பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மரபு அறிவும் தொழில்நுட்பமும்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மரபு அறிவும் தொழில்நுட்பமும்

முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

 (தமிழரின் மரபு அறிவுப் பதிவுகள், காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல், சனவரி 5, 2012)

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களைக் களமாகக் கொண்டு, தொழில்கள், தொழில்நுட்பங்கள், அறிவியல் கூறுகள், தொலைநோக்குச் சிந்தனைகள், மேலாண்மைக் கூறுகள், மரபு அறிவு, பல்துறை அறிவு போன்ற புதிய பொருண்மைகள் பலவற்றுள் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், இலக்கியப் பகுப்பு முறையில் கீழ்க்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ள பதினெட்டு நூல்களுள் திருக்குறள் தவிர்த்த ஏனையவற்றில் இத்தகைய ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. காரணம், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பான்மை அறக்கருத்துகளை வழியுறுத்துவதும், மேல்கணக்கு நூல்களை ஒப்பிடுகையில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குறைந்திருப்பதுவுமே ஆகும். ஆயினும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆய்வுப் பொருண்மைகளைக் கீழ்க்கணக்கிலும் விரிவுபடுத்தத் தேவையான கூறுகள் அவற்றில் இல்லாமலில்லை. நுணுகி ஆய்ந்தால் பல்துறை அறிவு, மேலாண்மை, பொருளியல், தொலைநோக்கு, தொழில்நுட்பம் போன்ற பல்வகைப் புதிய சிந்தனைகளைக் கீழ்க்கணக்கிலும் அடையாளப்படுத்த முடியும். அவ்வகையில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வழி பண்டைத் தமிழரின் மரபு அறிவையும் தொழில்நுட்பக் கூறுகளையும் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறளைக் களமாகக் கொண்டு இத்தகைய ஆய்வுகள் பல முன்னமே திகழ்த்தப்பட்டுள்ளமையால் திருக்குறள் தவிர்த்த ஏனைய நூல்கள் இந்த ஆய்விற்குக் களமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மரபு அறிவு

                ‘மரபு’ என்பதற்கு, ‘பல காலமாகப் பின்பற்றப் பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி’ (க்ரியா,ப.810) என்று விளக்கமளிக்கப்படுகிறது. எனவே மரபு அறிவு என்பதை, மரபினரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வழிவழியாக முறைப்படுத்தப்பட்டு, செப்பம் செய்யப்பட்ட பல்துறை சார்ந்த அறிவு எனக் கொள்ளலாம். தேவையும் பயனும் கருதி இவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் புறந்தள்ளப்பட்டும் வந்திருக்கின்றன. அவ்வகையில், அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி தொடங்கி பல துறைகளிலும் பல நிலைகளிலும் முன்னோர்களால் ஆய்ந்து பயன்படுத்தப்பட்ட, இன்றைக்கும் பயன்தரவல்ல மரபு அறிவினைக் கீழ்க்கணக்கு நூல்களின் வழி அடையாளப்படுத்த முடிகிறது.

வேளாண்மை

                அடிப்படைத் தேவைகளில் முதலாவதான உணவின் தேவையை நிறைவு செய்வதற்கான செயல்பாடுகள் பலவித படிநிலைகளைக் கொண்டுள்ளன. இவற்றில் விளைநிலங்களை உருவாக்குதல், செப்பம் செய்தல், பயிரிடல், நீர்ப்பாய்ச்சுதல், எரு இடல், காத்தல், அறுவடை செய்தல் போன்ற நிலைகளில் துறைசார் அறிவு வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

நல்ல உழவரைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து,

புலத்தியல்பு புக்கன் உரைக்கும்

என்கிறது நாண்மணிக்கடிகை (பா.71:2-3). இதில், உழவன் என்பவர் அவன் பயிர் செய்யும் நிலத்தின் தன்மையை அறிந்திருத்தல் வேண்டும் என்பதும் அவனாலேயே நல்ல விளைச்சலை ஈட்ட முடியும் என்பதும் பெறப்படுகிறது..

விளைநிலம் மேம்பாடு

விளைநிலத்திலுள்ள வைக்கோலைச் சேர்த்து, நாள்தோறும் உழு மாடுகளைக் காப்பாற்றி, புன்செய் நிலத்தை நன்செய்யாகத் திருத்தி, எருவிட்டு, உழுதல்-பண்படுத்தல் என்ற இவற்றை உரமேற்றிய நன்செய் நிலத்தில் செய்பவனே உழுதொழிலில் சிறந்தவனாவான் என்கிறது சிறுபஞ்சமூலம் (பா.60). அவ்வகையில், குறிஞ்சி நில மக்களால் மரஞ்செடி கொடிகள் வெட்டி ஒழுங்குபடுத்தி பயிரிடப்பட்ட, பன்றிகள் கொம்புகளால் உழுத (கிளறுதல்), குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனங்களை,

                                       எறிந்தெமர் தாமுழுத ஈர்ங்குரல ஏனல் (ஐ.ஐ.18:1)

என்ற அடியும்

                                       கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள் (ஐ.எ.11:1)

என்ற அடியும் காட்டுகின்றன.

உழுதல்

உழுதலுக்கு ஏர் மாடுகள் பயன்படுத்தப்பட்டன. தனக்கு உரிமயுடையதாகிய ஏர் மாடுகளை வைத்திருப்பவர் உயர்வாகக் கருதப்பட்டார். அவருடைய வேளாண்மை,

ஏருடையான் வேளாண்மை தானினிது (இனி.3:3)

என்று போற்றப்பட்டது. உழுமாடுகள் இல்லாமல், பிறரின் எருதுகளை நம்பி உழுதொழிலில் ஈடுபடுபவர்களால் குறித்த காலத்தில் குறித்த வேளாண்மையை மேற்கொள்ள இயலாது. உழுவதற்கு நிலத்தில் ஈரப்பதம் இன்றியமையாதது என்பதால் அவர்களால் நிலத்தினைப் பண்படுத்த முடியாத சூழ்நிலை நிலவியது. எனவே வேளாண் தொழில்புரிவோருக்கு உழுமாடுகளின் தேவை வலியுறுத்தப்பட்டது. உழுமாடுகள் இல்லா உழவனின் நிலையை,

எருதில் உழவர்க்கு போ(கு) ஈரம் இன்னா (இன்னா.4:1)

என்பதில் அறிய முடிகிறது. இதில் எருதில்லாத உழவர்கள் சிறிதளவு மழை பெய்யும் காலத்தில் அந்த  குறைந்த ஈரப்பதம் கொண்டு நிலத்தை உழ எருதுகள் கிடைக்காமல்  துன்பம் அடைவர் என்பது சுட்டப்படுகிறது.

நீர்ப் பாய்ச்சுதல்          

நீர்ப்பாய்ச்சுவதால் விளைநிலம் செழிப்படையும் என்பதை,

                       நீரான்வீ றெய்தும் விளைநிலம்    (நாண்.86:1)

என்பதில் அறியமுடிகிறது.  நீரை முறையாகப் பாய்ச்சவில்லை என்றால் பசும் பயிர்கள் விளைவின் நலம் கெடும் என்று அறிவுறுத்தப்பட்டது(நாண்.46:2-3). இருப்பது சிறிதளவு நீராயினும் அதை முறைப்படுத்தி பாய்ச்சுதல் வேளாண்மை நுட்பமாக அமைந்தது. எனவே சீரிய முறையில் வாய்க்கால்கள், பாத்திகள்(தி.நூ.5:1-2)  அமைக்கப்பட்டன. வாய்க்காலைப் போல, எந்தப் பயனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவர்களின் நட்பு சமூகத்தில் போற்றப்பட்டது(நாலடி218).

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர கோன் உயரும் என அனைத்திற்கும் நீரே அடிப்படை என்றும், அவற்றை உயர்ந்த வரப்புகளைக் கட்டி நிறைவாகப் பாய்ச்சினால் அதிக விளைச்சல் கிட்டும் என்பதும் அறியப்பட்டது(சி.மூ.46)

களையெடுத்தல்

                பயிரில் களைகளைப் பிரித்தறிந்து, அவற்றை நீக்கினால்தான் எதிர்ப்பார்த்த விளைச்சல் இருக்கும். ஆகவே, வேளாண் மேலாண்மையில் களை கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது. அற்ப அறிவினையுடையவர்கள் பயிரில் வளரும் களைகளுக்கு ஒப்பாகச் சுட்டப்பட்டதை.

                                       ————- பிணிபயிலும்

                                        புல்லன்னர் புல்லறிவின் ஆடவர்  (நாண்.34:2-3)

என்ற அடிகள் காட்டுகின்றன.

பயிர்ப் பாதுகாப்பு

எரு இடுதல், நீர்ப்பாய்ச்சுதல், களையெடுத்தல் போன்றவற்றை முறையே செய்தாலும் பாதுகாப்பு இல்லாத பயிர் நன்கு விளைந்தாலும் நமக்கு எதிர்ப்பார்த்தப் பலனைத் தராது என்பது வலியுறுத்தப்பட்டது. தினைப்புனம் காத்தல் மகளிர், ஆடவர் என இருபாலராலும் மேற்கொள்ளப்பட்டது. எனவே, விளையும் காலத்தில் பயிரைக் காப்பாற்றாதான் உழவுத்தொழில் நிலைநிற்பன போல தோன்றி கெட்டு அழியும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை,

                                                ————- பைங்கூழ்

                                                விளைவின்கண் போற்றான் உழவும்

———- உள்ளனபோல கெடும்       (திரி.59:1-3)

என்பதில் காணலாம். அதேபோல, வேலியில்லாத கரும்பைக் காத்து பலன் பெறுதல் கடினம் என்பதை,

                                                சிறையில் கரும்பினைக் காத்தோம்பல் இன்னா  (இன்னா.5:1)

என்று சுட்டப்பட்டது.

                அறுவடை

                முற்றிய பயிர்களின் தானியங்கள் அறுவடை செய்து சேகரிக்கப்பட்டன.  அறுவடை செய்யும் காலத்தைப் பயிர்களின் விளைவினைக்கொண்டும், இயற்கை நிகழ்வுகளைக் கொண்டும் அறிந்தனர். தினை முதிரும் காலத்தை வேங்கை மரம் பூக்கும் காலத்தைக் கொண்டு அறிந்ததை,

                                                —————- நீடாப்

                                                பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் தினைவிளைய  (தி.நூ.5:1-2)

என்பதில் அறியமுடிகிறது. இதில், பாத்தியின் தினைப் பயிரானது விளைந்து போனபடியால் வேங்கைமரமானது தம்முடைய பூத்தலாகிய செயலினால் தினைகொய்ய வேண்டியநாள் வந்துவிட்டதென்று அறிவித்தது சுட்டப்படுகிறது.

                விதை தானியம்

முற்றிச் சேகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தானியம் அடுத்த பருவத்து விதையாகப் பாதுகாக்கப்பட்டது. எந்நிலையிலும் இவ்விதைதானியத்தைச் செலவிடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இதனை,

வித்துக்குற் துண்ணா விழுப்பம் மிக வினிதே (இனி.40:2)

என்பதில் அறியலாம்.

மானாவாரிப் பயிர்

                நீர் இறைத்தல், எரு இடுதல், களை எடுத்தல், காத்தல் இவை இல்லாத, மழையை நம்பி மட்டுமே பயிரிடப்படும் மானாவாரி நெல்லான ‘ஐவனம்’ குறித்து பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளது. ஐவனம் என்பது, பல்வகையான மலர்களைப் பரப்பி வைத்தாற்போன்ற மலைநெல் என்பதை,

————- பல்பூப்பெய்

தாலொத்த ஐவனம்  (தி.நூ.19:1-2)

என்ற அடிகள் காட்டுகின்றன.

ஊடுபயிர்

நன்செய் பயிர்கள், நன்செய் நிலத்தினைப் பண்படுத்திப் புன்செயாக மாற்றி அதில் விளைவிக்கும் பயிர்கள், மானாவாரிப் பயிரிடுமுறை போன்றவற்றோடு ஊடுபயிர் முறையும் பதினெண்கீழ்க்கணக்கில் காணப்படுகிறது. அவ்வகையில், தினைப்புனத்தில் முற்றிய நிலையிலுள்ள தினைத்தாள்களில் அவரைக் கொடிகள் பயிரிடப்பட்டிருந்ததை,

                                       அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்    (ஐ.எ.1:1)

என்பதில் காணமுடிகிறது. அதேபோல, மாமரங்களில் மிளகுக்கொடிகள் வளர்த்து இரட்டை பயன் அடைந்ததையும் (ஐ.ஏ.8:1-2) காணமுடிகிறது.

மழை – நீர் – மேகம் குறித்த அறிவு

இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் வானத்தை நம்பியே வாழ்கின்றன. வானம் வழங்காமல் பொய்த்தால் மண்ணுலகில் புல்லுக்கும் இடமில்லை என்பதை பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர். அதனால் நீரில் தேவை குறித்து உலகிற்கு உணர்த்தியதோடு, நீரின் இயல்பு, மழை உருவாகும் விதம் போன்றவற்றையும் நன்கு ஆராய்ந்தனர். ஆய்வின் உண்மைகளைப் பதினெண்கீழ்க்கணக்குப் போன்றவற்றில் பதித்துவைத்தனர். இந்த உலகத்திற்கும் மழைத் துளிகளுக்குமான உறவைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து, 

                                              ————- வானத்

                                                துளிநோக்கி வாழும் உலகம்             (நாண்.29:2-3)

என்றும்,                    மழையின்றி மாநிலத்தார்க்(கு) இல்லை (நாண்.45:1)

என்றும், நீரின்மையான் வருந்தும் பசுமையான பயிர்க்கு மழை மிக இனிது (இனி.15:3) என்றும் அறிவித்தனர். மேலும், நிலத்தின் இயல்பை அந்நிலத்தில் பெய்யும் மழையின் இயல்பே தீர்மானிக்கும் என்பதை,

                                              ——– நிலத்தியல்பு

                                                வானம் உரைத்து விடும்           (நாண். 71:3-4)

என்று பதிவுசெய்தனர். மேலும், வானம் பொய்ப்பின் ஊருக்கு நன்மை இல்லை (இன்னா.20:3), மேகமானது மழைநீரைச் சொரியாதாயின் இவ்வுலகத்தில் உள்ளவர்க்கெல்லாம் பெருந்துன்பம் நேரும் (இன்னா.35:1) என்று அறிந்திருந்தனர். எனவே, குழித்துழி நிற்பது நீர்(நாண். 31:1) என்ற உண்மையின் அடிப்படையில் பள்ளமான பகுதிகளில் எல்லாம் நீரினைத் தேக்கி வைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர். எனவே, சோலை அமைத்தலோடு தருமத்திற்காகக் குளத்தினைத் தோண்டுதல் மிக இனிது என்பதை,

காவோ(டு) அறக்குளம் தொட்டல் மிக இனிது (இனி.23:1)

என்று வலியுறுத்தினர்.

மழை மேகம் உருவாதல்

மழையைப் பொழிவிக்கும் மேகத்தைப் பற்றி பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பல இடங்களில் சுட்டுகின்றன. இவற்றில் மழை மேகம் உருவாகும் விதம், மேகம் வலமாக ஏறினால் மழை பொழியும் என்ற நுட்பம், மழை வருவதற்கு முன்பு இயற்கையில் ஏற்படும் மாறுபாடுகள், உயிரினங்களின் செயல்பாடுகள் போன்றவை நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடல்நீர் ஆவியாதல் மூலம் உருவாகும் வெண்மேகம் மலைகள் இருக்கும் பகுதிக்குச் செல்லும்பொழுது குளிர்காற்றினால் குளிர்விக்கப்பட்டு கருமேகமாக உருமாறி மழையாகப் பொழிகின்றன என்ற நுட்பம் பல பாடல்களில் சுட்டப்பட்டுள்ளது(கார்.17:2-3, கார்.33:1-2, கார்.பா.34:1-3, கார்.37:1-3, ஐ.ஐ.5:1-3,…). அதேபோல, கார் மேகம் வலப்புறமாக எழுந்தால் மழை பொழியும் என்ற செய்தியும் (கார்.12:3-4,), கார்காலத்து மேகங்கள் வலப்புறமாகச் சுழன்று வருவன(ஐ.ஐ.1:4) என்ற செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உடல் நலம்

                பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்றும் மருந்துகளின் பெயர்களால் தலைப்பினைப் பெற்றிருப்பது சிறப்பு. ஆயினும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பலவற்றிலும் உடல் நலம் குறித்த கருத்துகளும், மருந்து, மருத்துவர், நோய்கள் குறித்த செய்திகளும் காணப்படுகின்றன. உடல்நலக் குறைவு மனநலத்தையும் பாதிக்கும் என்பதால் உடல் நலத்தைப் பேணவேண்டியதன் தேவையை வலியுறுத்தினர். அவ்வகையில், உடலின்கண் மூப்பு தோன்றின் இளமை நலம் கெடும் என்பதை,

                                                       ———– மெய்த்தாக

                                                        மூத்தல் இறுவாய்த்த              (நாண்.19:1-2)

என்று அறிவுறுத்தினர். மேலும், குழந்தைகளுக்கு நோய் வந்தால் மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் என்பதை,

குழுவிகள் உற்ற பிணி இன்னா (இன்னா.35:3)

என்று சுட்டினர்.

                நோய்கள்

பொய் சிதைக்கும் பொன்போலும் மேனியை     (நாண்.23:2)

என்று, தீய ஒழுக்கத்தினால் ஏற்படும் நோய்(உடற்தேய்வு நோய்) பொன் போன்ற அழகிய மேனியைப் சிதைக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. இந்நோய் பெரும்பிணி எனப்பட்டது. கள்வரைவிட அஞ்சக்கூடிய, உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோய் இது என அடையாளப்படுத்தப்பட்டது(எயிட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயாக இருக்கலாம்). இதனை,

—————– உருவினை

                                உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் (திரி.18:2-3)

என்ற அடிகள் பதிவுசெய்கின்றன.

இதைப்போலவே, கொடிய நோய்களாக, சிக்கர் – தலை நோயுடையவர்;         திதடர்-பித்தர்; சிதலை – புற்று (சிதலைபோல் வாயுடையார் – வாய் புற்று); துருநாமர்-மூலநோய் ஆகியோர் சுட்டப்பட்டனர். இவற்றிற்கு வினைப்பயன் காரணமாக சுட்டப்பட்டது. மேலும், பிணியுடையோர்க்கு உலகத்தில் இன்பம் எதுவுமில்லை என்றும்(சி.மூ.84), இளமையில் நோயின்றி வாழ்தல் நன்று என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தீராத நோய்களோடு துன்பப்படுவதைவிட இறத்தல் மேலானதாகச் சுட்டப்பட்டது (நாலடி.219:1-2).

மருத்துவன்

மருத்தவரிடமும், வழக்குறைஞரிடமும் உண்மையை மறைக்கக்கூடாது என்பது இன்றைய மொழி. மருத்துவர் கேட்கும்பொழுதே நோயாளி தன் நோயைச் சொல்லிவிடுதல் வேண்டும், அப்பொழுதுதான் நோயின் காரணத்தையும் நோயின் தன்மையும் அறிந்து, விரைவில் குணப்படுத்தும் மருத்துவத்தை மேற்கொள்ள முடியும். இதனை,

                                       ————– மருத்துவன்

                                        சொல்கவென்ற போழ்தே பிணியுரைக்கும் (நாண்.77:2-3)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

உணவும் உறக்கமும்

உணவே மருந்தென்பது தமிழர் வகுத்த நெறி. திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இக்கருத்து வலியுறுத்தப்படுவதை அறியலாம். அவ்வகையில், உண்ணும் முறைகள், உணவின் தன்மை போன்றவற்றை முறைப்படுத்துதல் நோயற்ற வாழ்விற்கு அடிப்படை என மொழியப்படுகின்றன.

உண்ணும் விதம்

படுத்துக்கொண்டும், நின்றுகொண்டும், திறந்த வெளியிலும் உண்ணுதல் கூடாது, விரும்பி அதிகமாகவும் உண்ணுதல் கூடாது, கட்டிலில் அமர்ந்தபடி உண்ணுதல் கூடாது என்கிறது ஆசாரக்கோவை(பா.23). நாவைக் காத்து, வேண்டிய அளவு மட்டும் உணவு உண்பவனுக்கு நோய்கள் வருவதில்லை என்கிறது சிறுபஞ்சமூலம். இதனை,

                                       காத்துண்பான் காணான் பிணி (சி.மூ.8:4)

என்பதில் அறியலாம்.

                உணவின் தன்மைக்கேற்ப உண்ணுதல்

கசப்பான உணவு வகைகள் கடைசியிலும், இனிக்கும் பண்டங்கள் முதலிலும், எஞ்சியவை இடையிலும் முறைப்படி உண்ணப்பட வேண்டும்(ஆ.கோ.25.) என்பதும், உண்டபின், நீர் உட்புகாதபடி நன்றாக மூன்றுமுறை கொப்பளித்துத் துப்ப வேண்டும், நீர் குடிக்க வேண்டும், வாயை நன்றாகக் கழுவ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது ஆசாரக்கோவை(பா.25).

உறங்கும் காலம்

இரவில் பெரியவர்கள் குறைந்தது எட்டு மணிநேரம் உறங்கவேண்டும் என்பதும், பகல் உறக்கம் கூடாது என்பதும் இன்றைய அறிவியல் உலகில் மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது. பகலில் உறங்கினால் உடலை நோய் அண்டும் என்னும் இக்கருத்தை கீழ்க்கணக்கு நூல்களும் வலியுறுத்துகின்றன. பகல் பொழுதில் கண்ணுறக்கம் கூடாது என்று சுட்டுவதோடு(பா.29;1), நோயினை விரும்பி ஏற்றுக்கொள்பவரே பகலில் உறங்க ஆசைகொள்வார் என்பதை,

                                                ————- பகல்வளரார்

                                                நோயின்மை வேண்டுபவர் (பா.57:3-4)

என்று மொழிகிறது ஆசாரக்கோவை.

உறங்கும் திசை

படுத்துறங்கும் நேரத்தைப் போலவே திசைகளும் நம் உடல் நலத்தோடு தொடர்புடையனவாக இருக்கின்றன என்பதை பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். அதனால், எத்திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும் என்பதோடு, கட்டாயம் தலைவைத்துப் படுக்கக்கூடாத திசைகளையும் சுட்டிச்சென்றனர். அவ்வகையில், மிக அதிக ஆபத்தை (நோய்) விளைவிக்கக்கூடிய திசைகளாக வடக்கும், கோணங்களும் சுட்டப்பட்டுள்ளன. இதனை,

                                       கிடங்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது

                                        வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்

                                        உடற்கொடுத்துச் சேர்தல் வழி     (ஆ.கோ.30)

என்பதில் அறியலாம். வடக்கிலும், வட-கிழக்கு போன்ற கோண திசைகளிலும் புவியின் காந்த சுழற்சி அதிகமாக இருக்குமென்பதும் அது அத்திசைகளில் தலைவைத்துப் படுக்கும் மனிதர்களின் மூளையின் செயற்திறனைப் பாதிக்கும் என்பதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட  அறிவியல் உண்மையாக இருக்கிறது. அதேபோல இரவில் மரத்தினடியில் படுக்கக்கூடாது என்பதை, இராமரமும் சேரார்(ஆ.கோ.13:2) என்ற அடி காட்டுகிறது. தாவரங்கள் பகலில் உயிர்க்காற்றையும், இரவில் நச்சுக்காற்றையும் வெளியிடுகின்றன என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையிலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டிருக்கும் என்பது தெளிவு.

உயிரியல் அறிவு

தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் போன்றவற்றின் நுட்பமான செயல்பாடுகள், வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள் குறித்தும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிவுசெய்துள்ளன. தாவரங்களில் புல்வகையான மூங்கிலில் ஒருவகை நெல் உருவாகும் என்பதும், அந்நெல் உருவாகியதும் மூங்கில் பட்டுப்போகும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. இதனை,

                              ———-  நிறைவனத்து

                                நெற்பட்ட கண்ணே வெதிர்சாம்    (நாண்.4:2-3)

என்ற அடிகளில் அறியலாம். அதேபோல, வாழை மரமானது குலை ஈன்ற உடன் இறந்துவிடும் என்பதை,

                                மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம் (நாண்.85:2)

என்ற அடி பதிவுசெய்கிறது. மேலும், பூவாமல் காய்க்கும் மரங்களும்(சி.மூ.22:1), பூத்தாலும் காயாத மரங்களும்(சி.மூ.23:1) உள்ளன என்ற தாவரவியல் உண்மையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கோட்டுப்பூக்கள் மலர்ந்து பின் கூம்பாமல் உதிரும் தன்மையுடையவை என்பதும், நீர் நிலைகளில் உள்ள பூக்கள் மலர்ந்து பின்பு கூம்பும் இயல்புடையவை என்பதும் அறியப்படுகின்றன(நாலடி.215:1-3).

மேலும், பாக்குமரம் நாள்தோறும் தண்ணீர் விட்டு பராமரித்தால் மட்டுமே பலன் தரும் என்பதும், தென்னை மரம் விட்டுவிட்டு நீர் பாய்ச்சினால் பலன் தரும் என்பதும், பனைமரமோ ஒருமுறை வைத்தாலே போதும் நீர்ப்பாய்ச்சி பராமரிக்கவேண்டிய தேவையில்லை, ஆனாலும் தொடர்ந்து பலன் தரும் (நாலடி.216) என்ற செய்தியும் காணப்படுகிறது.

                விலங்குகளில் யானை, குதிரை, எருது, பசு போன்றவை குறித்த செய்திகள் காணப்படுகின்றன. மேலும், விலங்குகள் தொடர்பான நூல் இருந்ததையும் அறிய முடிகிறது(ஐ.ஐ.10:1). குதிரைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, குதிரைகளின் இயல்பைச் சேணம் அமைத்து ஏறியபின் அறிவர் (நாண்.5:1-2) என்பதும், அவை அவற்றைச் செலுத்துவோரது திறத்திற்கேற்றவாறு இயங்கும் (நாண்.73:1) என்பதும், சேணம் இல்லாத குதிரைச் சவாரி பெரிதும் துன்பத்தையே தரும் (இன்னா.9:3-4) என்பதும் சுட்டப்படுகிறது.

அதேபோல, யானைகளைப் பிடித்துவந்து கட்டுத்தறியில் கட்டிவைத்துப் பழக்குவர் (நாண்.12:1) என்பதும், ஆண் யானைக்கு முகத்தில் புள்ளிகள் இருக்கும் என்ற அடையாளப் பதிவும் (கார்.38:1) குறிக்கப்படுகிறது. கன்றுக்குட்டியை உண்பிக்க பசு பால் சுரக்கும் என்பதும், நல்லபாம்பினை வசப்படுத்த மந்திரமொழிகளைப் பயன்படுத்துவர் என்பதும் அறியப்படுகிறது (நாண்.12:1-2). மேலும், இடிஇடித்தால் நல்லபாம்பு அஞ்சி நடுங்கும் என்ற செய்தி பல இடங்களில் சுட்டப்படுகிறது(கார்.17:1-2 ; கார்.17:1-2 கார்.20:1; களவழி.13:2-3). யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்பொழுது பாகனையே கொல்லும். ஆனால், நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக்கிடந்தாலும், அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும்(நாலடி.213:2-5) என்று யானைக்கும் நாய்க்குமான குண இயல்பு சுட்டப்படுகிறது.

மேலும், சிலந்தி முட்டை வெடித்து இறக்கும் என்பதும், கவரிமான் மயிரை நீக்குவதால் இறக்கும் என்பதும், நண்டு குஞ்சு பொறிக்க இறக்கும் (சி.மூ.11) என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தலைமழுங்கியிருக்கும் புற்றின் மேல் ஏறக்கூடாது (சி.மூ.80:1) என்று வலியுறுத்தப்படுகிறது. காரணம் தலைமழுங்கிய புற்றில் பாம்பு இருக்கும் என்பதே. அதேபோல, மனிதர்களாலும் நிகழ்த்த முடியாத பிற உயிரினங்களின் அதிசயங்களும்  பதிவு செய்யப்பட்டுள்ளன. தூக்கணாங் குருவியினால் கட்டப்பட்ட கூடு, பேரெறும்புகளால் செய்யப்படும் அரக்கு, தூய உலண்டு என்னும் புழுக்களால் நூற்கப்பட்ட நூல், கோற் புழுவால் செய்யப்படுவதாகிய கோற் கூடு ஆகிய இவை ஐந்தும் எவராலும் செய்ய முடியாதனவாகும் என்கிறது சிறுபஞ்சமூலம்(பா.27). அதேபோல, அசுணமா என்னும் கேகயப் பறவையைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து,  ‘பறைபட வாழா அசுணமா(பா.4:1) என்கிறது நாண்மணிக்கடிகை.

பலவிதப் பொருள்களின் தோற்றம்

அகில், அரிதாரம், முத்து போன்ற பலவிதப் பொருட்களும் தோன்றும் விதங்களை,

                                கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான் வயிற்றில்

                                ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்

                                பல்விலைய முத்தம் பிறக்கும்     (நாண்.6.1-3)

என்ற பாடலடிகள் சுட்டுகின்றன. இதில், கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் என்பதும், மான் வயிற்றில் அரிதாரம் பிறக்கும் என்பதும், கடலுள் முத்து பிறக்கும் என்பதும் பெறப்படுகிறது. அதேபோல, நாகத்திலிருந்து அரிய மணிகள் கிடைக்கும் என்பதும் (கார்.20:3), மூங்கில்களில் இருந்து ஒருவகை முத்துக்கள் பிறக்கும் (தி.ஐ.18) என்பதும், மலையின் பாறைகளில் ஒளிமிக்க மணிகள் தோன்றும்(நாண்.7:1) என்பதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

சமூக நலன் (ம) சுற்றுச்சூழல்

சமூக நலனிற்கும் தனிமனித நலனிற்கும் பதினெண்கீழ்க்கணக்கில் எண்ணற்ற கருத்துகள் சுட்டப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் கற்பனை கலவாத, உண்மையை நேர்படச் சுட்டுவனவாக உள்ளன.  இயற்கையின் ஐந்து பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகிய இவற்றைப் பேண வேண்டும், இல்லையேல் உடம்பில் உள்ள ஐம்பூதங்களும் நம்மை விட்டு நீங்கும்(பா.15) என்று இயற்கையைக் காக்கவேண்டிய தேவை வலியுறுத்தப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கில், புல், விளைநிலம், பசுவின் சாணம், சுடுகாடு, வழி, தூயநீர் நிலைகள், தேவாலயங்கள், நிழல் உள்ள இடம், பசுக்கள் கொட்டகை, சாம்பல் போன்ற இடங்களிலும் உமிழ்தல், மலம்-சிறுநீர் கழித்தல் கூடாது (ஆ.கோ.32) என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

சமூக நலனை விளைவிக்கும் நற்செயல்களாக, மரங்களை நட்டு வளர்த்தல், சாலைகள் அமைத்தல், குடிநீர் நிலைகள் ஏற்படுத்துதல் ஆகியவையும்(சி.மூ.63). குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரங்களை நடுதல், பாதைகளைச் சீரமைத்தல், தரிசு நிலத்தை உழுவயல் ஆக்குதல், வளமான கிணற்றை வெட்டி சுவர் எழுப்புதல் ஆகியவையும்(சி.மூ.66) சுட்டப்படுகின்றன.

குழந்தை வளர்ப்பு முறைகள்

கடல் சார்ந்தும் இனிய நீர் பிறக்கும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும் (நாலடி.224;1-2) என்ற உண்மையின் அடிப்படையில், சான்றோர்கள் எக்குடியிலும் பிறக்கலாம் என்ற உலகியல் உண்மையை அறிந்து, வயிற்றிலிருக்கும் கருவினை அழியாமல் காத்தல், பிறந்த குழந்தையைப் பாதுகாத்தல், குழந்தைக்கு நோய்வராமல் மருந்து கொடுத்து காத்தல், குழந்தையை அச்சுறுத்தாமல் வளர்த்தல் போன்றவை சமூக அறங்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளன(சி.மூ.74).

தொழில்நுட்பம்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின்வழி ஆடை வடிவமைப்பு, கட்டுமானம், உலோகவியல், தோல்தொழில், கடற்தொழில், மருத்துவம் போன்ற பல்வகைத் துறைகளிலும் பழந்தமிழர் பயன்படுத்திய தொழில்நுட்பங்களை அறியமுடிகிறது.   

ஆடைகள்

சங்க இலக்கியங்களில், காலத்திற்கும், தொழிலுக்கும், செல்வநிலைக்கும் ஏற்ப பலவகை ஆடைகளைப் பண்டைத் தமிழர் பயன்படுத்தியதை காணலாம். இந்நுட்பத்தினைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் காணமுடிகிறது. குளிர்காலத்திற்கு ஏற்ற உடையினை பணியாளர்கள் அணிந்ததை,

                                       இளையரும் ஈர்ங்கட்(டு) அயர     (கார்.22:1)

என்பதில் அறியமுடிகிறது. அதேபோல, பட்டம்(ஐ.எ.43:4) என்னும் மேலாடை அணியப்பெற்றதும், அருவிகளில் பட்டுத் தெறிக்கும் நீரின் வண்ணத்தைப்போல  வெள்ளாடைகள் நுட்பமாக நெய்யப்பட்டதையும் அறியமுடிகிறது. இதனை,

மால்நீலம் மாண்ட துகில்  (தி.நூ.6:1)

என்பதில் காணலாம். மேலும், பெண்கள் அணியும் புடவையில் முந்தானை அமைப்பு வைக்கப்பட்டிருந்ததை,                    

                                       தாழ்துகில்கை யேந்தி    (தி.நூ.77:3)

என்ற அடி காட்டுகிறது.

நீர்நிலைகள்

நீர் மேலாண்மையின் கூறுகளாக நீர்நிலைகள் மேம்பாடும், உருவாக்கமும் அமைகின்றன. பதினெண்கீழ்க்கணக்கில் மடு, குளம், ஏரி, புயம், பொய்கை, கூவல், கிணறு போன்ற பலவித நீர்நிலைகளை உருவாக்கி, பலவித தேவைகளுக்குப் பயன்படுத்திய  கட்டுமானத் தொழில்நுட்பம் அறியப்படுகிறது. 

வேளாண்மைக்குப் பயன்படும் வண்ணம் மடுக்கள் உருவாக்கப்பட்டதும், மடுக்களில் உள்ள நீரின் அளவை அந்நீரின் தன்மையை வைத்து அறிந்ததும் சுட்டப்படுகிறது. இதனை,

                                       —————– மெல்லென்ற

                                        நீரான் அறிப மடுவினை    – நாண்.80:1-2

என்ற அடிகள் காட்டுகின்றன. இதில், மடுவின் ஆழத்தை அதிலுள்ள குளிர்ந்த நீரால் அறிந்தது தெரியவருகிறது.

நீர்பாசனத்திற்குப் பயன்பட்ட மற்றொரு நீர்நிலை குளம் எனப்பட்டது. குளங்கள் மழைக்காலத்தில் நீரினை நிரப்பிக்கொள்ளும் வண்ணமும், தேவைக்கேற்ப பாசனத்திற்குத் திறந்துவிட்டுக்கொள்ளும் அமைப்பிலும் உருவாக்கப்பட்டன. எனவே, குளத்தின் நீர் வேளாண் வளத்தை உறுதிசெய்தது. எனவே, நீர் வளமற்ற ஏரியின் கீழ் உள்ள நெற்பயிர் வாடிவிடும் என்ற கூறி வளமான குளத்தின் தேவை வலியுறுத்தப்பட்டது(நாண்.83:3).

மேலும், நீர் வரும் வழி நன்கு அமைந்திராத குளம் வறுமையால் பீடிக்கப்படும் என்பதை,

வாய்நன்(கு) அமையாக் குளனும்

                                        ——————————-

                                        நல்வகுரவு சேரப்பட்டார்    (திரி.84:1-4)

என்ற அடிகள் காட்டுகின்றன. இக்குளங்களிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட நீர்த்தூம்புகள் (மதகுகள்) அமைக்கப்பட்டிருந்தன(களவழி.2;3-4).  அதேபோல, ஏரி சிறிதாயின் நீர் கொள்ளாது வழியும். எனவே பெரிய அளவிலான ஏரிகள் உருவாக்க வலியுறுத்தப்பட்டது(நாண்.102:1). எனவே, கயத்திலிருந்து பாய்ந்து ஓடி வளம்செழிக்கும் வண்ணம் நீர்நிலைகள் பெரிதாக உருவாக்கப்பட்டன. அதனால் வேளாண்மை பெருகியது.        இதனை,

                                                தேங்கமழ் பொய்கை அகவயல்   (ஐ.எ.47:1)

என்பதிலும்,

                                                கயநீர்ப்பாய்ந் தேஓடும் காஞ்சிநல் ஊரன் (கைந்.46:1)

என்பதிலும் அறியமுடிகிறது.

                பாசனத்திற்கு என்றில்லாமல், உண்ணும் நீருக்காகக் ‘கூவல்’ எனப்படும் நீர்நிலை உருவாக்கப்பட்டது. இவ்வகை நீர் நிலைகளை உண்டாக்குபவர்கள் இறவா புகழை அடைவர் என்று ஊக்குவிக்கப்பட்டனர்.

                                                ———– உண்ணுநீர்

                                                கூவல் குறைவின்றித் தொட்டானும் (திரி.16:2-3)

உண்ணும் நீருக்காக கூவல் என்ற இவ்வகை அமைப்போடு, கிணறு என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. கிணறு என்பது உண்ணுநீர் தேவைக்காக ஏற்படுத்தப்படும் சிறிய வகை நீர் நிலை என்பது பெறப்படுகிறது. இதனை,

எறிநீர்ப் பெருங்கடல் எய்தியிருந்தும்

                                                அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்  (நாலடி.275:1-2)

என்ற அடிகள் காட்டுகின்றன. கடலின் அருகில் இருந்தாலும், அந்த நீர் குடிப்பதற்குப் பயன்படாததால், அடிக்கடி நீர் வற்றிப்போகும் சிறு கிணற்றினது ஊற்றையே தேடிக் கண்டு பருகுவர் என்பது இதன் பொருள்.

                அணை கட்டுதல்

                அணை கட்டுதல் சிறிய முயற்சி அல்ல. தண்ணீரை எதிர்கொண்டு, அதனைத் தடுத்து நிறுத்தும் கடின முயற்சி. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டோரை,

செறுத்தொற உடைப்பினும் செம்புனலோடு ஊடார்

                                                மறுத்தும் சிறைசெய்வர்    (நாலடி.222:1-2)

என்பதில் காணமுடிகிறது. இதில், தண்ணீர், அடைக்குந்தோறும் கரையினை உடைத்துக்கொண்டே யிருப்பினும், அந்த நல்ல நீருடன் யாரும் சினம் கொள்ளாமல், அதனை விரும்பி வாழ்பவர் மீண்டும் அந்த நீரை அணை கட்டித் தடுப்பர் என்பது காட்டப்படுகிறது.

எந்திரத் தொழில்நுட்பம்

                தேர்கள், கரும்பு பிழி எந்திரம் ஆகியவற்றில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததை அறியமுடிகிறது.

                                பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே (கார்.21:1)

என்பதில், எந்திரச் செய்கைகளால் அலங்கரிக்கப்பட்ட உறுதியான தேர் காட்டப்படுகிறது. அதேபோல,

                                கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் (நாலடி.35:1)

என்பதில், கரும்பை ஆலையில் ஆட்டி அதன் சாற்றினால் ஆகிய வெல்லக் கட்டியை நல்ல பதத்திலே எடுக்கும் நுட்பம் காட்டப்படுகிறது.

கடல்சார் தொழிலில் நுட்பம்

                மீன் பிடித்தொழிலில் பலவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மீன் பிடிக்கவென்று கலன்களை உருவாக்குதல், நுண்மையான வலைகளைப் பின்னுதல், காற்றின் திசையறிந்து கலனைச் செலுத்துதல், பிடித்துவந்த மீன்களைக் கொண்டு உணங்கல் மீன் தயாரித்தல் போன்றவற்றை அறியமுடிகிறது.

நுண்மையான வேலைப்பாடு அமைந்த வலையினை நுண்வலை(ஐ.ஐ.47:1-3), நுண்ஞாண் வலை(ஐ.எ.66:1-2), நூல்நல நுண்வலை(தி.நூ.32:1-3) ஆகிய அடைசொற்கள் காட்டுகின்றன. அதே போல உணங்கல் மீன் தயாரித்தலும் அவற்றிற்குப் பரதவ மகளிர் காவல் இருந்ததும் பல இடங்களில் சுட்டப்படுகின்றன(தி.நூ.51: தி.நூ.56, கைந்.53:3,கைந்.58:1-3).

                மேலும், மீன்பிடித் தொழில், வணிகம் ஆகிவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டதாக திமில்(களவழி.18:1), அம்பி (களவழி.37:3), நாவாய்(ஐ.எ.61:1-2) என்ற பலவித கலன்களும் காட்டப்படுகின்றன. இவற்றில் நாவாய் என்பது கடல் வணிகத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட கலன் என்பதை,

                     கண்திரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்

                                        பண்டம்கொ ணாவாய் வழங்கும் துறைவன் (ஐ.எ.61:1-2)

என்பதில் அறியமுடிகிறது.

உலோகவியல்

பொன்னின் இயல்பை நெருப்பில் இட்டு (புடமிடுதல்) அறியும் நுட்பத்தை,

                                       ——— மாசறச்

                                        சுட்டறிப பொன்னின் நலம் (நாண்.5:2-3)

என்ற அடிகள் காட்டுகின்றன. அதேபோல, இரும்புக் கருவிகளைக் கொண்டே இரும்புக்கம்பிகள் போன்றவற்றை வெட்டும் தொழில்நுட்பத்தை,

                              இரும்பின் இரும்பிடை போழ்ப    (நாண்.பா.36:1)

என்பதில் அறியமுடிகிறது. அதேபோல, எவ்வளவுதான் சுத்தம்செய்து, கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு இருக்கும் என்ற உண்மையை,

                              பூசிக் கொளினும் இருமிபின்கண் மாசொட்டும்  (நண்.100:2)

என்ற அடி காட்டுகிறது. இதில் இரும்பு சுத்திகரிப்பு சுட்டப்படுகிறது. மேலும், உலைக்கலத்தில் பயன்படுத்தப்பட்ட முட்டிகை(சம்மட்டி), குறடு (நாலடி.208) போன்ற கருவிகளும் காட்டப்படுகின்றன. அதேபோல, எஃகினால் செய்யப்படும் நுண்மையான பொருளான ஊசி விற்பனை செய்யப்பட்டதும் அறியப்படுகிறது (ஐ.ஐ.21:1).

மணிகளின் நுட்பம் அறிதல்

விலை மதிப்புடைய, ஒளிவீசும் பலவித மணிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. பழந்தமிழர் இவ்வகை மணிகளின் தன்மைகளை அறியும் நுட்பத்தினைக் கைவரப்பெற்றிருந்தனர் என்பது குறிப்புகளின் வழித் தெரியவருகிறது. மணிகளின் இயல்பைக் கழுவி அறிவர் என்பதை,

                                       மண்ணி யறிப மணிநலம்  – நாண்.5:1

என்பதிலும், மாசு படிந்தாலும் மணி தன்னுடைய ஒளி குறையாது என்பதை,

                                       மாசுபடினும் மனிதன் சீர் குன்றாதாம் – நாண்.100:1

என்பதிலும் அறியமுடிகிறது.       

கம்மாளர்,  தச்சர்

                பலவிதமான புழங்குபொருளைத் தயாரிப்பதில் கம்மாளரும், தச்சரும் சமூகத்தில் முக்கியப் பங்காற்றுகின்றனர். அவ்வகையில், தாம் கண்ட பொருள்களை அப்படியே வடித்தெடுக்கும் கம்மாளரும் (நாண்.41:1), நிறைய ஆட்களை வைத்து தொழில்செய்யும் தச்சன் பள்ளியும் (களவழி.15:2-3) காட்டப்பட்டுள்ளன.

தோல் தொழில்நுட்பம்

தோல் தொழில்நுட்பத்தைக் கொண்டு, செருப்புகள், பறை, தோல் வாரினால் இழுத்துக்கட்டப்பட்ட முரசு (களவழி.9:2, ஐ.ஐ.2:2) போன்றவற்றை தயாரிக்கப்பட்டன. இவற்றின் வழி பலவித பயன்பாடுகளுக்குமான தோல்களின் தன்மை அறிதல், அவற்றைப் பதப்படுத்துதல், அவற்றைக் கொண்டு தேவையான கருவிகள் தயாரித்தல் ஆகிய தொழில்நுட்பங்கள் உய்த்துணரப்படுகின்றன.

மருத்துவத் தொழில்நுட்பம்

மருத்துவ முறைகளில் பத்தியம் இருத்தல்(சி.மூ.71;1-2), புண்ணிற்கு மருந்திடுதல் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன. புண்ணினை ஆற்ற இடப்படும் ‘காரம்’ எனப்படும் ஒருவகை மருந்து சுட்டப்படுகிறது. இது மிகுந்த எரிச்சலைக் கொடுக்கக்கூடிய மருந்தாக அறியப்படுகிறது. இதனை,            

                                                காரத்தின் வெய்ய   (ஐ.ஐ.24:5)

குலம் காரம்          (தி.நூ.127:3)

ஆகிய அடிகள் காட்டுகின்றன.

சான்றுகளின் வழி

       பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் தெரிவிக்கும் மேற்கண்ட சான்றுகள் பண்டைத் தமிழரின் மரபு அறிவு, தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதாக அமைகின்றன. வேளாண் துறை, மீன் பிடித்தொழில், உலோகவியல், உடல்நலம், மருத்துவம் போன்றவற்றின் அறிவும் நுட்பமும் இன்றும் பயன்படுத்தக்கூடியனவாக இருப்பதை அறியமுடிகிறது.

உயிர்கள் பற்றிய பதிவு அவை குறித்தான தெளிவையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்றன. நீரின் தேவை, நீர்நிலை உருவாக்கம், மேம்பாடு, பாதுகாப்பு போன்ற கருத்துகள் இன்றைக்கும் வலியுறுத்தப்படவேண்டிவையாக உள்ளன.

ஐம்பூதங்களை உணர்ந்து பேணல், இயற்கையிலிருந்து விலகிவிடாமல் அவற்றைக் காத்தல்,  சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்த்தல், பொது இடங்களைப் பாதுகாத்தல், சாலைகள் அமைத்தல், குடிநீர் நிலைகளை உருவாக்கி பாதுகாத்தல் போன்ற என்றைக்கும் தேவையான சிந்தனைகள் சிறப்பு பெறுகின்றன. கருக்கொலையைத் தவிர்க்க வலியுறுத்தப்பட்டதும், குழந்தைகளை நோயில்லாமல் வளர்க்க அறிவுறுத்தப்பட்டதும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டதாக அமைகிறது.

பதினெண்கீழ்க்கணக்கின் ஆசாரக் கோவை போன்றவை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாக இல்லை, ஒரு குறிப்பிட்ட இனத்தாரை உயர்வுபடுத்துவதாக உள்ளது என்ற கருத்து சொல்லப்பட்டாலும், அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக்கொள்ளக்கூடிய, பயன்தரக்கூடிய சிந்தனைகளும் நிறைந்துள்ளன என்பதைச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

********

பயன் நூல்கள்

இன்னா நாற்பது

கழக வெளியீடு, சென்னை.

கார் நாற்பது

கழக வெளியீடு, சென்னை.

நாலடியார் உரைவளம், தொகுதி 1,2

தஞ்சை சரசுவதி மகால், தஞ்சாவூர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும்

சாரதா பதிப்பகம், சென்னை.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும், தொகுதி 1,2,3

முல்லை நிலையம், சென்னை.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும்

மீனாட்சி புத்தக நிலையம், சென்னை.

முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, ஆசாரக்கோவை (உரையுடன்)

கழக வெளியீடு, சென்னை.

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!