சங்க இலக்கியத்தில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத் திறனும்

சங்க இலக்கியத்தில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத் திறனும்

முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப்புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

(சங்க இலக்கியங்கள் கூறும் நேரம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக் கோட்பாடுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்-அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல், திசம்பர்- 2011)

மனிதவள மேம்பாடு

தொல்காப்பியர் கூற்றுப்படி, ஆறாவது அறிவாகிய பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனித இனமே உயிரினங்களில் மேலானதாகக் கொள்ளப்படுகிறது. இம்மனித இனமே தம் இனத்தை மட்டுமல்லாது பிற உயிரினங்களையும் அரவணைத்துச் செல்லும் அல்லது தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. இவ்வகைச் சிறப்பு பெற்ற மனித இனத்தின் எண்ணம் விரிவடைந்து ஆக்கமும் ஊக்கமும் பெற்றுத் திகழ மனித வளத்தை மேம்படுத்துதல் வேண்டும்.

மனிதவள மேம்பாடு என்பதற்கு, ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் கல்வித்தரம், ஆண் பெண் சமத்துவம், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், திட்டங்களைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய அனைத்துத் தகுதிகளையும் உடையனவே மனிதவள மேம்பாடு என்று விளக்கம் தருகிறது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். மேலும்,மனிதவளமேம்பாடும் பொருளாதாரமும் பின்னிப் பினைந்தவை என்று கே.சீனிவாசன் அவர்கள் குறிப்பிடுகிறார். இன்றைய சூழலில், மனிதவள மேம்பாட்டு நிலவரத்தைப் பொறுத்தவரையில் உலக நாடுகளில் 127வது இடத்தில் இந்தியா இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அறிக்கைத் தெரிவிக்கின்றது. மக்கள் தொகையில் உலக அளவில் 2வது இடத்தில் இருக்கிற ஒரு நாடு மனிதவள மேம்பாட்டில் 127வது இடத்தில் இருக்கிறது என்பது கவலைதரக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில் பண்டைத் தமிழகத்தில் மனிதவள மேம்பாடு எவ்வாறு காக்கப்பட்டது, மேம்படுத்தப்பட்டது என்பதைச் சங்க இலக்கியங்கள்வழி காண்பது தேவையாகிறது. இவ்வகை மீட்டுருவாக்கம் இன்றைய மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உறுதுணை புரியும்.  

மனிதவள மேம்பாட்ட்டின் தேவை

‘சேவைகள் பிரிவு என்றதுமே அதில் மனிதனுக்குரிய தேவைகள், வசதிகள், அத்தியாவசியச் சௌகரியங்கள் ஆகியவையே மேலோங்கி நிற்கின்றன. வளர்ந்து வரும் நாடுகள், தம் மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்த வேண்டுமானால், அங்கு மனிதவளத் துறையிலும், அவர்தம் நிர்வாகத் தொழில்நுட்பத் திறமைகளிலும் பெருமளவு முதலீடுகள் தேவைப்படும். அந்த வகையில் மொத்தம் 175 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 134வது இடத்தில் இருக்கிறது. காரணம் நம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 73 சதவீதம்பேர் போதிய கழிப்பிட வசதிகள் அற்றவர்களாகவும், 21 சதவீதம் மக்கள் நல்ல குடிநீர் கிடைக்கவே வாய்ப்பிழந்த நிலையிலும் உள்ளனர்’(இந்தியா2020, ப.117) என்ற புள்ளிவிவரம் மனித வளத் தேவையில் இன்றையச் சமூகம் கடக்க வேண்டிய பாதையைச் சுட்டும்.

சமூக மேம்பாட்டில் மக்கள் வளம் என்பது, பிற வளங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. இது, உணவு, உடை, இருப்பிடங்களோடு சுகாதார மேம்பாட்டையும் பொறுத்து அமைகிறது. சுகாதார மேம்பாடே பண்பட்ட, அறிவுடைமையைக்கொண்ட சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது. ஆனால், ‘இந்தியாவில் ஏழையாகவோ, நோயாளியாகவோ இருப்பது மிகக் கொடுமையான விஷயம். கோடிக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ உதவியைப் பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள்’ என்ற இன்றைய நிலை சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக அமைவதைக் காட்டுகிறது.

            மனிதவளம் என்பது, நோயற்ற சமுதாயத்தையும், சுகாதாரமான வாழ்க்கை முறையையும் அளவுகோல்களாகக் கொண்டது. மனிதரின் உடல் பிணியும், மனப்பிணியும் தடையற்ற சமூக முன்னேற்றத்திற்கு ஊறு விளைவிப்பன. வளமில்லா உடல் மற்றும் மனத்தில் வளமான சிந்தனைகளும், அதன்வழி நற்செயல்பாடுகளும் வெளிப்பட்டு நிற்பது அரிது. எனவே, சமூகப் பிணியைக் களைவது சமூகக் கடமையென்பதைப் பழந்தமிழ்ச் சான்றோர் அறிவுறுத்தினர். பிணிகளற்ற சமூகத்தை வரவேற்றனர். ‘நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம’ (புறம்.13:9) என்று சமூகத் தலைமையையும்,  ‘பிணி நீங்குக’ என்று (ஐங்குறு. 2:2;  சிலம்பு.5:72-73; மணி.1:70-71; 16:134;)  மக்கள் கூட்டத்தையும் வாழ்த்தினர். பசி என்பது, பிணிக்குக் காரணமாகவும், தாமே பிணியாகவும் அமைந்ததால் அதனை இல்லாதொழிக்கப் பலவழிகளிலும் அற்றைச் சமூகம் முயன்றது. அதற்கு அடுத்த நிலையில், பிற காரணங்களால் உடற்கும், மனத்திற்கும் ஏற்படும் பிணிகளிலும் அவற்றைப் போக்கும் முறைகளிலும் தீவிரம் காட்டப்பட்டது. இவற்றில், சுகாதாரமான இருப்பிட வசதி, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகள், குடிநீர்ப்பாதுகாப்பு, இயற்கையான உணவு, எளிமையான பல்வகை மருத்துவ முறைகள் என்பன சிறப்பிடம் பெறுகின்றன.

மக்கள் நலவாழ்வு

‘நாம் வாழும் உறைவிடங்கள் அல்லது பணியிடங்களில் சிறந்த பொதுச் சுகாதாரச் சூழ்நிலைகள் அவசியம். மேம்படுத்தப்பட்ட தூய்மையான சுற்றுச்சூழலும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியம். இத்தகைய நல்ல தூய்மையான சுற்றுச்சூழலுக்கு அடுத்தபடி, போதுமான துணைச் சத்துக்களுடன் கூடிய சிறந்த ஊட்டச் சத்துணவின் தேவை எழுகிறது. பொது சுகாதாரச் சேவைகள் இன்று கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. மருத்துவச் சேவையை வணிக மயமாக்கும் போக்கும் தென்படுகிறது. இவற்றையெல்லாம் தாக்குப்பிடிக்கும் வகையில் காப்புறுதி அல்லது சமூகநலப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைவராலும் பெற இயைந்த வகையில் பரவலாக்கிவிட வேண்டும்’ (இந்தியா 2020, ப.145) என்பது, இன்றைய மனிதவள மேம்பாட்டிற்கான தொலைநோக்காக அமைகிறது. 

உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கும் காரணிகளுள் வாழும் சூழல் முக்கிய பங்கினைப் பெறுவதால், வாழும் சூழலையும், தம்மைச் சுற்றி வாழ்வோரையும் தேர்ந்தெடுப்பதில் பழந்தமிழ்ச் சமூகம் கவனம் கொண்டிருந்தது. வாழும் சூழலோடு, ஒருவரின் உணவுப் பழக்கமும் ஆரோக்கிய வாழ்வில் பெரும்பங்களிப்பினைச் செய்கிறதென்பதை உணர்ந்ததால், இவை இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மனிதர்க்கு வரும் மூப்பை விரட்டும் ஆற்றல், வாழும் நற்சூழலுக்கு உண்டு என உணர்ந்தனர். ஆண்டு பலவாகியும் தலைமுடி நரையாமலும், மூப்பெய்தாமலும் இருப்பதற்கு, தாம் வாழும் சூழலும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுமே காரணம் என்பார் சங்கப் புலவர் பிசிராந்தையார்(புறம்.191). இங்கு வாழும் சூழல் மனஅழுத்த மேலாண்மையைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி என்பது அறியப்படுகிறது.

அற்றைநாள் கடமைகளினூடே மன நலத்திற்கும், உடல்நலத்திற்குமாக ஒதுக்கும் நேரம் இன்றியமையாததாயிருந்தது. சிறுவர்முதல் முதியவர்வரை பொழுதுபோக்கவும், ஆடி மகிழவும் ஊரின் பொதுவான இடங்களாகப்  பொதியிலும், மன்றமும் விளங்கின(கலி.102). அதேபோல, இருப்பிடங்கள் சுகாதார வசதிகளுடனும், காற்றோட்டமுள்ளதாகவும் அமைக்கப்பட்டன(மதுரைக். 356-358; பட்டினப்.142-145). வீட்டிலிருந்தும், தெருவிலிருந்தும் கழிவுநீர் வெளியேற சாய்க்கடை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன(சிலப்.14:65; மணி.28:5). மகளிர் விளையாடப் பொது மன்றங்களும்(கலி.58; 141), இல்லத்தின் மேனிலை மாடங்களும்(நிலா முற்றம்) (நெடுநல்.60-63; 95; சிலம்பு.5:7-8; முல்லை.86; பெரும்பாண்.348-49) விளையாட்டுத் திடல்களாயின. மாடங்களில் பெண்களே பெரும்பாலும் தங்கி இருந்தனர். அவர்கள் பொழுதுபோக்கு இடமாகவும் அவை விளங்கின. வரிப்பந்தாடுதல், கழங்கு ஆடுதல் போன்ற விளையாட்டுகள் மாடங்களிலே நடைபெற்றன. இதனை, ‘வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇ’(பெரும்பாண். 333) என்பதில் அறியமுடிகிறது.

உணவே மருந்து

உணவே மருந்தாவதைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர்.  தேவையான உணவினைத் தேவையான அளவில் சரியான கால  இடைவெளியில் உண்டாலே நோய்கள் அண்டாது என்பதையும், இவற்றின் தன்மைகள் மாறுபடின் நோயும், அதன் வழி சினமும் பெருகும் என்பதையும் ஆய்ந்தறிந்தனர். இதனை, ‘பெரிது ஆராச் சிறுசினத்தார்’ (புறம்.360:1-2) என்று வெளிப்படுத்தினர். இதில், உணவைத்  தேவைக்கும் அதிகமாக உண்ணாதவர், அதிகம் சினம் கொள்வதில்லை என்பது பெறப்படுகிறது. அதிக சினமே நோய்கள் பலவற்றிக்குக் காரணமாக அமைகிறது.  அதேபோல,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்        (குறள்.942)

என்றும்,

                             அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

                              பெற்றான் நெடிதுய்க்கு மாறு  (குறள்.943)

என்றும், உடல் நலம் காப்பதில் உணவின் பயன்பாட்டு முறையை விளக்குவார் வள்ளுவரும்.

தூய்மையாக்கப்பட்ட குடிநீர்

குடிநீர் மாசுபாட்டால் உண்டாகும் நோய்கள் அதிகம் என்பதை அறிந்ததால், மாசுபடா குடிநீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நாட்டில் உள்வளத் தேவைகளுள் ஒன்றான நீர்நிலைகளுக்கு எதிரிகளாலும், விலங்குகளாலும் தீங்கு நேராவண்ணம் பாதுகாப்புப் போடப்பட்டது (புறம்.15:9-10; அகம்.252:11-13). குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்ட காலத்தில், கூவலில் இருந்து பெறப்பட்ட கலங்கிய சிறிதளவு நீரினையும் கலங்கல் போக சுத்திகரிப்புச் செய்து பயன்படுத்தினர். இதற்கு, தேற்றாமரத்தின் கொட்டை பயன்படுத்தப்பட்டது (கலி.142:63-65).

மருத்துவம்

பழந்தமிழரின் மருத்துவத்தை உடல் நலத்திற்கான மருத்துவம், மன நலத்திற்கான மருத்துவம் என இரு கூறுகளாக்கிப் பார்க்க முடிகிறது. இவற்றுள், உடல் நலத்திற்கான மருத்துவத்தை இயற்கை மருத்துவம் அல்லது கை மருத்துவம், இசைமருத்துவம், நுண் மருத்துவம்(தொழில்நுட்பம் சார்ந்தது) என்று வகைப்படுத்தலாம். மன நலத்திற்கான மருத்துவ முறைகள் தேற்றுதல், ஆற்றுப்படுத்துதல், சந்து செய்வித்தல், வெறியாட்டுதல் போன்ற முறைகளில் அமைகின்றன. மன அழுத்தத்தைப் போக்குவதில் இம்மருத்துவ முறைகள் பெரும்பங்கு வகித்தன. மன அழுத்தத்தைப் போக்கக் கூடியவர்களாக சான்றோர், தோழன், தோழி, கட்டுவிச்சி, பாணன், பாடினி, விறலி போன்றோர் விளங்னர். இவர்களின் கூற்றுகளாக அமைந்த பாடல்களே சங்க இலக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பதை அறிகிறோம்.

முதியோரைப் பேணுதல்

இன்று, நாட்டில் நீதி மன்றங்களும், காவல் நிலையங்களும், முதியோர் இல்லங்களும், அநாதை இல்லங்களும் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு வகையில் நன்மை பயக்கும் என்றாலும், சமூக ஆரோக்கியமற்ற தன்மையின் வெளிப்பாட்டுக் குறியீடாகவே இவற்றைக் காணமுடிகிறது. இத்தன்மை நாட்டில் குற்றங்கள் பெருகுவதையும், குடும்பப் பிணைப்பின் சிதைவையும், பாதுகாப்பற்ற முதுமையையும் மறைமுகமாக உணர்த்தி நிற்கிறது. குறிப்பாக, இன்று சமூகச் சிக்கல்களுள் முக்கியமானதொன்றாக முதியோர் தொடர்பான சிக்கல்கள் கருதப்படுகின்றன. ‘சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்றாக, உடனடித் தீர்வை வேண்டி நிற்பது முதியோர்கள் தொடர்பான பிரச்சினைகளாகும். 2010ஆம் ஆண்டு வாக்கில் நல்ல வசதி இருந்தும் தனிமையில் வாழும் முதியோர் அதிகம்பேர் இந்தியாவில் இருப்பார்கள். காரணம் அவர்களது பெற்றோரைப் பிரிந்து இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலோ உலகில் எங்கெங்கோ தங்கி வாழக் கூடும். அந்த முதியவர்களுக்குத் தேவைப்படும் அனைத்துச் சேவைகளும் இன்றியமையாத சமூகப் பிரச்சனை (இந்தியா 2020, ப.120) என்ற 2000வது ஆண்டின் கணிப்பு இன்று உண்மையாகியுள்ளதை அறிகிறோம்.

இவ்வகைச் சமூகச் சிக்கல்களைக் களைவதில் அரசின் செயல்பாடுகள்  முக்கியமானதாக அமைகின்றன. அவ்வகையில், நாட்டில் பெரியோரையும், சிறியோரையும் பேணிக்காத்த பழந்தமிழ் மன்னர்களின் செயல்பாடு மனிதவளத்தைக் காப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. பெருஞ்சேரல் இரும்பொறையின் இத்தகைய மனிதநேய நோக்கை அரிசில்கிழார் புகழ்கிறார்(பதி.79:2,3). அதேபோல, நாட்டில் வாழும் முதியவர்களைப் பேணிக்காத்து, அவர்களுக்குத் தொண்டினைச் செய்விக்கும் மன்னனை,

வணங்கியசாயல் புதல்வரின் முதியர்ப் பேணி (பதி.70:20)

என்பதில் அறியலாம். இதில், நட்பு அமைந்த சான்றோர்க்குப் பணிந்து ஒழுகும் மென்மையையும் பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையுமுடைய, மக்களைக் கொண்டு முதியவரைப் போற்றித் தொன்றுதொட்டு வரும் கடமையைச் செய்த  செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் போற்றுகிறார். அதேபோல,

                             முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்

                              இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்

                              ஏரோக்கு நிழன்ற கோலினை எனவும்

                               தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் (231-234)

என்ற சிறுபாணாற்றுப்படை அடிகளும், முதியோருக்கு எப்போதும் குவித்த கையினையுடைய மன்னனைக் காட்டுகிறது. அனுபவம் பெற்ற முதியவர்கள் இல்லற வாழ்விலிருந்து விடுபெற்று துறவறம் மேற்கொள்ளுதல் தமிழ் பண்பாடு அன்று. இல்லத்திலிருந்து இனியவற்றை தம் சமூகத்திற்குப் பயிற்றுவித்தலே முதுமையின் கடமை என்று தொல்காப்பியமும் முதியவர்களின் சிறப்பினை (தொல்.பொரு.கற்.51) எடுத்துரைக்கிறது.

பெண்களைப் பேணுதல்

நாட்டில் பெண்கள் அச்சமற்று இருப்பதில் காவலும், மன்னனின் ஆட்சிச் சிறப்பும் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.  ஒரு நாட்டில் பெண்கள் சுதந்திரமாக எந்தவித அச்சமும் இன்றி அவர்கள் கடமைகளை ஆற்ற வழிவகை செய்ய வேண்டுவது அரசின் கடமையாகிறது.  நாட்டில் பெண்கள் நிலையினையும், சுதந்திரத் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டே அந்நாட்டின் மதிப்பு பிற நாடுகளில் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் காவேரி ஆற்றினை மாதவி வாழ்த்திப் பாடும் கானல் வரிப் பாடலானது, காவேரியைப் பெண்ணாக உருவகித்து அந்தப் பெண் மகிழ்ந்து துள்ளித்திரிந்து இன்பமுற்றிருக்கக் காரணம் மன்னனின் ஆட்சிச் சிறப்பே என்பதாக அமைகிறது(சிலம்பு.7: 25-29; சிலம்பு.7: 29-32). மேலும், அரிய வலிமையுடைய அரசர் செங்கோல் முறைப்படி ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழ் மகளிர்க்குக் கற்பு நிலை சிறப்புறாது என்பதை,

                              அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது    

                              பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது  (சிலம்பு.28:207-208)

என்ற அடிகளில் வலியுறுத்துகிறார்.

பெண்களின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களின் நலன் பேணி, அவர்களையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச் செய்தல் என்பது, வளரும் நாடுகளின் இன்றியமையாத தேவையாகிறது. மக்கள்வளம் என்பதன் அடிப்படையே பால்-இன-மத-வயது-பொருளாதார வேறுபாடு இன்றி அனைவரையும் சமநிலையில் கருதுதல் என்பதில்தான் உள்ளது. பெண்களைச் சிறப்புச் செய்தல் வேண்டும் என்ற  இளங்கோவின் நோக்கமே சிலப்பதிகாரம் தோன்ற வழிவகுத்தது. பெண்களைப் பேணும் இவ்வகைக் கடமைகளில் பழந்தமிழ் மன்னர் கவனம் செலுத்தியதையும், மேலும், எதிரிநாட்டிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பெண்களாயினும், அவர்களையும் தம்நாட்டு குடிமக்களுக்கு உண்டான அனைத்துவகை உரிமைகளோடு பேணிப் பாதுகாத்ததையும் அகநானூறும் காட்டுகிறது(அகம்.307:6-10).

சமூக நீதி

அரசு முறை செய்க களவில் ஆகுக  (ஐங்குறு.8)

என்கிறாள் ஐங்குறுநூற்றின் தலைவி. அன்புகண் மாறாது அறம் செய்ய வேண்டும். அவ்விதம் முறைசெய்யும் அரசன் தன் அவைக்களத்தை ‘அன்புடை அவைக்களம்’ எனல் காணலாம் (புறம்.71:1-9). உலக உயிர்களை அன்போடு கூடிய அறத்தால் பேணிக்காக்க அறிவுறுத்திய சான்றோர்(புறம்.210:1-4), அவ்வன்பை நீதி வழங்கலில் தவிர்க்கச் சொல்லியும் வலியுறுத்தினர். நீதி வழங்கும் போது சுற்றம் பார்த்தலும், அன்பின் கோடலும் தவிர்த்த பொதுநோக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்புடையார் மாட்டு அன்பு மிகவுடைமையால் அரசுக்கு வருங்கேடும் சான்றோரால் அறிவுறுத்தப்பட்டது (பதி.51:19-24). எனவே, சமூக நலன்நோக்கிய தலைமையின் நற்குணங்களை அறிவுறுத்தும் சான்றோர், தலைமைக்கு ஆகாத குணங்களையும் சுட்டினர். அவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தினர்.

                             சினனே காமம் கழிகண்ணோட்டம்

                             அச்சம் பொய்ச் சொலல் அன்புமிக உடைமை

                             தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து

                             அறந் தெரி திகிரிக்கு வழியடையாகும்  (பதி.22:1-4 )

என்பதில், மிக்கசினமும், மிக்க காமமும், மிக்க கண்ணோட்டமும், பகைவர்க்கு மிக அஞ்சுதலும், வாய்மையுடன் பொருந்தாத பொய் சொல்லுதலும், தொடர்பு கொண்டவரிடம் அளவற்ற அன்புடைமையும், அளவற்ற தண்டத்தைச் செய்தலும் இவை போன்ற பிறவும் இவ்வுலகத்தில் அறம் அறிந்து செய்யும் அரசியல் நடத்துதற்கு இடையீடாகத் தீமை தருவன. எனவே இவற்றைக் களைக என்று பல்யானைச் செல்கெழுகுட்டுவனுக்கான அறிவுறுத்தலாக, பாலைக் கௌதமனார் மொழிகிறார். எனவே,

                             முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்

                             வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி (பெரும்பாண்.443-444)

என, தம்மிடம் முறை இட்டோருக்கும், குறை வேண்டுநர்க்கும் தேவையான பொழுது தேவையானதை அருளி சமூக நீதியைப் பழந்தமிழ் மன்னர்கள் நிலைநாட்டினர். இதில் தனிமனித அடையாளம் தவிர்க்கப்பட்டு சமூக நீதி மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது.

தெரிகோல் ஞமன் போல ஒருதிறம்

                              பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க    (புறம்.6: 9-10)

என்பதில், அரசர்கள் துலாக்கோலில் உள்ள நாபோல ஒரு பக்கத்தில் பொருந்தாது இருக்கவேண்டுமென்றும், நடுநிலையுடன் விளங்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறார் காரி கிழார். இப்பண்பையே,

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி (குறள். 118)

என்று வலியுறுத்துவார்  வள்ளுவரும். மேலும்,

பெரியோரை வியத்தலும் இலமே

             சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம்.192:12,13)

என புறநானூறு அறுதியிட்டுக் கூறுவதும் சமூகநீதி மற்றும் சமநீதியின் வெளிப்பாடே.

ஆளுமைத் திறன்

            ஆளுமைத் திறன் என்பது, நிறுவனத்தை மையமாகக் கொண்டதாக இன்று வழங்கப்பட்டாலும் சமூகக் காரணியாகச் சுட்டப்படும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவையான, பொதுவான ஒன்றாகும். தனிமனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும், அணுகுமுறையிலும் வெளிப்படுத்த, கடைபிடிக்கத் தேவையான பண்பு நெறியே ஆளுமைத் திறன் எனப்படுகிறது. ஆளுமைத் திறன் நம் எண்ணம், பேச்சி, நடத்தை, பழக்கம்,  கட்டுப்பாடு, ஆரோக்கியம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.  இது குடும்பம், உறவுகள், தொழிற்படு இடங்கள், சமூகம் என அனைத்து நிலைகளிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக, நிறுவன அமைப்பில், அதன் நிர்வாகத் தலைமைக்கு இருக்க வேண்டிய முதன்மை குணங்களாக ஆளுமைப் பண்புகள் சுட்டப்படுகின்றன. இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக ஆளுமைப் திறன் அவர்களிடத்து இல்லாதே காரணம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், சங்க இலக்கியங்களில் தனிமனிதர், குடும்பத் தலைமை, சமூகத் தலைமை என அவரவர் தன்மைக்கும் பொறுப்பிற்கும் ஏற்ப ஆளுமைப் புண்புகள் வலியுறுதப்பட்டன.

தனிமனித ஆளுமைத் திறன்                                                               

‘ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது, அந்நாட்டு மக்கள் எவ்விதம் சிந்திக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். சிந்தனைகளே செயல்பாடுகளாக உருமாறுகின்றன’ (இந்தியா 2020, ப.186) என்பார் அ.ப.ஜெ. அப்துல் கலாம். இக்கருத்து, ஒரு குறிப்பிட்ட  சமூகம் அல்லது நாடு என்றில்லாமல், உலகின் எந்தவொரு நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஏற்புடையதாகும். எந்தவொரு சிந்தனையும், திட்டமும் மக்கள் ஒத்துழைப்பின்றி செயலாக்கம் பெறுதல் கடினமாகிறது. மனிதன், ஒரு குடும்பம், குழு, அரசு, போன்றவற்றில் இணைந்தே செயல்படுகின்றான். சமுதாயம் தனிமனிதனைச் சமுதாய உறுப்பினனாக்கப் பெருமளவிற்குத் தொண்டு புரிகின்றது. பொதுவாகச் சமூக இயல்பு தனிமனிதன் இயல்பு ஆகிய இரண்டும் ஒருங்கே வளர்கின்றன (சமூகவியல், ப.64). எனவேதான் சமூக அமைப்பிலிருந்து விலகி நிற்க முயலும் தனிமனிதனையும் சமூகத்தோடு இணைக்கும் கருத்தாக்கங்களும் பழந்தமிழகத்தில் வெளிப்பட்டு நிற்கின்றன. சமூகத்திலிருந்து விலகி நிற்கும் இவ்வகைத் தனி மனிதச் செயல்களை, ‘தானும் உண்ணான் உலகமும் கெடுமே’(புறம்.184:11) என்று கண்டிக்கும் குரலும் ஒலித்தது.

ஒழிக்க வேண்டிய பண்புகள்

இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் இனங்காண வைக்கிறது.  மனங்கள் ஒத்து வாழ்வதற்குத் தேவையான குணங்களைச் சுட்டுவதோடு, வேண்டாத குணங்களாக, ‘நேயமின்மை, இரக்கமின்மை, தன்னை வியத்தல், புறமொழி கூறுதல், வன்சொல், மறவி, சோம்பியிருத்தல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல், பணிவுடமையை மறத்தல், ஒப்பிட்டு நோக்கல்’(தொல்.1220) என்பவற்றையும் தொல்காப்பியர் பட்டியலிடுகிறார். இங்கு, ஆளுமை பண்பை வளர்த்துக்கொள்வதில் தேவையான குணங்களோடு வேண்டாத குணங்களில் ஒழித்தல் என்பது முதலிடம் பெறுகிறது.

ஏற்க வேண்டிய பண்புகள்

ஒரு நாட்டின் நில அமைப்போ, இயற்கையில் அமையப்பெற்ற வளங்களோ அந்நாட்டை நல்லநாடாக முன்னெடுத்துச் செல்வதில்லை.  அந்நாட்டில் வாழும் மனிதச் செயல்களே அச்சமூகத்தை  முன்னேற்றுகின்றன என்பதை,

                             நாடா கொன்றோ காடா கொன்றோ

                             அவலா கொன்றோ மிசையோ கொன்றோ

                             எவ்வழி நல்லவர் ஆடவர்

                             அவ்வழி நல்லை வாழிய நிலனே       (புறம். 187)

என்று வலியுறுத்துவார் ஔவையார். தனிமனிதன் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களுக்குச் சமூகமோ, பிறரோ காரணமன்று; அவன் செயல்களே காரணிகளாகின்றன என்பார் கணியன் பூங்குன்றனாரும்.  இதனை,

                   தீதும் நன்றும் பிறர்தர வாரா

                    நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன (புறம்.192:3,4)  

என்பதில் அறியலாம். எனவே, நீதியும், நட்பும், இழிசெயல் விலக்கலாகிய நாணும், பிறர்க்கும் தமக்கும் பயன்படும் திறமாகிய பயனும், நற்குணங்கள் நிறைந்த பண்பும், பிறர் தன்மை அறிந்து ஒழுகும் பாடும் ஆகிய ஆறு பண்புகளைத் தனிமனித ஒழுக்கங்களாக அற்றைச் சமூகம் அறிவுறுத்தியது. இதனை,

                  நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்

                  பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் (நற்.160:1-2)       

என்கிறது இலக்கியம்.

தனிமனித ஒழுக்கம்

பொன்னாலும், முத்தாலும் மணியாலும் செய்யப்படும் அணிகலன்கள் கெடுமானால் தொழில் வல்லோரால் சீர்படும். சால்பும், இயல்பும், வியப்பும் குன்றினால் மாசற்ற தம் புகழினை நிறுத்தல் முற்றத்துறந்த முனிவர்க்கும் ஆகாமையினைக் கபிலர் வலியுறுத்துவார் (குறிஞ்சி.13-18). மனிதப்பண்புகளை மற்றை எல்லாவற்றிலும் உயர்வாக மதித்த நிலையினைப் பழந்தமிழ்ப் பாடல்கள் காட்டுகின்றன. தனி வாழ்க்கையில் அறக்கோணல் ஏற்படுமாயின், அது சமுதாயத்திற்கு ஊறு பயக்குமென்ற நம்பிக்கை  அக்காலத்திலிருந்தது. தம் பெற்றோர் தன்னை நொதுமலர்க்கு வரைந்தால் அவ்வறமில் செயலால் வள்ளியும் கிழங்கு கீழ்வீழா; மலைமிசைத் தேனுந்தொடா என்று எண்ணுகிறாள் தலைமகள்(கலி.39:11-14). இதனால், தனிமனித வாழ்க்கைக்கும் சமூகத்திற்குமான பிணைப்பு  அறியப்பெறும். தனிமனிதப் பயனோடு, சமூகப் பயனையும் பழந்தமிழ்ச் சமூகம் முன்னிறுத்தியது. எல்லோரையும் ஒன்றுகூட்டி, சமூக முன்னேற்றத்தை அடையத் திட்டமிட்டது. இந்த அறைகூவலே ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ (புறம்.192:1) என்று கணியன் பூங்குன்றனாரின் குரல்வழி வெளிப்பட்டு நின்றது.  

வாழ்க்கையில் பொருள் தேடலும், இன்பம் துய்த்தலும் அறத்தின் வழி செய்யப்பெறல் வேண்டும் என்ற குறிக்கோளை அற்றைச் சமூகம் கொண்டிருந்தது(புறம்.1-2). தமக்கு வரும் பயன்பாடு கருதாது, பிற உயிர்க்கு விளையும் நன்மை கருதுதலே அறத்தின் அடிப்படை. பயன்மரமும் ஊருணியும் மருந்து மரமும் போல் செல்வத்துப் பயனே ஈதலென வாழ்ந்த அறவோரைச் சங்க இலக்கியம் காட்டும். முல்லைக்குத் தேரீந்தவனும், மயிலுக்குப் போர்வையளித்தவனும், தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரனும், அஃறிணைக்கும் அறம் செய்த அறவோர். கொடையறத்திற்கு இரக்கமும், புகழ் வேட்கையுமே அடிப்படையாக இருந்தனவேயன்றி இம்மைச் செய்தன மறுமைக்காகும் என்ற நோக்கு காரணமாகவில்லை. ‘செய்குவம் கொல்லோ நல்வினை’ (புறம்.214), என்று இம்மையில் அறத்தை முன்னிறுத்தியது பழந்தமிழ்ச் சமூகம். புகழுக்குத் தலை நிமிர்தலும், பழிக்குத் தலையிறைஞ்சுதலும் சான்றோர் இயற்கைப் பண்புகள். பழி படர்ந்த நெறியிற் செல்லாமையும், பழியொடு வரும் செல்வம் வெஃகாமையும், செல்நெறி, குறிக்கோள் இரண்டிலும் பண்டைச் சான்றோர் தூய தன்மை உடையவராயிருந்தார். ‘பழியெனில் உலகு உடன் பெறினும் கொள்ளலரா’கவும் (புறம்.182.5), ‘கழியக் காதலர் ஆயினும், சான்றோர்  பழியொடு வரூஉம் இன்பம் வெஃகா’ ராகவும் (புறம். 112:11-12) தம் திறத்தில் உறுதியாயிருந்தனர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலே வீடுபேறு நல்குமெனக்  கருதினர். தத்தம் கடமையைப் புறக்கணியாது செய்வோர்க்குத் தொய்யா நல்லிசைத் துறக்கம் வந்தெய்தும் என்ற கருத்து அக்காலத்துச் சான்றோரால் பரப்பப்பட்டது. பேரெயின் முறுவலார்,  நம்பிநெடுஞ்செழியன் இறந்த போது ‘அவன் செய்ப எல்லாம் செய்தனன், ஆதலின் அவனை வாளான் அடுக அல்லது சுடுக. யாது வேண்டுமானாலும் செய்க’ என்ற பொருள் படப் புகழ்வார்(புறம்.239). மற்றவர்க்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டால் நல்லோர், தாங்கள் பிறரே ஆனாலும் வருந்தி அத்துன்பத்தைப் போக்க முயல்வர். தமக்கு உற்ற துன்பத்தைத் தமக்குப் பெரிதாய்க் கொள்ளாமல் அதனை எளிதாகக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர்(அகம்.382:1-2). சமூக இன்னல் களைய ஏற்றதொரு பண்பாக இது விளங்குகிறது. இல்லோருக்கு இல்லை என்று சொல்லும் வன்நெஞ்சம் படைத்தவரைப் பழந்தமிழ்ச் சமூகம்  பெற்றில(அகம்.53:14,15).

வினையை உயிரெனப் போற்றுதல்

தன் முயற்சியால் உழைத்துப் பொருள் தேடலை வற்புறுத்தும் இடங்கள் இலக்கியத்தில் பல உண்டு(புறம் 160:1-5, அகம் 29, நற் 110:10,11). பெற்றோரின் இல்லத்தையே பிறர் இல் எனப் பழித்து, பொருள் தேட அறிவுறுத்தலையும் காணமுடிகிறது. ‘பிறர் செய்த இல்லிருப்பாய்’ (கலி.111:10) என்று பெற்றோரை நம்பிப் பிழைப்போனைப் பகடி செய்கிறது. கணவன் வறுமையிலிருப்பினும், தன் பெற்றோரின் கொழுஞ் செல்வத்தில் ஒரு சிறு பகுதியும் எதிர் நோக்காத தலைவியின் வழியே, முயன்று வாழ வேண்டுமென்ற அறக்கோட்பாட்டைக் காணலாம் (குறு.295, அகம் 93:1-7). அதேபோல, ‘எலி முயன்றனை யராகி’ வாழும் வாழ்வை வெறுத்தனர் (புறம்.160:3). புலிபோல் தம் முயற்சியால் கிட்டும் செல்வத்தைப் போற்றினர்.  ‘வினையே ஆடவர்க்கு உயிர்’( குறு.135:1) என்றும் வலியுறுத்தினர். சமூகத்தில் அவரவர் கடமையில் பிறழாமல், தத்தம் உழைப்பால் உயர்வு  பெற அறிவுறுத்தப்பட்டனர். ‘தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ’(நற்.130:5) என, தம் தேவையைத் தாமே  உழைத்து நிறைவேற்றிக் கொள்ளும் வினை ஆளுமை போற்றப்பட்டது.

இவ்வினையாற்றல் தற்சார்பு நிலையிலிருந்து சமூகச் சார்பிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பிறர்க்காக மேற்கொள்ளும் வினையே உயர்ந்ததாக மொழியப்பட்டது (நற்.186:8). பிறர்க்காக வினை மேற்செல்லவும், தம்மிடம் இயல்பாக உள்ளதைப் பிறர்க்கு வழங்கவும் தனிமனித இயல்பு உயர்த்தப்பட்டது. தம்மைச் சுற்றி இருப்போரின் துயர் களையப் பயன்படும் செல்வமே உண்மையான செல்வம் எனச் சிறப்பிக்கப்பட்டது(நற்.210:5-9).

வாழ்வின் பயன் சமூக நோக்கே

தனக்கும் தன் மனைவி மக்களுக்கென்றும் வாழ்ந்த தனி வாழ்க்கையிலிருந்து, ஊரும் நாடும் சமூகமும் தன்னால் பயன பெறற்குரிய ஒரு வாழ்வை மேற்கொள்ளும் நிலையைக் கோப்பெருஞ்சோழன்-பொத்தியார் பாடல்கள் காட்டுகின்றன(புறம். 214, 216, 220, 221, 222, 223). தனக்கென முயலாமல்,  பிறர்க்கென முயலும் சான்றோர் சங்கச் சமுதாயத்தில் பலராக அமைந்தனர். ஊரமைதிக்கு அத்தகு ஆன்றவிந்த கொள்கைச் சான்றோர், காரணமென்பார் பிசிராந்தையார்(புறம்.191). ‘நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சின் கடப்பாட்டாளன்’ (குறு.143-45) என்று பொருளைப் பூட்டி வைக்காது பிறர்க்குதவும் தன்மை கூறப்பெறும். இரப்போரின் ஏந்துகை நிறைய மகிழ்ச்சியோடு விரைந்து பொருள்களை அளிப்பதற்காகவே செல்வத்தை ஈட்ட வேண்டும் என்பது சமூகக் கோட்பாடாக மொழியப்பட்டது. எனவேதான், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்கிறார் நக்கீரர்(அகம்.389, புறம்.189).  மேலும், இரப்பவர் கை நிறைய தந்து மகிழவே பொருள்தேடச் செல்வார் ஆடவர் என்றும் குறிப்பார்(அகம்.389). அதேபோல,

பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு

காமர் பொருட்பிணி போகிய  

நாமவெங் காதலர் சென்ற வாறே     (நற்.186:8-11)

என்பதில், பொருளீட்டுவதற்குக் காரணம் பிறர்க்குதவ வேண்டுமென்பதே என்பார் நற்றிணைப் புலவரும். காட்டுவழிச் செல்வாரை அழைத்து ‘யாம் குறமகளிர்; கல்லகத்தது எம் ஊர்; நீவிர் இங்குத் தங்கி நறவுண்டு குரவையாட்டம் கண்டு பின்னர்ச் செல்க’ என விருந்தோம்பும் பண்பு எளிய மக்களிடத்தும் இயல்பாக அமைந்தது காட்டப்பெறும் (நற்.276:5-10). சமூகத்தில் வறுமையைத் துடைத்தற்கு ஒவ்வொருவரின் கொடைப்பண்பும் உதவியாக இருந்தது. பழிக்கு நாணுதல், பொய் கூற உடன்படாமை, அஃறிணை உயிர்களும் கொலைப்படக் கூடாது என்னும் அருளுணர்ச்சி, மரம் பட்டுப்போகுமாறு அதனிடத்துப் பயன்கொள்ள மனிமில்லா இரக்கப் பண்பு, சிறுதவறும் நேராதவாறு நட்பினைப் பாதுகாத்தல், உள்ளம் விழைந்தவழி எல்லாம் ஒழுகாது அதனைக் கட்டியாளும் திறம் ஆகிய பலவாக அமைந்த சான்றாண்மைப் பண்புகள் அவரவர் குடிகாத்தது மட்டுமன்றிச் சமூக ஒருமை சிதையாதவாறும் காத்தன. இப்புண்புகள் ஆளுமைத் தன்மைக்கு அடையாளங்களாயின.

நல்வினையின் விளைவும் தீவினையின் தீதும் 

ஒருவன் நன்மை செய்தால் அவனுக்கு நன்மையும், தீமை செய்தால்  தீமையும் விளையுமெனச் சுட்டிய சான்றோர், அதன்வழிச் சமூகத்தை நெறிப்படுத்த முயன்றனர். இதனால், தனிமனித ஒழுங்கம் தவறுதல் சமூகக் குற்றமாகக் கருதப்பட்டது. இவ்வகை நன்னெறியினின்று விலகுவோரிடமிருந்து சமுதாயம் விலகி நிற்கவும் துணிந்தது. இவ்வகைக் குணத்தாரிடம் சேர்தல் தகாது என்பதை,

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்  (புறம்.29:11-12)

எனச் சுட்டுகிறது இலக்கியம். தீமை புரிந்தால் அவருக்கு மட்டுமல்லாது சமுதாயத்திற்கும் துன்பம் வந்து சூழும் என்பதை,

வள்ளி கீழ் விழா வரைமிசைத்தேன் தொடா

கொல்லை குரல் வாங்கி ஈனா மலைவாழ்நர்

அல்ல புரிந்து ஒழுகலான்          (கலி.39:12-14)

என்ற அடிகளில் அறியலாம். ஒருவன், தன் வாழ்நாளில் அறம், பொருள், இன்பம் தருவதற்கு ஏதுவான செயல்களையே செய்தல் வேண்டும். ஒருவனுக்கு நல்வினைதான், அவன் துன்பத்தில் உழலும் காலத்தில் கை கொடுத்து உதவுவது (புறம்.213:20-24) என வலியுறுத்தப்பட்டது. இம்மைக்கும் மறுமைக்கும் வாழ்வுதரும் நல்வினையை ஒருவரால் செய்ய இயலாது போயினும், தீமை செய்யாது ஒழிதல் பேரறமென்று வலியுறுத்தப்பட்டது. தீங்கின்றி வாழ்ந்தால் உலகத்தோர் மகிழ்வர். நல்ல வழிக்குக் கொண்டு செல்லும் ஒரு தூண்டுதலும் தீவினை செய்யாமையேயாகும். எனவே,

                  நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

                  அல்லது செய்தல் ஓம்புமின்

                ————— ———— —————

              நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே         (புறம்.195:6-9)

என்று அறிவுரை கூறுகிறார் நரிவெரூஉத்தலையார். இவ்வகை அறநெறிக்குட்பட்ட வாழ்க்கை முறையால், ஒழுக்க நெறியால் சமூகத்தை மேம்படுத்தவும், தனிமனித ஒழுக்கத்தைப் பேணவும் சமூகக் கட்டுப்பாடுகளையும், நன்னெறிகளையும் பழந்தமிழ்ச் சான்றோர் வகுத்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். இவ்வகைத் தனி மனித ஒழுங்கிலும், வினைத் தேட்டத்திலும் சமூகம் கட்டமைக்கப்பட்டது.

இதன்வழி, சங்க இலக்கியங்களில் தனிமனித ஆளுமைக்குத் தேவையான பண்புகள், தவிர்க்க வேண்டிய பண்புகள், சமூக நலன் நோக்கிய தனிமனித ஒழுங்கு,  அறநெறிக்குட்பட்ட வாழ்க்கை முறை, தன்முயற்சியால் வாழ்தல், சமூக வறுமை நோக்கிய தனிமனிதப் பொருளாக்கம்,   தீவினைக்கு அஞ்சுதல், உயிரிரக்கம் ஆகியவை சிறப்பிடம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்ட இப்பண்புகளிலும், செயல்பாடுகளிலும் பால் வேறுபாடு சுட்டப்படவில்லை. ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பதிலும், வீட்டையும், ஊரையும், நாட்டையும் பிரிந்து, வெளியில் தங்கி பொருள் தேடும் முயற்சியே ஆடவர்க்கென தனியே சுட்டப்பட்டது தெளிவாகிறது.  ஆனால், பொருள் தேட்டம் என்பதும், குடும்ப, சமூக முன்னேற்றம் என்பதும் இருபாலரும் இணைந்த செயல்பாடுகளாகவே காணப்படுகின்றன. இதில், முல்லை நிலத்து ஆயர் பெண்களும், உப்பு விற்கும் உமணப் பெண்களும், மீன் விற்கும் பரதவப் பெண்களும் முன்னிலை பெறுகின்றனர். அதேபோல, விருந்தோம்பல், கொடை, போன்றவற்றில் மகளிரின் செயற்பாடு போற்றுதற்குரியதாய் அமைகிறது. இவ்வகைச் செயல்பாடுகளின் பெருக்கமே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் முக்கிய அளவுகோலாகிறது என்பது தெளிவு. இவ்வகைத் தனிமனித ஆளுமை பண்புடைய சமூகமே தாமும் முன்னேறி, பிற சமூகத்தையும் முன்னேற்றவும்,  வழிநடத்தவும்  ஆற்றல் பெற்றதாகத் திகழ்கின்றது.

*****

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!