
நூல்: ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்
Research and Publication Ethics
ஆசிரியர்: முனைவர் ஆ.மணவழகன், ச.மாலதி.
அணிந்துரை
முனைவர் ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு உயர்கல்வித் துறைகளிலும் ஆராய்ச்சி நெறியிலும் பல்வேறு புதுமைகளைத் தோற்றுவித்து வருகிறது. குறிப்பாக, ஆராய்ச்சிக் கட்டமைப்புகளில் நெறிமுறைகளை அவ்வப்போது வகுத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயராய்வு நிறுவனங்களுக்கும் மொழிந்து வருகிறது. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வரையறுத்து வழங்கும் நெறிமுறைகளோடு, பல்கலைக்கழகங்களும் தனித்துத் தங்களுக்கென வகுத்துள்ள பொருண்மைகளோடு ஆய்வு முன்னெடுப்புகளில் புதுமைகளைக்காண முனைகின்றன. அதேவேளையில், மேலைநாடுகளில் அறிவியல், மருத்துவம், வணிகவியல் போன்ற துறைகளில் ஆய்வுகளுக்கும் ஆய்வு வெளியீடுகளுக்கும் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஆய்வு நெறிமுறைகள் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகப் பின்பற்றப்படுகின்றன. மொழி, இலக்கண-இலக்கிய ஆய்வுகளும் அவற்றைச் சார்ந்தே இயங்குகின்றன.
நம் நாட்டில் மொழி-இலக்கிய ஆய்வுகளிலும், ஆய்வு வெளியீடுகளிலும் முழுமைபெற்ற வரையறைகள் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, ஆய்வுக் கட்டுரை எழுதுவதிலும் கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிடுவதிலும் ஒழுங்கமைக்கப்பட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. தமிழியல் ஆய்வுகளைப் பொறுத்தவரையில் நெறிப்படுத்தப்பட்ட, ஒரே தன்மையிலான ஆய்வு முறைகள் என்பது நடப்பில் இல்லை. ஆய்வு அரங்குகளும், ஆய்வு இதழ்களும், நிறுவனங்களும் முறைப்படுத்தி, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒற்றை நெறிமுறையை ஆய்வாளர்களுக்கு இதுவரை வழங்கவில்லை. தொடக்கக்காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட ஆய்வியல் நெறிமுறைகளே தமிழியல் ஆய்வுகளில் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன! ஆனால், இன்றைய புதுமை உலகில் ஆய்வுகள் அறிவியல்மயமாக்கப்பட்ட சூழலில், மின்ணெண்ம ஆய்வு மூலங்களை அதிகமாகப் பயன்படுத்துகிற நிலையில் இவை போதுமானவையாக இல்லை.
புதுதில்லியிலிருந்து வார இதழாக யுனிவர்சிட்டி நியூஸ் என்பதை இந்தியப் பல்கலைக்கழகக் கூட்டு நிறுவனம் தொடர்ந்து வெளியிடுகிறது. இவ்விதழில் பல்கலைக்கழகப் பட்டமளிப்புரைகளும், கல்விச் சிந்தனைக் கட்டுரைகளும் ஐம்பது பக்க அளவில் ஆங்கிலத்தில் நுட்பமாக வெளியிடப்படுகின்றன. தமிழியல் ஆய்வு மாணவர்களும் இவ்விதழின் கட்டுரைகளைத் தம் எழுத்துக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதோடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகத்திலும் இடம்பெற வேண்டும் என்பதும் என் விழைவாகும்.
மொழி சார்ந்த, இலக்கியம் சார்ந்த, கலை சார்ந்த அனைத்துவகை ஆய்வுகளும் அறிவியல் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவும் உறுதியாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ‘ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்’ என்ற புதிய பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழியல் ஆய்வுச் செயற்பாடுகளுக்கும் இப்பாடத்திட்டம் கட்டாயமாகிறது. ஆனால், இதற்கான முறையான கருவி நூல்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. இந்நிலையில், முதல் நூலாக இப்பொருண்மையில், ’ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்’ என்ற இந்நூல் வெளிவருகிறது. ஆய்வுகளிலும் ஆய்வு வெளியீடுகளிலும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும், அறத்தையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
முதுகலை மாணவர்கள், ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், தமிழியல் ஆய்வாளர்கள் என அனைத்து நிலையினருக்கும் பயன்படக்கூடிய வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் ஆய்வு இதழ்களை நடத்துவோர், ஆய்வு இதழ்களை அச்சு நூல்களாக வெளியிடுவோர் மற்றும் துறைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்போர் என அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஆய்வு நெறிமுறைகளையும் வெளியீட்டு அறங்களையும் இந்நூல் வழங்குகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழியல் ஆய்வுகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஓர் உயராய்வு நிறுவனம் என்ற வகையில், ஆய்வுச் செயற்பாடுகளில் புதுமைகளையும் நெறிமுறைகளையும் முன்நின்று வரையறுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. அதன் ஒருபகுதியாகவே இந்நூல் அமைகிறது.
மாணவர்கள், ஆய்வாளர்கள் நலன் கருதிக் குறுகிய காலத்தில், சிறப்பாக இந்நூலை உருவாக்கியிருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சமூகவியல், கலை (ம) பண்பாட்டு புலத்தின் இணைப் பேராசிரியரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் மற்றும் பதிப்புத் துறையின் பொறுப்பாளருமான முனைவர் ஆ.மணவழகன் நுண்மான் நுழைபுலம் கொண்ட, பன்மாண் சிறப்பு கொண்ட இளவல். ஆய்வுத் துறையிலேயே தம்மை ஆட்படுத்திக் கொள்ளும் ஆர்வம் கொண்டவர். இவருடைய புலமைக்குக் காலம் தக்க உயர்வூட்டும். நூற்பணியில் இவருடன் இணைந்து செயலாற்றிய முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி ச.மாலதியையும் பாராட்டுகிறேன். ’ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நெறிமுறைகள்’ என்னும் இந்நூல் பன்மடங்கு அச்சாகி பெருகட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
******
ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்
பொருளடக்கம்
ஆராய்ச்சி மற்றும் அறநெறிமுறைகள் அறிமுகம்
- கல்வியியல் ஆராய்ச்சியின் பொருள்-பண்புகள்- நோக்கங்கள்
- கல்வியியல் ஆராய்ச்சியின் தேவையும் இன்றியமையாமையும்
- கல்வியியல் ஆராய்ச்சியின் வாய்ப்புகள்
- அறநெறிமுறையின் பொருள் மற்றும் வகைகள்
- கல்வியியல் அறநெறிமுறையின் தேவையும் இன்றியமையாமையும்
- அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அறநெறிமுறைகள்
கல்வியியல் ஆராய்ச்சியில் நெறிமுறை சிக்கல்களைக் கவனித்தல்
- ஆராய்ச்சியில் அறநெறிமுறையின் தேவை
- ஆராய்ச்சியில் அறநெறிமுறை சிக்கல்கள்
- ஆராய்ச்சியில் தவறான நடத்தை
- கருத்துத் திருட்டு
- கருத்துத் திருட்டின் வகைகள்
- கருத்துத் திருட்டைக் கண்டறியும் நுட்பங்கள்
வெளியீட்டு அறநெறிமுறைகள் மற்றும் திறந்த அணுகல் வெளியீடுகள்
- வெளியீட்டு அறநெறிமுறைகள் – வரையறை
- வெளியீட்டு அறநெறிமுறையின் இன்றியமையாமை
- வெளியீட்டு அறநெறிமுறைகள் மீறல்
- பொதுவானப் படைப்பு உரிமம்
- திறந்த அணுகல் வெளியீடுகள் மற்றும் முன்னெடுப்புகள்
- பொதுவானக் காப்பு உரிமங்கள் (CC)
இதழில் கட்டுரை எழுதுதல்
- ஆய்விதழ் கட்டுரையின் தன்மைகள்
- ஆய்விதழ் கட்டுரையின் வகைகள்
- கட்டுரையின் உள்ளடக்கங்கள்
- நூற்பட்டியல் வழங்கும் முறை
- நூற்பட்டியல் பக்க வடிவமைப்பு
தரவுத்தளங்கள் மற்றும் ஆராய்ச்சி அளவீடுகள் 220
- தரவுத்தளம் மற்றும் தரவுத்தளத்தின் உட்கூறுகள்
- தரவுத்தளத்தின் வகைகள்
- ஆய்வில் தரவுத்தளத்தின் பங்கு
- தரவுத்தளத்தில் அட்டவணைப்படுத்தல்
- மேற்கோள் தரவுத்தளங்கள்
- அறிவியல் வலை – ஸ்கோபஸ் – கூகுள் ஸ்காலர்
- ஆராய்ச்சி அளவீடுகள்
- அட்டவணைப்படுத்தல்
- மேற்கோள் மற்றும் குறிப்பிற்கான இணைய சேவைகள்
நூல்கள் பெற:
முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தரமணி, சென்னை 600 113. அலைபேசி: 9789016815