தொல்காப்பியப் புறத்திணை மரபும் முத்தொள்ளாயிரமும்
முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113
(மன்னர் கல்லூரி (ம) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், புதுக்கோட்டை, சனவரி 24, 2014)
முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய தொகைநூல். இந்நூல், ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் 900 பாடல்கள் வீதம் 2,700 பாடல்களைக் கொண்டிருந்தது என்றும், தலா 300 பாடல்கள் வீதம் 900 பாடல்களைக் கொண்டிருந்தது என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ என்பன போன்று பல இருந்தன என்றும், இதனால் தொள்ளாயிரம் செய்யுள்களில் நூலியற்றுவது பழைய மரபுகளுள் ஒன்று எனவும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறுகிறார். இந்நூல் பாடல்கள் முழுமையும் கிடைக்கவில்லை. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
பதிப்பு
முத்தொள்ளாயிரத்தை தனி நூலாக முதன் முதலில் ரா.ராகவையங்கார் 1905-இல் பதிப்பித்துள்ளார். அடுத்து ந.சுப்புரெட்டியார், ஞா.மாணிக்கவாசகன், கபிலர் ஆகியோர் 109 பாடல்களைக் கொண்டு பதிப்பித்துள்ளனர். டி.கே.சி.பதிப்பில் 99 பாடல்கள் அமைய, ந.சேதுரகுநாதன் 130 பாடல்களுக்கு உரையெழுதி பதிப்பித்துள்ளார்.
தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்ற 109 பால்களில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தவிர்த்து 43 புறப் பாடல்களும் 65 அகப் (கைக்கிளை) பாடல்களும் காணப்படுகின்றன. இவற்றுள், பாண்டியன் குறித்து 56, சோழன் குறித்து 30, சேரன் குறித்து 22 என்ற வகையில் பாடல்கள் கிடைத்துள்ளன. “கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களும் ஒவ்வொன்றும் இன்னின்ன துறை பற்றி பாடப்பட்டன என்று அறிதற்கேற்ற பழைய குறிப்பு ஒன்றும் இல்லை. ஆதலால் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற துறைக் கருத்து அமையும்படி பாடலுக்கு அடியில் குறிப்பு என்று அமைத்து எழுதியுள்ளேன்” என்கிறார் ந.சேதுரகுநாதன். இதனால் உரையாசிரியர் சிந்தைக்கேற்ப பாடல்களின் தன்மை உணரப்படும் என்பது எண்ணத்தக்கது. பாடல் வரிசையும் உரையாசிரியர் விருப்பம்போல் அமைகிறது.
இலக்கிய வகை
புதிதாகப் பாடப்படும் இலக்கிய வகையைக் குறிப்பிடும் இடத்து,
விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொல்.செய்.237)
என்கிறார் தொல்காப்பியர். இதற்கு, ‘புதிதாகத்தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க’ என்று உரை எழுதுகிறார் பேராசிரியர். இதன்வழி முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.
பாடுபொருள்
கிடைத்த முத்தொள்ளாயிரப் பாடல்களில் மிகுதியாக அமைவது கைக்கிளைப் (65) பாடல்களாகும். தொல்காப்பியர் சுட்டும் கைக்கிளையாகிய அகத்திணை இங்கு இடம்பெறவில்லை. பாடாண் திணையுள் அமையும் கைக்கிளைத் துறையின் விளக்கமாக, விரிவாகக் காணப்படுகின்றன. அதனால் இது ‘புறத்தில் அகம்’ என்ற புதுமையில் அமைக்கப்பட்டுள்ளது. “காமப்பகுதி கடவுளும் வரையார், ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல்.புறத்.28); “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” (தொல்.புறத்.31) எனும் தொல்காப்பிய நூற்பாக்களை இவற்றுடன் இணைத்துக் காணமுடியும். மேலும், இக் கைக்கிளைப் பாடல்கள் அனைத்தும் பெண்பாற் கைக்கிளையைச் சார்ந்தனவாகும். முத்தொள்ளாயிரம் மானிடர் மீது பெண்டிர் காமுற்று நிற்பதைக் காட்ட, பின்வந்த பக்திப்பாவலர்கள் இறைமீது மானிடம் கொண்ட காதலாக, நாயக நாயகி பாவமாகத் காட்டுவது நோக்கத்தக்கது.
பாடுபொருளைப் பொருத்தவரையில், பழந்தமிழ் மரபைப் பின்பற்றி முத்தொள்ளாயிரமும் அகம், புறம் என்ற இரண்டு பொருண்மைகளிலேயே அமைகின்றது. இதில் புறப்பாடல்கள் புகழ், நாடு, நகர், எயில் கோடல், திறை, யானை மறம், குதிரை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்பனவற்றையும், அகப் பாடல்கள் மன்னர்களின் மேல் ஒருதலையாகக் காதல் கொண்டு உள்ளம் வாடிக்கிடந்த பேதை முதலான ஏழுவகைப் பருவப் பெண்களின் உணர்வுகளைக் காட்டும் கைக்கிளைப் பாடல்களாக அமைந்துள்ளன.
காலம்
முத்தொள்ளாயிரத்தின் காலம் குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார் பேரா டி.கே.சி.. பல நூற்றாண்டுகளுக்கு முன்பட்டது என்பது பேரா. செ. உலகநாதனின் கருத்து. சிலர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்கின்றனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆறாம் நாற்றாண்டுக்கு முற்பட்டதாக முடிவு காண்கிறது. அதனால், தமிழ்ச் செவ்வியல் நூல்களான 41 நூல்களின் பட்டியலில் முத்தொள்ளாயிரத்தையும் வைத்துள்ளது.
புறப் பாடல்களும் பொருண்மைகளும்
முத்தொள்ளாயிரப் பாடல் தொகுப்பில், கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தவிர்த்த 108 பாடல்களும் மூவேந்தர்கள் குறித்து கீழ்க்கண்ட பொருண்மைகளில் அமைகின்றன.
பாண்டியன் பற்றிய மொத்தப் பாடல்கள் 56. இவற்றில், புறம் பற்றியது 22, அகம் பற்றியது 34. புறப் பாடல்களின் பாடுபொருள்களாக, நாட்டு வளம் – 03, திறை பெறுதல்- 02, எயில் வளைத்தல் – 01, குதிரையின் வீரம் – 01, யானை வீரம் – 04, போர்க்கள நிகழ்வு – 02, பகைப்புலம் பழித்தல் – 02, வெற்றி- 02, பாண்டியன் புகழ் 03, மன்னனின் பிறந்தநாள்– 01, மன்னனின் வீரம் – 01 ஆகியவை காணப்படுகின்றன.
சோழன் பற்றிய மொத்தப் பாடல்கள் 30. இவற்றில், புறம் பற்றியது11, அகம் பற்றியது 19. புறப் பாடல்களின் பாடுபொருள்களாக, நாட்டு வளம் – 02, திறை பெறுதல்- 01, யானை வீரம் – 04, போர்க்கள நிகழ்வு – 01, பகைப்புலம் பழித்தல்- 01, சோழன் புகழ்- 02 ஆகியவை காணப்படுகின்றன.
சேரன் பற்றிய மொத்தப் பாடல்கள் 22. இவற்றில், புறம் பற்றியது 09, அகம் பற்றியது 13. புறப் பாடல்களின் பாடுபொருள்களாக, நாட்டு வளம் – 02, திறை பெறுதல்- 01, யானை வீரம்- 01, போர்க்கள நிகழ்வு – 01, பகைப்புலம் பழித்தல்- 02, சேரன் புகழ்- 01, வேலினைச் சிறப்பித்தல் – 01 ஆகியவை காணப்படுகின்றன. முத்தொள்ளாயிரத்தின் புறம் சார்ந்த பொருண்மையிலான பாடல்கள் பெரிதும் தொல்காப்பிய புறப்பொருள் மரபினைச் சார்ந்து அமைவதைக் காணமுடிகிறது.
தொல்காப்பியம் – புறத்திணையியல்
தமிழில் கிடைத்த தொன்மையான, முதன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களாக 27 இயல்களையும் உள்ளடக்கியது. மொத்த நூற்பாக்கள் 1610. தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் மொழிக்கு இலக்கணம் கூற, பொருளதிகாரம் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறுகிறது.
பொருளதிகாரத்தில் அமைந்துள்ள ஒன்பது இயல்களில் முதல் நான்கு இயல்களான அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் என்பன ஒன்றின் நீட்சியாகவும், ஒன்றுக்கு ஒன்று புறமாகவும் அமைந்துள்ளன. இவற்றுள், அகத்திணைக்கு அதாவது, அகவாழ்விற்குப் புறநிலையாகிய நாட்டுவாழ்க்கையைப் பற்றிப் பேசுவது புறத்திணையியலாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்று அகத்திணை ஏழினை வகுத்த தொல்காப்பியர், இவற்றுக்குப் புறமாக புறத்திணைகள் ஏழினைச் சுட்டுகிறார். இயல் இயைபு விளக்கும் போது, “மேல் அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார்“ என்கிறார் இளம்பூரனர்.
அகத்திணைக்குப் புறனாகிய புறத்திணைகள் ஏழினைத் குறிப்பிடும் தொல்காப்பியர்,
வெட்சிதானே குறிஞ்சியது புறனே (தொல்.புற.1)
வஞ்சிதானே முல்லையது புறனே (தொல்.புற.6)
உழிஞை தானே மருதத்துப் புறனே (தொல்.புற.9)
தும்பைதானே நெய்தலது புறனே (தொல்.புற.14)
வாகைதானே பாலையது புறனே (தொல்.புற.18)
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே (தொல்.புற.22)
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே (தொல்.புற.25)
என்று தெளிவுபடுத்துகிறார். பின் எழுந்த புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைகளைப் பன்னிரண்டாக விரிவுபடுத்துகிறது.
புறத்திணைகள்
வெட்சித் திணை
பகைமேற் செல்லும் ஓர் அரசன் தன்னுடைய வீரர்களை அனுப்பி பகைவர்களின் நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களை கவர்ந்து வந்து பாதுகாத்தல்.
வேந்து விடுமுனைஞர் வேற்றுப்புலக்களவின்
ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் (தொல்.புற.2)
வஞ்சித் திணை
இப்போரினது குறிக்கோள் “மண் ஆசை“ ஆகும். அதாவது நிலப்பகுதியைக் கவரும் குறையாத மண்ணாசையினால், வேந்தனை மற்றொரு வேந்தன் அஞ்சும்படி படையெடுத்துச் சென்று, இருவரும் போர் செய்தலைக் குறிப்பது இது.
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்று (தொல்.புற.7)
உழிஞைத் திணை
மதிலகத்து எல்லாக் கருவிகளையும் உடைய முழுநிலையுடைய கோட்டையை முற்றுகை இடுதலும் அதைக் கொள்ளுதலும் என்ற இரு முறையில் அமையும் என்று கூறுவர்.
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்றாகும் என்ப (தொல்.புற.10)
தும்பைத் திணை
தம்முடைய பேராண்மையின்(வலிமை) மிகுதிப்பாடு தோன்ற, பகைவரோடு நான்கு வகைப்படைகளும் ஒரு பரந்த போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போர் செய்வது தும்பையாகும். தும்பை என்பது கடும்போர். அது இரங்கற் பொருட்டாகிய நெய்தற்குப் புறமாகும். தனது வலிமை பொருளாகக் கருதி வந்த அரசனை, எதிர்த்துச் சென்று அவன் தலைமையை அழிக்கும் சிறப்பினை உடையது.
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலையழிக்கும் சிறப்பிற்றென்ப (தொல்.புற.15)
வாகை த் திணை
போரின்கண் வெற்றிப் பெற்ற நிலை. போர் வெற்றியையும் வாழ்க்கை வெற்றியையும் பாடும். இது அனைத்துப் போருக்கும் பொதுவாகும். வலியும் வருத்தமும் இன்றி, இயல்பாகிய ஒழுக்கத்தானே, தம்முடை கூறுபாடுகளை, இருவகைப்பட்ட மிகுதிப்படுத்தல் என்று கூறுவர்.
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப (தொல்.புற.19)
காஞ்சித் திணை
காஞ்சி என்பது நிலையாமையாகும். நிலையாமையை விளக்கும் இத்திணை போரில் ஏற்படும் நிலையாமையை மட்டுமின்றி, உலகப் பொது நிலையாமையையும் கூறுவது. துணை இல்லாத சிறப்பினையுடைய வீட்டின்பம் காரணமாக, பலவழிகளிலும் நிலை பேறில்லாத உலக இயற்கையைப் பொருந்திய நல்நெறியினை உடைத்து காஞ்சி.
பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.புற.23)
பாடாண் திணை
பாடிப் புகழ் பெறுதற்குத் தகுதியுடைமை. பாடப்படுவற்கானத் தகுதியுடைமை ஒருசிலருக்கே உண்டு. தகுதியுடையவர்களைப் பொருளாகக் கொண்டு பாடப்படுவதே பாடாண் திணை. இது ஒருவரது விருப்பத்தாலும் மற்றவர் மீது கொண்ட மதிப்பாலும் பிறப்பதாகும். பாடாண் திணைப்பாடல்களை ஆராயும்போது, அது எட்டு வகையாக இருப்பதையறியலாம். கடவுள் வாழ்த்து, வாழ்த்தியல், மங்கலம், செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை, பரிசில்துறை, கைக்கிளை, வசைவகை ஆக எட்டு என்பது இளம்பூரணம்.
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண்டு உடைத்தே“ (1026)
தொல்காப்பியப் புறத்திணை – முத்தொள்ளாயிரம்
வெட்சித் திணையும் முத்தொள்ளாயிரமும்
தொல்காப்பியர் சுட்டும் வெட்சித் திணை, பதினான்கு துறைகளையும் துறைவிரியாக இரண்டு துறைகளையும் கொண்டது. இதில் ‘முற்றிய ஊர்கொலை’ என்ற துறை முத்தொள்ளாயிரத்தில் பாண்டியனைப் பற்றிய பாடலில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.
துறை – முற்றிய ஊர்கொலை
பகைவர் நாட்டு பசுக்களைக் கவர்வதற்குத் தயாராக நின்ற படைவீரர்கள் புறஞ்சேரியை வளைத்து பசுக்களைக் கவரும்பொழுது ஏற்படும் சண்டையில் பகைவரை அழித்தல் முற்றிய ஊர்கொலை எனப்படுகிறது.
பறைநிறை கொல்யானைப்
பஞ்சவர்க்குப் பாங்காய்த்
திறைமுறையின் உய்யாதோர்
தேயம் – முறைமுறையின்
ஆன்போய் அரிவையர்போய்
ஆடவர்போய் ஆயிற்றே
ஈன்பேய் உறையும் இடம். (முத்.106)
போர் ஒலி கேட்டவிடத்துச் சினந்து எழுந்து பகைவரைக் கொல்லுந் தொழிலையுடைய யானைப்படையை உடையவன் பாண்டிய மன்னன். கப்பப் பொருள் செலுத்தாதவர் நாட்டின் மீது போர் தொடுப்பான். முறைப்படி போர் செய்வான். முதலில் பகைவர்களுடைய ஆநிரைகளைக் கவர்ந்து செல்வான். பின் போர் துவக்க வருவான். அவன் வருகை அறிந்த பெண்டிர் நாட்டைவிட்டு அகல்வர். போர் மூளும். ஆடவர் இறந்து வீழ்வர். பகைவர் நாடு சுடுகாடாகும். மன்னனும் மக்களும் வாழ்ந்த இடம் சூளுற்று ஈனும் நிலையிலுள்ள பேயினங்கள் உறையுமிடமாகும்.
வஞ்சித் திணையும் முத்தொள்ளாயிரமும்
இத்திணையின் துறைகள் 13. இவற்றுள், ‘எரிபரந்து எடுத்தல்’, ‘வென்றோர் விளக்கம்’ ஆகிய இரண்டும் முத்தொள்ளாயிரத்தில் பயின்று வந்துள்ளன.
துறை – எரிபரந்து எடுத்தல்
எதிரி நாட்டைக் கைப்பற்றுதல் பொருட்டு அந்நாட்டை தீயிட்டு அழித்தல், நீர் நிலைகள் போன்றவற்றை யானைகளை விட்டு சிதைத்தல்.
சேரன்
கரிபரந்து எங்கும்
கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நால்த் திசையுங்
கூடி – எரிபரந்த
பைங்கண்மால் யானைப்
பகையடுதோள்க் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார்
நாடு (முத்.22)
பசுமையும் குளிர்மையும் கொண்ட கண்படைத்த பெரிய பட்டத்து யானையையும், பகைவர் அஞ்சி நடுங்கி இறக்கும் தோற்றமமைந்த எடுப்பான தோள்களையும் உடையவன் சேரமன்னன். அவன் கண் சிவக்குமளவுக்குச் சினமூட்டி, அரச நீதியைக் கடந்து பகைவர்களாய் நிற்பவர்களுடைய நாடுகள், சேரப்படைகளால் அழிக்கப்படும். அந்த இடங்களின் வளம்கெட்டுப் பொருளும் மக்களும் கருகி, காணுமிட மெல்லாம் நஞ்சமைந்த முட்செடிகள் நிறைந்து, எங்கும் நரிகள் பரவித் திரிந்து, நாலா பக்கங்களிலும் மிகுதியாக நெருப்புப் பரவின.
வேரறுகை பம்பிச்
சுரைபடர்ந்து வேளைபூத்து
ஊரறிய லாகா
கிடந்தனவே – போரின்
முகையவிழ்தார்க் கோதை
முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார்
நாடு! (முத்.23)
அன்றலர்ந்த மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்தவன் சேர மன்னன். முசிறி என்ற பட்டினத்தின் கோமகன். அவனுடைய ஒளி பொருந்திய இலைவடிவமான வேலைப்பழித்து, அதன் காரணமாக அவனை வெகுளுமாறு செய்த மன்னர்களுடைய நாடானது, அவனுடைய வீரத்தால், போரில் அழிந்து பாழாகும். முயற்சியின்றி விளைவனவாகிய அறுகம்புற்கள் மிகுதியாகப் பரவிவளரும்; பேய்ச்சுரை ஆங்காங்கு படரும்; தைவேளையும், நாய்வேளையும் பூத்துவளரும். இவ்வாறு செடியும் கொடியும் படருதலால், ஊரின் சுவடு மறைந்து, இவ்விடத்தில் ஊர் இருந்ததா என்ற ஐயப்பாடு தோன்றும்படியாகக் கிடந்தன.
பாண்டியன்
வாகை வனமாலை
சூடி அரசுறையும்
ஓகை உயர்மாடத்
துள்ளிருந்து – கூகை
படுபேய்க்குப் பாட்டயரும்
பண்பிற்றே தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார்
நாடு! (முத்.105)
பாண்டியன் விடுத்த சொல்லுக்கு எதிராக, அவன் சொல்லைக் கொள்ளாத அரசர்களது நாடுகள் அழிந்து, அந்தப் பகை மன்னர்கள் முன்னர் வாகைப் பூக்களால் கட்டிய வெற்றிக்குரிய மாலையை அணிந்து கொண்டு மகிழ்ச்சியோடு கொலுவீற்றிருந்த அவர்களது உயர்ந்த மாடங்களினுள், இப்பொழுது கூகைகள் வீற்றிருந்து பேய்களுக்குப் பாட்டிசைக்கும் பண்பினை உடையதாயிருக்கின்றன.
துறை – வென்றோர் விளக்கம்
வென்றவர் சிறப்பு. அதாவது, பகைவர் நாட்டை வெற்றி கொண்டு அழித்து திரும்பும் மன்னனைக் கண்டு, மண்ணாசைக் காரணமாக போரிட வந்தவர்கள் போரிடாமல் தம் எண்ணத்தை மாற்றி மன்னனுக்கு திறையினைச் செலுத்துதல்
சோழன்
நின்றீமின் மன்னீர்
நெருநல் திறைகொணர்ந்து
முன் தந்த மன்னர்
முடிதாக்க – இன்றுந்
திருந்தடி புண்ணாகிச்
செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ! (முத்.47)
அரசர்களே! எங்கள் மன்னன் பெருமை மிக்கவன். அருள் உள்ளம் படைத்தவன். உறந்தை என்ற நாட்டுக்குரிய சோழ மன்னன். அவன் அழகிய திருவடியின் முன்னே நேற்று அரசர்கள் தங்கள் கப்பப் பொருளைக் கொண்டுவந்து வைத்து முடிதாழ்த்தி வணங்கியதால், திருவடியில் முடிகள் உராய்ந்து புண்ணாகியிருக்கிறது. அப்புண் இன்றும் நலமடையவில்லை. ஆகவே, மேலும் மேலும் முடி உராய்ந்து துன்புறுத்தாவண்ணம், நீங்கள் சற்றுப் பொருத்திருந்து, பிறகு கொடுங்கள்.
உழிஞைத் திணை
மதிலை வளைத்தல் நான்கு, மதிலைக் காத்தல் நான்கு என எட்டுத் துறைகளைக் கொண்டது இத்திணை. இதில், ‘உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு’ என்னும் துறை பாண்டியன், சோழன் ஆகியோர் பற்றிய பாடலில் பயின்று வந்துள்ளது.
துறை – உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு
தாம் நினைத்ததை முடிக்கும் அரசனது சிறப்பு பற்றிக் கூறுவது இத்துறையாகும்.
சேரன்
அயிற்கதவம் பாய்ந்துழக்கி
ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்து
கோட்டாற் – பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போல்
தோன்றுமே யெங்கோமான்
காய்சினவேற் கோதை களிறு (முத்.20)
பகைவர் கூரிய வேல்கள் பொருத்தப்பட்ட கோட்டை கதவை தாழிட்டுக் கொண்டு உள்ளிருந்தனர். போரின் கண் பகைவர் மாட்டுச் சினந்து அழித்தலையுடைய வேற்படையைக் கொண்ட சேர மன்னன் கோட்டையைக் கைப்பற்ற எண்ணினான். அதனால் யானையை ஏவினான். ஆண் யானையானது வலிமை பொருந்திய, வேல் பொருதப்பெற்ற மதில்கதவைச் சினத்தோடு தாக்கியது. தாக்குதல் பொறாக் கதவானது நிலைகுலைந்து வீழ்ந்தது. யானையானது வீழ்ந்த கதவைக் குனிந்து, தன் கொம்புகளால் கதவின் துளைகளில் குத்திக் கதவை எடுத்துக்கொண்டு நின்றது. அப்பொழுது அது குளிர்ச்சி பொருந்திய கடலில் அலையடித்தலால் நீர்நோக்கிப் பாய்ந்து, மேல் நோக்கி எழும் பாய விரித்த மரக் கலம்போல் காட்சி தந்தது.
சோழன்
இரியல் தாலாட்டு
இலைஞெமலுள் ஈன்ற
வரிஇளம் செங்காற்
குழவி – அரையிரவில்
ஊமன் தா ராட்ட
உறங்கிற்றே செம்பியன் தன்
நாமம்பா ராட்டாதார் நாடு! (முத்.52)
தனக்கு அடங்கிப் பெயர் கூறிப் புகழாதாவர்களுடைய நாட்டின்மேல் ஒருமுறை சோழமன்னன் படையெடுத்தான். படைவர் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். படையெடுத்துச் சென்றபோது, அந்நாட்டு மக்கள் அச்சமுற்று, தன் நிலைகெட்டு, சூல் கொண்ட மகளிரும், மற்றவர்களும் காட்டிற்கே ஓடிவிட்டனர். காட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு அச்சம் நீங்கியபாடில்லை. இந்த நிலையில் வரிக்கோடமையப் பெற்ற இளம் குழந்தைகளைவேறு ஈன்றனர். எதில்? அங்குக் கிடந்த இலைச்சருகுகளின் மேல். குழவியோ கத்துகிறது. தாயரோ அச்சத்தால் வாய் திறவாதிருக்கின்றனர். ஆனால் நடு இரவில் கூகைகள் கூகூ என்று கத்துகின்றன; அது குழந்தைகளுக்குத் தாலாட்டுவது போலிருந்தது. குழந்தைகளும் உறங்கின.
உழிஞைத் திணையின் துறை விரி
உழிஞைத் திணையின் இரண்டு மன்னர்களும் எடுத்துக் கூறும் விதமாக 12 துறை விரிகள் உள்ளன. இவற்றில் ‘குடைநாட்கோள்’ என்னும் துறைவிரி பாண்டியன் பற்றிய பாடலில் பயின்று வந்துள்ளது.
துறை – குடை நாட்கோள்
மன்னன் தன் ஆக்கங்கருதியும், குடிமக்களைக் காத்தல் பொருட்டும் தம்மிடமுள்ள குடையைப் போர் தொடங்குவதற்கு முன் பகைவர் நாட்டிற்குத் தூதாக அனுப்புதல்.
பாண்டியன்
நிறைமதிபோல் யானைமேல்
நீலத்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத்
தரசர் – திறைகொள்
இறையோ! எனவந்
திடம்பெறுதல் இன்றி
முறையோ! என நின்றார்
மொய்த்து! (முத்.94)
ஒரு முறை நீலப்பூ மாலை சூடிய நம் பாண்டிய மன்னனின் பட்டத்து யானைமேல், முழுநிறை மதியைப் போன்று விளங்கும் அவனது வெண்கொற்றக் குடையை வைத்து வேறிடத்திற்குக் கொண்டுசென்றார்கள். இதையறிந்த உலகத்து அரசர்கள் பலரும் வந்து, ‘மன்னவனே! உரிய கப்பப் பொருளைப் பெற்றுக்கொள்வாயாக! எங்களை மன்னிக்காது போர் தொடுக்க எழுதல் முறையோ’! எனக் கூறி, எல்லோரும் ஒன்று சேர்ந்து சூழ்ந்து நெருக்கியடித்துக் கொண்டு அரண்மனை வாயிலில் நின்றார்கள்!
தும்பைத் திணை
தும்பைத் திணையின் துறைகள் பன்னிரண்டு. இவற்றில், ‘யானை, ‘குதிரை’ என்ற இரண்டும் முத்தொள்ளாயிரத்தில் பயின்று வருகின்றன.
துறை – யானை
முத்தொள்ளாயிரத்தில் யானையின் வீரச் செயல்பாடுகள் பற்றிய பாடல்கள் அதிக அளவில் பயின்று வந்துள்ளன. பாண்டியன் பற்றிய பாடல்களில் ஐந்தும் (95; 99; 100; 101; 102, சோழன் பற்றிய பாடல்களில் மூன்றும் (முத்.48, 49, 50) சேரன் பற்றிய பாடல்களில் இரண்டும் (19, 20) யானையின் வீரம் பேசுகின்றன.
சேரன்
வீறுசால் மன்னர்
விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த
பரிசயத்தால் – தேறாது
செங்கண்மாக் கோதை
சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை! (முத்.19)
சேரனது யானைப் படையில் கோபமும், மதமும் கொண்ட யானைகள் இருந்தன. அந்தப் போர் யானைகளில் ஒன்று, போர்செய்வதில் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்த, படைபலம் பெருத்த மன்னர்களது விரிந்து பரந்து, மாலையோடு கூடிய வெண்கொற்றக்குடையை, அதன் நிலைகுலையும் வண்ணம் அடியோடு பெயர்த்து எறிந்துகொண்டே வந்த பழக்க உணர்ச்சியில், எதிரில் மாற்றார் படை ஒன்றும் காணாது, சற்றும் சிந்தியாது, மேல்நோக்கி முழு நிலவை மாற்றார் குடை எனக் கருதித் தன் துதிக்கையை நீட்டும்.
சோழன்
கொடிமதில் பாய்ந்திற்ற
கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த
நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப்
புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு! (முத்.48)
கல்லையொத்த திணமை வாய்ந்த தோள்களை உடைய சோழமன்னனது ஆண்யானை போர் புரிவதில் மிகவும் திறமை வாய்ந்தது. அது கொடி கட்டிய மாற்றாரது மதிற்கதவினைத் தாக்கித் தன் கொம்புகளை இழந்தது. மாற்றார் தம் மணிமுடிகளைக் காலால் இடறித் தள்ளியது. அதனால் காலின் நகங்கள் தேய்ந்தன. வெற்றியோடு நகருக்குத் திரும்பி வந்தது. கொம்பும், நகமும் இழந்தமையால் புற அழகு அழிந்திருந்தது. இவ்வாறு தனக்கேற்பட்ட குறைபாட்டை நினைத்தபடியே தன் துணையைக் காண நாணி வாயிற் புறத்தில் நின்று கொண்டிருந்தது.
பாண்டியன்
மருப்பூசி யாக
மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை
யாகத் – திருத்தக்க
வையக மெல்லாம்
எமதென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு! (முத்.99)
வலிமை மிக்க இலைவடிவமைந்த வேலையுடையவன் பாண்டிய மன்னன். அவனது போர்குரிய ஆண்யானையானது தன்னுடைய கொம்புகளையே எழுத்தாணியாகக் கொள்ளும். வீரம் கனலும் பகையரசர்களது அச்சமிகும் மார்பை ஓலையாகக் கொள்ளும். இவ்வாறு கொம்பாகிய எழுத்தாணி கொண்டு பகையரசர்களது மார்பாகிய ஓலையில், அழகும் செல்வமும் நிறைந்த இந்த உலகமெல்லாம் எங்கள் பாண்டிய மன்னனுடையதே – அவனுக்கே உரிமை என்று எழுதும்.
துறை – குதிரை
போர்க்களத்தில் குதிரையின் வீரச் செயல்பாடு குறித்து பாண்டியன் பற்றிய ஒரு பாடலில் காட்டப்படுகிறது.
முடிகள் உதைத்த மாப்
பொன்னுரைகல் போன்ற குளம்பு (முத்.95)
குதிரைகள், போர்க்களத்தில் பகையரசர் தம் முடிகளைக் காலால் உதைத்து எற்றித் தள்ளிக்கொண்டே வந்தன. அதனால், பொன்னுரைத்த கட்டளைக் கல்லைப் போன்று குதிரைகளின் காற்குளம்புகள் ஆகிவிட்டன.
வாகைத் திணை
வாகைத் திணையின் துறைவிரி பதினெட்டு. இவற்றுள், ‘பிழைத்தோர் தாங்கும் காவலானும்’ ‘பெரும்பகை தாங்கும் வேலினாலும்’ என்ற இரண்டு துறைகள் முத்தொள்ளாயிரத்தில் பயின்று வந்துள்ளன.
துறை – பிழைத்தோர் தாங்கும் காவலானும்
தவறிழைத்தோரைப் பொறுத்தல் என்பதாகும்.
தொழில்தேற்றாப் பாலகனை
முன்னிறீஇப் பின்னின்
றழலிலைவேல் காய்த்தினார்
பெண்டிர் – கழலடைந்து
மண்ணிரத்த லென்ப
வயங்குதார் மாமாறன்
கண்ணிரத்தத் தீர்க்கு மருந்து! (முத்.108)
விளங்குகின்ற மாலையை அணிந்தவனும் மன்னர் மன்னனுமான பாண்டிய மன்னனின் சினத்தை மாற்றும் மருந்து ஒன்று உண்டு. அது, அவனுடைய ஒளி உமிழும் இலை வடிவமைந்த வேலுக்குச் சீற்றம் பொங்கச் செய்த பகையரசர்களின் மனைவிமார், போர்த்தொழில் தெரியாத தங்கள் மகனைப் பாண்டியனுக்கு முன்னால் நிறுத்தித் தாங்கள் மகனுக்குப் பின்னால் நின்றுகொண்டு, அவன் திருவடி தொழுது பிழைபொறுத்து அருள் புரிந்து, எங்கள் நாட்டைத் தந்தருள வேண்டும் என்று பணிந்து வேண்டிக் கொளவதுதான்.
துறை – பெரும்பகை தாங்கும் வேலினானும்
போரில் வெற்றி பெற்ற அரசனின் வேலிற்கு விழா நடத்தி சிறப்பித்து புகழ்ந்து பாடுதல்.
அருமணி அந்தலை
யாடரவம் வானத்து
உருமேற்றை அஞ்சி
ஒளிக்கும் – செருமிகுதோட்
செங்கண்மா மாறன்
சினவேல் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு (முத்.96)
அருமை மிக்க மணிகளைக் கொண்ட அழகிய தலையை உடையது பாம்பு. அது மழைக் காலத்தில் வானத்தின்கண் நிகழும் இடி மின்னலுக்குப் பயந்து புற்றுக்குள் ஒளிந்து கொள்ளும். அதுபோலப் போரின்கண் பகைவர் அஞ்சும் வலிமை மிக்க தோளமைப்பையும், பகைவரைக் கண்டவிடத்துச் சிவக்கும கண்களையும் உடையவன் பாண்டிய மன்னன். அவனது சினமிக்க வேலை, இப்பெரிய நிலவுலகின்கண் வாழும் அரசுகள், கனவில் காண்கினும் அஞ்சும்.
காஞ்சித் திணை
காஞ்சி – நிலையாமை. இது ஆண்பாற் காஞ்சி, பெண்பாற் காஞ்சி என பத்துப் பத்தாக இருபது துறைகள் கொண்டது. இவற்றுள், ‘இன்னனென்று இரங்கிய மன்னை யானும்’, ‘காதலன் இழந்த தாபத நிலை’ என்ற இரண்டு துறைகளும் முத்தொள்ளாயிரத்தில் பயின்று வந்துள்ளன.
துறை – இன்னனென்று இரங்கிய மன்னை யானும்
போர்க்களத்தில் இறந்தவன் இன்ன சிறப்புடையோன் என்று இரங்கும் மன்னைக் காஞ்சி.
கொடித்தலைத்தார்த் தென்னவன்
தேற்றான்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய
கையாற் – பிடித்தவேற்
கண்ணேரா ஓச்சிக்
களிறணையாக் கண்படுத்த
மண்ணேரா மன்னரைக் கண்டு! (முத்.107)
மடித்த வாயினோடும், எதிரியின் கண்களை நோக்கிப் பாய்ச்சச் சுட்டி உயர்த்திய வேலைப் பிடித்த கையினோடும், மண்ணில் வீழாது தங்கள் ஆண் யானைகளின்மேல் வீழ்ந்து இறந்து கிடக்கும் அரசர்களை, வெற்றிக் கொடியுடையவனும், தலையில் வெற்றிமாலை சூடியவனுமான பாண்டியன் கண்டு – இவர்கள் இன்னும் உயிரோடு கிடக்கிறார்களா? இல்லையா? என்று தெரியாமல், என்னே இவர்கள் வீரம்! என்று பாராட்டி நின்றான்.
துறை – காதலன் இழந்த தாபத நிலை
கணவனைப் போர்க்களத்தில் இழந்த மனைவியன் நிலை கூறுதல்.
ஏனைய பெண்டிர்
எரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான்
தார்வழுதி – யானையும்
புல்லார் பிடிபுலம்பத்
தன்கண் புதைத்ததே
பல்யானை அட்ட களத்து! (முத்.104)
பலப்பல யானைகளும், வீரர்களும் இறந்து கிடக்கும் போர்க்களத்தே, இறந்த பகைவரின் மனைவியர், துணைவனைத் துறந்தமை பொறுக்காது, தீ வளர்த்து அதில் மூழ்கினர். மாலையணிந்த பாண்டிய மன்னன் இதைக் கண்டு வருத்தத்தால் கண்ணும் மனமும் கலங்கத் தன் ஆடையால் கண்களை மூடி மறைத்துக்கொண்டான். அவனுடைய பட்டத்து ஆன் யானையும், பகைவர்களுடைய புணர்ச்சி விருப்பமிகு இளம் பெண் யானைகளின் புலம்பொலி கேட்டுத் தானும் வருந்தி நீர்வடித்த தன் கண்களை இமையால் மூடி மூடி மறைத்துக் கொண்டது.
பாடாண் திணை
பாடாண் திணையின் துறைவிரிகளான, ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங்கலம்’, ‘சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலம்’, ‘மண்எயில் அழித்த மண்ணு மங்கலம்’ ஆகியவை முத்தொள்ளாயிரத்தில் பயின்று வந்துள்ளன.
துறை – சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங்கலம்
அரசன் தான் நாள்தோறும் மேற்கொண்டு நடத்தும் சிறையில் அடைத்தல், போரின்மேற் செல்லுதல் போன்ற குணங்களை நீக்கி, பிறந்த நாளின்போது சிறையிலிருந்து விடுதல், போரை நிறுத்துதல் போன்ற நல்ல செயல்களைச் செய்தல்.
பாண்டியன்
கண்ணார் கதவந்
திறமின் களிறோடுதேர்
பண்ணார் நடைப்புரவி
பண்விடுமின் – நண்ணார்தம்
தேர்வேந்தன் தென்னன்
திருவுத் திராடநாள்
போர்வேந்தன் பூசல் இலன்! (முத்.93)
பாண்டிய மன்னன் பிறந்தநாள் இன்றைய நாள். இன்று உத்திராட விண்மீனுக்குரிய நாள். குற்றம் கண்டவிடத்து, போர்க்குரிய மன்னனாக விளங்கும் நம் மன்னன் இன்று போர்க்குரிய வேந்தனாகக் காட்சியளிக்கமாட்டான். யாரோடும் போர் செய்யவும் மாட்டான். இன்று போர் இல்லை. ஆகவே, பகைவர்களை அடைத்து வைத்திருக்கும் அழகிய சிறைக் கதவுகளைத் திறந்து, அவர்களை விடுதலை செய்துவிடுங்கள். நம்முடைய யானைகளையும், தேர்களையும், இசைக்குரிய நடைபயிலும் குதிரைகளையும் போரணி நீக்கி, உலா அணி அணிவித்து, நகரின்கண் உலா வரச் செய்யுங்கள்.
சோழன்
அந்தணர் ஆவொடு
பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட
களிறூர்ந்தார் – எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி
இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு! (முத்.46)
இன்று இரேவதி விண் மீனுக்குரிய நாள். ஒளி உமிழும இலைவடிவமைந்த வேலையுடைய எங்கள் சோழ மன்னன் பிறந்த நாள். அவனிடம் இன்று வேதம் ஓதும் அந்தண்மையாளர்கள், பசுவும், பொருளும் பரிசாகப் பெற்றனர். புலவர்களும் அமைச்சர்களும் மாட்சிமைப்பட்ட, மந்தரமலை போன்ற பெரிய ஆண் யானைகளைப் பரிசாகப் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் இந்தச் சிலம்பி இனம் கூடிழந்து நிற்கின்றனவே.
துறை – சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலம்
சிறந்து விளங்கும் அரசனது நீதி தவறாத செங்கோண்மை, அவனது கொற்றக் குடை நிழலின் கீழ் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்தல் போன்ற சீரிய இயல்புகளைக் கூறுவது
சோழன்
மந்தரங் காம்பா
மணிவிசும் போலையாத்
திங்கள் அதற்கோர்
திலதமா – எங்கணும்
முற்றுநீர் வைய
முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை (முத்.45)
போரில் வெற்றி ஒன்றைத் தவிர வேறு அறியாதவன் சோழ மன்னன். அவன் வெண்கொற்றக்குடை இந்த உலகில், மந்தர மலையைக் குடைப்பிடியாகக் கொள்ளும். நீலநிற வானகத்தைக் குடைத் துணியாகக் கொள்ளும். தண்ணொளி பரப்பும் வெண்ணிலவைக் குடையின் மேற்பகுதியில் காம்பைச் சுற்றி விளங்கும் வட்டமாகக் கொள்ளும். இப்படி அமையப் பெற்ற குடையானது, கடலால் சூழப்பெற்ற, இந்த உலகம் முழுதும் சோழ அரசை நினைவூட்டி அமைதி பெறுமாறு அருள் நிழல் தரும்.
துறை – மண்எயில் அழித்த மண்ணு மங்கலம்
மாற்றான் வாழ்ந்த மதிலை அழித்து கழுதை ஏர் பூட்டி உழுது, வெள்ளை வரகும், கொள்ளும் விதைத்து மங்கலமல்லாதவற்றைச் செய்தல். முத்தொள்ளாயிரத்தில், சேரனின் யானைப்படை மதில் கதவை உடைக்கும் திறனும், பாண்டியனின் யானைகள் மதில் கதவை உடைப்பதற்காகவே தந்தங்களை வைத்திருந்த தன்மையும் காட்டப்படுகிறது.
பாண்டியன்
உருவத்தார்த் தென்னவன்
ஓங்குஎழில் வேழத்
திருகோடுஞ் செய்தொழில்
வேறால் – ஒருகோடு
வேற்றார் அகலம்
உழுமே யொருகோடு
மாற்றார் மதில்திறக்கு மால்! (முத்.100)
அழகும் வடிவும் அமைந்த மலர் மாலையை அணிந்தவன் பாண்டிய மன்னன். அவனுடைய ஆண்மை அழகு ததும்பும் பட்டத்து ஆண்யானையின் இரு கொம்புகளும் செய்கின்ற தொழில்கள் வேறு வேறாகும். ஒரு கோடு எதிர்த்த பகையரசர்களின் மார்பை வயலாகக் கொண்டு தன்னுடைய கொம்பாகிய கலப்பையால் உழும். மற்றொரு கொம்பு அவர்களுடைய மதிற்கதவைத் தாக்கித் திறக்கும்.
தொல்காப்பியத்தின் ஏழு திணைகளில் முத்தொள்ளாயிரத்தில் தும்பை, பாடாண் ஆகிய துறைகள் அதிகம் பயின்று வந்துள்ளன.
இவற்றிலும் தும்பைத் திணையின் யானை நிலை என்ற துறையே அதிகம் இடம்பெற்றுள்ளது (பாண்டியன் – முத்.8,9,10,11; சோழன் – முத்.61,62,63; சேரன் – முத்.91,92)
******
Add comment