சங்க இலக்கியத்தில் மேலாண்மை – ஆய்வு நூல்
-ஆ.மணவழகன்
வாழ்த்துரை
தமிழ் இனத்திற்கு மிகுந்த நெருக்கடி உள்ளாகியிருக்கிற காலம் இது. தனித்த பண்புக்கூறுகளை வைத்திருக்கும் எந்த இனமும் உலகமயமாக்கல் சூழலில் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும் தமிழ் இனம் கூடுதலான பகையை எதிர் கொண்டிருக்கிறது. தமது நிலத்தை, மொழியை, பண்புக் கூறுகளை, பழக்க வழக்கத்தை, நம்பிக்கையை, வாழ்முறையை, விழுமியத்தை என எதையும் காப்பாற்ற முடியாமல் நிர்கதியில் கிடக்கிற ஒரு இனமாக இருக்கிறது. அதைவிடக் கேவலம் தம் இனம் அழிவதை கைகட்டி வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? உணர்வுகள் அரசியல் லாபத்திற்காக கொச்சைப்படுத்தப்பட்டு, வெற்று முழக்கங்களாக மாறிவிட்ட ஏமாற்றத்தில் என்னதான் செய்யும் இந்த இனம். ஒரு காலத்தில் கல்வியாளர்கள் கையில் இருந்த சமூகக் கருத்து நிலை இன்றைக்கு ஆட்சியாளர்களின் கைக்குள் போய்விட்டதன் விளைவுதான் இது. கல்வியாளர்கள் இந்தச் சமூகத்தின் செல்நெறியை வடிவமைக்கிறவர்களாக இல்லை; அல்லது கல்வியாளர்களை இச்சமூகம் நம்பவில்லை. கல்வியாளர்களை மிக மிக ஒடுங்கிய குரலாக, சம்பளத்துக்கு காலம் தள்ளுபவர்களாக, அரசின் அல்லது தான் சார்ந்த நிறுவனத்தின் தயவை நம்பி வாழ்பவர்களாக சமூகம் வைத்திருக்கிறது.
ஆனால் காலம் வெறுமையாக இல்லை. அது தன் பணியை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. தமிழ் மரபின் சங்கிலி அறுபடாமல் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. அந்த ஆய்வுலகின் ஒரு கண்ணியாக ஒரு சரடாக முனைவர் ஆ. மணவழகன் அவர்களை நான் பார்க்கிறேன். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நெற்று இவர்.
பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை என்கிற இவரின் முதல் நூலிலேயே தமிழ் மரபு இலக்கியங்களின் மீதான ஆழ்ந்த அக்கறையும் புதிய அணுகுமுறையும் புலப்பட்டது. தமிழனைப் பற்றி தமிழனுக்கு, தன்னைப்பற்றி மறக்கடிக்கப்பட்ட தமிழனுக்கு நினைவுபடுத்திய நூல் அது. அதற்கு அடுத்த நூலாக சங்க இலக்கியத்தில் மேலாண்மை என்கிற நூல் கொண்டு வந்திருக்கிறார். பதினொரு கட்டுரைகள் அடங்கிய நூல் இது. சங்க இலக்கியம் முதல் தற்கால இணையத் தமிழ் வரையான ஆய்வு நூல் இது. தமிழிலக்கியங்களில் மேலாண்மைச் சிந்தனைகளை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு.
தமிழகம் நீர்வளம் மிக்க மாநிலம் எனினும் தனது செல்வத்தை காப்பாற்ற தெரியாத ஒரு இனமாக இருக்கிறது. ஆதித் தமிழன் எவ்வகையில் நீர்வளத்தைப் பாதுகாத்திருக்கிறான் என்பதை நீர் மேலாண்மை என்கிற கட்டுரை படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. அந்த இனமா இப்படி ஏரிகளையும் குளங்களையும் ஆறுகளையும் காப்பாற்றத்தெரியாமல் நீருக்கு அலைகிற, பிச்சையேந்துகிற இனமாக இருக்கிறது என்று இக்கட்டுரை மறைமுகமாக ஏளனம் செய்கிறது. உணர்வைத் தூண்டுகிறது. இலக்கிய வழி ஆதாரங்கள் கொண்டு அற்புதமாக படைக்கப்பட்ட கட்டுரை இது. அதுபோலவே வேளாண் மேலாண்மை கட்டுரை. நீரும் நிலமும் உயிரும் உடலும் போன்றது என்று சங்கப்புலவன் சுட்டியிருக்கிறான். இரண்டையும் பறிகொடுத்த இனத்திற்கு எழுதப்பட்ட எச்சரிக்கை கட்டுரை இவ்விரண்டும்.
தமிழ் வளர்ச்சிக்கு செய்யவேண்டுவன குறித்து இணையத் தமிழும் எதிர்காலவியலும் என்கிற கட்டுரையில் எழுதியுள்ளவை இவரின் ஆகப்பெரும் வேட்கையாகவும் தமிழினத்திற்குத் தேவையானதாவும் இருக்கின்றன. க.நா.சு. பற்றிய கட்டுரை, கவிஞர் காசி ஆனந்தன் குறித்த கட்டுரை, மண் சார்ந்த கவிதைகள் குறித்த கட்டுரை ஆகியன இவரின் தற்கால இலக்கிய வாசிப்பனுபவத்தை வெளிப்படுத்துகின்றன.
இவரின் ஆய்வுத்திறன் வெளிப்பட்டிருக்கிற கட்டுரை செல்வகேசவராய முதலியார் படைப்புத்திறன் கட்டுரையும், பாரதி- கல்வியியல் தொலைநோக்கு குறித்த கட்டுரையும். தெளிந்த மொழி நடை, ஆதாரங்களைக் கொண்டு நிறுவுகிற தர்க்க முறை, தமிழ் இனத்தின் மீதான பற்றெனினும் வெறும் பாசாங்குத்தனத்தை மட்டும் ஆய்வு முடிவு என்று கொள்ளாமல் உண்மையைத் தேடித்தருகிற உழைப்பு என இவரின் நூலில் பல குணங்களை நாம் அறியலாம். இந்நூல் ஒரு ஆயுதம். நமக்கான ஆவனம். தேவையேற்படும்போதெல்லாம் நாம் எடுத்துக்கொள்ள நிறைய இருக்கின்றன. தமிழுலகம் இந்நூலை பெரும் வரவாகக் கருதும்.
கவிஞர் இரா.பச்சியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், திருத்தணி அரசு கல்லூரி. 2007.
நூலாசிரியர் – ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை.
Dr.A.Manavazhahan, HOD, Tamil Department, SRM University, Chennai.
Add comment