பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர்

பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர்  

முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603 203.

(உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு, கோவை, ஜூன், 23-27, 2010.)

அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவை  எட்டிய ஒரு சமூகம், அவ்வகை நிறைவுகளை ஆதாரமாகக் கொண்டு, சமூக மேம்பாடு,  பொருளாதார முன்னேற்றம் போன்ற பலவழிகளிலும் தம்மை நிலைப்படுத்திக்கொள்ள முனைதல் இயல்பு.  சமூக மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம் என்பவை, தொழில்துறை வளர்ச்சியை மையமாகக் கொண்டவை. மேலும், உள்நாட்டு இயற்கை மூலதனங்கள், பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மூலப்பொருட்கள், தொழில்நுட்ப அறிவு ஆகியவை தொழிற்துறை வளர்ச்சிக்கான காரணிகளாக  அமைகின்றன. எப்படியாயினும், ஒரு சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கும் வல்லமைத் தன்மைக்கும் தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்துதல்  இன்றியமையாததாக இன்றைக்கும் வலியுறுத்தப்படுகிறது.

கிராமப்புற மற்றும் வேளாண்மைத் தொழிலையே பெரும்பாலும் நம்பியுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழ்மையை அகற்றி, மக்கள் அனைவருக்கும் போதுமான முறையில் உணவினைக் கிடைக்கச் செய்து, தேசம் வலுப்பெற, பயிர்த் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு, மீன்வளம், வனம் சார்ந்த வேளாண்மை, வேளாண்மை சார்ந்த வணிகம் ஆகிய துறைகளில் விரைந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்பது இன்றைய சமூகத்  தொலைநோக்காக முன்னிறுத்தப்படுகிறது. அதேவேளையில், இவ்வகைச் செயல்பாடுகளில் பழந்தமிழகம் கருத்தைச் செலுத்தியதையும் வளர்ச்சி பெற்றிருந்ததையும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் உணர்த்துகின்றன. அவ்வகைச் செயல்பாடுகளில் மகளிரின் பங்களிப்பு எவ்வகையில் இருந்தது என்பதை வெளிக்கொணர்தல்  மகளிர் தொழில் முனைவோர் பெருகியுள்ள இன்றையச் சூழலில் தேவையாகிறது. மேலும், பொருளாதார வளர்ச்சியின் தொடக்க உத்வேகம் வேளாண்துறையின் மூலமும், அதன் தொடர்வளர்ச்சி தொழில்துறையைப் பொறுத்தும் அமைவதாகக் கணிக்கப்படுகிறது. ஆகவே, இவ்விரு துறைகளுக்கும் பழந்தமிழகம் கொடுத்த முக்கியத்துவத்தையும் அத்துறைகளில் மகளிர் பங்களிப்புகளையும் நோக்குதல் இன்றியமையாததாகிறது.

வேளாண் உற்பத்தி மற்றும் வேளாண் வணிகத்தில் மகளிர்

          உணவு உற்பத்தி

வேளாண் தொழிலில் முக்கிய உற்பத்திப் பொருள் உணவு. அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதான இவ்வுணவு மேலாண்மையில், உணவுப் பொருட்களின் உற்பத்தி – பாதுகாப்பு –பெருக்கம் – பரவலாக்கம் – உணவு வணிகம் என்ற அனைத்து நிலைகளிலும் பழந்தமிழக மகளிரின் தொழில்முறைச் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கன. உணவு உற்பத்தியில், நாற்றுநடுதல் (பெரும்பாண்.211-12) தொடங்கி, களை எடுத்தல்(பதி.19), பயிரைக் காத்தல் (புறம்.344), அறுவடை செய்தல் (அகம்.116; மதுரைக்.110), தானியங்களைப் பதப்படுத்துதல் (பட்டினப்.22,23) போன்ற முக்கிய தொழில்களில் பெண்கள் ஈடுபட்டனர். இச்செயல்பாடுகள் மூலதனத்தைப் பெருக்கியதோடு பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகை செய்வதாக அமைந்தன.

பயிர்ப்பாதுகாப்பு

            வேளாண்தொழிலில் பயிர்ப்பாதுகாப்பு என்பது முக்கியப் பணியாகும். விளையுளின் முழுப்பயனையும் அடைய பயிர்களை நன்கு பராமரித்தால் மட்டும் போதாது, அறுவடைக்குத் தயாரான பயிர்களை விலங்குகள், பறவைகள் போன்றவற்றிடமிருந்துக் காத்தல் இன்றியமையாதது. இவ்வகையில், பயிர்ப் பாதுகாப்புத் தொழிலைப் பழந்தமிழக மகளிர் மேற்கொண்டனர்.  மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின் முக்கிய விளைபொருள் தினையாகும். தினைக்கதிர்கள் முற்றி அறுவடைக்குரிய பருவத்தில் கதிர்களைப் பறவைகள் உண்ண வரும். அங்ஙனம் பறவைகளால் தீங்கு ஏற்படாதவாறு குறிஞ்சி நிலத்து இளமகளிர் தினைப்புனத்தைக் காவல் காப்பர். இச் செய்தியைக் குறிப்பிடும் பல இடங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. மலையிடத்திலுள்ள சிறிய தினைப்புனத்தை நாடிவரும் சிவந்த வாயையுடைய பசுங்கிளிகளின் கூட்டத்தை ஓட்டும் பொருட்டு, தலைவியைக் கிளிகடி கருவியாகிய தட்டையை எடுத்துக் கொண்டு அத்தினைப் புனத்திற்குச் செல்க என்று தலைவியின் அன்னை அனுப்பி வைக்கிறாள்(நற். 134:3-8;நற்.306:1-3). அதேபோல, பஞ்சுநுனி போன்ற தலையையுடைய, அப்பொழுதீன்ற தினைக்கதிர்களெல்லாம் பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்தன. அவற்றை உண்ணத்தகுமெனக் கருதிய சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் அக்கதிர்களைக் கொய்து கொண்டு போகக் கூட்டங் கூட்டமாக வரத் தொடங்கின. எனவே,  நீ அங்கே சென்று கிளி ஓட்டும் தட்டையைக் கொண்டு ஒலி எழுப்புக என்று மகளிடம் கூறுகிறார் நற்றிணையில் ஒரு தந்தை (நற்.206:1-6).

அவ்வாறு அனுப்பப்பட்ட மகளிர், மலைப் பக்கத்தே கட்டின பரண்மீது ஏறி, தழலும் தட்டையுமாகிய கிளிகளைக் கடியும் கருவிகளைக் கையிலே வாங்கிக் கிளிகளை ஓட்டினர்(குறிஞ்சி.41-44). வேங்கை மாலை சூடி, ஆயத்துடன் அழகுற நடந்து தழலினைச் சுற்றியும் தட்டையினைத் தட்டியும் தினைப்புனம் காத்தனர்(அகம்.188:1-13;.118;242; குறு.217:1-2; நற்.22:1; 57:8-9; 102:8-9; 128:6; ஐங்குறு.281). 

உணவுத் தேட்டம்

வேளாண் தொழிலில் ஈடுபட்டு உணவுத் தேவையை நிறைவுசெய்துகொள்ளும் இயற்கைச்சூழல் இல்லாத திணைப்பகுதி மக்கள், தங்கள் உணவுத் தேவைக்கு வேளாண்மை அல்லாத பிற உணவு மூலதனத்தைத் தேடவேண்டியிருந்தது. அத்தேட்டத்தை, உணவுத்தேவையை நிறைவுசெய்யும் முக்கியத் தொழிலாக நோக்கவேண்டியுள்ளது. காட்டாக, பாலைநிலத்தில் வாழ்ந்தவர் எயிற்றியர். இந்நிலத்துப் பெண்களான எயின மகளிர், உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்பு நிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியைத் தோண்டி நுண்ணிய புல்லரிசிகளைச் சேர்ப்பர். பின் அப்புல்லரிசியை விளா மரங்களின் நிழலையுடைய தம்வீட்டு முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே இட்டு, சிறிய வலிய உலக்கையால் குற்றி எடுப்பர்(பெரும்.88:97). இவ்வாறு, பெண்களின் தேட்டத்தால் கிடைத்த புல்லரிசியும் ஆண்களின் வேட்டையால் கிடைத்த ஊணும் எயினர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ததை அறிய முடிகிறது.

உணவுப் பரவலாக்கம்

நாட்டில் உணவு உற்பத்தி போதுமான அளவில் இருந்தாலும், உணவுப் பொருள் முடக்கம் என்பது நாட்டின் ஒருபகுதி மக்களைப் பசிப்பிணியில் ஆழ்த்திவிடுகிறது. அதனால், உணவுப் பொருள் பரவலாக்கம் ‘அனைவருக்கும் உணவு’ என்ற இலக்கை எட்ட வழிவகுப்பதாக அமைகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும், உணவுப் பொருள் முடக்கம் என்பது வறுமையின் ஒரு முக்கியக் காரணியாகச் சுட்டப்படுகிறது. அதே வேளையில், உணவுப் பொருள் பரவலாக்கத்திற்குச் சில குறிப்பிடத்தகுந்த செயல்பாடுகளைப் பழந்தமிழகம்  கொண்டிருந்ததை அவர்தம் இலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.

பண்டைக் காலத்தில் காசுகள் புழக்கத்தில் இருந்தும், வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. உணவுப்பொருட்களும் இவ்வகை பண்டமாற்று முறையிலேயே பரவலாக்கப்பட்டன. திணைசார் உணவுப்பொருட்கள் பண்டமாற்றில் சிறப்பிடம் பெற்றன. எல்லாவகை நில மக்களும் எல்லாவகை உணவுப்பொருட்களுக்கும் நுகர்வோராய் அமைய இம்முறை ஏதுவாகியது. குறிப்பாக, இவ்வகை உணவுப் பரவலாக்கத்தில் பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பரதவர் மற்றும் ஆயர் குடியில், ஆடவர் உணவுப்பொருட்கள் உற்பத்தியிலும் மகளிர் அதைச் சார்ந்த வாணிகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளமை தெளிவாகிறது. பரதவ இன மகளிர் மீன், உணங்கல் மீன் போன்றவற்றைப் பண்டமாற்றுவதில் முன்னிற்கின்றனர். ஆயர் இன மகளிர் பால்படு பொருட்களின் விற்பனையிலும்  அவற்றைச் சார்ந்த பொருளாதார ஈட்டலிலும் முன்னிலை பெறுகின்றனர். 

            அதேபோல,  பால்,  தயிர்  மற்றும் மோருக்குத்  தானியமும்(குறு.221:3,4; பெரும்பாண்.155-165; புறம்.33:1-8), மீனுக்கும் இறைச்சிக்கும் வெண்நெல்லும்(நற்.239:3; அகம்.60:4; 340:14; ஐங்குறு.48:1-3; புறம்.33:1-8; 343:1,2; ஐங்குறு.47,47,49,),  மான் தசைக்குத் தயிரும்(புறம்.33:1-6), பாலுக்குக் கூழமும் (குறு.221:3-4), நெய்க்கு எருமையோடு கன்றும்(பெரும்பாண்.162-65), தேன் மற்றும் கிழங்கிற்கு மீன்நெய் மற்றும் நறவும்(பொருநர்.214-217), கரும்பு மற்றும் அவலுக்கு மான்தசை மற்றும் கள்ளும்(பொருநர்.214-217), யானை வெண்கோட்டிற்கு உணவும் நறவும்(அகம்.61:9-10), மீன், கருவாடு போன்றவற்றிற்குக் கிழங்குகளும், ஊன் மற்றும் மது வகைகளும் (பொருநர்.215-217), கள்ளிற்கு ஆநிரையும்  விலைகூறப்பெற்றன. மேலும், காட்டில் வாழும் வேட்டுவர் கொண்டுவரும் ஊனும், முல்லை நிலத்துப் பெண்டிர் கொண்டுவரும் தயிரும், மருத நில நெல்லுக்குப் பண்டமாற்றப்பட்டன (புறம்.33:1-6). இவ்வகையில், உணவு வணிகத்தில் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் இல்லத் தேவைகளை நிறைவு செய்துகொண்டதோடு சமூகப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது தெரியவருகிறது.

கடல் சார் தொழில் முனைவோர்

            கடலும் கடல்சார்ந்த நிலப்பகுதியும் நெய்தல் நிலம் எனப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த பரதவ மக்கள் கடலில் கலம் செலுத்தி மீன் பிடித்தலைத் தம் தொழிலாகக் கொண்டவர். கடல்படு பொருட்களுள் மீனும், உப்பும் பரதவ மகளிர் தொழில்முனைவோருக்கு முக்கிய வணிகப் பொருட்களாயின.

          மீன் பிடித்தலும் விற்றலும் 

பரதவர் பிடித்து வரும் மீன்களைப் பரதவகுலப் பெண்டிர் ஊருக்குள் எடுத்துச் சென்று விற்றுவிட்டு அதற்கு ஈடாகத் தமக்குத் தேவையான பிற பொருட்களைப் பெற்று வந்தனர். இதனை,     

            ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ

             ——– ———— ————— ———– ——-

              விழவு அயர் மறுகின் விலையெனப் பருகும் (அகம்.320:1-4)

என்பதில் அறியலாம். பாண்மகள், நள்ளிரவில் சென்று பிடித்துத் தன் தமையன்மார் விடியலில் கொணர்ந்த திரண்ட கோடுகளை உடைய வாளை மீன்களுக்கு ஈடாக, நெடிய கொடிகள் பறக்கும் கள் மிக்க தெருவில் பழைய செந்நெல்லை வாங்க மறுத்துக் கழங்கு போன்ற பெரிய முத்துகளையும் அணிகலன்களையும் பெற்று வந்ததையும்(அகம்.126:7-12), வரால் மீன் கொண்டு வந்த வட்டி நிறைய இல்லக்கிழந்திகளிடம் பழைய நெல்லையும் (ஐங்.48:11-3), அரிகாலில் விதைத்துப் பெறும் பயறினையும் (ஐங்.47:1-3) பெற்று வந்ததையும் அறியமுடிகிறது.

இவற்றோடு, பரத ஆண்கள் பிடித்து வரும் மீன்களை வணிகப்படுத்தியதோடு, பெண்களே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவருகிறது.  கயிற்றையுடைய தூண்டிற்கோலால் மீன்களைப் பிடித்த பாணர் மகளை,

                        நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்

                       தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல் (216:1,2)

என்று காட்டுகிறது அகநானூறு.

            உணங்கல் மீன் உற்பத்தி

            பரதவ ஆண்கள் பிடித்து வந்த மீன்களுள் விற்றது போக எஞ்சியவற்றையும், விற்பனைக்குரிய காலங்கடந்து பிடித்தவற்றையும் பரதவ மகளிர் உப்பிட்டு உலர வைத்து உணங்கல் மீன் தயாரிப்பர். வருவாயைப் பெருக்கிய தொழிலுள் இதுவும் குறிப்பிடத்தக்கது. இத்தொழிலையும், தொழில்நுட்பத்தையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. கடற்கரை மணலில் மீன்கள் உலர்த்தப்பட்டிருந்தன(அகம்.300:1-2). பரதவர் பிடித்து வந்த மீன்களும் இருங்கழியில் முகந்து வந்த இறால்களும் நிலவொளி போலும் எக்கர் மணலில் நன்றாக உலர்ந்து, பாக்கம் எங்கிலும் புலால் நாற்றம் பரவி வீசியது(குறு.320:1-4). பரதவ மகளிர் நிணம் மிகுந்த பெரிய மீன்களைத் துண்டங்களாகத் துணித்து உப்பிட்டு, வெண்மணல் பரப்பில் அவற்றைப் பரப்பி வெயிலில் உலர்த்தி, பறவைகள் அவற்றைக் கவராமல் காவல் காத்தனர். இதனை,

                              உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்

                             மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண் (நற்.63:1-2)

என்பதிலும்,

                             நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி

                             இனப்புள் ஒப்பும்                (நற்.45:6-7)

என்பதிலும் அறியலாம்.

உப்பு வணிகம்

            எந்தத் திணையைச் சார்ந்த மக்களாயினும் அவர்களின் அன்றாடத் தேவைகளுள் முதன்மையானது உப்பு. அதனால், நெய்தல் நில மகளிர் உப்பு வணிகத்தில் சிறப்புடன் ஈடுபட்டனர். உப்பு வணிகர் உமணர் எனப்பட்டனர். உவர் நிலத்தில் விளைவித்த உப்பினை வண்டிகளில் ஏற்றிச் சென்று மற்ற இடங்களில் வாழும் மக்களிடத்தே விற்பர். உமணர்கள் தங்கள் குடும்பத்தோடு கூட்டங்கூட்டமாக உப்பு விற்கச் சென்றனர். உப்பு வண்டிகளை உமணப் பெண்களே ஓட்டிச் சென்றனர். ஊருக்குள் சென்றதும் உப்பு விலை கூறி விற்பர். உப்பிற்கு ஈடாக பிற பொருட்கள் மாறு கொள்ளப்பட்டன (பெரும்பாண்.56-65; நற்.183;  அகம்.60:4; 140:7-8; 390:8-9;  குறு.269:5-6;  பெரும்பாண்.164-165; மலைபடு.413; பட்டினப்.28-30). உப்பிற்கு ஈடாக நெல்லைக் கோரும் உமணப் பெண்களை,

                             உமணர் காதல் மடமகள்

                             —————————————

                             சேரி விலைமாறு கூறலின் (அக.140:5-8)

என்பதிலும்,                                                        

                             நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

                             கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும் (அக.390:8-9)

என்பதிலும் காணலாம்.

உடை உற்பத்தியில் மகளிர்

பழந்தமிழக மகளிர் உடை உற்பத்திக்கானத் தொழில்நுட்பத்தினைக் கற்று அத்தொழிலில் ஈடுபட்டனர். கணவனைப் பிரிந்த பெண்கள், தனியே இருக்கும் பெண்கள் உட்பட இல்லிருப்போர், தங்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை  ஈட்ட, நெசவுத் தொழிலை வீட்டிலிருந்தே மேற்கொண்டனர்.  இத்தொழிலில் ஈடுபட்ட மகளிர் பருத்திப் பெண்டிர் என வழங்கப்படுகின்றனர். இவ்வகைப் பருத்திப் பெண்டிர் செய்த நூலாலான பனுவலை, ‘பருத்திப் பெண்டின் பனுவ லன்ன(புறம்.125: 1) என்று உவமையாக்குவார் புலவர். ஆடை நெய்யப் பயன்படும் பருத்தியை வில்லாலடித்து அதிலுள்ள கொட்டையும், கோதும் நீக்கித் தூய்மை செய்ததை, எஃகுறு பஞ்சிற் றாகி (நற்.247:), வில்லெறி பஞ்சி (நற்.299:7) என்ற குறிப்புகள் காட்டுகின்றன. அதேபோல, பருத்தியை எடுத்துவந்து, அதிலிருக்கும் தூசு, செற்றை ஆகியவற்றை நீக்கும் பணியில் இரவிலும் விளக்கொளி வைத்து ஈடுபட்டிருந்த பருத்திப் பெண்டிரை,

                        சிறையும் செற்றையும் புடையுந ளெழுந்த                                                 பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து (புறம்.326:4-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன.

உடை – பராமரிப்புத் தொழில்

பழந்தமிழர் உடைகளை உற்பத்தி செய்ததோடு, அவ்வுடைகளைப் பராமரிக்கும் நுட்பத்தினையும் பெற்றிருந்தனர். உடைகள் நன்றாக வெளுத்து உடுக்கப்பட்டன. ஆடை வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டோர் ‘காழிகர்’ (அகம்.89:7-9,17) என அழைக்கப்பட்டனர். இவர்கள், உடையை ‘உவர்மண்’ கொண்டு வெளுத்தனர்.  உடைவெளுக்கும் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ‘புலத்தியர்’ எனப்பட்டனர்(புறம்.311). உடை- அடிப்படைத் தேவை என்பதும், உடையில் தூண்மை மிகவும் வலியுறுத்தப்பட்டதும் இத்தொழில் செய்வோரின் தேவையை அதிகப்படுத்தியது.

உடை வெளுத்தலோடு, அவற்றிற்குக் கஞ்சி தோய்த்து மெருகூட்டுதல் பல இடங்களில் சுட்டப்படுகிறது. அன்னச் சேவலின் மயிரைப்போன்ற வெண்ணிறக் கஞ்சியினைப் புலைத்தி பயன்படுத்தினாள்(அகம்.34:11,12). அழகிய உடைகளின் கரைகளிலே பொருந்திய அழுக்குகளை அகற்றுவதற்காக, தனது கூரிய நகமுடைய பசை சேர்ந்த விரலாலே நெருடி உடைகளை நன்னிறம் அடையச் செய்ததையும், கஞ்சியிலே தோய்த்தெடுத்து, முதல் ஒலிப்பினை ஒலித்த பின்னர், குளிர்ந்த குளத்திலே முறுக்கிய பருத்தி உடைகளைப் போட்டு, பகன்றை மலரைப் போன்ற வெண்ணிறமாக்கியதையும் காணமுடிகிறது(அகம்.387:5-7). மேலும், உடைகள் குளத்து நீரிலே கஞ்சியிடப்பட்டு தோய்க்கப்பட்டு அடித்துத்  வெளுக்கப்பட்டன(குறு.330). அதேபோல, கூத்தியர் ஆடுகின்ற விழாவின் ஒலியையுடைய மூதூரிலே, உடைகளை ஒலிப்பவள், இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய உடைகள் காட்டப்படுகின்றன(நற்.90:1-5). புலத்தி துணி வெளுக்கின்ற இடம் ‘துறை’ எனப்பட்டது(கலி72).  உடைகளில் உள்ள அழுக்கினை உவர்நீர் நன்கு நீக்கும் என்பதால், அவ்வகை களர்ப்படு கூவல்களில் புலத்தி நாளும் உடைகளை வெளுத்தாள்(புறம்.311). ஆனால், இவ்வகைத் தொழிலில் பொருளாதார ஈட்டல் என்பது அறியப்படவில்லை.

கால்நடை வளர்ப்பு

வேளாண்மைத் தொழிலின் துணைத்தொழிலாகக் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பண்டைத்தமிழர் கால்நடைகளின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். சமுதாயப் பொருளாதார வலிமையைத் தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாகக் கால்நடைகளின் எண்ணிக்கை அமைந்திருந்தது. (பண்டைத்தமிழில் ‘மாடு’ என்னும் சொல்லே செல்வம் என்பதைக் குறித்திருக்கிறது [Early Indian coins and currency system. P.14, S.K. Mait] ).  நாட்டில் செல்வவளம் பெருக, கால்நடை வளம் பெருகவேண்டும் என்று தலைவி வாழ்த்தியதை, ‘புலரி விடியல் பகடுபல வாழ்த்தி’(புறம். 385:2) என்றும், ‘பால்பல ஊறுக! பகடுபல சிறக்க’ (ஐங்குறு.3:2) என்றும் இலக்கியங்கள் காட்டும்.  கால்நடை வளர்ப்புத் தொழிலில் பால்கறத்தல் முதல், பால்படு பொருட்களை வணிகமாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துதல் வரை அனைத்து நிலைகளிலும் மகளிர் தொழில் முனைவோரே முன்னிலை பெறுகின்றனர்.

             ஆநிரைகளிலிருந்து மாமிசம், பால், தயிர், வெண்ணெய் போன்ற வணிகப் பொருட்கள் பெறப்பட்டன. பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் போன்றவற்றின் விற்பனையில் ஆயர் மகளிர் ஈடுபட்டனர். இவர்கள், இரவில் பாலுக்குச் சிறிய உறையை ஊற்றிவைப்பர் (புறம்.276:4,5);  விடியற்காலையில் தயிரினைக் கடைந்து மோராக்கி விற்கச் செல்வர் (பெரும்பாண்.229; பெரும்பாண்.155:60). ஆய்மகள் மோற்விற்று அதற்கு ஈடாகப் பிறபொருட்களைப் பெற்றுத் தன் சுற்றத்தாரை உண்பித்தாள் (பெரும்பாண்.165:66). அதோடு, அவள் தான் விற்கும் நெய்க்கு ஈடாகப் பொன்னைப் பெறாமல், நன்கு பால் கொடுக்கும் பசுக்களையும், எருமைகளையும் வாங்கித் தனது தொழில் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டாள். இதனை,

                            நெல்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

                             எருமை நல்லான் கருநாகு பெறூஉம் (169:70)

என்கிறது பெரும்பாணாற்றுப்படை.

கள் உற்பத்தி மற்றும் வணிகம்

            கள்ளானது அரித்து எடுக்கப்படுவதால் அரியல் எனப்பட்டது. அதனைக் காய்ச்சி விற்கும் பெண்கள் ‘அரியல் பெண்டிர்’ எனப்பட்டனர் (பண்டைத் தமிழர் தொழில்கள், ப.298). வணிகத்திற்காக கள் காய்ச்சிய பழந்தமிழக மகளிரை, கள்ளடு மகளிர் (339-40) என்கிறது பெரும்பாணாற்றுப்படை. பரதவ மகளிர் மது உற்பத்தியில் ஈடுபட்டதைச் சிறுபாணாற்றுப்படையும் காட்டுகிறது. இதில், கடலில் அடித்து வரப்பட்ட பெரிய அகில் மரத்தினை விறகாக்கி, பெரிய தோள்களையும் வேல் போன்ற கண்களையுமுடைய நுளைமகள் கள் தயாரித்ததாகச் சுட்டப்படுகிறது(சிறுபாண்.154-59). அகநானூற்றுப் பாடலொன்று போர் வீரர்களுக்குக் கள்ளினைக் கொடுக்கும் பெண்ணைக் காட்டுகிறது. இவள் பானையில் கள்ளினைச் சுமந்துச் சென்று வீரர்களுக்கு வழங்குகிறாள்(157;1-4). இதன்வழி பழந்தமிழக மகளிருள் ஒரு பிரிவினர் கள் உற்பத்தியிலும் வணிகத்திலும் ஈடுபட்டு வந்தது தெரியவருகிறது. கள் திணைசார் பொருள்களுக்கு மாறுகொள்ளப்பட்டதைப் பல இடங்களில் காணமுடிகிறது.

பிற சிறுதொழில் முனைவோர்

உணவு உற்பத்தி, வணிகம், கால்நடை வளர்ப்பு போன்ற பெருந்தொழில்களில் ஈடுபட்ட மகளிரோடு, கோழி வளர்ப்பு, பூ விற்றல், பண்ணியம் விற்றல் (பலகாரம்) போன்ற சிறுதொழில் முனையும் மகளிரையும் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. மனைகளில் கோழி முதலிய பறவைகளை வளர்த்த பெண்களை அகநானூறு(227), பெரும்பாணாற்றுப்படை(293) போன்றவற்றில் காணமுடிகிறது.

மருத நிலத்துப் பெண்கள் பூ விற்கும் தொழிலில் ஈடுபட்டனர் (நற். 97:6-9). இவர்கள், அவ்வப் பருவங்களில் மலரும் வண்டுமொய்க்கும் புது மலர்களைத் தெருக்கள் தோறும் திரிந்து விற்றனர்(நற்.97:6-9; 118:8-11). கையில் பாதிரி, பித்திகை, குருக்கத்தி போன்ற மலர்களைத் தாங்கிய அகன்ற வட்டிலை ஏந்தியிருந்தனர்(நற்.97:6-9). மலர்மாலைகளும் பின்னினர்(சிறுபாண்.54; மதுரைக்.511-518). அதேபோல, கார் காலத்தில் மலரும் குருக்கத்தி, சிறுசண்பகம் முதலான மலர்களைக் கடகப் பெட்டியில் வைத்துக் கையிலெடுத்துக் கொண்டு விலைக்குக் கொள்ளீரோ எனக் கூறிச் சென்று வணிகம் செய்தனர்(நற்.97;6-9). தெருக்களில் மட்டுமல்லாது இல்லங்கள் தோறும் சென்றும் பூக்களை விற்றனர் (நற்.293:2-6).

            பழந்தமிழகத்து முது பெண்டீரும் தங்களால் இயன்ற சிறு வணிகத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொண்டதை அறிய முடிகிறது. இவர்கள், மலர் விற்பனை, பண்ணியம் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டனர். இவர்கள், பல்வேறு வகையான செப்புகளில் கண்டோர் விரும்பும் திண்பண்டங்களை மணமிக்க மலர்களோடே ஏந்திச் சென்று இல்லந்தோறும் சிறுவணிகம் செய்தனர் (மதுரைக்.409) என்பதை அறியமுடிகிறது.

சான்றுகளின் முடிவாக

  • மேற்கண்ட பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகளின் வழி, பழந்தமிழக மகளிர் அடிப்படைத் தேவைகளின் நிறைவிற்கும் பொருளாதார மேம்பாடிற்கும் முக்கியப் பங்காற்றினர் என்பது தெளிவாகிறது.
  • இவ்வகைச் செயல்பாடுகளை இல்லத் தலைவனோடு இணைந்தும் தனித்து நின்றும் மேற்கொண்டனர் என்பதும் அறியப்படுகிறது.
  • மகளிர் பெருந்தொழில் முனைவோராக, உணவுத் தேட்டம், உணவு உற்பத்தி, உணவுப் பரவலாக்கம், உடை உற்பத்தி,  மீன் பிடித்தல், மீன் கொள்முதல், உணங்கு மீன் உற்பத்தி, உப்பு உற்பத்தி மற்றும் வணிகம், கள் உற்பத்தி மற்றும் வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டோரை இனங்காண முடிகிறது.
  • சிறுதொழில் முனைவோராக, கோழி வளர்ப்பு, மலர் வணிகம், பண்ணியம் விற்றல், சுண்ணம் தாயாரித்தல் மற்றும் விற்றல் போன்றவற்றில்  ஈடுபட்டோரை பாகுபடுத்த முடிகிறது.  
  • இதன் வழி, பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர் தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவுசெய்து சுற்றத்தைக் காத்ததோடு, சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினர் என்பது தெளிவாகிறது.            

*****

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!