தமிழியல் ஆய்வுகள்
முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், சென்னை. 603203. சனவரி, 2011.
மனிதன் தன் தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ள முனையும் முதல் கணத்திலேயே அவனுடைய ஆராய்ச்சி அறிவும் செயல்படத் தொடங்கிவிடுகிறது. உலகின் மிகத் தொன்மையான இனத்துள் ஒன்றாகச் சுட்டப்படும் தமிழினத்திற்கும் இது பொருந்தும். அவ்வகையில், தமிழர் மொழியும், உலகின் மிகப் பழமையான மொழிகளுள் இடையறுதலின்றி வாழும் ஒரே மொழியுமான தமிழ் மொழியில் காணக்கிடைக்கும் பண்டை நூல்களுள் ஆராய்ச்சிகளும் அவற்றிற்கான கூறுகளும் நிறைந்துள்ளன. அவற்றை இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
12ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடை இலக்கியங்களில் பழந்தமிழரின் பல்வேறு அறிவுநுட்பங்கள் உரையாசிரியர்களால் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. ஓலைச் சுவடிகளாகக் கிடைத்த பழந்தமிழ் நூல்கள் பதிப்புகளாக பெருமளவு அச்சேறிய 19, 20ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அவை தொடர்பான ஆய்வுகளும், கருத்தரங்குகளும், சொற்பொழிவுகளும் பல்வேறு தரப்பினரால் முனைப்புடன் நிகழ்த்தப்பட்டு. நூல்களாக வெளியிடப்பட்டன. மேலும், தமிழில் ஆராய்ச்சி என்பது காலந்தோறும் பல்வேறு கோணங்களிலும் வளர்ச்சிபெற்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது. அவ்வகையில், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைத் தமிழாய்வுகளுக்கான ‘மறுமலர்ச்சி காலம்’ எனலாம். இக்காலகட்டத்தில் தமிழில் புதிய புதிய துறைகளும், அத்துறைகள் தொடர்பான ஆய்வுகளும் பெருமளவு தோன்றி பல்வேறு பரிமாணங்களோடு வளர்ந்து வருகின்றன. தமிழில் இன்றளவும் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் மொழிக்கும், அறிவுக்கும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.
தமிழ் ஆய்வுக் களங்கள்
இலக்கியம், இலக்கணம் என்ற தொடக்க நிலை ஆய்வுகளிலிருந்து, 20-21ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் ‘ஆய்வுக்களம்’ பல நிலைகளிலும் மாறுபட்ட, புதிய போக்குகளைக் கொண்டு விளங்குகிறது.
மொழி, பண்பாடு, மொழியியல், ஒப்பிலக்கியம், திறனாய்வு, மரபுவழி கலைகள், தமிழிசை, தொல்லியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானுடவியல், படைப்பிலக்கியம், நாணயவியல், அரசியல், சமூக வரலாறு, சமயத் தமிழ், எழுத்து முறைகள், அகராதியியல், மெய்யியல், கல்வெட்டியல், சுவடியியல், சோதிடவியல், நாடகவியல், ஊடகவியல், மொழிபெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், எதிர்காலவியல், வானியல், புவியமைப்பியல், உடலியல், உயிரியல், நீரியல், மரபுசார் வேளாண் அறிவியல், மண்ணறிவியல், கட்டுமானக் கலை, தமிழ் மருத்துவம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், விளிம்புநிலை மக்கள் இலக்கியம், மண்சார்ந்த இலக்கியம், மொழிக்கல்வி, மரபுவழி அறிவியல், மொழிசார் இயக்கங்கள், சூழலியல், நுண்கலைகள், ஆவணத் தமிழ், அறிவியல் தமிழ், மேலாண்மை, தொலைநோக்கு, கணினித் தமிழ் போன்ற பல தளங்களில் தமிழ் ஆராய்ச்சி தன் போக்கைப் பலகிளைகளாக விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இவற்றுள் பல களங்களில் தமிழ் படித்த ஆய்வாளர்கள் மட்டுமன்றி, தமிழறிந்த பிறதுறை வல்லுநர்களும் தங்கள் பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வளர்ச்சியுற்றுவரும் இப்போக்கு, தமிழ்மொழியில் பிறதுறை ஆக்கங்களும், ஆய்வுகளும் மிகுதியாக வெளிவரவும் வளரவும் வழிவகை செய்துள்ளது. இவற்றுள்ளும், ‘அறிவியல் தமிழ்’ புதிய ஆய்வாளர்களுக்கும், பிறதுறை வல்லுநர்களுக்கும் பெரிதும் இடமளிக்கும் ‘தமிழ் ஆய்வுக்’ களமாக முகிழ்ந்துள்ளது. ‘அறிவியல் தமிழ்’ பல துறைகளோடு தொடர்புடையதாலும், தமிழின் எதிர்கால நலனில் பெரும்பங்காற்றவல்லதாலும் அதன் தன்மையும் தேவையும் குறித்து இங்குத் தனியே நோக்கப்படுகிறது.
அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் என்பது, அறிவியல் துறை சார்ந்த கருத்துகளை அறிவியல் மொழியில் விளக்கும் இயற்றமிழ் வகை என்பர் (வளரும் தமிழ், ப.162). மேலும் இதனை, பல துறைகளில் அறிவைப் பெற விழையும் தமிழரின் அறிவுப் பசியைத் தணிக்க எழுந்த பலதுறை நூல்களுள் அமைகின்ற ஒரு வழக்கை அறிவியல் தமிழ் எனலாம் (வளரும் தமிழ், ப.163) என்றும் விளக்குவர். தமிழில் உள்ள அறிவியல் கருத்துகளை வெளிக்கொணர்தல் அறிவியல் தமிழில் ஒருவகை செயலாக்கம் என்றாலும், அறிவியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் படைத்தளித்தலே ‘அறிவியல் தமிழாக’ சுட்டப்படுகிறது. இங்கு, மொழிக்கு இரண்டாம் இடமும், அறிவியலுக்கு முதன்மை இடமும் வழங்கப்படுகிறது.
தாய்மொழியும் அறிவியல் மொழியும்
அறிவியலின் வளர்ச்சி என்பதும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதும் தோன்றும் இடங்களால் வேறுபடலாம். ஆனால், அவற்றின் பயன் உலக பொதுநோக்கை முன்னிறுத்துவது. அறிவியலை ஆணிவேராகக் கொண்டு இயங்கும் இன்றைய உலகச் சூழலில், அறிவியலின் பயனையும், தொழில்நுட்பத்தின் திறனையும் ஒருவர் எளிதில் பெற, அவரின் தாய் மொழியில் அவை வழங்கப்படுதல் வேண்டும்.
உலகமயமாக்கலின் இன்றைய சூழலில், மக்கள்வளமும், நுகர்வோரும் நிறைந்த இந்தியா போன்ற நாடுகள் வெற்றுச் சந்தைகளாக மாறிவரும் இன்றைய நிலையில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை அவரவர் தாய்மொழியில் கைக்கொள்ளுதல் அறிவியல் யுகத்தில் நம்மையும் இணைத்துக்கொள்ள ஏதுவாகிறது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய மாயையை உடைப்பதாகவும், சராசரி மனிதனுக்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதாகவும் இது அமைகிறது. இக்கருத்தை, ‘உலகின் பல்வேறு பாகங்களிலும் அந்தந்த நாட்டுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. இந்தப் புதுமைகளை, மக்கள் அறிந்து, புரிந்து தன் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் உண்மையான பயன் ஆகும்’ (இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.233) என்ற அறிஞர் கூற்று உறுதிப்படுத்துகிறது.
மேலும், ‘புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான செயல்விளக்கமும், பயன்பாடும் மக்களைச் சென்றடைய மொழி ஓர் ஊடகமாகப் பயன்படுகிறது. இவ்வூடகம் ஒருவரின் தாய்மொழியாக இருக்கும் நிலையில் கருத்துப் பரிமாற்றம் மேலும் சிறப்பானதாகவும், தெளிவானதாவும், எளிமையானதாகவும் அமையும் என்பது திண்ணம்’ (வளரும் தமிழ், பதிப்புரை) என்றும் சுட்டப்படுகிறது. இக்கருத்து, தாய்மொழி வழி அறிவியல் வளர்ச்சியின் தேவையை வலியுறுத்துகிறது. அதேவேளை, அறிவியல் என்பது தமிழுக்குப் புதிய துறை அன்று. நம் முன்னோர்கள் மருத்துவம், மனையியல், வானவியல், கணிதம், சோதிடவியல், உலோகவியல், பொறியியல், உயிரியல் போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்ததும் அவற்றைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்துவைத்திருப்பதும் இங்குச் சுட்டத்தக்கது.
அறிவியல் கலைச்சொற்கள்
அறிவியல் தமிழாக்கத்தில் ‘கலைச்சொல்லாக்கம்’ முக்கியப் பங்கினை வகிக்கிறது. குறிப்பிட்ட துறையிலுள்ள கருத்துகளுக்கான பொருளை விளக்கப் பயன்படும் சொல்லையே கலைச்சொல் என்று குறிப்பிடுகிறோம். ‘சாதாரண வழக்கில் உள்ள சொற்களே அறிவியலில் சிறப்புப் பொருளைத் தரும்பொழுது கலைச் சொல்லாகிறது’ (அறிவியல் தமிழ், டி.பத்மனாபன், ப.2). மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், ஒலிபெயர்ப்பு என்ற மூன்று நிலைகளில் அமையும் கலைச்சொல்லாக்கத்தின் அடிப்படையிலேயே அறிவியல் தமிழாக்கத்தின் பயன் வெளிக்கொணரப்படுகிறது. கருத்துகளை வரையறையோடும் துல்லியமாகவும் வெளியிடத் துணைபுரிபவை அந்தந்தத் துறைசார்ந்த கலைச்சொற்களே. அவ்வகைக் கலைச்சொற்களை உருவாக்கும் பணிகள் அரசு நிறுவனங்களாலும் (தமிழ் வளர்ச்சித் துறையின் ‘கலைச்சொற் அகராதி’ போன்றவை), பல துறைகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்களாலும் (மணவை முஸ்தபாவின் ‘கணினி கலைச்சொல் அகராதி’ போன்றவை) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அறிவியல் தமிழாக்கம்
அறிவியல் தமிழாக்கம் என்பதில், அறிவியல் தமிழில் கட்டுரைகளும் நூல்களும் வெறும் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துகொண்டிருந்த நிலை மாறி, தமிழிலேயே அறிவியல் படைப்புகளை உருவாக்கும் பரவலான நிலையை இன்று காணமுடிகிறது. ‘தமிழில் அறிவியல் எழுதுவோரைக் காட்டிலும், அறிவியல் பற்றி எழுதுவோரும், பேசுவோரும் பெருகிவிட்டனர். அதனாலேயே இத்தருணத்தில் தமிழகத்தின் பல்துறை அறிவியல், பொறியியல் பேராசிரியர்கள் தம்தம் துறைசார் அறிவியல் ஆய்வுகளைத் தமிழில் வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது’ (அறிவியலும் இலக்கியமும், சில மதிப்பீடுகள், ப.24) என்ற இன்றைய நிலை இங்குச் சுட்டத்தக்கது. அரசின் உந்துதல் என்பதைவிட தனிமனித முயற்சிகள் இப்பணியில் பெரும்பங்கு வகிக்கின்றன.
அறிவியல் தமிழ் வளர்க்கும் இதழ்கள் மற்றும் அமைப்புகள்
முதல் அறிவியல் இதழ் 1831ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்மேகசின்’ என்ற தமிழ்மாத இதழாகும். இது தமிழில் அறிவியல் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற உதவியது. 1933இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்க்கடல்’ என்ற இதழ் தன் நோக்கத்தைக் கீழ்க்கண்டவாறு வெளியிட்டது. இவ்விதழ், ‘பூமிசாஸ்திரம், வானசாஸ்திரம், தாவரசாஸ்திரம், ரஸாயனசாஸ்திரம், பௌதீகசாஸ்திரம் முதலியவற்றை மக்களுக்குச் சொல்லும்’ என்று குறிப்பிட்டது. அறிவியல் தமிழை முதன்மை நோக்கமாகக் கொண்ட இதழாக இது அறியப்படுகிறது. தற்போது, சுற்றுச்சூழல், கலைக்கதிர், யுனஸ்கோ கூரியர், அமுதசுரபி, செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், கலைமகள், தாமரை, மஞ்சரி போன்ற இதழ்கள் பொதுப் பொருண்மையில் அறிவியல் தமிழிற்கு வாய்ப்பளித்து வளர்த்து வருகின்றன. இவையல்லாமல், இளம் விஞ்ஞானி, மருத்துவமலர், சித்த மருத்துவம், மருத்துவர், கால்நடைக் கதிர், வளரும் வேளாண்மை, நவீன வேளாண்மை, நிலவளம், மூலிகை மணி, ஆரோக்கியம், தமிழ்க் கம்யூட்டர் போன்ற இதழ்கள் அறிவியல் துறைகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளன.
இதேபோல, ‘களஞ்சியம்’ இதழ் அண்ணாபல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் மூலமும், ‘துளி’ இதழ், தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறை மூலமும், ‘அறிவியல் பலகணி’ (மொழி அறிவியல் ஆய்வேடு) இதழ், தொல் அறிவியல் துறை மூலமும் வெளிவந்து அறிவியல் தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மையமாகக்கொண்டு இயங்கும், ‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பு அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிவருதல் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு, 1988 முதல் தொடர்ச்சியாக அறிவியல் தமிழ்க் கருத்தரங்குகளை நடத்தி, அவற்றை நூல்களாக வெளியிட்டு வருகிறது. மேலும் இவ்வமைப்பு, ‘பொறியியல் தொழில்நுட்பம்’(1993), ‘மருத்துவ அறிவியல் வளர்ச்சி’(1994), ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’(1995), ‘தகவல் தொடர்பியல்’ (1999), ‘வேளாண் அறிவியல் வளர்ச்சி’(2000), ‘கல்வி நுட்பவியல்’ (2001), ‘உயிர் தொழில் நுட்பவியல்’ (2002), ‘இணையத் தமிழ்’ (2003) ஆகிய சிறப்பு பொருண்மைகளில் கருத்தரங்குகளை நடத்தி நூலாக வெளியிட்டுள்ளது சுட்டத்தக்கது.
இவையல்லாமல், தமிழ் இணையப் பக்கங்கள் பலவும் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. மருத்துவம், பல்துறை அறிவியல் போன்றவற்றிற்கும், கணினித் தொழில்நுட்பம், புதிய மென்பொருள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, தமிழ் எழுத்துருக்கள் பயன்பாடு மற்றும் எழுத்துரு மாற்றிகள் போன்றவற்றிற்கென்றும் எண்ணற்ற இணையப் பக்கங்கள் உள்ளன. இவை தமிழின் ஆராய்ச்சி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவதாய் அமைகின்றன. இணையத்தில் காணப்படும் ‘மின் நூலக’ பணிகளும் (நூலகம்.காம், சென்னை லைப்ரரி.காம் போன்றவை), நூல்கள் சேமிப்புத் திட்டப்பணிகளும் (மதுரை திட்டப்பணி போன்றவை) உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயனுள்ளவையாக உள்ளன.
Dr.A.Manavazhahan, HOD, Dept. of Tamil, Science and Humanities, S.R.M. University, Chennai 603203.
Add comment