நூல் : பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும்
ஆசிரியர் : முனைவர் ஆ.மணவழகன்
அய்யனார் பதிப்பகம், சென்னை – 600088
விலை: ரூ.230
நூல்கள் பெற: 9789016815 / 9080986069
நூல் அறிமுகம்
தமிழின வரலாற்றை அறிய இலக்கியப் பதிவுகளே முதன்மைச் சான்றுகள். அதேவேளையில், அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் இலக்கியச் சான்றுகளுக்கு வலுசேர்ப்பதோடு, அவற்றிற்கு நாம் வழங்கியிருக்கிற தொன்மையை மேலும் பின்னோக்கி நகர்த்தி, காலத்தை அதிகப்படுத்துவனாகவும் உள்ளன.
உலகின் மிகத் தொன்மையான மனிதகுல நாகரிகங்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்ட வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் தாயின்பி (யி.கி.ஜிஷீஹ்ஸீதீமீமீ) தனது ஆய்வு முடிவாக, ‘பண்டை உலகப் பழம்பெரும் நாகரிக நாடுகளுள் தமிழகமும் ஒன்று. உலகில், இதுவரை இருபத்து மூன்று நாகரிகங்கள் அரும்பி, மலர்ந்து மணம் பரப்பியுள்ளன. அவற்றுள் இருபத்தொரு நாகரிகங்கள் காலத்தின் கொடுமையால் வாடி, வதங்கி, உலர்ந்து உதிர்ந்துவிட்டன. ஆனால், இரண்டே இரண்டு நாகரிகங்கள் இன்றும் நின்று, நிலவி வருகின்றன. அவை சீன நாகரிகமும், தமிழ் நாகரிகமுமேயாகும்’ என்கிறார். அதேபோல, ‘பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பதினோறு இடங்களில் வேளாண்மை தொடங்கியது. அவற்றுள் தமிழகமும் ஒன்று’ என்கிறது உலக வேளாண்மை வரலாறு.
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம், அத்திரப்பாக்கம் பகுதியில் கிடைத்துள்ள ஆதிகால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் பெருவியப்பை ஏற்படுத்தியுள்ளன. அவை சுமார் 3,85,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது. கற்கருவிகளைப் பயன்படுத்தும் நுட்பம் சுமார் 90,000 ஆண்டுகளிலிருந்து 1,40,000 ஆண்டுகளுக்குள் இருந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அத்திரப்பாக்கத்தில் கிடைத்திருக்கும் கற்கருவிகள் மனிதகுல வரலாற்று ஆய்வுப் போக்கை மாற்றியுள்ளன. இது, மனித இனப் பரவல் குறித்த ஆய்வில் புதிய கோணத்தைக் கொடுத்துள்ளன. மனித இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாக நம்பப்பட்டுவந்த நிலையில், அதற்கு சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கிருந்து இடப்பெயர்வு தொடங்கியிருக்க வாய்ப்புள்ளதை இக்கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது. இவையனைத்தும் தொல்தமிழரின் வாழ்வியல் குறித்த இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்துகின்றன.
எனவே, தமிழின விழுமியங்கள் குறித்த இலக்கியச் சான்றுகளை வெறும் புனைவுகள் என்று புறந்தள்ளிப் போகமுடியாத நிலை இன்று உருவாகியுள்ளது. ஆகவே, இலக்கியச் சான்றுகளின் வழி தமிழினத்தின் தொன்மை, நாகரிகம், பண்பாடு, விழுமியம், மரபு அறிவியல், மேலாண்மை போன்றவற்றை அணுகும் ஆய்வாளர்களுக்குத் தங்கள் ஆய்வுகளை மேலும் ஆழப்படுத்த, விரிவாக்க, கட்புலச் சான்றுகளோடு உறுதிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அந்த அடிப்படையில், ‘பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும்’ எனும் இந்நூல், பழந்தமிழரின் வாழ்வியல் விழுமியங்கள், மரபு அறிவியல், பல்துறை ஆளுமை போன்றவற்றை இலக்கியம், தொல்லியல், மானுடவியல் சான்றுகளோடு முன்வைக்கிறது. நூலாக்கத்திற்கு, செவ்விலக்கியச் சான்றுகளோடு தமிழகத்தின் மலைப் பகுதிகள், கடற் பகுதிகள், நிலப்பகுதிகள் எனப் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுத் தரவுகளும் அடிப்படையாக அமைகின்றன.
பொருளடக்கம்:
- மேலாண்மையியல் – அறிமுகம் – வளர்ச்சி – வரலாறு மேலாண்மை – அறிமுகம்
மேலாண்மை குறித்த பல்வேறு விளக்கங்கள்
மேலாண்மையின் தொன்மை
மேலாண்மை: வளர்ச்சி – வரலாறு
மேலாண்மை யுகங்கள்
மேலாண்மைக் கோட்பாடுகள்
மேலாண்மையின் இன்றியமையாமை
மேலாண்மை: வரையறைகள்
மேலாண்மையின் பண்புகள்
மேலாண்மையியலும் நிருவாகவியலும்
இலக்கியத்தில் மேலாண்மைக்கூறுகளை அணுகும் முறைகள்
- உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழன்
- உலகப் பொதுமை நோக்கில் தமிழர் வகுத்த நிலமும் பொழுதும்
- தமிழர் வேளாண் மேலாண்மையும் வேளாண் தொழில்நுட்பமும்
- பழந்தமிழர் உடை மேலாண்மையும் நெசவுத் தொழில்நுட்பமும்
- பழந்தமிழர் குடியிருப்புகளும் கட்டடக்கலை மேலாண்மையும்
- பழந்தமிழர் மருத்துவ மேலாண்மை
- பழந்தமிழர் நீர் மேலாண்மை
- பழந்தமிழர் ஆட்சித்திறன்
- பழந்தமிழர் போரியல் மேலாண்மை
- தமிழர் மரபுக் கலைகள்
இணைப்பு – கள ஆய்வு நிழற்படங்கள்
நூல் பெற: முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113.
அலைபேசி: 9789016815 / 9080986069