கவிஞர் ஆ.மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் – கவிதைத் தொகுப்பு

கவிஞர் ஆ.மணவழகனின்

‘கூடாகும் சுள்ளிகள்’ – கவிதைத் தொகுப்பு

 

வாழ்த்துரை 

பேரா. ஆர்.பி.சத்தியநாராயணன், துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்.

கவிஞர் ஆ.மணவழகன் கூடாய் தான் சுமந்த கனவுகளை இந்நூலின் வாயிலாகக் கருத்துடன் கூடிய கவிதைத் தொகுப்பாய் நமக்காகப் படைத்துள்ளார். தலைப்பில் மட்டும் இலக்கிய மணம் வீசாமல், தொகுப்பு முழுவதும் பரவிப் படர்ந்திருக்கிறது.

இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையான சமுதாயச் சிந்தனைகளும் மனித நேயமும் நயம்பட நெஞ்சில் பதியுமாறு ஒவ்வொரு கவிதையிலும் அதன் சொற்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. அழகியலுடன் அனுபவமும் சேர்ந்து நற்கவிதைகளாய் மலர்ந்து மணம் கூட்டுகின்றன. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் தொடங்கி, முக்கிய நாட்டு நடப்புகள் வரை பல கருத்துகளைத் தன் கவிதைகளுக்குள் பொதிய வைத்துள்ளார் முனைவர் மணவழகன். ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என நமக்கு மட்டும் கேட்டுப் பழகிப் போன நம் தன்நலச் சிந்தனைக்கு, தான் வேண்டுவனவற்றை ‘தமிழே இவை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் கொடு’ என அவர் கேட்டிருப்பது சமூக அக்கறையையும் சுயநலமற்ற சிந்தனையையுமே காட்டுகிறது.

முனைவர் மணவழகனுக்கு இந்திய அரசு அளித்த ‘இளம் அறிஞர்’ விருது அவர் எழுத்தாளுமைக்கு மட்டுமன்றி, தன்னலமற்ற சமுதாய நோக்கிற்கும்தான் என்று உணர வைப்பதாய் உள்ளது அவரின் இக்கவிதைத் தொகுப்பு.

அமைதியான இடத்தில் ஆழமும் அதிகம் இருக்கும் எனக் கூறுவர். அது முனைவர் மணவழகனுக்கு மிகவும் பொருந்தும். அமைதியான பேச்சும் நடத்தையும் வீரியம் நிறைந்த சிந்தனைகளோடும் கருத்துகளோடும் சேர்ந்திருக்கும் என்பதன் சிறந்த உதாரணமாக முனைவர் மணவழகன் திகழ்கிறார். அவர் படைத்துள்ள இந்தக் ‘கனவு சுமந்த கூடு’ கவிதைத் தொகுப்பு, படிப்போரின் இலக்கியத் தாகத்தைத் தீர்ப்பதுடன், பயனுள்ள பல புதிய சமுதாயப் பரிமாணப் பார்வைகளையும் காண உதவும் என்பது உறுதி.

முனைவர் மணவழகனின் இக்கவிதைத் தொகுப்பு வெற்றியடையவும் அவர் மென்மேலும் இதுபோன்ற கருத்தோவியங்களைப் படைக்கவும் என் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

*************

கூடாகும் சுள்ளிகள்

கவிஞர் இரா.பச்சியப்பன்

பேராசிரியர்

அரசு ஆடவர் கலைக் கல்லூரி

நந்தனம், சென்னை.

அணிந்துரை

கூட்டின் அடிவயிற்றில் மெத்தென்ற சிறு பஞ்சு மீது…

கண்காணா தூரத்தில் பிழைக்கும்படியான நெடுங்காலம் கடந்த பின்பொழுதொன்றில் பால்ய நண்பனோ ஊர்க்காரனோ எதிர்ப்படும்பொழுது மனசின் அடியாழத்திலிருந்து அப்படியேன் அலையெழும்புகிறது? கரங்கள் பற்றும் தருணத்தில் துளிர்க்கும் கண்ணீரைச் சட்டென்று ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? தனக்குப் பிடித்தமான ஒன்றை எதிர்பாரா கணத்தில் காண நேர்கிறபோது அவ்வளவு எளிதில் முகம் திருப்பிக்கொள்ள இயலுமா என்ன?

சென்னைக்கு வந்த புதிதில் மாநிலக்கல்லூரியின் பின்புறத்தில் வௌவால்கள் நிறைந்த அந்த ஆலமரத்தை அடிக்கடி போய் ஆச்சர்யம் மீதுற பார்த்திருக்கிறேன். ஊரில் இலுப்பைத் தோப்பில் அப்படித்தான் வௌவால்கள் கொத்துக்கொத்தாய் கனிந்திருக்கும். மூங்கில் புதர் வேலியாய் அமைந்த அந்தத் தோப்பில் கங்கையம்மன் அகண்ட கண்களோடு வௌவால்கள் பறப்பதை, விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வௌவால்களின் முகம் அசப்பில் குழந்தையின் முகம்போலவே தோன்றும். நெடுங்காலத்திற்குப் பிறகு சென்னையில் நுணா மரத்தைப் பார்க்கிறபோதும் அப்படித்தான் நிற்கத் தோன்றியது. கம்மம்பூக்களின் வாடையும், நுணா பூக்களின் வாசனையும் தொலைத்த வாழ்வில் எங்காவது அவை தட்டுப்பட்டால் வேறென்னதான் செய்வது?

கவிதைகூட அப்படித்தான் போல. மெல்லிய இசையாய் நமக்குள் தங்கிவிட்ட ஒரு பொழுதை, காலம் ஆற்றிய பெரும் தழும்பை, மழைக்காலத்தில் பழகிய நீச்சலை, நேருக்கு நேர் நின்று ஊழ் துப்பிய எச்சிலை என ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கவிதை பறவைகள் போல. அவை நம்மைப் பொருட்படுத்துவதேயில்லை. அதன் அலகில் இருக்கும் சுள்ளிகளோ, இரையோ நம்மிடம் இருந்து யாசித்துப் பெறாதவை. நமக்குப் போல இல்லை. அதற்கென்று எல்லையற்ற வானமும் சிறுகிளையும் வாய்த்திருக்கிறது. பறவைகள்போல கவிதை செய்கிறவர்கள் பாக்கிவான்கள்.

நள்ளிரவொன்றில் குழல்விளக்கு வெளிச்சத்தில் நண்பர் மணவழகன் கவிதைகளை வாசிக்கிறபோது பறவைகளும் வௌவால்களும் நிறைந்த தோப்பில் நுழைவதுபோலவே உணர்ந்தேன். சருகு மூடிய குளமும் நாவல் மரத்தின் கிளையொன்றிலிருந்து சட்டெனப் பாய்ந்து மீனைக் கொத்தியபடி மறுபடி கிளையமர்ந்து தலைசிலிர்ப்பும் மீன்கொத்தியும், பெரிய மூக்கு விடைக்கும்படி நோக்கும் கங்கையம்மனும் நெடுநாளைக்குப் பிறகு சந்தித்த ஆச்சர்யம்தான். தலைப்புவேறு ‘கனவு சுமந்து கூடு’ என்று வைத்திருக்கிறார்.

சிறியதும் பெரியதுமான சற்றேரக்குறைய எழுபது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து என்னுடன் அவர் மனமுவந்து பழகிவந்திருக்கிறார். சங்க இலக்கியங்களை வாசித்திருக்கிற, ஆய்ந்திருக்கிற அவரின் ஆழம் நம்மை தூரவே நிறுத்திவைத்து வியக்க வைக்கும். இடையில் முளைக்கும் சிறுபுதரை அழித்து, எழுப்பி வைத்திருக்கிற தயக்க வேலியினை மிதித்துவந்து அவரின் நட்பு வட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டதற்கு அவருக்குள் இருக்கிற படைப்பாளி ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். இணையத்தில் வெகுகாலமாய் கவிதைகள் எழுதிவந்திருக்கிறார். இணையத்தில் அவரின் வாசகர் வட்டம் மிகப்பெரிது.

இளம் ஆய்வாளருக்கான செம்மொழி விருதினைப் பெற்றிருக்கும் ஒருவருக்குள் இன்னும் அந்தக் கம்மங்கொல்லை குருவிகள் பறக்க, காற்றிலாடும் கொல்லை வனப்பு கூடியிருப்பது மிகுந்த ஆச்சர்யம்தான். தனியார் கல்லூரியின் வேலைப்பளு இடையில் இத்தனை சாத்தியங்களைக் கொண்டிருப்பது சாதாரணமாதல்ல.

இந்தத் தொகுப்பினை வசதிக்காக மூன்று வகையாகப் பகுத்துக்கொள்ளலாம். உருகி உருகிக் காதலிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள்; இழப்பின் காயத்தின்வழி கசியும் துளிகள்; தனக்கான அரசியலை முழங்கும் பதாகைகள் என பெரும்பான்மையான கவிதைகளை ‘உத்தி’ பிரித்துக்கொள்ளலாம். நெற்கட்டை அரி அரியாக வைப்பதில் ஓர் அழகு மட்டுமல்ல ஓர் அவசியமும் இருக்கிறது. ஒரே பக்கம் கதிர்வைத்துக் கட்டுக் கட்டமுடியாது. சின்னச்சின்ன கட்டாக்கி கட்டுப்போர் போடுவது ஒருவகை. பென்னைப் பென்னையாய் வைக்கோல் சுமைகட்டி வைக்கோல் போர் போடுவது ஒருவகை. முன்னதில் தனித்தனியாக எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதுபோலவே பின்னதில் பின்னிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவிதையைச் சொல்லியிருக்கிற உத்தியும் அதாவது, கட்டியிருக்கிற பாங்கும் அதனை வரிசைக்கிரமாய்த் தொடுத்திருக்கிற பாங்கும் மிக நுட்பமானது.

சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகள்

அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்

பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள்

முளைக்காத தானியங்கள் / விதை கொடுக்காத கனிகள்

உயிரில்லா முட்டைகள் / தாய் தந்தை உறவறியா

குளோனிங் குழந்தைகள்

எனச் சொல்லுகிற ஒரு ஒழுங்குமுறை. மனதுக்குள் இசை அலையைச் சீராக எழுப்பி கரையில் வந்து அடிப்பதுபோல் கடைசியில் மனிதக் கொடூரத்தின் முகத்தை எழுதுகிற எழுத்து லாவகம் அடுத்து இப்படிச் செல்கிறது…

ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும் / அறிவியல் வளர்ச்சிகள்

ஆடுகளை மலையில் விட்டு / அருகிருக்கும் கொல்லையில் 

கதிரொடித்து / பால் பருவ கம்பைப் பக்குவமாய்    நெருப்பிலிட்டு /

கொங்கு ஊதி தாத்தா கொடுத்த இளங்கம்பின் சுவைக்கு /

ஈடு இது என்று / எதைக்காட்டி ஒப்புமை சொல்வேன் /

 பச்சைக் கம்பு தின்றதே இல்லை / ஆதங்கப்பட்ட தோழிக்கு

பல மைல் வெயில் கடந்து வந்தவனுக்கு சட்டென்று ஒரு புங்கை நிழல் கிடைப்பதுமாதிரி, கொடுமை வாழ்வை அடுக்கிச் சொல்லிவிட்டு ஒரு கம்மங்கதிரில் இழந்த வாழ்வின் ருசியைச் சொல்லியிருக்கிற நேர்த்தி சாதாரணமானதல்ல. இங்கே வருகிற ஆடுமேய்த்தலும், கம்மங்கதிரைச் சுட்டுத்திண்ணலும் அதைமட்டுமேயா உணர்த்தி நிற்கின்றன? பறவை அமர்ந்தறியா செயற்கை மரங்களெனச் சொல்லுகிறபோது மரங்களை மட்டுமா சுட்டுகிறது? வரிசையாய்க் கடக்கும் நமது நாட்கள் கூட மரங்கள்தானே. நமது நாட்களில் ஒரு கணம் பறவை அமர்வதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டா? நமது மரங்கள் எதற்காகவோ வானுயர்ந்து நிற்கின்றன. அதுதரும் நிழல் ஒன்றுதானா வேரோடி நிற்பதற்கான காரணம். இதே போன்றதொரு இழப்பின் வலி சொல்லும் மற்றொரு அற்புதமான கவிதை ‘இக்கரைக்கு அக்கரை’. ‘வீடு சுமந்து அலைபவன்’ கவிதை தமிழர்களின் அவல வாழ்வினையும் சேர்த்தே சொல்லுகிற கவிதை.

இருந்தது இல்லாமல் போகும்போதும்

          இருப்பு இடம்மாறிப் போகும்போதும்தான்

          உரைக்கிறது / ஏதிலிகளின் வலி

தன்னனுபவத்தில் சிறகு விரித்து பெரும் ஜனசமூகத்தின் நெடுங்காலத் துயர வரலாற்றோடு கைகோர்த்து நிற்கிறது இக்கவிதை.

இத்தொகுப்பு காதல் கவிதைகளால் மேலும் அழகாகிவிடுகிறது. காலகாலமாய் ஓடும் ஜீவநதியின் அடிமடியில் உருண்டு விளையாடும் கூழாங் கற்களின் மினுமினுப்பில் இருக்கிறது நீரின் காதல். ‘உதிர்ந்த சிறகு’ என்ற கவிதையில் இப்படி வருகிறது.

பெரும் பயணத்திலும் பேருந்து ஓட்டத்திலும்

          கண்ணில்படும் பலகையின் பெயரைக்

          கண்டு மனம் பதைபதைக்கும் – அவள்

          வாழ்க்கைப் பட்டது இவ்வூரோ?…

ஓடுகிற ஓட்டத்தில் கண்ணில் அடிக்கும் முள்ளாய் அந்த ஊர்ப்பெயர். தூளம் உளுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்த கூரை ஒழுகி ஓதமேறிக்கிடக்கும் மண்சுவராய் மனம். மழைக்காலத்தின் நள்ளிரவொன்றில் குடும்பமே அலறுவதுபோல ஏதோ ஒரு பொழுதில் அந்த ஊர்வழியே கடக்கிறபோது நினைவுகளின் அலறலை என்ன செய்துவிட முடியும். ஒரு கவிதை எழுதுவது தவிர.

எந்திரமாய் கை குலுக்கி / என்றும் போல்

          புன்னகைத்துப் பிரிந்த /  அந்தக் கடைசி நிமிடம்…

இப்படி நிறைய இடங்களைச் சொல்லலாம். காதல் கவிதை எழுதும்போது எந்தச் சவாலும் எழுந்து நிற்கவில்லை. சண்டையில் தோற்றுப்போனவனின் தூங்காத இரவுகள் போலவே அவஸ்தைப்படுத்துகிற வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.

அரசியல் கவிதைகள் வனைதலில் தமிழர்களின் குருதியே முதன்மையாகிறது. இழந்த மண்ணிலிருந்து சிந்திய ரத்தம் கொண்டு ஆத்திரங்கொண்டு எழுத்தைச் சுற்றி வெறிகொண்ட கைகள் விரல் நுணுக்கத்தில் எழும்பி வந்தவை அவை. முடிகிற இடத்தில் சரியாக அறுத்து மாலை வெயிலில் காயவைத்துத் தட்டித்தட்டி சூளையிலிட்டதை மனம் தட்டிப்பார்க்க திசைகள் அதிர்கின்றன.

இத்தொகுப்பில் செம்பாகத்திற்கும் அதிகமானவையாக இடம்பெற்றிருப்பவை அரசியல் கவிதைகள். ‘பொய்த்தேவு’ கவிதையில் வெளிப்படையாகவே தனது அரசியலைச் சொல்கிறார் கவிஞர். அதற்கான வரலாற்று நியாயங்களையும்  வாசகனுக்குத் தெளிவுபடுத்துகிறார். பத்து கோடிக்கும் மேலாக வாழ்கிற ஒரு இனம் தமது ஒரு பகுதி மக்கள் துடிக்கத்துடிக்கச் சாகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே எதனால்? காஷ்மீரிகளைப் போல தனித்த தேசிய இறைமை கொண்ட இனமாக, கவிஞர் சொல்லில் சொன்னால் நான் தமிழன் என்கிற ஒரு தெளிவு இல்லாததுதானே காரணம். இந்த இனம் நினைத்திருந்தால் ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கிப் பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்காதா என்ன? ‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லா பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. ‘பிரபாகரன்’ கவிதை நம்பிக்கைப் புள்ளியிலிருந்து எழுந்ததாக இருக்கிறது.

இது மிளகாய்த் தோட்டத்தில் முதல் ‘வெப்பு’ போல. உள்ளே நுழைந்து பழமெடுக்கும்போது பூவும் பிஞ்சும் உதிராமல் நடக்கப் பழகும் நளினம் வேண்டும். நாற்று நட்டதிலிருந்து பார்த்தால் முதல் வெப்பு நெடுங்காலம் கடந்ததாய்த் தோன்றும். ஆனால் அவை நேர்த்தியானவை. பழுதில்லாதவை. அடுத்த ‘வெப்பு’ மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த தொகுப்பை இதைவிட நேர்த்தியாய் கொண்டுவருவார் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உதாரணம். ஏனெனில் தமிழ் வாழ்வு என்ற வற்றாத கிணறு இவர் மனசில் உண்டு.

மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் ஆந்தைகளும் வௌவால்களுமென பறவைக்காடாய் இருந்த அந்த இலுப்பைத் தோப்பை விழுங்க சுற்றியிருந்தவர்களுக்குப் பேராசை வந்தது. வெங்கோடை இரவுப் பொழுதொன்றில் மூங்கில் புதர் தீப்பற்றியதாய்ப் பேச்செழுந்தது. கொள்ளிவாய் பிசாசின் வேலையென்று வேடிக்கை பார்த்தனர். குஞ்சுகள் கருகும் நிணவாடையும் புகையும் ஊரைச் சூழ, இலுப்பைத் தோப்பின் பெருமைமிகு வரலாற்றைத் திண்ணைதோறும் வாய்வலிக்கப் பேசினர். பறவைகளின் அலறல் ஓய்ந்த மாலையொன்றில் எரிந்த விறகுகளை ஆளாளுக்குச் சுமந்துவந்தனர். வரப்புகள் எல்லை மாறின. பஞ்சாயத்தின் தீர்மானங்கள் மாறின. கங்காதேவி மொசைக் பதித்த சிறு கோயிலில் பளபளக்க அருள் பாலிக்கிறாள். கங்கா நகர் என்று அறிவிப்புப் பலகையொன்று வழிகாட்டுகிறது. வௌவால்களையும் குருவிகளையும் இலுப்பை மரங்களையும் மனதில் சுமந்து பித்தேறித் திரிபவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சடைமுடி குலுங்க மந்திரம் ஜெபிக்க ரத்தப் பலியிட்டு நிணச்சோறிறைத்து ஏவிய இந்த ரத்தக்கவிதைக் காட்டேறி பழிவாங்க மாட்டாளா? செய்வாள்.

******

கூடாகும் சுள்ளிகள்

கவிஞர் யாழினி முனுசாமி

பேராசிரியர்

எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி

தமிழினத்தைப் போற்றும் தமிழ்மனம்

ஒரு மனிதன் படைப்பாளியாக பரிமாணம் கொள்ளும் தருணம் உன்னதமானது. ஏனெனில் படைப்பாளியாக இருப்பதென்பது சமூக மனிதனாக இருப்பதாகும். இன்றைய சமூகம் என்னவாக இருக்கிறது என்பது கண்கூடு.

கண்முன் நடக்கும் எத்தகைய அநியாயம் குறித்தும் கவலைப்படவோ கவனங்கொள்ளவோ அவன் தயாராக இல்லை. விலங்குகளைப் போலவே புசித்து, புணர்ந்து, இனப்பெருக்கம் செய்து சந்ததியை வளர்ப்பதோடும் வளப்படுத்துவதோடும் அவன் கடமை முடிந்துவிடுவதாகக் கற்பிக்கப்படுகின்றான். ஆனால், ஒரு உண்மையான படைப்பாளியால் அப்படி வாழ முடியாது. சமூகம் குறித்த அக்கறை உள்ளவனாக, சமூகத்தை மேம்படுத்தும்/மாற்றும் பேரவா உள்ளவனாக அவனால் தொழிற்பட முடியும். அப்படித் தொழிற்படுபவனே உண்மையான சமூகப் படைப்பாளியாவான். அத்தகைய ஒரு படைப்பாளியாக- கவிஞராகப் பரிமாணம் கொண்டிருக்கிறார் ஆய்வாளர் முனைவர் ஆ.மணவழகன். தமிழின் செழுமையான சங்க இலக்கியத்தில் திளைத்தூறி, ஆய்ந்து, ஆய்வாளராக நிலைபெற்று, கவிதைத்துறைக்கு வந்திருக்கிறார் என்றாலும், கவிதை இவருக்குப் புதியதல்ல. இணையதள வாசகர்களுக்குக் கவிதைவழி நன்கு அறிமுகமானவர் இவர்.

எதை எழுதவேண்டும் என்பதிலாகட்டும், எதை எழுதக்கூடாது என்பதிலாகட்டும் ஒவ்வொருவருக்கும் ஓர் அரசியல் உண்டு. அப்படி அரசியல் இருப்பதொன்றும் தேசத் துரோகமல்ல; இல்லாமல் இருப்பதுதான் தேசத் துரோகம். மணவழகன் என்கிற மனிதனின், தமிழ்ப் பேராசிரியனின், கவிஞனின் மனம் எத்தகையது எனும் கேள்விக்கு அவரது கவிதைகளின்வழி ஒரு வரியில் பதில் சொல்லவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்; ‘தமிழினம் போற்றும் தமிழ்மனம்’. இந்தக் கவிதைத் தொகுதியைப் படித்து முடிக்கையில் இதை உணரமுடிகிறது. அகம் சார்ந்த கவிதைகளானாலும் சரி, புறம் சார்ந்த கவிதைகளானாலும் சரி இந்தத் தமிழ் மனத்தையே வெளிப்படுத்துகின்றன.

தமிழினம் குறித்துப் பெருமைப்பட இனியொன்றுமில்லை. துரோகங்களாலும் வஞ்சகங்களாலும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் குறித்துப் பெருமைப்பட என்ன இருக்கிறது? தனிமனிதர்களும் தன்னலவாதிகளாகவும் இரட்டை வேடதாரிகளாகவும் இருக்கின்றனர். அதற்கு இலக்கியம் என்ன செய்யும்? பெரிய புரட்சியை உண்டாக்குமோ உண்டாக்காதோ தெரியாது. ஆனால், ஒன்றைச் செய்யும். தனிமனிதர்களின் ‘சிரித்தாளும் சூழ்ச்சி’யையும், அரசியல் வேடதாரிகளின் நாடகங்களையும் அம்பலப்படுத்தும். மனிதர்களை ஓரளவிற்கேனும் மேம்படுத்தும். மேலாக, எழுதப்பட்ட இனத்தை அடையாளப்படுத்தும். வீழ்த்தப்பட்டவர்களின் வீரத் தியாகத்தையும் வீழ்த்தியவர்களின் வஞ்சகத் துரோகத்தையும் வரலாறாகப் பதிவு செய்யும். அத்தகைய பதிவுகள் இந்தக் கவிதைத் தொகுதியில் நிறைய காணக்கிடைக்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள ‘தமிழ் அடையாளம்’ சார்ந்த கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ‘இந்தியத் தமிழனாக’ உணரும் தமிழகத் தமிழனை, ‘தமிழனாக’ உணர்வுபெற வைக்க இக்கவிதைகள் பயன்படக்கூடும். ‘திராவிடன்’, ‘இந்தியன்’ என்பதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதனை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறார்.

‘கன்னடம் / தண்ணீர் தரட்டும் /         நானும் திராவிடன்                                      இந்தியா / ஈழம் அமைத்துத் தரட்டும்

          நானும் இந்தியன் / கானல்நீர் தாகம் தீர்க்காது

          விட்டுவிடு / நான் தமிழன்

உண்மைதானே! ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தி மாணவன் தாக்கப்பட்டால் ‘இந்திய மாணவர்’ தாக்கப்பட்டார் என்று குரல் கொடுக்கிறார்கள், எழுதுகிறார்கள். பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக்கொல்லப்படும் சிங் சிப்பாய் ‘இந்திய சிப்பாய்’ ஆகிறார். ஆனால், இராமேஸ்வர மீனவர்கள் மட்டும் ‘தமிழக மீனவர்கள்’ ஆகிறார்கள். வெளிநாட்டில் வாழும் ‘சிங்’குகளின் ‘மயிர்’ பிரச்சினைக்காக (தாடி வைத்துக்கொள்ளுதல், தலைப்பாகை அணிதல்) குரல் கொடுக்கும் இந்தியப் பிரதமர் தமிழனின் உயிர் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லா கோவமும் சேர்ந்தால்தானே கவிதை.

நடையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எளிமையும் நவீனமும் இவரது கவிதைகளின் தனித்துவ நடையாக இருக்கின்றது. ‘…. தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை தெரிந்துரைப்பது கவிதை’ என்ற ‘கவிமணி’யின் நடைக் கொள்கையைப் பின்பற்றி எழுதியிருக்கிறார். காதல் கவிதைகளைத் தவிர்த்த பிற கவிதைகளையே கவிஞரை அடையாளப்படுத்தும் கவிதைகளாகக் கொள்ளலாம். சொல்முறையிலும் காதல் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும், அறிவுறுத்தும் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் நவீனத் தன்மை கொண்ட கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் இயல்பாகவே அதனதன் தன்மைக்கேற்ற நடையில் அமைந்திருக்கின்றன.

தமிழ்க் கவிதை மரபில் குழந்தை பற்றிய சித்திரிப்புகள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. தம்மக்களின் எச்செயலும் இன்பம் பயக்கக் கூடியதே. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்/சிறுகை அளாவிய கூழ்’ என்கிறார் திருவள்ளுவர். குழந்தைகள் பற்றிய கவிதைகளைப் படிக்கும்போது நம் மனம் பறக்கத் தொடங்கிவிடுகிறது. குழந்தைகளின் குதூகலம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ‘பெருமாள் திருமொழி’யில் குலசேகர ஆழ்வார் குழந்தைக் காட்சிகளை மிக அழகாகத் தீட்டியிருப்பார். மனத்தைக் கிளர்த்து குழந்தைமைச் செயல்களை ‘படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்’ என்ற சங்கப் பாடலில் (புறம்.188) பாண்டியன் அறிவுடைநம்பி வியக்கிறார்.

பருகப் பருக வற்றாத அமிழ்தம் குழந்தைமை இன்பம் என்பதை இன்றும் வெளிவந்த வண்ணமிருக்கும் கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. கவிஞர் எழுதுகிறார்,

‘உருக வைக்கும் / பனிக்கட்டி

          என் மடியில் / எழில்மதி

அறிவுடை நம்பியின் பாட்டைப் பிழிந்து வடிகட்டிக் கொடுத்திருப்பதைப்போல் அத்தனை ‘சில்லென்று’ இருக்கிறது இக்கவிதை. குழந்தைகளின் கிறுக்கல்களை நவீன ஓவியங்களாக இரசித்திருக்கிறோம். ஆனால், கசக்கி எறிந்த காகிதத்தையே கவிதையாகப் பார்க்கும் மனம் எழில்மதியின் அப்பாவிற்கு வாய்த்திருக்கிறது.

சோழனின் பிறந்தநாளுக்காக நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எல்லோரும் இன்புற்றிருக்கும் இத்தருணத்தில் அரண்மனை அலங்காரத்தின் போது கூடிழந்த சிலந்திக்காக ‘சிலம்பி தன் கூடிழந்த வாறு’ என்று வருந்துகிறான் முத்தொள்ளாயிரப் புலவன். இவர் கவிதையிலும் முத்தொள்ளாயிரக் கவிஞனின் தாக்கம் வெளிப்படுகிறது.

‘ஐயோ! / துடைத்து விடாதே

          ஒட்டடை அல்ல

          வீடு! /          சுவரில் சிலந்தி

இப்படியாக, சங்கக் கவிஞனின் தொடர்ச்சியாகவும் முத்தொள்ளாயிரக் கவிஞனின் நீட்சியாகவும் திகழ்கிறார் கவிஞர் ஆ.மணவழகன்.

பெருநெல்லியின் சுவையும், மலைக் கள்ளிமடையானின் தித்திப்பும் இவர் கவிதைகளில் உண்டு. புளிக்குழம்பு, ஆவிபறக்கும் கேழ்வரகின் உருண்டை, இளம் முருங்கைக்கீரைக் கூட்டு, புதுச்சோளச் சோற்றுக் கவளம், களிகம்பஞ்சோறு ஆகியவற்றின் மீதான ஏக்கம் கலந்த ஆசை இவரது கவிதைகளில் மணக்கின்றது.

எழுத்து என்பது வெறும் எழுத்தாக மட்டுமே இருப்பதில்லை. அது, படிப்பவரின் சிந்தனையைக் கட்டமைக்கிறது. அச்சிந்தனை வாழ்க்கையை வழிநடத்துகிறது. சமயங்களில் அதனால் உணர்வுக்கும் நடப்புக்கும் இடையே ஊசலாட்டம் ஏற்படுகின்றது. இந்த மனப் போராட்டத்தை வெளிப்படுத்துகிறது ‘நன்றாமோ தீது’ கவிதை.  ‘வீடு சுமந்து அலைபவன்’, ‘வாழ்க்கை வணிகன்’, ‘கனவு சுமந்த கூடு’, ‘எம்மையும் மன்னியும்’, ‘யார் நீ’, ‘மே 2009’, ‘புதுமனை புகுவிழா’, ‘பொய்த்தேவு’, ‘பிறர்தர வாரா’ போன்ற கவிதைகள் குறிப்பிடத்தகுந்த கவிதைகளாகும்.

அரசியல் கவிதைகளில் தோழனாக, கிராமியக் கவிதைகளில் மண்ணின் மைந்தனாக, நன்னெறி வலியுறுத்தும் கவிதைகளில் ஆசிரியனாக, பிற உயிர்க்காக வருந்தும் கவிதைகளில் ஜீவகாருண்யவாதியாக, காதல்-குழந்தை-நட்பு-அலுவலகம் சார்ந்த கவிதைகளில் சக மனிதனாகப் புலப்படுகிறார் கவிஞர். தூக்கணாங்குருவிக் கூட்டைப் பற்றி யாரேனும் இப்படி வியந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

‘ஆயிரம் தாஜ்மகால் / அதிசயம்

          ஒற்றைச் சித்தனின் / உயிர்த்தவம்

உண்மைதானே! ‘உள்ளம் செதுக்கும் உளிகள்’ கல்லூரிப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கவிதை.

ஒழுக்கம் படி! /      எதிர் நிற்போர்

          உணர்வைப் படி!’

          ‘ஏழ்மை கீழ்மையல்ல

          உண்மை / நாகரிகம் படி!’

இப்படியான சமூக ஒழுங்கமைப்புக்கான பாடங்களைப் படிக்க வலியுறுத்துகிறார். இது, மாணவர்களுக்கான கவிதை மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கான கவிதையும்கூட.

இவரது கவிதைகளில், ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கைப் பற்றிய விமர்சனக் கவிதைகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. அரசியல்வாதிகள், திரைத்துறையினர், பெருந்தொழிலதிபர்கள் போன்றோர் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும் அது ‘வாராக்கடன்’. ஆனால், ஒரு விவசாயியால் கடனைத் திருப்பிக்கட்ட இயலாமல்போனால் அவரது வீடு ‘ஜப்தி’ செய்யப்படும். இதுதான் இந்தியா!. ‘புதுமனை புகுவிழா’ கவிதை இந்த அவலத்தை, அநியாயத்தை வெளிப்படுத்துகின்றது.

‘பிறர்தர வாரா’ கவிதையில், குடிகாரர்களையும், போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்களையும் அழகான அனுபவக் கவிதையின் ஊடாக எச்சரிக்கின்றார் கவிஞர். மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் அரசாங்கத்தின் செயல்திட்டத்திலிருந்து விடுபடும் வழி மக்களிடமே உள்ளதை உணர்த்துகிறார். ஒப்புசாண் மலைமீது பீடி பற்றவைத்தது முதலான கிராமத்து ‘திருவிளையாடல்’களையும், 329, மூன்றாவது மாடியில், ‘குழந்தை மாதிரி சார்/ஒன்னுமே பண்ணாது’ என்று ‘இராணுவ ரம்மை/ சோடாவில் கலந்து’ குடித்த நகரத்துத் திருவிளையாடல்கள்வரை அத்தனையும் பட்டியலிட்டு, அவற்றில் ஒரு ’….ம்’  இல்லை என்று வாக்குமூலம் கொடுத்து (சில நண்பர்களையும் காட்டிக் கொடுத்து) ‘விட முடியலை’ என்பவர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார்.

‘உன் மனைவி /         விதவையாவது பற்றி

உன் குடும்பம் /         நடுத்தெருவில் நிற்பது பற்றி

எந்த அரசுக்கும் / இங்குக் கவலையில்லை’

உண்மைதானே! எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. எத்தனை கோடி ‘கல்லா’ கட்டுகிறது என்பதுதான் அவர்களுக்கு முக்கியம்.

ஒடுக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையேயும் உழைக்கும் வர்க்கத்திடமும் குடித்துச் சீரழிவது என்பது மிகச் சாதாரண நிகழ்வுகளாகும். ஆனால், ஊருக்கே அறிவுரை சொல்லும் அக்ரகாரத்து மணி ஐயரின் மகன் குடித்துவிட்டு சாக்கடையில் விழுந்துகிடக்கும் அளவுக்கு நம் செம்மொழித் தமிழ்த்திருநாட்டில் ‘மது’ ஜனநாயகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இத்தொகுதியில் பேசுவதற்குரிய கவிதைகள் இன்னும் நிறைய உள்ளன. பிரதியில் பயணிக்கையில் நீங்களே அதை உணர்வீர்கள். மேலும், ஆய்வுரையில் எல்லாவற்றையும் சொல்லிவிடவும் சாத்தியமில்லைதானே!

தமிழ்க் கவிதை மரபை அறிந்தவர் கவிதைத் துறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நல்ல கவிதை நடையும் சீரிய சமூகச் சிந்தனையும் இவருக்கு ஒருங்கே வாய்த்திருக்கிறது. இவர் தொடர்ந்து சிரத்தையுடன் செயல்பட்டு நிலையானதொரு இடத்தைக் கவிதையிலும் பெறவேண்டும் என்பதே எம்போன்றோரின் அவாவாகும்.

‘எமக்குத் தொழில் கவிதை

          நாட்டிற்குழைத்தல்

          இமைப்பொழுதும் சோராதிருத்தல்

எனும் பாரதியின் வரிகளை நினைவூட்டி முடிக்கிறேன்.

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!