பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை
-ஆ.மணவழகன், காவ்யா பதிப்பகம், சென்னை. 2005.
அணிந்துரை
ஆ.மணவழகன் அவர்களின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ என்ற நுண்ணிதின் ஆராய்ந்து எழுந்துள்ள இவ் ஆய்வு நூல், மிகப் பொருத்தமானவரால் – பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, பயிற்சி வகுப்புகள் நடத்தி, குறுந்தகடுகள் உருவாக்கிப் பல துறைகளில் விற்பன்னராக விளங்கும் பேராசிரியர் ஆ.மணவழகன் அவர்களால் மிகப் பொருத்தமானதொரு காலகட்டத்தில் எழுந்துள்ளது. இந்நூலாசிரியர் தனது முனைவர் பட்ட ஆய்வு, முதுநிலை ஆய்வேடுகள், அண்ணா பல்கலைக்கழகக் கணினி அறிவியல் தொழில்நுட்பத் துறையில் திட்டக் கல்வி இணையராகப் பணியாற்றியமையால் பெற்ற அரிய பட்டறிவின், தொழில்நுட்ப அறிவின் பயனாக இந்நூலை இயற்றியுள்ளமை பாராட்டுக்குரியது.
இவரது இந்நூலுக்கு அடித்தளமாக அமைவது, அவர் பல கருத்தரங்குகளிலும் படைத்தளித்த செவ்விய ஆய்வுக் கட்டுரைகளாகும். இலக்கியங்களில் பயின்றுவரும் பலதுறைத் தொழில்நுட்பங்களையும் – வேளாண், நெசவு, கட்டுமானம், உலோகம், மருத்துவம், எந்திரம், வணிகம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருள் உற்பத்தி போன்ற தொழில்நுட்பங்களையும் – சமூகத் தொலைநோக்குகளையும் – உணவு, உடை, உறையுள் பற்றியும் – மனிதநேயக் கூறுகளையும் ஆய்வுக் கண்கொண்டு அலசிக் கண்டெடுத்த கட்டுரைகளின் முடிவுகளின் பயனாக மலர்ந்துள்ளதே இந்நூலாகும்.
தமிழ் செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டுவனபற்றியும் இயம்புகின்ற முறை இவருக்குச் சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழின் முன்னைத் தொழில்நுட்ப, தொலைநோக்குகளைப் படம்பிடித்துக் காட்டுவதோடு, பழங்கதை பேசுவதோடு நின்றுவிடாது, பின்னைத் தமிழுக்கு ஆற்றவேண்டிய , தமிழால் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் திறம்பட எழுதியுள்ளமை இவர்தம் நுண்மான்நுழைபுலத்தை எடுத்துக்காட்டுகிறது. பத்து இயல்களும் முத்துமுத்தாக அமைந்திருக்கின்றன. கடைசியில் தீர்வாக அவர் வடித்திருக்கும் கவிதை, பல ஆக்கச் செயல்களை அடுக்கடுக்காக கூறுவது, தமிழ்மேல் அவருக்கு இருக்கும் தீராத காதலை எடுத்துக்காட்டுகிறது.
இயற்கை வளங்களைப் பேணுதல், இயற்கை அரண்களைப் பாதுகாத்தல், வேளாண்குடியை உயர்த்துதல், தொழில்நுட்பத்தோடு கூடிய தொழில்துறை வளர்ச்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் வெளிக்காட்டும் இத்தொலைநோக்குச் சிந்தனைகளையும் செயல்திட்டங்களையும் வெளிக்கொணர்வது உலகச் சமுதாயம் முழுமைக்கும் வழிகாட்டுவதாக அமையும் என்பது திண்ணம் என்ற இவரது எண்ணம் தமிழ் மக்கள் மனதில் இருத்திக் கொள்ளப்படவேண்டியதொன்றாகும்.
தமிழ் நாட்டில் தொழில்நுட்பம் அன்றே வளர்ந்த நிலையில் இருந்துள்ளதை எடுத்துக்காட்டித் தலைநிமிரச் செய்து, இன்று நாம் மேலைநாட்டுத் தொழில்நுட்பத்திற்கு அச்சப்படாமல் அதற்குத் தக்கவாறு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளச் செய்யும் இந்நூலாசிரியரின் அணுகுமுறை அனைவரையும் அவருடன் இணங்கவைக்கும். இந்நூல் காலத்தின் தேவை என்பதால், இந்நூலாசிரியர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அனைவரின் பேராதரவும் நிச்சயம் உண்டு என்று கூறி எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர் தான் அடியெடுத்துவைக்கும் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன், தமிழ் மொழித்துறைத் தலைவர் , சென்னைப் பல்கலைக்கழகம். 31.12.05
Add comment