது அகவையில் இவர்தம் அன்னையார் மறைந்தார். தந்தையார் மறுமணம் செய்துகொண்டதால் சோமசுந்தரனார் தம் தாய்மாமன் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கும் இவர் கல்விபயில ஒத்துழைப்பில்லாமல் போனது. மேலைப்பெருமழைக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் வாழ்ந்த சர்க்கரைப் புலவரிடம் தம் புலமைநலம் தோன்ற சில பாடல்களை எழுதிச்சென்று காட்ட, சோமசுந்தரனாரின் கவிபுனையும் ஆற்றலையும் கல்வி ஆர்வமும் கண்ட சர்க்கரைப் புலவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பயிலப் பரிந்துரைக் கடிதம் வழங்கினார். 

பல்கலைக்கழக வாழ்க்கை

            அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சோமசுந்தரனார்க்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழறிவைப் பெற ஏற்ற களமாக விளங்கியது. சோழவந்தான் கந்தசாமியார், விபுலானந்தர் அடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார். பொன்னோதுவார், சோமசுந்தர பாரதியார், பூவராகன் பிள்ளை முதலான பேரறிஞர்களிடம்  தமிழ்பயிலும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. வீட்டாரின் ஒத்துழைப்பு இன்மையால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உதவித் தொகையான ரூபாய் பன்னிரண்டைக் கொண்டு தம் படிப்பைத் தொடர்ந்தார். இச்சூழலில், சோமசுந்தரனார்க்குப் பேராதரவாகப் பண்டிதமணி கதிரேசச்செட்டியார் இருந்துள்ளது தெரிகிறது. இதனை, ‘பண்டிதமணி வரலாறு’ எனும் நூலில் சோமசுந்தரனார், ‘யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப்பழகும் பேறுபெற்றேன். என்பால் பண்டிதமணியவர்களும் திரு.ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறைகொண்டு அன்பு பூண்டொழுகினர்’ (பக்.46) என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.

மேலும், கதிரேசச் செட்டியாரவர்களோடு அருகிலிருந்து தமிழ்ச் சார்ந்த பணிகளில் ஈடுபட்டதைக் குறிப்பிடும்போது, ‘வடமொழியிலே சாணக்கியர் என்னும் பேராசிரியராலே ஆக்கப்பெற்ற கொளடலியம் என்னும் பொருள்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள். இம்மொழிபெயர்ப்புப் பணியில் யானும், ஒரு வடமொழிவாணரும் நம் பண்டிதமணியார்க்கு அருகிருந்து துணைசெய்யுமாறு நியமிக்கப்பட்டோம். அக்காலத்தே அவர்களுடன் நனி அணுக்கனாயிருந்து எளியேன் எய்திய நலங்கள் மிகப்பல’ (பக்.93,94) என்கிறார்.

            இவ்விதம் கல்வி பயின்ற சோமசுந்தரனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேறினார். சோமசுந்தரனார் தமிழறியவே கல்வி கற்க வந்தாரேயன்றி வேலைக்குச் செல்லும் வேட்கையில்லாதவர் என்பதை, தாம் கல்வி கற்றதற்கான சான்றிதழைக் கிழித்துதெறிந்துவிட்டு ஊர்ச்சென்ற நிகழ்வின் மூலம்  அறியமுடிகிறது.

குடும்பம் 

            சோமசுந்தரனார் ஊரையடைந்து தம் முன்னோர் தொழிலான வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டார். தம் மாமன் மகளான மீனாம்பாள் என்பவரை மணம்செய்துகொண்டு இல்லறவாழ்வில் ஈடுபட்டார். சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி மற்றும் மாரிமுத்து ஆவர். இவர்கள் இருவரும் தத்தம் குடும்பத்தினருடன் மேலப்பெருமழை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

பண்டிதமணியார் அழைப்பு

விவசாய வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சோமசுந்தரனார், ஒருமுறை அண்ணாமலை நகரில் இருந்த தம் ஆசிரியரான பண்டிதமணியாரைச் சந்திக்கச் சென்றார்.  அப்போது, ‘திருவாசக திருச்சதக’ உரையை எழுத தன்னுடன் வருமாறு பண்டிதமணி பணித்தார்.  ஆசிரியரின் அழைப்பிற்கு இசைந்து அவரோடு சென்ற சோமசுந்தரனார், பண்டிதமணியார் உரை சொல்ல, அதனை எழுதிவழங்கும் பணியில் ஈடுபட்டார். அதற்கு ஊதியமாக மாதமொன்றுக்கு ரூபாய் நாற்பது வழங்கப்பட்டது. இவ்வாறு பண்டிதமணியாருடன் பணிசெய்து கற்ற உரைவளப் பயிற்சியே பிற்காலத்தில் இவர் உரையாசிரியராகச் சிறப்பதற்குக் காரணமாக அமைந்தது.

பொ.வே.சு.வும் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகமும்

            சோமசுந்தரனார்க்கு மருதவனம் கு.குருசாமி என்பவர் நண்பராக விளங்கினார். அவர்கள் வழியாக அந்நாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த புலவர் சு.அ.இராமசாமி அவர்களைக்கண்டு கழகத்தின் தொடர்பைப் பெற்றார். முதலில் சோமசுந்தரனாரின் படைப்பு நூல்களான செங்கோல் (நாடகம்), பண்டிதமணி, பெருங்கதைமகளிர், மானனீகை (நாடகம்) முதலியன வெளிவந்தன. சு.அ.இராமசாமி அவர்களுடன் இணைந்து சூளாமணிக்கு உரை வரையத் தொடங்கினர். அதன்பிறகு சங்க நூல்களுக்கும் பிறநூல்களுக்கும் சோமசுந்தரனார் உரைவரையவும், விளக்கவுரை வரையவும் வாய்ப்பினைப் பெற்றார். சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிரந்தர உரையாசிரியராக இவர் விளங்கினார். இவரின் தமிழ்ப் புலமைக்கு கழகம் களம் அமைத்துக்கொடுத்தது. அதன்மூலம் இவரின் தமிழ்ப்பணியும் தமிழ் ஆளுமையும் உலகம் அறிய வாய்ப்பு ஏற்பட்டது.

மறைவு

            சோமசுந்தரனார் பல ஆண்டுகளாக உரைவரைந்ததால் உடல்நலம் போற்றவில்லை. அதனால் உடல் பாதித்தது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வலக்கையில் கடுப்பு ஏற்பட்ட அந்த நேரத்திலும் தாம் உரைசொல்ல பிறரை எழுதச்செய்து அனுப்பி வந்தார். மூச்சுத்திணறல் முதலான நோய்கள் புலவரை வாட்டின. பல்வேறு மருந்துகளை உட்கொண்டு வந்தார். இதற்கிடையில் பக்கவாத நோயும் அவரைக் கடுமையாகத் தாக்கியது. புதுவை சிப்மர் மருத்துவமனையில் 21.12.1971 இல் சேர்க்கப்பட்டு உணர்விழந்த நிலையில் பலநாள் இருந்த புலவர்பெருமான் சோமசுந்தரனார் 03.01.1972இல் இயற்கை எய்தினார்.

பொ.வே.சோ.வின் சங்க இலக்கிய உரைகள்

       சங்க இலக்கியம் தொடங்கி, காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், பிற்கால இலக்கணங்கள் எனப் பல பகுப்புகளில் பொ.வே.சோ.வின் உரைவளத்தைக் காணமுடிகிறது.

       சங்க இலக்கிய உரைகள்:

1பட்டினப்பாலைபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை. I 1930
2முல்லைப்பாட்டுபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை. I 1955
3மதுரைக்காஞ்சிபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை. I 1955
4திருமுருகாற்றுப்படைபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1955
5பொருநராற்றுப்படைபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. I 1955
6சிறுபாணாற்றுப்படை விளக்கம்பொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. I 1955
7பெரும்பாணாற்றுப்படைபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை. I 1955
8புறநானூறுபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1955
9குறுந்தொகை உரையுடன்பொ.வே.சோ.சைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம் சென்னை. I 1955, மறுபதிப்பு, 1955, 1972             
10மதுரைக்காஞ்சிபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. I 1956
11நெடுநல்வாடைபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. I 1956
12குறிஞ்சிப்பாட்டுபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. I 1956
13மலைபடுகடாம்பொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. I 1956
14பரிபாடல் மூலமும் உரையும்பொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1957, மறுபதிப்பு 1964, 1969  
15அகநானூறு – களிற்றி யானை 1-50    பொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1966  
16பத்துப்பாட்டு உரையுடன் (இருபகுதி)பொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1966  மறுபதிப்பு 1962, 1966, 1968, 1971
17நற்றிணைபொ.வே.சோ. (ஆய்வுரை)சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் சென்னை. மறுபதிப்பு IV, 1967
18கலித்தொகை விளக்கவுரைபொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1969, II 1970
19அகநானூறு உரையுடன்பொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1970
20அகநானூறு 121 – 300பொ.வே.சோ.சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை. I 1970

இவையல்லாமல், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது; பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி; சிறுகாப்பியங்களில் உதயணகுமார காவியம், நீலகேசி, பெருங்கதை (உரைநடை); இலக்கண நூல்களில்        புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம்;

பக்திப் பனுவல்கள் திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் போன்றவற்றிற்கும் சோமசுந்தரனாரின் உரை சிறப்பு செய்கிறது.

குறுந்தொகை உரைகள்

       சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். இவற்றுள், முதல் உரையான சௌரிப்பெருமாளரங்கன் உரை, உ.வே.சாமிநாதையர் உரை, பொ.வே. சோமசுந்தரனார் உரை ஆகியவை சிறந்த  உரைகளாகத் திகழ்கின்றன.

குறுந்தொகைக்கு வந்துள்ள குறிப்பிடத்தகுந்த உரைகள்

எண்நூற்பெயர்பதிப்பாசிரியர்வெளியீட்டகம்/பதிப்பகம்/அச்சகம்/ பதிப்பு /ஆண்டு
1குறுந்தொகைசௌரிப்பெருமாளரங்கன்வித்தியாரத்திநாகரம் பிரஸ்,I , 1915
2குறுந்தொகைகா.ரா.நமச்சிவாய முதலியார்குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் I, 1920
3குறுந்தொகைஇராமரத்தின ஐயர்கலாநிலையம், புரசவாக்கம், I, 1930
4குறுந்தொகை மூலம்சோ.அருணாசலதேசிகர்சோ.அருணாசலதேசிகர், 1933
5குறுந்தொகை உரையுடன்மகாமகோபாத்தியாய டாக்டர்.உ.வே.சாமிநாதையர்டாக்டர்.சாமிநாதையர் I 1937, II 1947, IV 1962
6குறுந்தொகை உரையுடன்பொ.வே.சோமசுந்தரனார்சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் சென்னை, I 1955, மறுபதிப்பு, 1955, 1972
7குறுந்தொகை மூலம்எஸ்.ராஜம் மர்ரேஅண்டுகம்பெனி, சென்னை,I 1957, II 1981
 8 குறுந்தொகை விளக்கம் ரா.இராகவையங்கார் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் III 1958
9குறுந்தொகைக் காட்சிகள் மூலமும் விளக்கமும்சக்திதாசன் சுப்பிரமணியன்தமிழகம், சென்னை, I 1958
10குறுந்தொகை தெளிவுரைபுலியூர்க் கேசிகன்பாரிநிலையம், சென்னை, I 1965
11எளிய சொற்களில் இனிய குறுந்தொகைமு.ரா.பெருமாள்முதலியார்பழநியப்பா பிரதர்ஸ், II 1970
12குறுந்தொகை மூலமும்மு.சண்முகம்பிள்ளைதமிழ்ப் பல்கலைக்கழகம், I 1985
13குறுந்தொகைப் பெருஞ்செல்வம்சாமி.சிதம்பரனார் இலக்கியநிலையம், சௌராஷ்டிராநகர்,  சென்னை, I 1985

பொ.வே.சோ. வின் குறுந்தொகை நூலமைப்பும் உரை அமைப்பும்

பொ.வே.சோ. அவர்களின் குறுந்தொகைக்கான உரையின் முதற்பதிப்பு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின்மூலம் 1955இல் வெளிவந்துள்ளது. இவ்வுரை அடுத்தடுத்து பல பதிப்புகளைக் கண்டுள்ளது.

குறுந்தொகைக்கு ஏற்கனவே உரை இருந்தபோதும் புலவரைக் கொண்டு உரை எழுதுவதற்கான காரணத்தைப் பதிப்பகத்தார் குறிப்பிடுமிடத்து, ‘இந்நூற்கு ஏற்கெனவே விரிந்த உரையுள்ளது. ஆயினும், மாணவரும், கற்றுத்துறை போய அறிஞர்களும் கற்பதற்கும் எளிதில் பொருளுணர்தற்கும் வாய்ப்பாக, தலைப்பில் பாட்டின் எண்ணும், வாயில்களின் கூற்றும், துறையும், அதன் விளக்கமும், பாட்டுக்குச் சொல்லுரை, விளக்கவுரை, இலக்கணக் குறிப்புக்களும் சுருக்கமும் பெருக்கமுமின்று அளவோடு சுவை கெழுமம் பெருமழைப் புலவர், திரு.பொ.வே.சோமசுந்தரனார் அவர்களைக் கொண்டு அழகிய முறையில் நூல் முழுமைக்கும் எழுதுவித்துச் சிறந்தமுறையில் செப்பஞ் செய்து வெளியிட்டுள்ளோம்’ (பதிப்புரை, கழகத்தார்) என்று சுட்டுகின்றனர். இவற்றிலிருந்து பொ.வே.சோ.வின் உரையின் தேவையையும் சிறப்பையும் உணரமுடிகிறது.

நூலமைப்பு

பொ.வே.சோ. வின் குறுந்தொகை உரைநூல்,

       # பதிப்புரை, அணிந்துரை, பாடிய சான்றோர், கடவுள் வாழ்த்து, பாடல்+உரை

       # செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை

       # அருஞ்சொற்பொருள் அகரவரிசை (55 பக்கங்களுக்கு)

ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

மேலும், நூலுக்குப் பொ.வே.சோ கொடுத்துள்ள அணிந்துரையில் 1.நூல் வரலாறு  2.நுவல்வோர் 3.நுதலிய பொருள் 4.நுவலுந்திறன் 5.சொல்லமைதி 6.உவமையமைதி 7.செய்யுள் நுணுக்கம் 8.நகைச்சுவை 9.வரலாற்றுச் சான்றுகள் 10.ஓதற்குரியோரும் நூற்பயனும் ஆகிய பத்து பகுதிகளைக் கொடுத்து படிப்போர்க்குக் குறுந்தொகை பற்றிய புரிதலையும் தெளிவினையும் ஏற்படுத்துகிறார். அதேபோல, பாடிய சான்றோர்களின் பெயர், செய்யுள் எண்கள் ஆகியவற்றை நூலின் தொடக்கத்திலேயே கொடுத்துவிடுகிறார்.

உரை அமைப்பு

                பொ.வே.சோ.வின் குறுந்தொகை உரையானது 1. துறை – விளக்கம்  2. பாடல் அறிமுகம்  3. பாடல்   4. இதன் பொருள்  5. விளக்கம் என்ற அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.   

மேலும், பாடலுக்கான விளக்கமானது, 1. பாடலுக்கு விளக்கம் (பதம் பிரித்த பாடல் அடிகளும் அதற்கான விளக்கமும்) 2. அநுபவ மொழி – பயன்பாடு 3. பிற இலக்கியங்களில்  இருந்து ஒப்புமை காட்டுதல் 4. இலக்கணக் குறிப்பு    5. தொடர்புடைய சிறப்புச் செய்திகள்           6. பாடியோர் பற்றிய குறிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

சங்க இலக்கியம் மற்றும் இடைச்செருகள்

       உரை தொடங்குமுன்னர் சங்க இலக்கியங்களின் சிறப்பையும், பொருண்மைகளையும், பகுப்பு முறைகளையும், அவற்றில் குறுந்தொகை பெறும் இடம் குறித்தும் தெளிவாக விளக்குகிறார்.  குறுந்தொகை தொகுப்பு மற்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ள இடைச்செருகல் குறித்து பொ.வே.சோ. பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘குறுந்தொகையும், நற்றிணையும், நெடுந்தொகையும் (அகநானூறு) ஆசிரியப்பாவால் இயன்ற ஆயிரத்திருநூறு செய்யுட்களின் தொகுதியாகும். பொருளானும், யாப்பானும் இச்செயுள்களனைத்தும் ஒரே இனத்தின்பாற் படுவனவாயினும், இவற்றை ஒன்றாகத் தொகை செய்யுமிடத்து, நூல் மிகவும் நீளிதாம் என்று கருதி, சிறுமை, பெருமை, இடைநிகழ்வு என்னும் முத்திறத்த அடிவரையறைகளாமென மூன்று தொகைகளாகப் படுத்தனர்’(ப.5) என்கிறார். மேலும், ‘இம்மூன்று தொகை நூல்களும் முறையே தொகுக்கப்பட்டிருப்பினும் இக் குறுந்தொகை நூலின்கண் இற்றைநாள் நூனூற்றொரு செய்யுள்களும், அவையிற்றுள் ஒன்பதடிப் பெருமையுடைய இரண்டு செய்யுள்களும் (307,391) காணப்படுகின்றன. இம்மாறுபாடு இந்நூலிண்கண் ஒரு செய்யுளையும், மற்றொரு செய்யுளின்கண் ஓர் அடியையும் இடையே செருகியதனால் ஏற்பட்டதாகும்’(ப.6) என்று விளக்குறார்.

மேலும், சங்க இலக்கியங்கள் பற்றிக் குறிப்பிடுமிடத்து, ‘அக்காலத்தே அவ்வன்பு நெறிபற்றி வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட அன்பொழுக்கங்களின் அழகின் பிழிவே இக் குறுந்தொகையும் பிறவுமாகிய இலக்கியங்கள் என்று உணர்தல் வேண்டும்’ (அணிந்துரை, ப.8) என்றும், குறுந்தொகைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, ‘இக்குறுந்தொகை, அன்பொடு மரீஇய அகனைந்திணையை நுதலிய பொருளாகக் கொண்டு, நிலமுதலிய முதற்பொருள்களையும், கருப்பொருள்களையும் அவ்வுரிப் பொருட்கிணங்க விரித்து, நாடக வழக்கத்தானே தலைவன் முதலிய உறுப்பினர் கூற்றாகச் சிறுபான்மை உலக வழக்குந் தழீஇப் புனையப்பட்ட அருமந்த செய்யுட்டொகுதி என உணர்தல் வேண்டும்’ (அணிந்துரை, ப.9) என்றும் விளக்கமளிக்கிறார்.

தமிழர் தொன்மை

       குறுந்தொகை உரையைத் தொடங்குவதற்கு முன், வாசிப்போர்க்குத் தமிழின் தொன்மையை, தமிழரின் சிறப்பை, சங்க இலக்கியங்களின் பெருமையை பொ.வே.சோ. சுட்டிச் செல்கிறார். தமிழரின் தொன்மைச் சிறப்பைக் குறிப்பிடுமிடத்து, ‘வடவாரியர் தமிழகம் புகுவதற்கு முன்னரும், சமயக்கணக்கர் புத்த சமயம், சமண சமயம் முதலிய ஒன்றனோடொன்று முரணிய சமயக் கொள்கைகளை யாண்டும் பரப்புதவற்கு முன்னரும் ஆகிய நெடும் பண்டைக் காலத்திலேயே – கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றி முதிர்ந்து, ஏனைநாட்டினர் போல வயிற்றுக்கிரை தேடி நாடோடிகளாக உலகெங்கும் சுற்றி நிலையின்றித் திரியாமல், ஓரிடத்தே ஒன்றுகூடி வாழும் சிறப்புடையராயினர் தமிழ் மக்கள்’ (அணிந்துரை,ப.7) என்கிறார். அதேபோல, அணிந்துரையின் நிறைவாக ‘தமிழ் வாழ்க’ என்று முடிக்கிறார். இது தமிழ் மீதான ஆசிரியரின் காதலை வெளிப்படுத்துகிறது.

பொ.வே.சோ.வின் உரைத் தன்மை

மாணார்க்கர்க்கு ஓதும் தன்மை

       பொ.வே.சோ. அவர்களின் உரைகூறும் தன்மையானது மாணவர்களும், சங்க இலக்கியத்தைப் பயில்வோரும் எளிதில் பொருள் புரிந்து, சூழல் புரிந்து, பாடலின் தன்மை புரிந்து பயிலும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்களுக்கு மனத்தில் பதியும் வண்ணம், தமிழ் மரபை உணர்த்தும் வண்ணம், எளிதில் பொருள் விளங்கும் வண்ணம் இவற்றோடு ஒத்த கொள்கையுடைய பிற இலக்கியங்களை அறியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.  

              நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

              நீரினும் ஆரள வின்றே சாரல்

              கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

              பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறு.3)

என்ற பாடலுக்குக் கீழ்க்கண்டவாறு விளக்கம் தருகிறார்.

மக்கள் வாழ்க்கைக்கு இவ் வுலகத்தினும் இவ் வுலகம் கடந்து வீட்டுலகத்தினும் ஆக்கமாக அமைவது அன்பென்னும் அக் கடவுட் பண்பேயாகும். மனிதன் அறிவுக்குச் சிறந்த கருவியாகவுள்ள சொற்களின் எல்லையைக் கடந்துநிற்கும் பொருள்களும் சிலவுள. அவற்றுள் இவ்வன்பும் ஒன்றாகும். எனவே, அறிவினால் அறியவொண்ணாததும் அதே சமயத்தில் உணர்ச்சிக்கு நன்கு புலனாவதும் அன்பின் தன்மையாம். இறைவனுங்கூட இத் தன்மையுடையவன் என்றே மெய்ந் நூல்கள் கூறுகின்றன. நாம் அன்பு செலுத்தும் ஒருவர் ஆக்கத்தோடே வருதல் கண்டால் நம் நெஞ்சம் இன்பத்தாலே நெகிழ்ந்து பொங்குகின்றது. இந் நெகிழ்ச்சியாலுறும் இன்பமும் நமக்கு உணர்வின்கண் தெற்றெனப் புலனாகின்றது. இத்தகைய இன்பத்தைச் செய்யும் அவ்வன்பு எத்தகையது? அதன் இயல்பு யாதென நம்மை வினவின் அதற்கு யாம் யாது கூறவல்லோம்?

       அன்புக்கு நிலைக்களமாக விளங்கும் தலைவனது கேண்மையை அவனோடளவளாவி உணர்ந்த தலைவி, அதனைத் தன் அறிவாலே ஆராயப் புகுந்தாள். ஆராய்ந்து ஆராய்ந்து அதற்கோர் எல்லைகாணப் பெறாது வியந்தாள். இவ் வியப்பு நிலையில் இருக்கும்பொழுது, தலைவன் சிறைப்புறமாக வந்து நின்றான். அவன் வந்து நிற்றலை உணர்ந்த தோழி அவன் வரவு உணராதாள் போன்று தலைவியை நோக்கி, நின்னாற் கேண்மை கொள்ளப்பட்ட தலைவன் கேண்மைக்குத் தகுதியில்லாதவன் போலும் என்றாள். தலைவிக்குத் தோழி கூறிய மொழிகள் சுருக்கென்று உள்ளத்தே தைத்தது. உடனே சொல்லிக் காட்ட வியலாத அவ்வன்பின் தன்மையைச் சொல்லத் தொடங்கினாள்.

       இவ் வுலகத்தே மக்கள் அறிவாலே எல்லையற்ற பொருள்களாக அறியப்பட்டவை மூன்று பொருள்களே யாகும். அவை: அகலிருவிசும்பும், மாயிருஞாலமும், விரிதிரைக் கடலுமாம். தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும், எல்லையற்ற மெருமைக்கு உவமையாக இப் பொருள்களையே எடுத்துக் கூறினார். ‘ஞாலத்தின் மாணப் பெரிது’, ‘கடறிப் பெரிது’ ‘வானுயர் தோற்றம்’ என்பன வள்ளுவர் இன்மொழிகளாம். இத் தலைவியும் எல்லை காணப்படாத தலைவனது அன்பின் பெருமைக்கு இம்மூன்றையும் ஒருசேர உவமையாக்கினாள். அப்பெருமை தானும் முத்திறத்ததாகக் கண்டு அம் முத்திறத்த பண்புகட்கும் இம் மூன்று பொருளையும் அவள் எடுத்துக் கூறுவாளாயினள் என்று மிகத் தெளிவாக, மாணாக்கர்க்கு ஓதும் வகையில் உரை தருகிறார்.

       இதில், மையப் பொருண்மையாகிய அன்பை விளக்கும் தன்மை, மாணாக்கரிடத்து வினா எழுப்பும் பாங்கு, பாத்திரங்களின் குண இயல்பை வெளிக்காட்டும் முறைமை, பாடலின் சூழலை விளக்கும் முறை, பாடல் கருத்தை எளிதாகவும் – இனிதாகவும் வளங்கும் முறை போன்ற பல தன்மைகளைக் காணமுடிகிறது.

முன்னோர் உரை கருத்தை அறியாவிடத்து அதனை ஒத்துக்கொள்ளுதல்

       பொ.வே.சோ. அவர்கள் உரை வரையும்பொழுது, ஏற்கனவே வந்துள்ள உரைகளை முழுமையாக ஆய்விற்கு எடுத்துக்கொள்கிறார். பிறர் கருத்தில் மாறுபடும் இடங்களைச் சுட்டுவதோடு, முன்னோர் கருத்து எதுவென அறியாத இடங்களில்  அதனைப் படிப்போரின் ஆய்விற்கு விட்டுச்செல்கிறார்.  

              கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

              காமம் செப்பாது கண்டது மொழிமோ

              பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

              செறியெயிற் றரிவை கூந்தலின்

              நறியவும் உளவோ நீயறியும் பூவே (குறு.2)

என்ற பாடலுக்கு உரை எழுதும்பொழுது, ‘அஞ்சிறை என்பதனை, அகம்சிறை எனக்கொண்டு ‘உள்ளிடத்தே நீ சிறையை உடையை’ என்பாரும் உளர். இங்ஙனம் கூறுவார் கருத்தென்னையோ அறிகிலம்’ என் ஆய்வாளர்களின் முடிவிற்கு விட்டுவிடுகிறார்.

இலக்கண விளக்கம் – இலக்கியச் சான்று

       பொ.வே.சோ.வின் உரைகளில் பல்வேறு வகையான இலக்கியங்களின் இருந்து சான்றுகள் காட்டப்படுகின்றன. மேலும், பாடல்களில் திணை, பால், எண், இடம் போன்றவற்றில் தடுமாற்றும் ஏற்படும் இடங்களில்  தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றின் இலக்கணங்களைக் கொண்டு விளக்கம் அளிக்கிறார்.

காட்டாக, ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற மேற்கண்ட பாடலுக்கான உரையில், கருத்தை விளக்க பெருங்கதையிலிருந்து சான்று கூறுகிறார். ‘இந்நட்புப் பண்டும் பண்டும் பற்பல பிறப்புக்களில் சிறப்பொடு பெருகி, நெஞ்சிற் பின்னி நீங்கல் செல்லா உழுவலன்பு என்று தலைவிக்கு உணர்த்துவான், பயிலியது கெழீஇய நட்பென்றான். இது குறிப்பால் தம்நிலை உரைத்தவாறாம்’ என்று கூறி,

              ‘உடுத்து வழிவந்த உழுவலன்பு’ (பெருங்கதை, 2-11; 39)

என்றார் பிறரும் என்கிறார்.

       அதேபோல, ‘தும்பி விடை தாராதாகவும், விடை கூறுவது போன்று வினவியது, பாடல் சான்ற புலனெறி வழக்கம். இதனை,

              ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச்

              செய்யாமரபிற் றொழிற்படுத் தடக்கியும் (பொருளி.2)

எனவரும் தொல்காப்பிய விதியானும் உணர்க’ என்று தொல்காப்பிய நூற்பா கருத்தினைச் சுட்டுகிறார்.

அதேபோல,

              காலையும் பகலும் கையறு மாலையும்

              ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

              பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

              மாவென மடலொடு மறுகில தோன்றித்

              தெற்றெனத் தூற்றலும் பழியே

              வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே (குறு.32)

என்ற குறுந்தொகைப் பாடலுக்கு உரை எழுதும்பொழுது பக்தி இலக்கியம், திருக்குறள் போன்றவற்றிலிருந்து ஒப்புமைக் காட்டுகிறார். காலை பகல் மாலை யாமம் விடியல் என்று பொழுதுகளின் நிலை அறிந்தால் காமம் பொய் (காமம் கொண்டவன் பொழுதறியான்). மடலேறினால் தலைவிக்குப் பழி, தலைவியின் பழி அஞ்சி வாழ்தல் எனக்குப் பழி என்பது இப்பாடலுக்குப் பொருளாகும், இதனை,

              எனைநான் என்பதறியேன் பகல்

              இரவாவதும் அறியேன் (திருவாசகம், உயிருண்)

என்று திருவாசகப் பாடலோடும்,

              காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி

              மாலை மலருமிந் நோய் (குறள்.1227)

என்ற குறளோடும் ஒப்புமைக் காட்டுகிறார்.

பாடபேதம் உரைத்தல்

       பொ.வே.சோ. அவர்கள் குறுந்தொகை பாடல்களில் சில இடங்களில் பாடபேதம் உரைத்துள்ளதைக் காண முடிகிறது.

              யாரும் இல்லைத் தானே களவன்

              தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

              தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

              ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

              குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே (குறு.25)

என்ற பாடலின் முதல் அடியில் உள்ள ஈற்றுச் சொல்லை ‘கள்வன்’ என்று உரைகொள்வது மரபாக உள்ளது. இதனை, பொ.வே.சோ. அவர்கள் ‘களவன்’ என்று கொண்டு உரை எழுதுகிறார். களவன் – அது நிகழ்ந்த களத்திருந்தவருமார். இதற்கு, ‘கள்வன் என்றும் பாடம். கள்வன் பொய்த்தல் இயல்பாகலின் அப் பாடஞ் சிறவாமை உணர்க. பொய்த்தல்- ஈண்டு ‘நின்றிற் பிரியேன் பிரியின் ஆற்றேன்; நின்னை விரைவில் மணந்து கொள்வென் என்று தலைவன் கூறிய மொழியில் தப்பி நடத்தல்.

தினைத்தாள் நாரையின் கால்கட்குவமை. கால-காலை உடவயன வாய. குருகு – குருகுகள். உண்டு என்பதை ஒருமைச் சொல்லாகக் கொண்டு, குருகு இருந்தது என்றும், கால என்பது பால் வழுவமைதி என்பாரும் உளர்.

              ‘வேறில்லை உண்டு ஐம்பான் மூவிடத்தன’ (நன்னூல் 339)

என்னும் நூற்பாவில் உண்டு ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுச்சொல் என்பவாகலான், காலவாகிய குருகுகள் என்பது தவறாகாமை உணர்க என்கிறார்.

ஆய்வு நோக்கு

       குறுந்தொகையைக் களமாகவோ, எடுத்துக்காட்டாகவோ கொண்டு வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளையும் பொ.வே.சோ அவர்கள் கருத்தில் கொண்டுள்ளார். முன்னோர் கட்டுரைகளில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால் அதனை ஆய்வு நோக்கோடு நாகரிகமாக மறுத்து எழுதும் பண்பு இவரின் உரையில் காணப்படுகிறது.

                     அகவன் மகளே அகவன் மகளே

                     மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

                     அகவன் மகளே பாடுக பாட்டே

                     இன்னும் பாடுக பாட்டே அவர்

                     நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (குறு. 23)

என்ற பாடலுக்கு உரை வகுக்கும்பொழுது, ‘கட்டுவிச்சி குலத்தோரை எல்லாம் அழைத்துப் பாடலின் தலைவன் தாய்மரபினனாகலின், அம் மரபினர் மலையும் பாடப்பட்டமை கண்டு இன்னும் பாடுக என்றாள். எனவே, தலைவன் தாய் மரபினன் என்பது கொள்க என்றார் ரா.இராகவையங்கார் அவர்கள். ‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ என்றபடி தலைவன் தாய் மரபினன் ஆதல் ஒருதலையன்று, மேலும் தாய் மரபினன் ஆயின், களவொழுக்கம் வேண்டா இயற்கைப் புணர்ச்சியும் மிகை; கொடுப்பக்கொள்ளலே அமையும் என்க’ என்கிறார். மேலும், முருகவேள் மலையைப் பாட அம் மலையே தலைவன் மலையுமாதல் கண்டு, அம் மலையைப் பாடும் பாட்டையே பாடுக என்றாள் என்பதே பொருந்துவதாம் என்றது பொ.வே.சோ.வின் ஆய்வு முடிவாக உள்ளது.

உரைத்திறன்

            சோமசுந்தரனார் இலக்கணநூல்கள், சங்கநூல்கள், காப்பியங்கள், பக்திநூல்கள், உரையாசிரியர்களின் பேருரைகள், தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சமூக வழக்காறுகள் போன்ற யாவற்றிலும் ஆழ்ந்த புலமையுள்ளவர் என்பதை அவர்தம் உரை வளத்தைக் கொண்டு அறிய முடிகிறது.

அடியார்க்குநல்லார், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், பின்னத்தூர் நாராயணசாமி முதலான உரையாசிரியப் பெருமக்கள் விளக்கம் கூறாத பல இடங்களை விளக்கிச் செல்வதும், பொருத்தம் இல்லாத இடங்களை எடுத்துரைப்பதும், கூடுதல் விளக்கம் தருவதும் இவர் உரையின் சிறப்பாகும்.

தாம் அறிந்திராத துறை சார்ந்த செய்திகள் வரின் அவற்றை அவ்வவ் துறைசார்ந்த அறிஞர்களிடம் அறிந்து உரை எழுதிய பாங்கினை அறிய முடிகிறது.

முன்னோர் உரைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதனைத் தக்க காரணங்காட்டி விளக்கும் ஆய்வுப் பண்பு போற்றுதற்குரியது. அதேபோல, முன்னோர் கருத்து எதுவென தெரியானவிடத்து ஏற்பு மறுப்பு ஏதுமின்றி அதனைப் படிப்போரின் ஆய்விற்கு அப்படியே விட்டுச்செல்லும் முறை குறிப்பிடத்தக்கது.

            உரையில் பல நூல்களை மேற்கோள்காட்டிச் செல்லும்திறனும் இடையிடையே இலக்கணக் குறிப்புகளை அமைப்பது சொற்பொருள் வரைவதும், இலக்கியத்தின் இனிய பகுதிகளைப் படிப்பவர்க்கு எடுத்துக்காட்டிக் கதைநிகழும் இடத்தை மனக்கண்ணில் காட்சியாக்குவதும் இவரின் தனி இயல்பாக உள்ளது.

       பொ.வே.சோ.வின் உரைவளத்தைப் பொருத்தமட்டில், எளிமை-இனிமை-நுண்மை என்ற முப்பெரும் தன்மைகளில் அடங்குவதைக் காணமுடிகிறது.

*****

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!