பதினெண் கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும் – முனைவர் ஆ.மணவழகன்

பதினெண்கீழ்க்கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்

(தமிழ்நாடு அரசின் சிறந்த திறனாய்வு நூலுக்கான பரிசு பெற்றது)

ஆசிரியர் : முனைவர் ஆ.மணவழகன்

அய்யனார் பதிப்பகம், சென்னை – 600088.

விலை: ரூ.200

9789016815 / 9080986069

 

பொருளடக்கம்  

  1.           வேளாண் அறிவும் மரபு நுட்பங்களும்
  2.           மருத்துவ நுட்பங்களும் உடல்நல மேலாண்மையும்
  3.           வானியல் அறிவும் நீர் மேலாண்மையும்
  4.           கட்டடக்கலை  நுட்பங்களும் பயன்பாட்டுப் பொருள்களும்
  5.           உயிரியல் அறிவும் சூழலியல் மேலாண்மையும்

                         தாவரவியல்

                         விலங்கியல்

                         பறவையியல்

                         பூச்சியியல்

  1.  உலோகவியல் நுட்பங்களும் கருவிகளும்
  2. அரசியல் மேலாண்மையும் ஆளுமைப் பண்பும்
  3. சட்டவியல் அணுகுமுறைகள்

 

அணிந்துரை

சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு,  வாழ்வியல் போன்றவற்றை உலகிற்கு உணர்த்துகின்றன.   தமிழ்ச் சமூகம்  அறிந்து வைத்திருந்த பல்வேறு அறிவு நுட்பங்களுக்கும் இவ்விலக்கியங்களே முதன்மைச் சான்றுகளாகவும் விளங்குகின்றன.   இவ்வுண்மைகளை, இலக்கியங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அவ்வகையில், சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ள கீழ்க்கணக்கு தொடர்பான ஆய்வு நூலாக ‘பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ என்ற இந்நூல் அமைந்துள்ளது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தவிர்த்து, ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் அறக்கோட்பாட்டு நோக்கிலேயே அணுகப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்நூல், சங்கம் மருவிய கால நூல்களில் காணப்படுகிற பழந்தமிழரின் மரபு அறிவுப் பதிவுகளை  மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

இந்நூலில், வேளாண் அறிவும் மரபு நுட்பங்களும், மருத்துவ நுட்பங்களும் உடல்நல மேலாண்மையும், வானியல் அறிவும் நீர் மேலாண்மையும், கட்டடக்கலை நுட்பங்களும் பயன்பாட்டுப் பொருள்களும், உயிரியல் அறிவும் சூழலியல் மேலாண்மையும்,  உலோகவியல் நுட்பங்களும் கருவிகளும், அரசியல் மேலாண்மையும் ஆளுமைப் பண்பும், சட்டவியல் அணுகுமுறைகள் என்ற பெருந்தலைப்புகளில் தமிழர் அறிந்திருந்த பல்வேறு துறைகளும் மரபு நுட்பங்களும் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன.   இதன்வழி,  சங்கம் மருவிய காலத்தில் பல்வேறு அறிவுத் துறைகள் சிறந்திருந்ததையும், அத்துறைகளில் பல்வேறு நுட்பங்கள் கையாளப்பட்டதையும் நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் வெளிப்படுத்தியுள்ளார்.   தமிழர்களின் மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்ய சிறந்த தரவு நூலாக இது அமைவதோடு, ‘சங்கம் மருவிய காலம் இருண்ட காலம்’ என்ற பொதுவான கூற்றையும் உடைக்கிறது.

முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் அணுகுவதோடு,  அக்காலச் சமூகத்தின் மரபு நுட்பங்களையும் மேலாண்மைச் சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவரும் அரிய முயற்சியில்   தொடர்ந்து  ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வுத் திட்டம் மேற்கொண்டு, அதனை நூலாக வடித்துள்ள  நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு  எனது பாராட்டுகள்.

தமிழ்நாடும் தமிழ் மொழியும் தழைத்திடப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிற  மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் வளர்ச்சிக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு, தம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டிவரும்பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய  மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சியில் எங்களை வழிநடத்திவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர்  மூ. இராசாராம்  இ.ஆ.ப. அவர்களுக்கும் எம் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நூல் வடிவமைப்பு செய்த திருமதி சௌசல்யா அவர்களுக்கும் நூலினை அச்சிட்டுத் தந்த ஏ.கே.எல். அச்சகத்தாருக்கும் எனது பாராட்டுகள்.

முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

 

பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும் – ஆய்வு நூல்

நூலறிமுகம்

பிறப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றாயினும், மரபுச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாதல் இல்லை. மனித இனத்தில் இவ்வகை மரபுச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட இனமாகத் தமிழினம் திகழ்கிறது.  வெற்றுப் பெருமை என்று இதனைப் புறந்தள்ளிவிட இயலாது.  மேலைநாட்டார், ஐம்பது ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடங்களையெல்லாம்  மரபுச் சின்னங்களாகப் போற்றுகிறபோது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழஞ்சிறப்புகளைக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை; போற்றுவதில்லை; பாதுகாப்பதில்லை. பழமையைப் போற்றுபவர்களாக, அவற்றிலிருந்து பாடம் கற்பவர்களாக, மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்து இயற்கையைக் காப்பவர்களாக, இளைய சமூகத்திற்கு அவற்றைக் கற்றுக்கொடுப்பவர்களாக  இருந்திருந்தால் ‘வெற்றுப் பெருமை பேசுபவர்கள்’ என்ற வீண் தூற்றல் நம்மீது விழுந்திருக்காது.

பழந்தமிழர்களின் இயற்கையோடு இயைந்த அறிவியலையும், மரபு நுட்பங்களையும் வெளிக்கொணர்ந்து அடையாளப்படுத்தும்,  மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியின் சிறுகூறே  இந்நூல். பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள வேளாண்மை, வானியல், நீர் மேலாண்மை, தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், மருத்துவம், உடல்நலமேலாண்மை, கட்டடவியல், உலோகவியல், அரசியல், சட்டவியல் எனப் பல அறிவுத் துறைகளையும் அவற்றில் பொதிந்துள்ள பல்வேறு மரபு நுட்பங்களையும் சான்றுகளோடு பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும் என்ற இந்நூல்   விளக்கிச் செல்கிறது.

அறச் செய்திகளே  அதிகம் என்ற பொதுக்கருத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில், சங்க இலக்கியங்களுக்கு இணையாக அறிவுசார் கருத்துகளும் மரபு நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன என்ற கருதுகோளை முன்வைத்து, அதன் மெய்ம்மைத் தன்மையை விளக்கமுறை அணுகுமுறையில் இந்நூல் நிறுவுகிறது.   எளிமையும் தேவையும்  கருதி, பாடலடிகள் சில இடங்களில் பதம் பிரித்தும் சில இடங்களில் பதம் பிரிக்காமலும் கொடுக்கப்பட்டுள்ளன.

‘பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்ற என்னுடைய முந்தைய நூல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுவரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொருண்மைகளுக்கும் காட்சிகளுக்கும் அடிப்படைத் தரவு நூலாக அமைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. அந்நூலுக்குச் சங்க இலக்கியங்களே ஆய்வுக் களமாக  அமைந்த நிலையில், தற்போது வெளிவரும் இந்நூலுக்குப் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் முழுவதும் ஆய்வுக் களமாக  அமைகின்றன. இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் மரபு நுட்பச் செய்திகளை ஒருங்கிணைத்து, முறைப்படுத்தினால் பழந்தமிழரின் அறிவுசார் வாழ்வியல் சிறப்புகளை முழுமையாக அடையாளப்படுத்த  முடியும் என்பது திண்ணம்.

நூல் பெற:

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113.

அலைபேசி: 9789016815 / 9080986069

Dr.A.Manavazhahan, Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai.

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!