தொலைநோக்கு – ஆய்வு நூல்
முனைவர் ஆ.மணவழகன்
பதிப்புரை
நேற்றைய பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு, இன்றைய தொழில்நுட்ப-மனித வளத்தின் திறத்தால் நாளைய சமூக நலனுக்குத் தேவையானவற்றைச் சிந்தித்தலும், அவற்றை முன்னெடுத்துச் செயலாக்கம் செய்ய முனைதலும் தொலைநோக்காகிறது. இவ்வகைச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொண்ட சமூகமே தன் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதோடு, பிற சமூகத்திற்கும் வழிகாட்டி, தலைமை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது.
2020-இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சமூக ஆர்வலர்களால் இன்று பரவலாக முன்மொழியப்படும் சொல்லே ‘தொலைநோக்கு’ என்பது. இச்சொல்லே இந்நூலிற்கு வேராக அமைந்திருக்கிறது. அவ்வகையில் தொலைநோக்கு என்ற சொல்லிற்கான முழு வரையறையைக் கொடுத்து, இச்சிந்தனையை ஒரு இயக்கமாக மாற்ற முனைந்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன்.
இன்றைய-நாளைய சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்கள் முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குச் சிந்தனைகளிலிருந்து பெற்றவையே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது. ‘தொலைநோக்கு’ என்ற கலைச்சொல் புதியதாக இருக்கலாம், ஆனால், தொலைநோக்குச் சிந்தனை பழந்தமிழரிடத்து மிகுந்திருந்ததென்பதைப் பழந்தமிழ் இலக்கிய-இலக்கணச் சான்றுகளின் வழி நிறுவியிருப்பது சிறப்பு. கருத்துருவாக்கத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இக்கால நடப்பியல் வரையிலாக முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகள் ஆசிரியரின் வாசிப்பனுபவத்திற்கும், தேடலுக்கும் சான்று பகர்கின்றன.
முனைவர் ஆ. மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர். படவிளக்க அகராதி, தமிழ்மொழிக் கையேடு, உயிரோவியம் – சங்க இலக்கியத்தில் தமிழர், தமிழ் மின் அகராதி, தமிழர் பழக்க வழக்கங்களில் அறிவியல் சிந்தனைகள் போன்ற கணினித் தமிழ் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் தமிழ் அறிஞர்’ விருதினைப் பெற்றவர். தற்பொழுது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இரண்டும் இவரின் முந்தைய ஆய்வு நூல்கள். அவ்வகையில், இக்கால சமூகத் தொலைநோக்கின் தேவை, நிறைவு-நிறைவின்மையையும் பழந்தமிழர் சமூகத் தொலைநோக்குச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் ‘தொலைநோக்கு’ என்ற இந்த ஆய்வு நூலை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறோம்.
அய்யனார் பதிப்பகம், சென்னை – 88. tamilmano77@gmail.com
தொலைநோக்கு – ஆய்வு நூல்
நூலறிமுகம்
ஒரு சமூகம் அதற்கேயுரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகக் கூறுகள் போன்றவற்றால் பிற சமூகங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இவ்வகை பிரித்தறியும் நோக்கிற்கு அச்சமூகத்தின் பழம் பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பழம்பெரும் இலக்கியங்கள் அளவுகோல்களாக அமைகின்றன. மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, சமூக வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையோ, அல்லது திடீரென முளைத்தெழுந்தவையோ அல்ல. இவற்றின் பெருக்கத்திற்கான, வளர்ச்சிக்கான கூறுகளை மொழியும், அதைச் சார்ந்த இலக்கியங்களும் தம்முள் கொண்டுள்ளன. அவ்வகையில், பழந்தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் கலைப் பெட்டகங்களாக விளங்குபவை பழந்தமிழ் நூல்களாகும். இவை, பழந்தமிழரின் பல்வகைக் கூறுகளைத் தம்முள் அடைகாப்பது போலவே, அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் தம்முள் கொண்டுள்ளன.
மேலும், வரலாற்று ஆய்விற்கும், சமூக ஆய்விற்குமான தேடலில், இலக்கியப் பதிவுகள் என்பதும் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன. இலக்கியம் காலத்தின் பதிவாகவும் கண்ணாடியாகவும் சுட்டப்படுகின்றது. அவ்வகையில், பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு, அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலைநோக்குச் சிந்தனைகள் வெளிக் கொணரப்படுவதை முதன்மை நோக்காகவும், இன்றைக்கும் நாளைக்குமான தொலைநோக்குத் திட்ட வரையறையை மதிப்பீடு செய்வதை துணைமை நோக்காகவும் கொண்டு ’தொலைநோக்கு’ என்ற இந்நூலுள் அமைகிறது.
இன்றைக்கும் எதிர்காலத்துக்குமான சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்களுக்கான அடிப்படை முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குத் திட்டங்களும், செயல்பாடுகளுமே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் காலத்தின் தேவையாகிறது.
காட்டாற்றுக் கூழாங்கற்கள், கூழாங் கற்களாகவே பிறப்பதில்லை. அவ்வடிவத்தைப் பெற அவை கடந்துவந்த பாதைகளும், காலமும் பலவாகும். கற்களின் சிதைவுகள் காலத்தின் பதிவுகளாகின்றன. சமூகத்தின் இன்றைய ஒழுங்குமுறை கட்டமைப்பும், ஓட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கூழாங்கற்களைப் போன்றதே. எனவே, சமூகத்தைத் தொலைநோக்குத் திட்டம் கொண்டு முன்னெடுத்துச் செல்ல, அது கடந்து வந்த பாதையை, தம் வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்றுக்கொண்ட மாற்றங்களை, மீள் ஆய்விற்கு உட்படுத்தி, ஏற்புடையனவற்றைக் கொள்ளலும், அல்லாதனவற்றைத் தள்ளலும் இன்றியமையாததாகிறது. திட்டச் செயலாக்கத்தில் இடைப்படும் தடைகளை எதிர்கொள்ள, எளிதில் அத் தடைகளிலிருந்து விடுபட, இவ்வணுகுமுறைத் தேவையாகிறது. ஒரே வகையிலான வழக்கில் முன்னைத் தீர்ப்புகளைப் புரட்டிப் பார்த்தலும், ஒரே தன்மையிலான நோய்க்கு முன்பு வழங்கப்பட்ட மருந்து முறைகளை ஆய்வதும் போன்றதாகும் இது.
மேலும், ஒரு சமூகம் தன்னிறைவு பெற்ற, பலம் பொருந்திய சமூகம் என்ற நிலையை அடைவதென்பது அது தனக்கு ஏற்பட்ட இடையூறுகளையும், எதிர்கொண்ட சவால்களையும் அடித்தளமாகக் கொண்டு முன்னேறுவதைப் பொறுத்தே அமைகிறது. அவ்வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தொலைநோக்குத் திட்ட கருத்துருவாக்கம் பரவலாக்கப்பட்டுவரும் இன்றைய சூழல் இப்பார்வையின் தேவையை வலுவாக்குகிறது.
இலக்கண நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும், பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறளும், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையும் இந்த நூலிற்கு ஆய்வுக் களங்களாக அமைகின்றன. ‘பண்டைத்தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ (2005), ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ (2007) என்ற என் முந்தைய நூல்களை வரவேற்று, நிறை-குறைகளைச் சுட்டி என்னை ஆற்றுப்படுத்திய தமிழ்ச்சான்றோர்கள், தமிழன்பர்கள் இந்நூலினையும் ஏற்பார்களென நம்புகிறேன்.
நட்புடன்,
முனைவர் ஆ. மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை.
Dr.A.Manavazhahan, Head of the Department, Tamil, SRM University, Chennai.
Add comment