கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள்

புளிக்குழம்போடு 

அரைத்த கேழ்வரகின்

ஆவிபறக்கும் உருண்டை!

இளம் முருங்கைகீரை கூட்டோடு

இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு!

நாட்டுப் புளிச்சக்கீரையோடு

புதுச் சோளசோற்றுக் கவளம்!

இம்முறையேனும்

கெங்கவல்லி சென்றதும்

ஆக்கித்தரச்சொல்லி

அம்மாவிடம் கேட்கவேண்டும்


ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே

நாக்கு நங்கூரம் போடும்!

ஏளனப் பார்வைக்கு இலக்காகும்

உயிர்க்கொல்லிப் பொடிகளால்

உருவான மசாலா குழம்பும்¢

உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட

கடையரிசிச் சோறும்!


இக்கரைக்கு அக்கரை பச்சை

'புள்ளைங்க வந்தா மட்டுந்தான்

நல்ல சோறு சாப்பிட முடியுது'

அப்பா சான்றிதழ் தருவார்

எனக்காகச் சமைக்கப்பட்ட

கடை அரிசி  சோற்றுக்கும்!

உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான

அதே மசாலா குழம்புக்கும்!


இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்

தொண்டைக் குழியில் உருட்டி வைத்த - என்

களி கம்பஞ்சோற்று ஆசை!



***


அழைப்பிதழ்


என் கையெழுத்தைப் பார்த்ததும்

கண்டுபிடித்து விடுவாயோ !

சிறுமூளையின் ஏதோ ஓர் அறையில்

சிறைபட்டுக் கிடந்த நினைவுகளைச்

சிறகடிக்கச் செய்வாயோ !


பயணச்சீட்டு வாங்கிக் கொடுப்பதில்¢

பழக்கம் ஆன அந்த நாள் முதல்....

படிக்கட்டில் அமர்ந்து பாடங்களையே

படிப்பதாய் பாவனைகள் செய்த

அந்த நாள் முதல்...!

எனக்காக இதைச் செய்யக் கூடாதா?

உரிமைகள் உறவாடிய  அந்த நாள் முதல்...

அந்த மழை நாளில்..

கல்லூரிப் பருவத்தின்

கடைசி நிமிடத்தில்...

'இன்றாவது சொல்லிவிட மாட்டாயா!’

ஏதேதோ எதிர்பார்ப்புடன்...

எந்திரமாய் கைகுலுக்கி..

என்றும் போல் புன்னகைத்துப் பிரிந்த

அந்தக் கடைசி நிமிடம் வரை...

அத்தனையும் உன்

நினைவிற்கு வருமோ !


இதோ,

உன் முகவரியிட்ட விழா அழைப்பிதழை

அஞ்சல் செய்துவிட்டு,

உனக்கான இருக்கையை

வெறித்தபடி நான்...!


யார் கண்டது?

இந்நேரம் உன் இருப்பிடம் கூட

இடம் மாறி இருக்கலாம்!


***

நாகரியம்

சாக்கடை நாற்றத்தோடு

செயற்கை நீரூற்றுகள்!

வேரோடு பறித்து வந்து

வேற்றிடத்தில் நடப்பட்டு

அலங்காரத்திற்கு மட்டும்

அணிவகுக்கும் மரங்கள்!

முளைக்காத தானியங்கள்!

விதை கொடுக்காத கனிகள்!

உயிர் இல்லா முட்டைகள்!

தாய்-தந்தை உறவறியா

செயற்கைமுறை குழந்தைகள்!

பார்த்துப் பல ஆண்டுகள்

ஆனாலென்ன?

பக்கத்து வீட்டில்

வாழ்ந்தால் என்ன?


விரல் அசைவில்

நலம் கேட்டு

வேலை என்று

விரைந்தோடும் மனிதர்கள்!

ஆணிவேரில்

வெண்ணீர் ஊற்றும்

அறிவியல் வளர்ச்சிகள்!


எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன்?

'பச்சைக் கம்பு தின்றதே இல்லை'

ஆதங்கப்பட்ட தோழிக்கு...


ஆடுகளை மலையில் விட்டு..

அருகிருக்கும் கொல்லையில்

கதிரொடித்து...

பால் பருவ கம்பைப்

பக்குவமாய் நெருப்பிலிட்டு...

இம்மி ஊதித் தாத்தா கொடுத்த

இளங்கம்பின் சுவைக்கு

இன்றுவரை  ஈடில்லை

எதுவும  என்று!

***

புதுமனை புகுவிழா



காட்டின் பத்திரம் வைத்து - ஏர்

மாடுகளைக் கலப்பையோடு விற்று,


ஆசை ஆசையாய் வளர்த்த

மரங்களையும்

அக்கா வளர்த்த ஐந்தாறு

ஆடுகளையும்

அடிவிலைக்கு அம்போவென்று

கொடுத்து,


அடுத்த பருவத்திற்கு எடுத்து வைத்த

விதை நெல்லையும்

அம்மாவின் ஒற்றைக் கொடியையும் விற்று,

வீடு கட்டினார் அப்பா...


குடிபுகுமுன் ஓலை வந்தது..

இம்முறையும்

தவணை தவறினால்..

வீடு

தாழிடப்படும் என்று..!

***

என்றாவது ....எங்காவது....


ஐயோ!

ஆச்சர்யம்

அப்படியே இருக்கிறாய் !!!

அகமகிழ்ந்து போவாயோ !


பார்க்க வேண்டும்

என்றிருந்தேன்

பார்வையில் நீ பட்டாய்

'படபடப்பாய்ச் சொல்வாயோ' !


சொல்ல வந்து மறைத்ததை

சொல்லாமல் மறந்ததை

சுகம் சுகமாய்ச் சொல்வாயோ !


சிறுசிறு சோகங்கள்

சொல்லவேண்டும் என்றிருந்தேன்

சோகம் சொல்லி

சோகம் தீர்ப்பாயோ !


ஏதேதோ

சொல்ல வந்தும்

எதுவும் முடியலயே

ஏக்கமாய்ப் பார்ப்பாயோ !


நீ போகும் அவசரத்தில்

நிற்கக் கூட நேரமில்லை

புன்னகையை வீசிவிட்டுப்

புயலாக மறைவாயோ ?


இல்லை,

எங்கேயோ

பார்த்த முகம்

எதுவும் நினைவில்லை

நீ

'எனைக்கடந்துச்

செல்வாயோ' ?


***

தித்திப்பு


வெயிலின் வேட்கைக்குத்

துளித்துளியாய்க் கடித்து

சுவைத்துச் சுவைத்து விழுங்கி

வெகுநேரம் கழிந்தும்¢..

வீடு வந்து குடிக்கும்

நீரோடு உட்செல்லும்...


பெருநெல்லியின்

சுவையோடு..

காட்டுக் கள்ளிமடையானின்

தித்திப்பு!


என்

நினைவின்

ஒவ்வொரு துளியிலும் நீ!

***


கனவு சுமந்த கூடு

கடைக்கால்

எடுக்கையில்

ஒதுக்கிவிட்ட

வேப்பங்கன்று..


தளிர் தாங்கி...

கிளை விரித்து...

நிழல் பரப்பி...

கூடு சுமக்கும்

மரமாய்...

கனவு இல்லமோ

இன்னும்

'கடைக்காலாய்...!

***


முரண்

பூச்சூடி

பொட்டு வைத்து

ஆடை உடுத்தி

அலங்காரம் செய்த

அழகு பொம்மையோடு..

அம்மணக் குழந்தை!

எங்கள் தேசம்!


admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!