காசி ஆனந்தன் கவிதைகளில் மொழி – இனம் – நாடு
முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603 203.
(ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 18-ஆவது கருத்தரங்கு, மே 12,13- 2007)
ஈழம் எண்ணற்ற சிறந்த படைப்பாளர்களை, ஆய்வாளர்களைத் தந்து தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளது. புலம் பெயர்ந்தோர் படைப்புகளில் ஈழ இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகிக்கின்றன. நவீன ஊடகமான இணையத்திலும் தமிழ் அதிக அளவில் உலா வர, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களே காரணம் என்பதும் அறிந்ததே. இவற்றிடையே, தமிழில் பரணி இலக்கியம் போல, ஈழ விடுதலைப் போராட்டத்தில் களவீரராக நின்று கவிதை பாடியவர் கவிஞர் காசி ஆனந்தன். இவரைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, ‘ஈழம் நமக்குத் தந்த இனமான வேழம் கவிஞர் காசி ஆனந்தன்! ‘அவரின் கவிதைகளில் புயலின் வேகத்தை – பூகம்ப குலுக்கலை – எரிமலையின் சீற்றத்தை உணர முடியும்’. வேகப் பாட்டெழுதும் புலவர் மட்டுமட்ட, வெஞ்சிறை வாழ்வுக்கும் வன்கணாளர் கொடுமைக்கும் அஞ்சிடாத நெஞ்சுரம் கொண்டவர்’ என்று புகழ்கிறார் கலைஞர்.
இவர் தமிழ் ஈழத்தில் தேனாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பில் நாவற்குடா என்னும் சிற்றூரில் 4-4-1938இல், காத்தமுத்து – அழகம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஈழ விடுதலைக் களத்தில் போராடியதன் விளைவாக, ஐந்து ஆண்டுகள் சிங்கள ஏகாதிபத்தியத்தின் சிறைச் சாலைகளில் கைதியாகவும் வாழ்ந்தார்.
காசி ஆனந்தன், 1959ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் காஞ்சியிலும், சென்னை பச்சியப்பன் கல்லூரியிலும் தமிழ்ப் பயின்றார். பாவேந்தர் பாரதிதாசனிடம் பழகியும், அவரிடம் அதிகப் பற்றுகொண்டும் வாழ்ந்தவர். ‘நாம் தமிழர் இயக்க’த் தலைவர் தந்தை சி.பா. ஆதித்தனாரால் ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுப் பாராட்டப்பட்டவர். கவிஞர் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தில் அனைவருமே களத்தில் நின்றவர்கள். கவிஞரின் அன்னையார், தமிழீழத்தின் உயர் தேசிய விருதான ‘நாட்டுப்பற்றாளர்’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் சிங்கள அரசால் சிறையிலடைக்கப்பட்டபோது,
பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
பூட்டி வைத்தாலும் – என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் – உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் – ஒரு
செங்களம் ஆடி வரும் புகழோடு
சிரிக்க மறப்பேனா? (ப.33)
என்று முழங்கியவர். மேற்கண்டவற்றிலிருந்து, கவிதை காசி ஆனந்தனுக்கு வார்த்தையல்ல, வாழ்க்கை என்பது புரியும். அவ்வகையில், அவர்தம் ‘காசி ஆனந்தன் கவிதைகள்’ (காசி ஆனந்தன் குடில், சென்னை-5, 2003, பக்.221, விலை 100) என்னும் தொகுப்பின் வழி, மொழி – இனம் – நாடு குறித்த பதிவுகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
மொழி
காசி ஆனந்தன் கவிதைகளில், மொழிகள் குறித்தான பதிவுகள் மிகுதியும் காணப்படுகின்றன. இவ்வகைக் கவிதைகள் இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் தேய்வு, தமிழரிடையே தமிழ்மீது காதலின்மை, மொழியின் பண்டைச் சிறப்பு, தமிழில் பிற மொழிச் சொற்கள் கலப்பு போன்றவற்றைக் கருவாகக் கொண்டுள்ளன.
காசி ஆனந்தன் தமிழைத் தன்னின் அனைத்துமாகப் போற்றுகிறார். தமிழுக்கும் கவிஞருக்குமான உறவைக் குறிப்பிடுமிடத்து,
‘தமிழென் அன்னை! தமிழென் தந்தை/ தமிழென்றன் உடன் பிறப்பு/ தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!/ தமிழென் நட்புடைத் தோழன்!/ தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்!/ தமிழென் மாமணித் தேசம்/ தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்/ தமிழே என்னுயிர் மூலம்’ (ப.79)
என்று அனைத்துமாகி நிற்கிறது கவிதை. மேலும், தமிழ்ப் பகைவர்களைக் கண்டு அஞ்சு ஒடுங்கோம், துயர்மிக வரினும் ஒதுங்கோம், தமிழின் துயர் களையாமல் ஓயோம் என்பதை,
‘பட்டினி கிடந்து பசியால் மெலிந்து / பாழ்பட நேர்ந்தாலும் – என்றன் / கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து / கவலை மிகுந்தாலும் – வாழ்வு / கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து/ கீழ்நிலை யுற்றாலும் – மன்னர்/ தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர் / துடைக்க மறப்பேனா?’ (ப.33)
என்று கவிஞரின் குரலை ஓங்கி ஒலிக்கின்றன. ‘1957ஆம் ஆண்டு இலங்கையின் சிங்கள ஆட்சியாளர் வண்டிகளில் சிங்கள ‘சிறீ’ எழுத்தை இலக்கத் தகடுகளில் பொறித்ததை எதிர்த்து, மட்டக்களப்பு காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்த கவிஞர், அங்கிருந்த பெயர்ப் பலகையில் சிங்கள எழுத்துக்களை மை பூசி அழித்தார். அதனால், காவலரின் கொடுமையான தாக்குதலுக்கு ஆளானார். இரத்தவாந்தி எடுத்த கவிஞர் இதன் விளைவாக காச நோய்க்கும் ஆட்பட்டு ஐந்து ஆண்டுகள் நோயாளியாக மருத்துவமனையில் இருந்தார்’(ப.10) என்பதிலிருந்து, மேற்கண்ட கவிதை, சொற்களின் வெற்றுக் கூட்டமைவு அல்ல, கவிஞரின் உணர்வின், செயலின் ஒருங்கிணைவு என்பது தெளிவு. மேலும், அடக்குமுறைக்கு ஆட்படாமல் தமிழுக்கு உயிரையும் கொடுப்பவர் கவிஞர் என்பதை,
என்னுயிரைத் தூக்கி
எறிந்து தமிழணங்கே
அன்னை நினதுயிராய்
ஆவேன் நான்…(ப.25)
என்ற கவிதை அடிகள் காட்டுகின்றன.
தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்பு நடைபெற்றபோது, அதனை எதிர்த்து காசி ஆனந்தன் கவிதைகள் முழங்குகின்றன. மூத்த மொழியாம் தமிழைக் காத்திட உணர்வாளரை ஒருங்கிணைத்து, களம் புக அழைக்கின்றன.
முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? – இது
நிந்தை உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்! (ப.28)
என்றும்,
வஞ்ச நெஞ்சினள் இந்தி வடவர்
அஞ்சி நடுங்க அணிகள் திரட்டிவா!
நெஞ்சு தூக்கி நில் தமிழா! எழு!
புன்சிரிப்பொடு போர்க்களம் ஆடு போ! (ப.39)
என்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ‘போர்க்களப் பாடலாய்’ ஒலிக்கின்றன. பிறமொழி கட்டாயமாக்கப்படும் வேளையிலும் தமிழ்மொழி உணர்வுப் பெற்று விழித்தெழாதோரை,
தேனைப் பிழிந்தும் கனிகள் சொரிந்தும் / செங்கருப்பைப் பிழிந்தும் /ஆநெய் கருவாஏலம் கலந்தும் / அமுதாய்த் தமிழ்ப் புலவன்/ ஊனை உயிரை உருக்கும் தமிழை/ உன்றனுக்கே தந்தான்/ சோணைப் பயலே! தமிழை இழந்தும்/ தூங்கி நின்றாயோடா? (ப.29)
என்று ஏளனம் செய்கின்றன. தமிழ்வளர்த்த பண்டையோர் பெருமையைச் சுட்டுவதோடு, இன்றையோரின் மொழிப்பற்றின்மையை வன்மையாகச் சாடுகின்றன. மேலும்,
காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! – நிலை
நாட்டு குலப்புகழ் ! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே! (ப.30)
என்று தமிழ்ப் பகை போக்கி, தமிழ்க்கொடி நாட்டவும் மொழிப்பற்றாளரை, உணர்வாளரை அழைக்கின்றன.
இந்தியில் இருந்து தப்பிப்பிழைத்த தமிழ், ஆங்கில மோகத்தில் அகப்பட்டுக்கொண்டது. இன்றைய சூழலில், தமிழன் தமிழனோடு கலந்துரையாட ஆங்கிலமே இடையூடகமாயிற்று; ஆங்கிலம் பேசுவது நாகரிகமாக எண்ணப்படுவது போல, தமிழ் தெரியாது என்பதும் நாகரிகமாயிற்று. ஆங்கில மோகத்தை அந்நியரர் புகுத்தவில்லை; இப்பாதகத்தை அயலார் தமிழுக்குச் செய்யவில்லை; தமிழனே தமிழுக்குச் செய்தான்/செய்கிறான். இன்றைய நிலையில், தமிழ் தமிங்கலமாக மாறிப்போனதை,
பாட்டன் கையிலே
‘வாங்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல
என்ன ‘லிப்ஸ்டிக்கா’?
வீட்டில பெண்ணின்
தலையில் ‘ரிப்பனா’?
வௌ¢ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா நீ பேசுவது தமிழா? (ப.143)
என்று எள்ளலாக, வேதனையை வெளிப்படுத்தி, தமிழ் உணர்வாளரைச் சிந்திக்கச் சொல்கின்றன காசி ஆனந்தன் கவிதைகள்.
இனம்
காசி ஆனந்தன் இக் கவிதைத் தொகுப்பு, தமிழ், தமிழினம், ஈழம் தவிர்த்து வேறெதையும் பேசவில்லை. தமிழினத்தின் பண்டைப் பெருமையை உணர்த்துவதோடு,இன்றைய இழி நிலையைச் சுட்டுவதும், இன மான மீட்புக்கு உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி அழைப்பதும் கவிதையின் நோக்கமாகிறது. மொழி, இன உணர்ச்சியற்றோரை வன்மையாகச் சாடும் கவிதைகள், இத்தன்மையோர் இருப்பதிலும் இறப்பது மேலென்கின்றன. தமிழினம் தழைக்க குரல்கொடுக்கும் இவைகள்,
‘சத்தை இழந்த தமிழ்ச்/ சாதி பிழைக்க நான்/ பத்தாயிரங் கவிதை / படைக்காமல் போவேனோ?’ (ப.25)
என்று கவிஞரின் உணர்வையும் வெளிப்படுத்தவும் தவறவில்லை. தமிழனப் பெருமை ஏட்டில் மட்டும் எஞ்சி நிற்க, நாட்டிலோ அதன் நிலை வேறு என்பதை,
முந்தி முளைத்த கலங்கரை
தமிழ்ப் பரம்பரை – நடுச்
சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?
தாழ்ந்து கிடப்பதேன்?
அள்ளிக் கொடுத்த கை கேட்குதே
ஓடு தூக்குதே – இலை
கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!
உள்ளம் எரியுதே! (ப.31)
என்று, தமிழினத்தின் வாழ்வும் வீழ்வும் குறித்த பொருமலாக வெளிப்படுப்படுகின்றன. இவ் இழிநிலை ஏற்பட இன உணர்வின்மையும், ஒன்றுமையின்மையுமே காரணமாக அமைகிறது. மொழியால், இனத்தால் ஒன்றுபடாமல், சாதியால், அரசியலால் பிளவுபட்டு, பிறருக்கு அடிமைப்பட்டு, தமிழினம் தம் முகத்தையும், முகவரியையும் இழந்து நிற்பதை,
ஊருக்கூர் சண்டை தெருக்கொரு சண்டை/ உருப்படு வோமோடா?/ பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே / பத்துப் பிரிவோடா? (ப.37)
என்றும்,
வலிபடைத்து முறமெடுத்துப்/ புலியடித்த தமிழகம்/ கிலிபிடித்த நிலைபடைத்து/ வெலவெலத்து வாழ்வதோ? (ப.45)
என்றும் சாடுகின்றன. துளித்துளியாய் கரைந்து போன, தம்மைக் கரைத்துக் கொண்ட இனம்; அடிமைத் தளையில், அந்நிய மோகத்தில் தம்மைத் தாமே பூட்டிக்கொண்ட ஒரு பேரினம் தமிழினம். அதனை மீட்டெடுப்பதும், மீட்டுருவாக்கம் செய்வதும் இன உணர்வாளரின், மொழிப்பற்றாளரின், கவியுள்ளம் கொண்டவரின் கடமையாகிறது. அவ்வகையில், இனவிடுதலையின் ஏக்கமே இங்குக் கவிதையாகிறது.
கடமுட என ஒரு கவியிடி
கொடியவர் பொடிபட வெடியாதோ?
திடுதிடு மென ஒரு படையணி
அடிமைகள் படுதுயர் துடையாதோ?
மடமட என ஒரு நொடியினில்
இடுகர விலங்குகள் ஒடியாதோ?
கொடியொடு படையொடு முடியொடு
தமிழின விடுதலை கிடையாதோ? (ப.38)
தமிழினத்தின் விடுதலை என்பது, மெல்ல மெல்ல மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய, நடந்தேறவேண்டிய ஒன்றல்ல. அதற்கான காலமும் இங்கில்லை. அதனால், வீறுகொண்ட செயல்களே இன மானத்தை மீட்டுத்தரும் என்பதை,
பல்லாயிரம் நாட் பயிரை – வீரம்
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை
எல்லாம் நிறைந்த தமிழை – தழலில்
இட்டவன் உடல்மேல் இடடா தழலை (ப.55)
என்ற உணர்ச்சிப் பாக்கள் வெளிப்படுத்துகின்றன. ‘எதிரி வம்பாடி, வாளெடுத்து, தலை கொய்ய வருகையில், நீ மலர் கொடுத்து, கரம் குவித்து, சிரம் தாழ்த்தி நிற்பது கோழைத்தனம்’ என்பதாக இதனைக் கொள்ளலாம்.
நாடு
‘இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியும், நடுக்காலத்தில் பாரதிதாசனும் உருவாக்கிய தமிழர் எழுச்சியின் போர்க்குரலாக இந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ஒலிப்பவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்’ என்றும், தமிழீழப் போர்க்களத்தைப் பாடும் கவிஞனாக மட்டுமல்ல களவீரனாகவும் விளங்குகிறார்’ என்றும் கவிஞரைப் புகழும் பழ. நெடுமாறனின் புகழுரை, கவிஞரையும் அவர்தம் கவிதையையும் நமக்கு இனங்காட்டும்.
ஈழத்தின் விடுதலைக்காக களத்தில் கவிபாடுகிறார் கவிஞர். குருவிக்கும், எலிக்கும், நண்டுக்கும் கூட வாழ இடமுண்டு; ஆனால், ஈழத்தை ஆண்ட தமிழனோ உரிமை மண்ணை இழந்து, மக்களை இழந்து, உறைவிடம் இழந்து, உறவை இழந்து, ஏதிலியாக நிற்கிறான். இத்துயர் போக, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள்வதே தீர்வு என்கிறது கவிதை.
ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?
கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!
குருவிக் கூடு மரத்தி லுண்டு!
காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு
கஞ்சல் எலிக்கோர் குழியுண்டு!
கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர்
குலத்துக் கொரு புகல் இங்கில்லையோ?(ப.27)
இவ்வகை இழிநிலையை எண்ணி ஓலமிட்டுக்கொணிடிருந்தால் போதாது, இழிநிலை துடைக்க எழுந்துவா தமிழினமே என்பதையும் கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறது.
எழுந்திரடா தமிழா
ஏடா… என்னடா உனக்
இன்னும் உறக்கமோடா? (ப.42)
என உணர்வைத் தட்டி எழுப்பி,
ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ?
ஈனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம் எழு தமிழா! (ப.27)
என்று ஆற்றவேன்றிய பணியையும் சுட்டுகிறது. காசி ஆனந்தன், ‘கவிதை விற்று காசு தேடும்’ கவிஞராக அல்லாமல், கவிதையை, மொழி விடுதலைக்கு, இன விடுதலைக்கு, மண் விடுதலைக்குப் படைப்பவராகத் திகழ்கிறார்.
கவிஞர் சிறைப்பட்ட வேளையில், வேற்று சிறையில் அடைபட்ட தம் தம்பியருக்கு,
கொடுஞ்சிங் களத்தின் வெலிக்கடைக் கோட்டம்
குடியிருக்கும் உங்கள் அண்ணன்
இடும்பணி கேளீர்! கண் விழித்திருங்கள்!
இன்னுயிர்தான் விலை எனினும்
கொடுங்களடா என் தம்பிகாள்! கொடுங்கள்!
கூத்தாடுவேன் உடன்பிறப்பே! (ப.118)
என்று கவி பாடுகிறார். பின்னாளில் கவிஞரின் தம்பியருள் ஒருவர், களத்தில் எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் வீரமரணத்தைத் தழுவினார் என்பதும் இங்குக் குறிக்கத்தக்கது.
‘பாரதி, பாரதிதாசன் வழியில் துணிவோடும், போராடும் உணர்ச்சிப் பெருக்கோடும் உள்ளுறை சீற்றத்தோடும் உயிர்ப்புள்ள கவிதைகள் இயற்றியுள்ள கவிஞர் காசி ஆனந்தன் இதர பல கவிஞர்களைப் பார்க்கிலும் தனிச் சிறப்புகள் கொண்டவர்’(ப.9) என்ற வல்லிக்கண்ணனின் பாராட்டுரை இங்குக் குறிப்பிடத்தக்கது. உணர்வைச் செயலில் வெளிப்படுத்தாமல், புலம்பல் கவிதை எழுதும் கவிஞரையும் அவ்வகைக் கவிதையையும் காசி ஆனந்தன் கவிதைகள் குட்டுகின்றன. வெற்றுப் புலம்பல் பாக்களைத் தவிர்த்து,
தவளைக் குரலில் முழங்கினால் இங்குள்ள/ தாழ்வு மறைந்திடுமோ?-நாலு / கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்/ கவலை குறைந்திடுமோ? – வீட்டுச்/ சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச் / சுதந்திரம் வாங்கிடவோ? – தலை/ குவியக் கிடந்த செருக்களம் ஆடிக் / குதிக்கப் புறப்படடா! (ப.48)
என்று, இலக்கு நோக்கிய செயற்பாட்டிற்கு அழைப்பு விடுக்கின்றன.
- இனத்தின் மீதான பற்றும், அதன் இழிநிலை குறித்த குமுறலும் காசி ஆனந்தன் கவிதைகளில் பதிவுகளாகின்றன.
- காசி ஆனந்தன் கவிதைகள், முழுக்க முழுக்க தமிழ்மொழி, தமிழினம், ஈழ விடுதலைக் குறித்த ‘புதிய புறநானூறாக’ ஓங்கி ஒலிக்கின்றன.
- மொழி குறித்த பதிவுகளைக் காணுமிடத்து, இவர்தம் கவிதைகள், மொழியின் பண்டை பெருமை பேசுவதோடு, இன்று அதன் இழிநிலையைச் சுட்டுவனவாகவும், மொழியின் சிறப்பை உணராதோரைப் பழிப்பதோடு, மொழியை இழிசெய்வோரை எச்சரிப்பனவாகவும் அமைகின்றன. மொழி விடுதலையும், இன விடுதலையும், மண்ணின் விடுதலையும் தாள் பணிந்து பெருவதல்ல, வீறுகொண்ட செயலால் பெறுவது. பிச்சை பெறுவதல்ல; உரிமையை எடுத்துக்கொள்வது என்பதை இவர்தம் கவிதைகள் உரைக்கின்றன.…
- வெற்றுக் கூச்சலை, பெட்டை முனகலைத் தவிர்த்து, மொழியைக் காக்க, இனத்தைக் காக்க, மண்ணைக் காக்க களம் புகுதலே இழந்த பெருமையை மீட்டுருவாக்கம் செய்து, தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் என்பதை வலியுறுத்துகின்றன. பரணி பாடல்களைப் போல சந்த ஓசையைப் பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவை போர்க்களப் பாடலாக அமைகின்றன.
- தமிழையும், தமிழினத்தையும், தமிழ் மண்ணையும், ஈழ விடுதலையையும் பாடும் காசி ஆனந்தன் கவிதைகள், ஈழ வரலாற்றில் மட்டுமன்று, தமிழக வரலாற்றிலும் நிறைந்த-நிலைத்த இடத்தைப் பெறுபவை என்பதில் ஐயமில்லை.
நாளை விடிந்தால் வேலை முடிந்தது
நாடு பிறந்தது ! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது !வீசுக வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே! (ப.56)
*****
தமிழியல்.காம்
Dr.A.Manavazhahan
Add comment