Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the photo-gallery domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u749622589/domains/thamizhiyal.com/public_html/wp-includes/functions.php on line 6131
தொல்காப்பியரின் தொலைநோக்குச் சிந்தனைகள் - தமிழியல்

தொல்காப்பியரின் தொலைநோக்குச் சிந்தனைகள்

தொல்காப்பியரின் தொலைநோக்குச் சிந்தனைகள் – பொருளதிகாரத்தை முன்வைத்து

ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.

(ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 15ஆவது மாநாடு, கொடைக்கானல், மே, 27, 28,  29 – 2004)

தொலைநோக்கு

தொலைநோக்குச் சிந்தனை என்பது, ஒரு உயரிய சிந்தனை அல்லது கருத்து. அச்சிந்தனை தோன்றிய சமூகம், நாடு என்பனவற்றிற்கு ஏற்புடையதாக இருத்தலோடு உலகப் பொதுமை நோக்கி எல்லா சமூகங்கள், நாடுகள் என்பவற்றிற்கும் ஏற்புடையதாக இருத்தலாகும். இச்சிந்தனைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபடாது, உலக எல்லையைத் தன் வட்டமாகக் கொண்டவை. எண்ணங்களும் அதன் வழிச் சிந்தனைகளும் சமூகத்திற்குச் சமூகம், இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. என்றாலும்,  இவ்வெல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உகந்ததாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைவனவே ‘தொலைநோக்கு’ என்ற எல்லைக்குள் வருகின்றன.

இவைபோன்ற தொலைநோக்குச் சிந்தனைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் இலக்கியங்களாகவும், இலக்கணங்களாவும், இன்னும் பிற வடிவிலும் வெளிப்பட்டிருக்கின்றன என்றாலும், இலைமறை காயாக இருக்கும் இவ்வகைச் சிந்தனைகளை வெளிக்கொணரும் முறையிலேயே, உலகை எட்டச் செய்யும் முறையிலேயே அச்சிந்தனைகளின் சிறப்பு மட்டுமல்லாது அச்சிந்தனைகள் தோன்றிய சமூகத்தின் சிறப்பும், பழமையும், பெருமையும் போற்றப்படவும், உலகறியவும் ஏதுவாகிறது என்பது தெளிவு.

தொல்காப்பியம்

தமிழில் கிடைத்த இலக்கணங்களில் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் வைத்து எண்ணப்படுவது தொல்காப்பியரின் தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் தமிழின் இலக்கணத்தை இயம்புவதோடு  தமிழரின் வாழ்க்கை முறையினையும் உலகிற்கு உணர்த்துகிறது. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களைக் பெற்று, ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது. இவற்றில் எழுத்து, சொல் இரண்டும் முறையே தமிழ் மொழியின் எழுத்துக்களையும், சொற்களையும் பற்றிப் பேச, பொருளோ தமிழரின் வாழ்க்கையைப் பற்றிப்  பேசுகிறது.  தொல்காப்பியத்தைப் பற்றிக் குறிப்பிடும் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் ‘தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். பழமையைத் தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும். தமிழரின் தொன்மையைப் பழமையைக் காத்து இயம்பும் நூல்’-2 என்று குறிப்பிடுகிறார்.  இதனால் தொல்காப்பியத்தின்  சிறப்பு விளங்கும்.  தொல்காப்பியத் தொலைநோக்கு பற்றிக் காணுமிடத்து, ‘தொல்காப்பியத்தில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் உலகப் பொதுப் பார்வைதான் உள்ளது’-1 என்னும் ச.வே.சுப்பிரமணியன் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது. இவ்வகையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணலாகும் தொலைநோக்குச் சிந்தனைகளை வெளிக்கொணரும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியத் தொலைநோக்கு

திணைப்பாகுபாடு

தொல்காப்பியர் திணைப் பாகுபாட்டைக் குறிக்குமிடத்து  தமிழ் நாட்டிற்கு உரித்தான நிலப்பகுதிகளை மட்டும் கருத்தில் கொள்ளாது, உலக நிலத்தன்மைகள்அனைத்தையும் மனதில் கொண்டு பிரித்துள்ளமை புலனாகிறது. காரணம் பாலைத்திணை என்ற ஒன்று  தமிழ் நாட்டிற்கு உரியதன்று.

மேலும் அவர் ,

            அவற்றுள்

          நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்

          படுதிரை வையம் பாத்திய பண்பே (நூ.948)

என்பதில், தமிழ் மண் என்று குறிப்பிடாமல், வையம் என்று உலகத்தைக் குறிக்கிறார். உலகத்தின் எப்பகுதியில் உள்ள நிலங்களுக்கும் இப்பாகுபாடு பொருந்தும் என்பது தெளிவு.

முதல் பொருள்

இலக்கியத்தில் வழங்கும் பொருள்களை முதல், கரு, உரி எனக் குறிப்பிடுவார். இவற்றில் முதல் பொருள் என்பது, நிலம், பொழுது என்ற இரண்டின் தன்மையே என்று உரைப்பார் தொல்காப்பியர். இதனை,

முதல் எனப்படுவது  நிலம்பொழு திரண்டின்

இயல் பென மொழிப இயல்பு உணர்ந்தோரே-நூ.950

என்கிறார்.  இந்நூற்பா பற்றிக் குறிப்பிடும் இடத்து, ‘ உலகத்தில் முதல்பொருளாக அமைவது நிலமும் பொழுதும் தான். இவை இல்லை எனில் உலகம் இல்லை; செயல்கள் இல்லை; நாம் இன்று வரலாற்று அடிப்படையில் கி.மு., கி.பி. என்று பேசுவதெல்லாம் காலமே. உலக நாடுகள் பற்றிய வரலாற்றெல்லாம் நிலத்தின் அடிப்படையைச் சார்ந்தவையே. உலகமே முப்பொருளில் தான் உள்ளது. ‘time, space and action’ என்று கூறுவர். அம் முப்பொருளும் முதல், கரு, உரிப்பொருள்கள் என்பதில் உட்படும்’-3 என்கிறார் ச.வே.சுப்பிரமணியன்.

இயற்கை வளம் பேணல்

முதற்பொருளைப் பற்றிக் கூறிய தொல்காப்பியர், அடுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள்களைக் குறிப்பிடுகிறார். இக்கருப்பொருள்களில் இயற்கை வளங்களான, விலங்குகள், மரம், செடி, கொடிகள், பறவை, நீர், பூ, என்பனவற்றையும் பிறவற்றையும்  சுட்டுகிறார்.  இவை தொல்காப்பியரின் உயிரியல் அறிவையும், நுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான இயற்கை வளங்களைப் பேணுவதும், வளர்ப்பதும் இன்றைய முதன்மைத் தேவையாக உள்ளதை அறியலாம். இதனைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்தவர் தொல்காப்பியர். இச்சிந்தனை அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும். இக்கருப்பொருள்களைப் பற்றிக் கூறும் ச.வே.சுப்பிரமணியன்  ‘இன்று உலகில் பல விலங்கினங்கள், பறவை இனங்கள் மறைந்து வருகின்றன. அவற்றிற்கு அடிப்படை சுற்றுப்புறச் சூழலே. சுற்றுப்புறச் சூழல் கல்வியைத் தருவதுதான் கருப்பொருள்கள். தெய்வம், உணவு, மரங்கள், விலங்குகள், பறவைகள், இசைக்கருவிகள், நரம்புக் கருவிகள், செய்யும் தொழில்கள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கின்றன. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, பறந்து, பல நாட்டுப் பறவைகள் தமிழக வேடந்தாங்கலுக்கு வருகின்றன. இங்குள்ள சுற்றுப்புறச் சூழல் அவைகளுக்கு ஒத்துள்ளன. இவற்றைச் சூழலியல்(environmental sciences) என்று தற்காலக் கல்வியாளர் கூறுகின்றனர். இதைக் கி.மு.வில் கூறியது தொல்காப்பியம்’-4 என்கிறார்.

பிரிவு

உலக மாந்தர் அனைவருக்கும் பிரிவு என்பது நிகழக்கூடிய ஒன்று.  அவ்வகையான பிரிவுகள் நிலத் தன்மையின் அடிப்படையிலும், மக்கள் வாழ்க்கை முறையின் அடிப்படையிலும் அமைந்தாலும், பெரும்பான்மை சில அடிப்படைத் தேவைகளின் பொருட்டே அமைகின்றன. இத்தகைய தேவைகள் அல்லது கடமைகள் உலகப் பொதுவாக இருப்பதை தொல்காப்பியர் சுட்டுகிறார். இக்காரணங்களை,

           ஓதல், பகையே, தூது இவை பிரிவே (நூ.971)

என்று சுட்டுகிறார்.   இதோடு,

            பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே

          உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான (நூ.979)

என்பதையும் இணைக்கிறார். இங்கு ஓதல், பகை, தூது, பொருள் என்ற நான்கும் பிரிவிற்கு காரணமாக அமைவதைக் காணமுடிகிறது. இன்றைய நிலையிலும் இந்நான்கு கூறுகளுமே உலகின் பெரும்¢பான்மை பிரிவிற்கு மூலமாக அமைவதை உணரலாம்.

மெய்ப்பாடு

மெய்ப்பாடுகள் ஒன்பது என்பர்; அவற்றை ‘ஒன்பான் சுவை’ என்றும் ‘நவரசம்’ என்றும் வழங்குவர். ஆனால் தமிழர்தம் கோட்பாட்டின்படி மெய்ப்பாடுகள் எட்டே என்பது  தொல்காப்பியம். இதனை,

            நகையே அழுகை இளிவரல் மருட்கை

          அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

          அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (நூ.1197)

என்கிறது நூற்பா. சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி, என்ற இந்த எட்டு வகை மெய்ப்பாடுகளும் தமிழருக்கு மட்டும் உரியதன்று. உலக மாந்தர் யாவருக்கும் பொது. முழு மனிதர் யாவரிடத்தும் தோன்றுவது. அத்தோடு இந்த எட்டு வகை மெய்ப்பாடுகள் தோன்றக் காரணமான காரணிகளும் இவ்வண்ணமே அமைகின்றன. இவற்றின் இத்தொலைநோக்குப் பற்றி ச.வே.சுப்பிரமணியன்  ‘உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் பற்றி மெய்ப்பாட்டியல் பேசுகிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டு வகை மெய்ப்பாடுகளும் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்துபவையே. தமிழர்க்கு மட்டும் உரியவல்ல’ என்பதோடு சான்றும் காட்டுகிறார்.

            ‘கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

          சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே’

என்பதில், மனிதகுலத்துக்குப் பெருமிதம் ஏற்படுவதற்கு அடிப்படையானவை கற்ற கல்வி, எதற்கும் அஞ்சாத பண்பாகிய தறுகண், எல்லா நிலைகளாலும் வருகின்ற புகழ், கொடுத்தலாகிய தன்மை. இவை நான்காலும் பெருமிதம் ஏற்படுவது உலக மனிதர்க்குப் பொருந்தும். இது தமிழன் பார்த்த உலகப் பார்வை’-5 என்கிறார்.

பண்புகள்

அறம் பொருள் இன்பங்களில் வழுவாமல் வாழும் உயர் நெறியே இல்லற நெறி. அந்த இல்லற நெறி எல்லோராலும் போற்றப்படும் செம்மை நெறியாக, வழுவில் நெறியாக, வையகத்து வழிகாட்டு நெறியாக அமைய, தலைமக்களிடையே இருக்க வேண்டிய பண்புகள் இவை இவை எனப் பட்டியலிடுகிறார் தொல்காப்பியர்.  இவற்றை,

            பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

          உருவு நிறுத்த காம வாயில்

          நிறையே அருளே உணர்வொடு திருஎன

          முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (நூ.1219)

என்கிறது நூற்பா. தோன்றிய குடி நிலை; குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம்; வினை ஆளும் தன்மை; வயது; வடிவம் நிலைத்த காதல்; மன அடக்கம்; பரிவுணர்வு; அறிவு; செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டு தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமையவேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின வாழ்க்கையையும்,  தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.

இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் இனங்காண வைக்கிறது.  மனங்கள் ஒத்து வாழ்வதற்குத் தேவையான குணங்களோடு, வேண்டாத குணங்களையும் சுட்டுகிறார் தொல்காப்பியர். இவற்றை, ‘பொறாமை, கேடு சூழ நினையும் தீயுள்ளம், தன்னை வியத்தல், புறங்கூறுதல், வருத்தமூட்டும் கடுஞ்சொல், கடைப்பிடி இன்றி நெகிழ்தல்(பொச்சாப்பு), சோம்பல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல்’(நூ.1220) என்று சுட்டுகிறார். மனிதநேயம் போற்றும் எச்சமுதாயத்திற்கும் இத்தன்மை ஏற்புடையதாவது இயற்கை.

உயிர்களின் இன்பம்

உயிர்களின் இன்பம் பற்றிக் கூறுமிடத்து உலகப் பொதுவானதொரு சிந்தனையை முன்வைக்கிறார் தொல்காப்பியர். மனதின் தன்மையைப் பொறுத்தே, இன்பத்தின் தன்மையும் அமையும் என்கிறார். இது மனித உயிர்க்கு மட்டுமல்லாது எல்லா உயிர்க்கும் பொருந்தும் என்பது அவரின் தொலைநோக்கு. இதனை,

            எல்லா வுயிர்க்கும் இன்பம் மென்பது

          தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (நூ.1169)

என்ற நூற்பா உணர்த்துகிறது.

முதுமையில் கடமை

இல்லற வாழ்க்கையில் இன்பத்திற்கும், பொது வாழ்க்கையில் புகழுக்கும், தனிமனித ஒழுக்கத்துக்கும், தலைமைக்குத் தேவையான தன்மைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், அதற்கெல்லாம் மேலே சென்று, இவ்வகையான வாழ்க்கை முறையினை வாழ்ந்து முடித்து, முதுமையினை எய்தியோருக்கும் வாழ்க்கை முறையினை வகுக்கிறார்.

காமம் சான்ற கடைக் கோட் காலை

          ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

          அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்

          சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (நூ.1138)

என்று முதுமையின் பயனைச் சுட்டுகிறார். இல்லற வாழ்வின்  பயனை இது வலியுறுத்துகிறது. இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினைப் புரிகின்ற சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய வாழ்க்கை முறையினை, நன்னெறியினை சமூகத்திற்குப் பயிற்றுவித்தல், அவர்கள் வாழ்ந்ததன் பயனாகும் என்கிறார்.  இதனை உலக சமுதாயம்  ஏற்றுக்கொள்வதில் இடர்  இருக்க இடமுண்டோ?

உயிர்ப்பாகுபாடு

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு உலகினர் வியக்கும் நுட்பம் கொண்டது. உடம்பில் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள்; உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவுயிர்கள்; உடம்பு, நா, மூக்கு, மூன்றாலும் அறிவன மூவறி உயிர்கள்; இவை மூன்றோடு கண்¢ணாலும் அறிவவை நான்கறி உயிர்கள்; இந்நான்கோடு காதோடும் அறிவவை ஐந்தறி உயிர்கள்; இந்த ஐந்து உறுப்புகள் அன்றி புலனாகாத மனத்தைப் பெற்று அவற்றின் வழிப் பகுத்தறியும் ஆற்றல் பெற்றவை ஆறறி உயிர்கள் என்கிறார்(நூ.1526). உலக உயிர்கள் யாவற்றையும் அடக்கும் தொலைநோக்குத் தன்மையை இப்பகுப்பு  கொண்டுள்ளமை தெளிவாகிறது.

முடிவு

மேற்கூறிய கருத்துக்களால், தொல்காப்பியம் தமிழ், தமிழர் என்ற எல்லையைக் கடந்து  உலகப்பொது என்ற தொலைநோக்குச் சிந்தனைகளையும் பெற்றிருப்பது தெளிவாகிறது. ‘தமிழ் என்ற சொல், தமிழ்நாடு, தமிழ் மூவேந்தர் பற்றிய செய்திகள் சிறப்பு நிலையில் இருந்தாலும், பொது நிலையில் மனித இன வளர்ச்சி பற்றியே தொல்காப்பியம் பேசுகிறது’-6 என்ற  ச.வே. சுப்பிரமணியன் கருத்து இங்குச் சிந்திக்கப்படுகிறது.

மொழிக்கு இலக்கணம் வேறு, வாழ்க்கைக்கு இலக்கணம் வேறு, பிறரிடத்து மொழிக்கு மட்டும்  இலக்கணம் காணப்பட, தொல்காப்பியம் மொழி – வாழ்க்கை இரண்டையும் இணைத்துப் பேசுகிறது. அத்தோடு, வாழ்க்கையின் இலக்கணத்தைத் தொலைநோக்கோடும் சிந்தித்திருப்பது பழந்தமிழரின் அறிவு நுட்பத்தையும், பரந்த நோக்கையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.

அடிக்குறிப்பு

1.தொல்காப்பியம் தெளிவுரை. ச.வே.சுப்பிரமணியன்.  மணிவாசகர் பதிப்பகம், சென்னை.    ஐந்தாம் பதிப்பு சனவரி 2003.

  1. மேலது.
  2. மேலது.
  3. மேலது.
  4. மேலது
  5. மேலது.

முதன்மை  நூல்கள்

1.தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, பதிப்பாசிரியர். கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986

2.தொல்காப்பியம் தெளிவுரை, முனைவர் ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, சனவரி 2003

3.தொல்காப்பியம்-பொருளதிகாரம், பாடத்தொகுப்பு, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை,1989.

துணை நூல்கள்

1.தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல்.  முனைவர் ச. சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்   தரமணி,  சென்னை

2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர் கே.கே. பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  சென்னை.2002.

3.தமிழர் நாகரிகமும் பண்பாடும் டாக்டர் அ..தட்சிணாமூர்த்தி, யாழ் வெளியீடு, சென்னை. 1999

4.தொல்காப்பியம் ஒரு கண்ணோட்டம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை. 2000

5.தொல்காப்பியம், புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை.1967.

தமிழியல்.காம்

Dr.A.Manavazhahan

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

Recent posts

error: Content is protected !!