இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் – க.நா.சு.
ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
(இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள், கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மே, 7, 2004.)
நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர், விமர்சகர் என்ற பன்முகத்தோடு அறியப்பட்ட க.நா.சு என்னும் தமிழறிஞரை, ‘கவிஞர்’ என்ற முகத்தோடு காண்பதாக அமைவதே இக்கட்டுரை.
க.நா.சு.
கந்தாடை நாராயணசுவாமி சுப்ரமண்யம் என்னும் க.நா.சு., (க.நா.சுப்பிரமணியம்) நாராயணசாமியின் மகனாக 1912-ஆம் ஆண்டு சனவரி மாதம் 31-ஆம் தேதி பிறந்தார். இவர் சுவாமிமலையில் பிறந்தார் என்றும் வலங்கைமானில் பிறந்தார் என்றும் இரண்டு விதமான கருத்துகள் இருப்பதாக குறிக்கின்றனர்(ப.6). கந்தாடை என்பது இவரின் குடும்பச் சிறப்புப் பெயர். இலக்கிய விமர்சகரான இவர் பலரின் விமர்சனத்திற்கும் ஆளானவர். ‘க.நா.சு. வைப் பற்றி காய்தல், உவத்தல் இன்றி ஒரு கருத்தை யாராலும் சொல்ல இயலாது. காரணம், க.நா.சு புகழ்ந்து கொண்டே இருப்பவரும் அல்ல. இகழ்ந்து கொண்டே இருப்பவரும் அல்ல’,-1 என்கிறார் தஞ்சை பிரகாஷ். அன்றைய நிலையில் க.நா.சு-விற்கு இலக்கிய உலகில் வழங்கப்பட்ட இடம் பற்றி அவரே கீழ்க்கண்டவாறு கவிதை புனைகிறார்.
பிறருக்கு உகக்காததைச்
சொன்னவருக் கென்று
ஒரு தனி நரகம் உண்டானால்
அங்குதான் நான்
போவேன் (ப.71)
இக் கவிதை ஒரு தன்விளக்கமாக அமைவதைக் காணமுடிகிறது.
க.நா.சு-வின் படைப்புகளாக சுமார் இருபது நாவல்களும், நான்கு சிறுகதை தொகுப்புகளும், பதினான்கு மொழிபெயர்ப்பு நாவல்கள், ஐந்து மொழிபெயர்ப்பு சிறுகதைகள், மூன்று விமர்சன நூல்கள், நான்கு நாடகங்கள், ஒரு கவிதை நாடகம் ஆகியவையும், ‘மயன் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பும், ‘க.நா.சு கவிதைகள்’ என்ற தலைப்பில் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவற்றில், க.நா.சு கவிதைகள் என்ற முதல் கவிதைத் தொகுப்பு 1986ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் தேதி ‘சிட்டாடல்’ வெளியீடாக வெளிவந்துள்ளது. இது பதினான்கு கவிதைகள் அடங்கிய சிறு தொகுப்பு. சந்தியா பதிப்பகத்தாரால் 2002-இல் வெளியிடப்பட்ட ‘க.நா.சு கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு இக்கட்டுரைக்குக் களமாக அமைகிறது. இத்தொகுப்பில் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட, பல்வேறு இதழ்களில் வெளியான சுமார் 93 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
முதல் கவிதையும் இடைவெளியும்
க.நா.சு-வின் முதல் கவிதை ‘மணப்பெண்’ என்பது. இக்கவிதை 14.05.1939-ஆம் ஆண்டு ‘சூறாவளி’ இதழில் வெளியாயிற்று. இக்கவிதை மணவறைக்குப் போகும் தம்பதியரை வாழ்த்துவதாக அமைந்தது. மணப்பெண் கவிதை வெளியாகி சுமார் இருபது ஆண்டுகள் க.நா.சு-வின் கவிதை எதுவும் வெளிவரவில்லை. இதற்கு காரணம், புதுக்கவிதைக்கும் மரபுக்கவிதைக்குமான வேறுபாட்டை அவரால் வரையறுத்துக்கொள்ள முடியாமையே என்பதை அறிய முடிகிறது. மேலும், புதுக்கவிதையில் இலக்கணக்கூறுகளை ஏற்பதா விலக்குவதா என்பதில் அவருக்கிருந்த குழப்பமும் இந்த நீண்ட இடைவெளிக்குக் காரணமாக அமைந்தது எனலாம். இந்தக் குழப்பத்திற்கு விடைகாண பாலபாரதி ச.து.சு.சுப்ரமணிய யோகியாரைச் சந்தித்து விவாதிக்கிறார். ‘எப்படி என்ன எழுதினாலும் அதை யாப்பிலக்கணப்படி தரம் சொல்லிப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும், கவிதைக்கு மொழி என்பது ஒரு வாகனந்தான் என்றும், யாப்பைக் கண்டு கவிதை பயந்த காலம் போய்விட்டது. இனி, யாப்புதான் பயப்பட்டாக வேண்டும்’(ப.30) என்றும் ச.து.சு.யோகியார் விளக்கமளிக்கிறார். அன்றிலிருந்து க.நா.சு. புதுப்புது கவிதை புனையலானார். ஆனால், நாவல் எழுதுவதிலும், மொழிபெயர்ப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதே கவிதையில் நீண்ட இடைவெளிக்கான காரணம் என்கிறார் க.நா.சு.
ஆரம்ப காலத்தில் புதுக்கவிதையை ஏற்பார் எவருமில்லை. இலக்கணமில்லாதவை எவையும் கவிதையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காலப்போக்கில் இத்தன்மை சிறிது சிறிதாக மாறியது. பின்னர் புற்றீசல் போல புதுக்கவிஞர்கள் தோன்றலாயினர். அதற்கு ஆரம்ப கால புதுக் கவிஞர்களின் விடாமுயற்சியே காரணம் எனலாம். 1980ஆம் ஆண்டுகளில் புதுக்கவிதையின் தன்மை குறித்து க.நா.சு. குறிப்பிடுகையில், ‘1985இல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான். கவிதை பத்திரிகைத் துணுக்குகளாகவும், அரசியல் கமெண்ட்களாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும் உருப்பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒருவிதத்தில் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.’(ப.21) என்ற ஆதங்கத்தினை வெளிப்படுத்துகிறார்.
‘1958இல் சரஸ்வதியில் ‘மின்னல் கீற்று’ என்ற கவிதை அவர் எழுதியிருக்கிறார். இதைத் தொடர்ந்து 1959இல் எழுத்து-விலும், 1972இல் கசடதபற-விலும் எழுதினார். இடையில் அவர் நடத்தி வந்த இலக்கிய வட்டத்தில் சில கவிதைகளை வெளியிட்டார். 1974-இல் நாற்றங்கால் என்ற தொகுப்புக்கு இரண்டு கவிதைகள் தந்தார். இதற்குப் பிறகு அவரது கவிதைகளைக் கால அடிப்படையில் வரிசைப்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது’ (ப.9) என்கிறார் ஞானக்கூத்தன். இவ்வாறு இதழ்களில் வெளிவந்த, வெளிவராத கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது ‘க.நா.சு கவிதைகள்’ என்ற இந்நூல்
கவிதையில் தனித்தன்மை
மேலைநாட்டுக் கவிதைகளையும் கவிஞர்களையும் க.நா.சு தனக்கு நன்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தார் என்றாலும் அவர்களை மேற்கோள் காட்டவோ, பாரதியைப் போல மேலைநாட்டுக் கவிஞர்களின் தாசனாக (ஷெல்லி தாசன்) தன்னை அடையாளம் காட்டவோ முனையவில்லை. இது பற்றி க.நா.சு குறிப்பிடுகையில், ‘ஆங்கிலத்தில் free verse என்று சொல்லப்பட்டதற்குச் சரியான பதம் வசன கவிதை என்றுதான் நாங்கள் எல்லோரும் எண்ணியிருந்த ஒரு காரியம். பிச்சமூர்த்தி, கு.ப.ரா., புதுமைப்பித்தன் எல்லோருமே வசனகவிதை என்றுதான் அப்போது அதைக் குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஓரளவுக்கு முன்மாதிரியாகத் தமிழில் பாரதியாரின் சாட்சிகளும் ஆங்கிலத்தில் வால்ட் விட்மன் கவிதைகளும் பயன்பட்டன. நான் மேலே குறிப்பிட்ட நால்வருக்குமே டி.எஸ்.எலியட் படிப்பு உணர்ந்தேன். டி.எஸ்.எலியட் பற்றிய விமரிசனப் போக்கிலும் ஈடுபாடு உண்டுதான். ஆனால் டி.எஸ்.எலியட் செய்து கொண்டிருந்த முயற்சிகளை ஒட்டித் தமிழில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டதில்லை. இதற்குக் காரணம் பல சொல்லலாம்.- இந்த நால்வரும் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) தனித்வம் உடையவர்கள்’(ப.30). என்று குறிப்பிடுகிறார். அவரின் இந்த தன்விளக்கத்தை மெய்ப்பிக்கும் வகையில் கவிதையில் புதுப்புது உத்திமுறைகளைத் தானே சோதனைமுயற்சி செய்துபார்த்துள்ளதை அவர் கவிதைகள் உணர்த்துகின்றன.
தெருவிலே
மு
ப்
ப
து
வ
ரி
சை
க்யூவும்
கூடி
விட்டது
காண்!(ப.76)
என்று, ஒரே வார்த்தையில் உள்ள தனித்தனி எழுத்துக்களை வரிசைப்படுத்தி கவிதையின் அமைப்பில் காட்சியைப் புகுத்தி, புது உத்தியைக் கையாளுகிறார். மேலும், பிரச்னோத்ரம் என்ற கவிதையை,
கே. எங்கே போனாய்?
என்ன கண்டாய்?
ப. சென்றவிடமெல்லாம்
சொல்லி மாளுமோ!
கண்டதை எல்லாம்
விண்டு சொல்லவோ!-ப.96
என்று, கேள்வி பதில் வடிவில் அமைத்து புதுவகையான கவிதை முயற்சியை வெளிப்படுத்துகிறார். இவ்வகையான முயற்சிகள் ஆரம்ப காலத்தில் பல்வகையான விமர்சனத்துக்கு ஆளானதை அறியமுடிகிறது. விமர்சனங்கள் பல வந்தாலும், அவற்றைப் புறந்தள்ளி நவீன இலக்கியக் கொள்கையில் சிறிதும் மாறாமல் இவர் படைப்புகளை வெளியிட்டு வந்துள்ளார். பல இதழ்கள் இவரின் படைப்புகளை வெளியிட தயக்கம் காட்டியும், சரஸ்வதி, காலச்சுவடு, கசடதபற, அஃ, நாற்றங்கால், எழுத்து, சூறாவளி, இலக்கிய வட்டம் போன்ற இதழ்கள் அவ்வப்போது இவர் படைப்புகளுக்கு இடமளித்தும் ஊக்கப்படுத்தியும் வந்துள்ளன.
புதுக்கவிதை – பெயர்த்தோற்றம்
தமிழ் இலக்கிய உலகுக்கு, ‘புதுக்கவிதை’ என்ற பதத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் க.நா.சு.. வசனகவிதை என்று வழங்கி வந்ததை மாற்றி புதுக்கவிதை என்று அறிமுகப்படுத்தி அவ்வண்ணமே எழுதியும் வந்தார். இப்பெயர்த் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகையில், ‘நான் நினைத்துப் பார்ப்பதில் புதுக்கவிதை என்கிற வார்த்தைச் சேர்க்கைக்கு ஏதோ மேதை, மேதாவித்தனம், அல்லது ஸ்பெசல் மரியாதை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வசனகவிதை என்கிற வார்த்தை போதுமானதாக இல்லை என்பதனால் ‘புதுக்கவிதை’ என்று 1930க்களில் கம்யூனிஸ்டுகளிடையே வழக்கிலிருந்த நி வெர்ஸ் என்கிற பதத்தை மொழிபெயர்த்துச் சொன்னேன் அவ்வளவுதான். பெயரில் ஒன்றும் பிரமாதமான பாதிப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’(ப.32) என்கிறார் க.நா.சு. மிக அடக்கமாக இதனை அவர் குறிப்பிட்டாலும், மற்ற பெயர்களெல்லாம் மறைந்து புதுக்கவிதை என்ற பெயர் மட்டும் இன்று பெருவழக்காக இருப்பது க.நா.சு-வின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறலாம்.
கவிதைத் தன்மை
‘திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒருதரம் படிப்பவருக்கும் ஒரு வேகம், ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் இந்தப் புதுக்கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன்’.(ப.27) என்பது க.நா.சு- அவரின் கவிதைக்கென்று வகுத்துக்கொண்ட விதியாக அமைகிறது. மேலும், கவிதை என்ற பெயரில் வருவதெல்லாம் கவிதையாகிவிடுமா? வரிகளை மடக்கிப்போட்டு, வார்த்தைகளை அடுக்கிவைத்தால் அதுதான் கவிதையா? ஒரு நல்ல கவிதை எப்போது வெளிவரும்? என்பதற்குத் தன் கவிதையில் விளக்கமளிக்கிறார் க.நா.சு.
கவிதை வேண்டுமானால்
சொற்களைக் கூறாக்கு
இசையை ஒதுக்கிவிடு
உருவங்களை உயிராக்கு
சிந்தனைகளை நேராக்கு-ப.128
என்பது அவரின் கவிதை குறித்த கவிதையாக அமைகிறது.
சிறுகதை, நாவல் முதலிய இலக்கிய வடிவங்களில் உலகம் எப்படி வெளிப்படுகிறதோ அப்படி கவிதையிலும் வெளிப்பட வேண்டும் என்பது க.நா.சு-வின் கருத்தாக இருப்பதை அறிய முடிகிறது. தனது கவிதைகளில் இத்தன்மையைப் புகுத்திக்காட்ட முயன்றிருக்கிறார். பாண்டு வாத்தியம், சினிமா வண்டி, இட்லி, பால்பற்றிய குறிப்புகள், டேப்ரிகார்டர், ஏரோப்ளேன், எக்ஸ்பிரஸ் ரெயில், ஜட்கா வண்டி, கம்யூட்டர் என்று காட்சிப் பொருள்களைக் கவிதையில் வார்த்தைகளாக்கி, சமகாலச் சூழலை வெளிப்படுத்துகிறார்.
‘எனக்கு நான் புதுக்கவிதை என்று எண்ணுவதில் அபார நம்பிக்கை. அது நிஜமாகவே கவிதையாக இருப்பதுடன் வசனத்தின் பல அம்சங்களையும் கொண்டதாக, அடைமொழிகளையும் படிமங்களையும் தேடி ஓடாததாக இருக்க வேண்டும். உணர்ச்சி என்கிற தூக்கக் கலப்பில்லாத ஒரு தாக்கத்துடன் அறிவுத் தாக்கமும் பெற்றிருந்தால்தான் கவிதை புதுக்கவிதையாகிறது என்று எண்ணுபவன் நான் என்கிறார் க.நா.சு.( ப.21) இதில் புதுக்கவிதை குறித்த அவரின் வரையறையைத் தெளிவுபடுத்துகிறார். இத்தெளிவிற்கு அவர் ஏறக்குறைய இருபதாண்டு காலம் எடுத்துக்கொண்டார் என்பது இங்கு நோக்கத்தக்கது.
தாம் வாழும் சூழலைக் காட்சியாக்குவதும் அதன்வழி நிகழ்காலச் சமூகத்தைப் படம் பிடிப்பதும், அதற்கென பயன்பாட்டுச் சொற்களை இட்டு நிரப்புவதும் இவர்தம் கவிதைகளில் காணமுடிகிறது.
பக்கத்து வீட்டில் ஏதோ
அல்ப சந்தோஷம்
பேரக் குழந்தை பிறந்ததோ
லாட்டரியில் பரிசு விழுந்ததோ
மூத்தமகனுக்கு வேலைதான் கிடைத்ததோ
எனக்கு எதுவும் நிச்சயமாகத் தெரியாது
ஆனால் அந்த ஆனந்தம்
என் கண்களைக் குளமாக
நிரப்புவதும் அதிசயம்தான் (ப.137)
என்பதில், இவரின் சூழல் நோக்கும் , பிறரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் நேயமும் அவற்றை எதார்த்த வரிகளில்¢ வெளிப்படுத்தும் பாங்கும் காணமுடிகிறது.
மிகவும் புழுக்கமான ஒரு நடுப்பகலில்
சட்டச்சட சட்டச்சட வென்று
நாலு தூற்றல் வீ¤ழ்ந்தவுடன் ஆஹா
ஆனந்தம், புழுக்கம் தீர்ந்தது என்று
சொல்லிக் கொண்டிருக்கும் போதே
தூற்றல் நிற்க புழுக்கம் அதிகரிக்க
ஏமாற்றமடைந்த மனசு உலகில் உள்ள
ஏமாளிகளைக் கணக்கெடுக்கிறது (ப.54)
என்பதில் சூழலைக் காட்சியாக்கும் பாங்கும், சொற்களில் காட்சிகளைப் புகுத்தும் தன்மையும் புலப்படுகிறது. சூழலை விளக்கியவர் இறுதி வரியைக் கவிதைத் தன்மையோடு முடிக்கிறார். இத்தன்மை இன்றைய புதுக்கவிதைகளுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது. ‘இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால், பேச்சு வழக்கு வார்த்தைகளால் பேசும் சத்தத்தில் இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன்’.(ப.27) என்ற க.நா.சு-வின் கருத்தை மெய்ப்பிப்பதாக மேற்கூறிய கவிதை அமைவதைக் காணமுடிகிறது.
வனத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து-மத்து ஆடுகிறது
என் நிழல்
வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என் பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்
——- ———- —- —-
என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும்
முடியுமா
என் நிழலைமட்டும்
அப்புறப் படுத்திவிட? (ப.100)
என்பதில் தன்னை அறிந்து கொண்ட தன்மையையும், தன் சூழலைப் புரிந்துகொண்ட பாங்கையும், விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிவையும் காட்டுகிறார். இக்கவிதையில் வரும், பிம்பம் என்ற குறியீடு அவரைப் பற்றிய விமர்சனமோ என்றெண்ண ஏதுவாகிறது.
கவிதையில் க.நா.சு
நாவலோ, சிறுகதையோ, கவிதையோ அதை எழுதும் ஆசிரியரின் ‘தான்’ ஏதாவதொரு இடத்தில் தலைகாட்டுவது இயற்கை. அது பாத்திரத்தின் வழியாகட்டும், ஆசிரியர் வாய்மொழியாகட்டும் ஏதோ ஒன்றின் வழி இத்தன்மை வெளிப்பட்டு நிற்கிறது. க.நா.சு-வின் கவிதையைப் பொருத்தமட்டில் சில கவிதைகள் அவரின் நிலையை நேர்முகமாக வெளிக்காட்டி நிற்கின்றன. ‘நான்’ என்ற கவிதையில் தன்¢ துன்பத்திற்கான காரணமாக,
காற்று வீசி வீசி கஷ்டப்படுகிறது
கடல் நீர் நிறைந்து அவதியுறுகிறது
நெருப்போ எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது
நான் கஷ்டப்படுவதோ – எனக்கு ஒரு தனிப்பெயர் ஏற்பட்டு
விட்டதனாலே தான் (ப.124)
என்பதைக் குறிப்பிடுகிறார். மேலும், நீதிக்கிளி, கூஃபி, உயில், நினைவுச் சுவடு, பரம்பரை, ஒருதலைப்பட்சம் போன்ற கவிதைகளில் கவிஞரின் தன்முனைப்பு வெளிப்பட்டு நிற்கிறது.
பல்வேறு தன்மைகள்
க.நா.சு-வின் பல கவிதைகள் நகைச்சுவை உணர்வோடும், அதே வேளையில் சமூகச் சூழலை, சிக்கலைச் சுட்டுவதாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும், சித்தர் பாடல்களைப் போன்று தத்துவார்த்தம் நிறைந்ததாகவும் , மூடநம்பிக்கைகளைச் சுட்டுவதாகவும், இயற்கை அழகிற்கு இடமளிப்பதாவும் அமைகின்றன.
ஓ!ஓ!ஓ!ஓ!
இவனுக்குத் தேச பக்தி
நிறைய உண்டு. தேசத்தை
விற்கும்போது
நல்ல விலை போகும்படிப்
பார்த்துக்கொள்வான்
இவனுக்கு தேசபக்தி
நி-றை-ய வுண்டு
ஓ!ஓ!ஓ!ஓ! (ப.41)
என்ற கவிதையில் நகைச்சுவை உணர்வு இழையோடுவதையும், சமூகச் சீர்கேடு சுட்டப்படுவதையும் அறியலாம்.
அரசமரம் சுற்றி வந்து
அடிவயிற்றைத் தொட்டும் பார்க்கும்
பாவனையாய் (ப.131)
என்பதில் மூடநம்பிக்கையை நகைச்சுவையோடு சுட்டுகிறார்.
மரங்கள் துளிர்க்கும் ஓசை, பூக்கள்
பூக்கும் ஓசை, புழுக்கள் காலை உணவு
அருந்தும் ஓசை-இப்பேரிரைச்சலில்
என் சிந்தனைத் தேர் ஓட மறுத்துக்
கிறீச்சிட்டு அசைந்தாடி நின்று அதிர்
வேட்டும் உலுக்குமரமும் கேட்கிறது. (ப.60)
என்பதில், இயற்கையை எதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு கற்பனை செய்துபார்க்கும் கவித்துவத்தைக் காணமுடிகிறது.
பக்திப்
பொய்யை
மெய்
என்று
நம்பி-
எத்தித்
திரிந்து
எடுத்
தோதி
ஓதியவர்
பெரியவர்
காண். (ப.79)
என வரும் ‘ ‘ஆ’ என்று முடியும் கவிதை, கருத்தில் சித்தர்பாடல்களைப் போன்றுள்ளது. இதில், காயகல்பம், அருவம், உருவம், மோனம், அலை, ஜலம், பாம்பு, பழுது என்று பல வகைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கவிதையும் க.நா.சு-வும்
இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் கவிதைக்கு நிகழ்ந்து கொண்டிருந்த சிக்கல்களை அறிந்தவர்களில் பாரதி, பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு இவர்கள்தான் முக்கியமானவர்கள். அடுத்த நூற்றாண்டின் இரட்டைக் கதவு மூடிக்கிடந்ததை அறிந்தவர் பாரதி. அதைத் திறக்க முயன்றதில் அது சற்றுத் திறந்துகொண்டு இடைவெளிகாட்டியது. பிச்சமூர்த்தி முயன்றதில் அது திறந்துகொண்டது. ஆனால் முழுமையாகத் திறந்துகொண்டு விடவில்லை. அவரே கூட அது முன்போல மூட வருகிறதா என்று பார்த்தார். ஆனால் க.நா.சு வோ கதவை நன்றாகத் திறந்ததோடல்லாமல் கதவின் இரண்டு பக்கங்களையும் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டார்.( ப.11) என்ற ஞானக்கூத்தனின் கருத்தை க.நா.சு-வின் கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. புதுக்கவிதை என்ற ஒரு பதத்தினை தானே உருவாக்கியதோடு, அதனை நிலைபெறச்செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகளின் தடங்களாக அவரின் கவிதைகள் அமைந்துள்ளன.
கவிதையின் வடிவிலும், கையாளும் கருவிலும், பயன்படுத்தும் சொற்களிலும் புதுமையைப் புகுத்த பல வழிகளிலும் முயன்றுள்ளார் என்பதை, அவரின் மரம், பிரச்னோத்ரம், பட்டிமன்றம், ‘ஆ’ என்று முடியும் கவிதை, இரைச்சல், ஏமாளி, போன்ற கவிதைகளில் உணரமுடிகிறது.
க.நா.சு-வின் ஆரம்ப கால கவிதைக்கும் பிற்கால கவிதைக்குமான வேறுபாட்டினைக் கவிதைகள் நன்கு வெளிக்காட்டுகின்றன. ஆரம்ப கால கவிதைகள் வசனமாக அமைத்திருப்பதையும், பிற்கால கவிதைகளில் புதுப்புது உத்தி முறைகளைப் புகுத்தியிருப்பதையும்¢ உணரமுடிகிறது. அதே வேளையில் ‘வைகுண்டம்’ ‘பட்டிமன்றம்’ போன்ற கவிதைகளில் ஒரே சொல்லைப் பிரித்து , எழுத்துக்களை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தன்மை புதுவகை முயற்சி என்றாலும், கவிதையைப் படிப்பதில், புரிந்துகொள்வதில் சிக்கலைக் கொடுப்பதை மறுப்பதற்கில்லை.
வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்கவேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்கவேண்டும். அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக்கூடாது.(ப.27) என்ற க.நா.சு-வின் கருத்து மேற்கூறிய புதுவகை முயற்சியின் விளைவே எனலாம். மேலும், நவீன இலக்கியவாதி என்ற பெயரை தக்கவைத்துக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சியாகவும் இதை எண்ணத் தோன்றுகிறது.
க.நா.சு-வின் கவிதைகளில் , தான், வீடு, சுற்றுச்சூழல், சமுதாயம், உலகம் என்ற எல்லா வகையான நோக்கையும் காணமுடிகிறது. இத்தன்மை அவரின் அனுபவத்தின் வெளிப்பாடாக அமைகிறது. ‘தமிழில் எழுதுவது மற்ற மொழிகளில் எழுதுவதைவிட அதிக ஆனந்தம் கிடைப்பதாகத் தோன்றுகிறது.(ப.34) என்ற க.நா.சு-வின் சொல்லை, தில்லியில் வாழ்ந்தகாலத்தும் தமிழ்க் கவிதைகளும், நூல்களும், மொழிபெயர்ப்புகளும் எழுதிய/ வெளியிட்ட அவரின் செயல் மெய்ப்பிக்கிறது.
பரம்பரை பரம்பரையாக வந்த தொழிலில்
தலைமுறை தலைமுறையாக வளர்த்தகலை
அற்புதமான நெசவு என்று
பட்டாடைகளைச் சுமந்து
இங்கு வந்தாயே முட்டாள்!
இங்கு ஒருவரும்
கோவணம் கூடக் கட்டுவதில்லை
என்று தெரியவில்லையா
உனக்கு?( ப.151)
என்ற க.நா.சு.வின் கவிதை பட்டாடையைப் பற்றியது என்றாலும், அவர் காலத்தில் அவரின் இலக்கியத்திற்குக் கொடுக்கப்பட்ட மதிப்பையே உணர்த்தி நிற்பதாகத் தோன்றுகிறது. விமர்சனங்களுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில், க.நா.சு-வின் கவிதைகள் இன்றைய புதுக்கவிஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டலாகவும், புதுக்கவிதைக்கான பாதையை வகுத்துக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
அடிக்குறிப்பு
- க.நா.சுப்ரமண்யம், ப. 36
மூலநூல்
க.நா.சு கவிதைகள், சந்தியா பதிப்பகம், சென்னை.2002
துணைநால்கள்
க.நா.சுப்ரமண்யம், தஞ்சை பிரகாஷ், சாகித்திய அக்காதெமி, புது தில்லி, 2001
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், வல்லிக்கண்ணன், அகரம், கும்பகோணம், நா.ப., 1999
தமிழியல்.காம்
Dr.A.Manavazhahan
Add comment