சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவ மேலாண்மை

சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவ மேலாண்மை

முனைவர் ஆ.மணவழகன், இணைப்பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. சூலை,2019.

(அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 06.07.2019 அன்று வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை)

அறிமுகம்

சமூக வளர்ச்சியானது, அடிப்படைத் தேவைகளான உணவு-உடை-உறையுள் என்பனவற்றின் நிறைவு, உடல்நல மேலாண்மை ஆகியவற்றை வேர்களாகக் கொண்டது. இவற்றை அடித்தளமாகக் கொண்டே ஏனைய அனைத்து வளர்ச்சி நிலைகளும் கட்டமைக்கப்படுகின்றன. சமூகவியல் நோக்கிலான இவ்வடிப்படைத் தேவைகளையும் இவற்றின் தன்மைகளையும், அவற்றின் நிறைவிற்கானச் செயல்பாடுகளையும் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பாகவும் அறிவுறுத்தல்களாகவும் வழங்குகின்றன.

பொதுவாக, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், அம்மக்கள் பெருக்கத்தை வளமாகவும், மூலதனமாகவும் மாற்றுவதென்பது ‘உடல்நல மேலாண்மை’ செயற்பாடுகளைப் பொறுத்தே அமைகிறது. எனவே, அறிவார்ந்த, வலிமையான சமூகத்தை உருவாக்க உடல்நல மேலாண்மை இன்றியமையாததாகிறது. உடல்நல மேலாண்மை என்பது உடல்நலம், மனநலம் என்ற இரண்டு கூறுகளையும் உள்ளடக்கியது. உடல்-மனம்-உயிர் என்ற மூன்றின் ஒருங்கிணைப்பே மனிதம். இவற்றுள் உடலும் மனமும் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தையும் மேலாண்மையையும் செலுத்துகின்றன. ஒன்றின் நிலைப்பாடு மற்றொன்றைப் பாதிக்கிறது. இவ்விரண்டின் ஒத்திசைவிலேயே உயிர் இயங்குகிறது. இவ்வுண்மையை ஆராய்ந்த மேலைநாட்டவர் இதனை, ‘உளப்பகுப்பாய்வு’ அணுகுமுறை என்றனர். இவ்வணுகுமுறையோடு கூடிய மருத்துவம் ‘உளநோய் மருத்துவம்’ எனப்படுகிறது.

உளநலத்தின் இயல்பு, நலத்திற்குத் தடையாக இருப்பவை, உள நலத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகள் முதலியன குறித்து சிக்மண்ட் பிராய்டும் அவருக்குப் பின்வந்தோரும் வகுத்த கருத்துக்களின் அடிப்படையில் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழில் இம்முயற்சி, ‘இலக்கியத்தில் உளவியல்’ என்ற அளவில் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. ஆயினும், ‘மனநல மருத்துவம்’ அல்லது ‘உளநோய் மருத்துவம்’ என்ற நிலையில் இன்றைய மருத்துவக் கோட்பாடுகளோடு முழுமையான ஒப்பீட்டு ஆய்வாக இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அவ்வகையில், உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள சங்க இலக்கிய அகப்பாடல்கள், இன்றைய உளநோய் மருத்துவ அறிஞர்கள் அம் மருத்துவ நுட்பத்தில் சுட்டும் வரையறைகள் மற்றும் மேலாண்மைத் தன்மைகளோடு பொருந்திப்போவதை இக்கட்டுரை விளக்குகிறது. அவ்வடிப்படையில், இன்றைய உளநோய் மருத்துவச் செயல்பாடுகளுக்கு முன்னோடியாகச் சங்க இலக்கிய அகப்பாடல்களின் உளநோய் மருத்துவ அணுகுமுறைகள் அமைந்துள்ளன என்பது இக்கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது.

நோக்கமும் பகுப்பும்

இலக்கியத்தை உளவியல் அணுகுமுறையோடு நோக்குவது மேலை நாட்டுக் கல்விமுறையின் தாக்கம் எனினும், சங்க இலக்கியங்கள் உளவியல் அணுகுமுறை என்பதையும் கடந்து, உளநல மருத்துவம் என்ற நிலையில் வைத்துப் பார்க்க வேண்டியவை என்பதை நோக்கமாகக் கொண்டு, அதற்கானப் பகுப்புகளோடு இக்கட்டுரை பயணிக்கிறது. அந்த அடிப்படையில், உளவியல், இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறை, பகுப்புமுறை உளவியலும் திறனாய்வும், உளநல மருத்துவம், இலக்கியத்தில் உளநோய் மருத்துவம், தலைவியின் உளநோயும் மருத்துவ முறைகளும், தலைவனின் உளநோயும் மருத்துவ முறைகளும், தாயின் மனச்சிதைவும் தேற்ற முறைமையும், இன்றைய உளநோய் மருத்துவ அணுகுமுறைகளும் – சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவ அணுகுமுறைகளும், உளநல மருத்துவ ஆலோசனைகள் ஆகிய பகுப்புகளைக் கொண்டதாக இக்கட்டுரை அமைகிறது.

உளவியல்

உளவியல் என்பது உயிரினங்களின் நடத்தையைப் பற்றி அறியும் மைய முயற்சியாகும். குறிப்பாக நம்மை நாமே அறியும் தனிப்பட்ட தேடுதலாகும். நமது உணர்வுகள், எண்ணங்கள், நாம் செய்யும் செயல்கள் போன்றவற்றோடு தொடர்புடையது உளவியல். இதனை, உள்ளத்தைப் பற்றிய அறிவியல் உளவியல் (Science of mind) என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட்.  இது நடத்தையைப் பற்றிய அறிவியல்; நடத்தையின் வகைகளைப் பற்றி ஆய்வது என்கிறார் சில்மர் (ச.இ.தா.சே.உ., ப.197). மேலும், அறிவியல் முறைப்படி நடத்தையைப் பற்றிப் படிப்பது அல்லது ஆராய்வது (க.வு.ம.வ., ப.2)  என்றும் இதற்கு எளிய விளக்கம் அளிக்கப்படுகிறது.

உளவியல் வகைகளும் பருவங்களும்

பாட்டியா மற்றும் சவுயா என்னும் உளவியல் அறிஞர்கள், உளவியல் துறை உயிரியல், சமூகவியல், மானிடவியல் போன்ற அறிவியல் துறைகளில் பயன்படுகிறது. உளவியலின் துணைக்கொண்டு இத்துறைகளில் முன்னேற்றம் காண்கின்றனர். அதுபோலவே, உளவியலும் பல முன்னேற்றங்களை அடைந்து உளவியலின் உட்கூறுகள் பலவும் பல பிரிவுகளாகப் பிரிந்து வளர்ச்சியடைந்துள்ளன என்கின்றனர். மேலும், பொது உளவியல், உடற்கூற்று உளவியல், சமூக உளவியல், மானிட உளவியல், குழந்தை உளவியல், இளையோர் உளவியல், விலங்கு உளவியல், பரிசோதனை உளவியல், நெறிபிறழ் உளவியல், மருத்துவ உளவியல், தொழிலாளர் உளவியல் எனப் பல உட்பிரிவுகளையும் சுட்டுகின்றனர் (க.வு.ம.வ., ப.2).

உளவியல் அறிஞர் மு.அறம் அவர்கள் உளவியலின் உத்தேசப் பருவங்களாக,

  1. குழவிப் பருவம் (1- 3), 2. சிறுகுழந்தைப் பருவம் (3-6), 3. முன் குழந்தைப் பருவம் (6-9), 4. பின் குழந்தைப் பருவம் (9-12), 5. முன் குமரப் பருவம் (12-15), 6. பின் குமரப் பருவம் (15-18), 7. முதிர்ச்சிப் பருவம் (18-30) (கு.உ., ப.4) ஆகியவற்றைச் சுட்டுகிறார். இப்பருவங்களுக்கு ஏற்ற தன்மைகளும், வளர்சிதை மாற்றங்களும் பால்-இனம்-சமூகம்-சூழல் என்பனவற்றைப் பொறுத்து மாறும். இப்பருவப் பாகுபாட்டில் உடலும் மனமும் பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்ற, தனியனின் வாழ்க்கையில் எண்ணற்ற பல மாற்றங்களைத் தரும் குமரப் பருவம் சிறப்பிடம் பெறுகிறது. சங்க அகப்பாடல்கள் பெரும்பாலும் இப்பருவத்தின் உளச்சிக்கல்களை மையமிட்டுப் படைக்கப்பட்டுள்ளன.

இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறை

இலக்கிய உருவாக்கத்திற்கும், உணர்வுகளின் கலவையாக இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள், பண்புகள் போன்றவற்றை இலக்கியத்தில் படைப்பதற்கும் பல்வேறுபட்ட உணர்வுகளே அடிப்படையாக அமைகின்றன. இந்த அடிப்படையில் ஓர் இலக்கியத்தை அணுகுவது உளவியல் அணுகுமுறை (Psychological Approach) எனப்படுகிறது. மனித மனத்தின் உணர்வே எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், கலைகளுக்கும் ஊற்றாக விளங்குகின்றது என்ற வகையில், இந்த அணுகுமுறை, பல்வேறு நுட்பமான, புதிய செய்திகளைத் தந்திருக்கிறது. எனவே இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறை சிறப்பிடம் பெறுகிறது. சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரையில், புலவர்கள் தாம் உரைக்கும் கருத்துகளைப் பாடல்களைப் பயில்வோரும், கேட்போரும் விரும்பிக் கற்கும் வகையில் உளவியல் நுட்பத்தோடு உரைத்துள்ளனர். சங்க அகப்பாடல்கள் அனைத்தும் உளவியல் கூறுகளைத் தாங்கிநிற்கும் உணர்ச்சிக் குவியல்களாக உள்ளவை.

பகுப்புமுறை உளவியலும் திறனாய்வும்

உளவியல் திறனாய்வில், பகுப்புமுறை உளவியலே (Psychoanalysis) பெரிதும் பின்பற்றப்படுகிறது. இதனை ஆராய்ந்து சொன்னவர் சிக்மண்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) எனும் ஜெர்மானிய மருத்துவர். இவர், மருத்துவத் துறையில் கண்டறிந்ததைக் கலை இலக்கியத்திலும் பொருத்திப் பார்த்தார். உளநலத்தின் இயல்பு, நலத்திற்குத் தடையாக இருப்பவை, உள நலத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகள் முதலியன குறித்து சிக்மண்ட் ஃபிராய்டும் அவருக்குப் பின்வந்த யுங், ஆல்பர்ட், ஆட்லர், உண்ட், சிமோன்-டி- போவ்வியர், ஹெலன் ட்யூட்ச், ஆர்தர் ஜெர்சில்டு ஆகியோரும் வகுத்த கருத்துக்களின் அடிப்படையில் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளம் (Psycho or mind) என்பதனை அடுக்கு நிலையில் இருப்பதாக ஃபிராய்டு கூறுகிறார். வெளிப்படையாகத் தெரியவரும் நிலையில் உள்ள நனவுடை மனம் (Conscious mind); வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் மனித செயல்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் காரணமாக உள்ள நனவிலி மனம் (unconscious mind), அதற்கும் உள்ளே ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அடிமனம் (Subconscious mind) என்று மூன்று அடுக்குகளாகப் பகுக்கிறார் ஃபிராய்ட். அடிமனம், தன் முனைப்புக் (Ego) கொண்டது; பாலியல் இணைவிழைச்சு (Sexual instincts) மற்றும் சமூக அளவில் தடுக்கப்பட்ட விலக்குகள் (Taboos) முதலியவற்றால் ஆனது என்று விளக்குகிறார். இலக்கியத்தை இதன் அடிப்படையிலேயே ஃபிராய்டும் அவர் வழி வந்தோரும் அணுகுகின்றனர்.

உளநல மருத்துவம் (அ) மனநல மருத்துவம்

மனச் சிதைவு அடைந்தவர்களை அல்லது மனம் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்க, அவர்களது மனமிருக்கும் நிலையை ஆராய்ந்து அவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவது மனநல மருத்துவமாகும். உள்மனத்திலிருந்து பழைய நிகழ்ச்சிகள், உணர்ச்சிகள் ஆகியவற்றை அறிதல் மூலம் நோயின் காரணமறிந்து அதற்கேற்ப மருத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிப்படையாகத் தெரியும் மனித நடவடிக்கைகளையும், மேலெழுந்தவாரியாக உண்டாகும் உணர்வுகளையும், எண்ணங்களையும் எல்லோரும் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, மனிதனின் நோய்களுக்கு வெளியே தெரியாத அவனது உள்மனத்தில் காரணங்கள் உள்ளன என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கருதினார். எனவே, மனிதர்களை மனத்தில் வருவதையெல்லாம் பேசச்சொல்லிக்கேட்டு, அவர்களின் விருப்பு-வெறுப்புகளைத் தெரிந்துகொண்டு, அதிலிருந்து உள்மனத்தில் ஆசைகளாக, ஏக்கங்களாக, தாகங்களாகத் தங்கியிருந்து மேல்மனதில் உந்துதல்களை உண்டாக்கித் தவறாக நடக்கவைக்கும் நோயைத்தரும் காரணங்களை அறிந்தார். அதன்வழி தீமைதரும் காரணிகளை அடக்கி, குணக்கேடுகளைச் சரிசெய்தார்.  இது ‘ஃப்ரீ அஸோஸியேஷன்’ எனப்பட்டது.

உள்மனத்தில் மறைந்திருந்து, மனிதருக்குத் தொல்லை தரும் வேகங்களில் முதலில் பாலுணர்வைக் கூறினர். எனவே, பாலுணர்வின் அடிப்படையிலேயே அனைத்தும் அணுகப்பட்டது. அதேவேளையில், சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் உளநோய் மருத்துவ முறைகள், பாலுணர்வை மட்டும் மையமிடாது, மனத்தைத் தாக்கும் மற்ற கூறுகளையும் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

இலக்கியத்தில் உளநோய் மருத்துவம்

உளவியல் ஆலோசனையும் உளநல மருத்துவமும் தொடர்ந்து வளர்ச்சி நிலையில் செல்கின்றன. மக்களுக்கு மனநிலையில் ஏற்படும் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதே இதற்குக் காரணம். கல்வி, வேலை, குடும்பம், நிறுவனம், சமுதாயம், பொருளாதாரம் போன்ற பல நிலைகளில் பல சிக்கல்களுக்கும் உளநல/மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. இந்நிலையில், சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள் பலவும் உளவியல் நோக்கிலும் எளிமையாக மனநல ஆலோசனை கூறும் தன்மையிலும், மனநல மருத்துவ அணுகுமுறையிலும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

மனமும் உணர்ச்சியும்

உயிர்களின் அறிவு நிலையையும் அதற்கான உறுப்புகளையும் வரிசைப் படுத்தும் தொல்காப்பியர்,        ‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே’ (தொல்.152) என்கிறார். இதில், ஓர் அறிவு, ஈர் அறிவு எனக் கண்களுக்குப் புலனாகும் உறுப்புகளைக் காட்டியவர், ஆறு அறிவு என்பதற்குக் கண்களுக்குப் புலப்படாத மனத்தைச் சுட்டுகிறார். தொல்காப்பியர் பார்வையில் மனமும் முக்கிய உறுப்பாக அமைகிறது. அந்த மனம் என்கிற உறுப்பே மற்ற உறுப்புகளுக்குத் தலைமை ஏற்று மனிதனை மனிதனாக ஆக்குகிறது. ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ (குறள்.457) என்பார் வள்ளுவரும். அதேபோல, மனத்திலிருந்து தோன்றும் உணர்ச்சியைக் குறிப்பிடுமிடத்து, மதுகை சாரா மருட்கை (தொல்.பொரு.மெய்.3) என்கிறார் தொல்காப்பியர்.

அறிவு நிலையிலிருந்து மாறுபட்டது உணர்ச்சி என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. இவ்வுணர்ச்சியை அணுகுகிற முறையிலும், அவற்றைக் கட்டுப்படுத்துகிற முறையிலும் தமிழ்ச் சான்றோர் பல நுட்பங்களைக் கையாண்டனர் என்பது இலக்கியத்தின் வழி அறியமுடிகிறது. காட்டாக, தலைவன், தலைவி, தோழி, தாய் என்ற நான்கு நிலைகளிலிருந்து இதனை அணுகமுடியும்.

மனவெழுச்சி

        மனவெழுச்சி பற்றி உளவியல் அறிஞர் சந்தானம் அவர்கள், ‘உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலையாகும், நம்மைப் பாதிக்கும் நிகழ்ச்சியிலோ அல்லது நாம் மிக்க ஆர்வம் கொண்டுள்ள ஒரு சூழ்நிலையிலோ மனவெழுச்சிகள் நம்மிடம் இயல்பாகத் தோன்றுகின்றன. இவை அவசர நிலைகளிலேயே தோன்றுவனவாகும். இம்மனவெழுச்சிகளுக்குட்பட்ட ஒருவனின் உடலும், உள்ளமும் கிளர்ச்சியுறும். மனவெழுச்சி என்பது மன உணர்ச்சிகளும், இதயம், வயிறு, நுரையீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகளினின்றும் (Visceral organs) எழும் புலனுணர்ச்சிகளும் (Sensations) இணைந்த ஒரு கலப்பு அனுபவமாகும்’ என்கிறார். (க.உ.அ., ப.98). அதேபோல, மு.இராசமாணிக்கம் அவர்கள், ‘மனிதனின் அடிப்படை மனவெழுச்சிகளான மகிழ்ச்சி, சினம், அச்சம், அன்பு போன்றவை மனித வாழ்க்கையின் உயிர்ச்சுவைகளாகும். மனிதனின் இயக்கங்களுக்கான உள்ளிடை ஊற்றுக்கள் மனவெழுச்சிகளே’ என்கிறார் (உ.து., ப.67). இவை தொல்காப்பியர் சுட்டும் மெய்ப்பாடுகளோடும் அம்மெய்ப்பாடுகள் தோன்றக் காரணமான காரணிகளோடும் தொடர்புடையவை. சங்க இலக்கிய மாந்தர்களின் உணர்ச்சி நிலைகளை இவற்றின் வழித்துணையோடு அணுகமுடியும்.

  1. அச்சமும் அச்சம்சார் உணர்ச்சிகள் 2. சினமும், சினம்சார் உணர்ச்சிகள் 3. அன்பும், அன்புசார் உணர்ச்சிகள் இவை மூன்றும் குமரப்பருவத்தில் ஏற்படுகின்ற உணர்ச்சிகளாகச் சுட்டப்படுகின்றன (கு.உ., ப.42).

தொல்காப்பியர் குறிப்பிடும் மனவெழுச்சிகள்

         தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெறும் மெய்ப்பாட்டியல், மனவெழுச்சிகளைத் திறம்பட விளக்கும் இயலாகவே அமைந்துள்ளது. 27 நூற்பாக்களைக் கொண்ட பொருளதிகார மெய்ப்பாட்டியலில் ஏழு நூற்பாக்களைத் தவிர மற்ற 20 நூற்பாக்களுமே உடலில், மெய்யில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பற்றியும் அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் விவரிக்கின்றன. மெய்ப்பாடுகளை,

நகையே அழுகை இளிவரல் மருட்கை

                அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

                அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்.பொரு.252)

என்று வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். இதனையே உளவியல் அறிஞர்கள், உணர்ச்சிகள் பலவகைப்பட்டன. அவை அச்சமும் அச்சம்சார் உணர்ச்சிகளும்- அச்சம், கவலை, பீதி, வெட்கம் போன்றவை. சினமும் சினம்சார் உணர்ச்சிகளும் – சினம், பொறாமை, வெறுப்பு ஆகியவை. அன்பும் அன்புசார் உணர்ச்சிகளும் – அன்பு, காதல், மகிழ்ச்சி, நகை, உற்சாகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம் (உள., ப.103) என்கின்றனர். தொல்காப்பியர் கூறும் அடிப்படை மெய்ப்பாடுகள் எட்டுடன் உளவியல் அறிஞர்கள் கூறும் மூன்று பிரிவு மனவெழுச்சிகளும் இயைந்திருக்கின்றன. மேலும், இந்த எட்டுவகை மெய்ப்பாடுகளும் எந்தெந்த காரணங்களுக்காகத் தோன்றுகின்றன என்பனவற்றைத் தொகுத்து ஒவ்வொன்றிற்கும் நான்கு, நான்கு காரணிகளை அடையாளப்படுத்துகிறார் தொல்காப்பியர்.  பின்வரும் பகுதிகள் தலைவி, தலைவன், தோழி, தாய் என்ற நான்குவித மாந்தர் உணர்வுகள், சொற்கள், செயல்பாடுகள் வழி சங்கத் தமிழரின் மனவள மருத்துவ மேலாண்மையை விளக்கிச் செல்கின்றன.

தலைவியின் உளநோயும் மருத்துவ முறையும்

         செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

        அறிவும் அருமையும் பெண்பாலன (தொல்.பொருள்.210)

என்கிறார் தொல்காப்பியர். சங்க இலக்கியத்தில் தலைவி கூற்றுப் பாடல்கள் 559. இப்பாடல்களுள் 358 பாடல்கள் தலைவி தோழிக்கு உரைப்பனவாகவே அமைந்துள்ளன. தலைவி கூற்றுக்களுள் பெரும்பாலானவை தலைவியின் பிரிவுக்கால மனநிலையைப் புனைவதாக அமைந்துள்ளன. வரைவுக்கு முன் தன்னைக் களவு காலத்தில் புணர்ந்த தலைவன் வாராமையால் தோன்றும் மனப்போராட்டங்கள், வரைவுக்குப்பின் பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு வாயில் நேரும் அல்லது மறுக்கும் மனநிலையையும், போர்வயிற் பிரியும் தலைவனின் வரவை எதிர்நோக்கி மனம் அழிந்த நிலையில் தலைவியின் நிலையையும், பொருள்வயிற் பிரிந்த தலைவனை நினைந்து உருகும் நிலையிலான போராட்டங்களும் இலக்கியப் பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன.

பொருள் வயிற்பிரிவில் அன்பு, பரத்தையிற் பிரிவில் சினம் என்ற இருநிலை உணர்வுகள் தலைவியை இயக்குகின்றன. ‘உணர்ச்சிகளைப் பற்றிய பல சோதனைகளைச் செய்து முடிவினை ஆராயும் பொழுது ஆண்பிள்ளைகளைவிடப் பெண் பிள்ளைகள் உணர்ச்சி வயது மிகுந்திருப்பதைக் காணலாம்’ என்ற கார்ல் சி.காரிசன் கருத்து இங்கு நோக்கத்தக்கது (P.A.I., P.39).

காதல் கைகூடுமோ, வீட்டில் சிக்கல் நேருமோ, ஊரார் தூற்றுவரோ எனத் தலைவிக்கு அச்சம் ஏற்படுகிறது. அச்சத்தால் மனம் தடுமாறுகிறது. மனநிலை குழப்பமடைகிறது. அன்றாட செயல்கள் முறை தவறுகின்றன. உடல் சீர்கெடுகிறது. இதனை,

இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்

               எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்

               பசியட நிற்றல் பசலை பாய்தல்

               உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்

               பொய்யாக் கோடல் மெய்யே என்றல்

               ஐயஞ் செய்தல் அவன்றமர் உவத்தல்

               அறனழிந் துரைத்தல் ஆங்கு நெஞ்சழிதல்

              எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல்

              ஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல்

              நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே (தொல்.மெய்.271)

என்கிறார் தொல்காப்பியர். அச்சம்சார் உணர்ச்சிகளான கவலை, பீதி, வெட்கம், அழுகை போன்றவற்றால் உடல் உள்ளுறுப்புகளிலும், வெளியுறுப்புகளிலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு முகபாவனை மாற்றம், குரல் வெளிப்பாட்டில் மாற்றம், குருதி அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்புச் சீரற்றதாதல், நாடித் துடிப்பு அதிகரித்தல், உயிர்த்தலில் மாற்றங்கள், செரிமான உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுதல், அதன் காரணமாகப் பசியின்மை, சோர்வு, உடம்பு மெலிதல் ஆகியவை ஏற்படுகின்றன. மேலும், தசைகளின் விரைப்பு, நடுக்கம், மயிர்க் கூச்செறிதல், மூளையின் மின் அலைகளில் மாற்றங்கள் போன்ற பல மாற்றங்கள் தோன்றுகின்றன என்பதனை நாம் உணரமுடிகின்றது (அ.இ.கா.உ.கூ., ப.135) என்கிறது உளவியல்.

களவு கைகூடுமோ இல்லையோ எனத் தீவிர மனப்போராட்டங்களுக்கு உட்படும் தலைவி, தீவிர மனவெழுச்சிகளால் பாதிக்கப்படும்போது பசியின்றி, தூக்கமின்றி, உடல் மெலிந்து, சோர்ந்து, எதையோ பறி கொடுத்ததைப் போன்று காணப்படுகிறாள். இதைக் கண்ணுறும் தாய் தன் மகள் எதனால் இந்நிலையினை அடைந்திருக்கிறாள் எனத் தெரியாமல் தடுமாறி இறைவழிபாடுகளிலும், குறி கேட்பதிலும், வெறியாட்டிலும் ஈடுபடுகிறாள். ஆனால் உளவியல் சார்ந்த தலைவியின் இந்நிலையினைத் தொல்காப்பியர் மருத்துவம் சார்ந்து விளக்குகிறார்.  இதனை,

முட்டுவயிற் கழறல் முனிவுமெய் நிறுத்தல்

                அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல்

                தூது முனிவின்மை துஞ்சிச் சேர்தல்

                காதல் கைம்மிகல் கட்டுரையின்மை யென்று

                ஆயிரு நான்கே அழிவில் கூட்டம் (தொல்.மெய்.23)

என்கிறது தொல்காப்பியம்.

இளையோர் பருவத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உணர்ச்சி வயப்படுகின்றனர் என உளவியலார் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனையே தொல்காப்பியர்,

புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்

                கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு

                புலப்பிய நான்கே ஆறென மொழிப (தொல்.மெய்.267)

என்னும் மெய்ப்பாட்டில் நூற்பா வழி தெளிவுபடுத்துகிறார். இதில், தாயும், செவிலியும் தனக்கு ஒப்பனைகள் செய்துவிடும்பொழுது தலைவன் கண்டு பாராட்டாமல் இவ்வொப்பனை செய்து பயன் என்ன? என வருந்தி அழுதல், தலைவனை விருப்பம்போல் காண இயலவில்லையே எனத் தனிமையில் புலம்பித் தவித்தல், தலைவன் தன்னைக் காணவரும் வழியின் கடுமையையும், விலங்குகள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் விளையும் ஆபத்துகளையும் எண்ணிக் கலங்கி உரைத்தல், தனியளாக, ஆறாத் துயருடன், தடுமாறு நெஞ்சினளாகத் தனது அச்சமும், நாணும், மடனும் இகந்து தானுற்ற அவலத்தைச் சுற்றமறியப் பேசுதல் எனத் தலைவியின் உளவியல் நிலைகள் சுட்டப்படுகின்றன.

இயற்கைப் புணர்ச்சியில் தலைவனோடு இணைந்த தலைவி, அவன் உரைத்த சூளுரைகளை மட்டுமே ஒற்றைப் பிடிப்பாக நம்பி இருக்கிறாள். தலைவன், குறித்த காலத்து வராது காலம் நீட்டித்தபோது, இயற்கையிடமும் தோழியிடமும் புலம்பி, தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். அவன் குறித்துச் சென்ற கார்காலம் வந்தும் ‘இயற்கை தவறிழைத்து விட்டது’ என்று இயற்கையைப் பழித்து தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறாள்.  ‘தலைவன் பொய் கூற மாட்டான்’ என்று அவன்மீது நம்பிக்கை கொள்கிறாள். அவன் வராததைக் காலம் மீண்டும் உறுதி செய்யும்போது,

யாரு மில்லைத் தானே கள்வன்

                        தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ (குறு.25:1-2)

என, தலைவன் தன்னைத் தெரியாது என்று கைவிட்டால் தன் நிலைமை என்னவாகும் என்று நம்பிக்கை இழந்த மனநிலைக்குத் தள்ளப்படுகிறாள். இனி நினைத்து ஆவது ஒன்றுமில்லை என்றெண்ணி, தலைவனை மறந்துவிடலாம் என்று தனக்குத்தானே உறுதிகொள்ளும்போதோ,

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது

                        இருப்பினெம் அளவைத் தன்றே (குறு.102:1-2)

என்று, தன் மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல், முழுமையாகத் தற்சார்பும் தன்னிலையும் இழந்ததை உணர்கிறாள்.

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல் (குறு.28:1-3)

என்று உறங்காமல் இரவில் புலம்பும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். தாயும் சுற்றமும் ஊராரும் தலைவியின் வெறுப்பிற்கு ஆளாகின்றனர். இயல்பாக நிகழும் மற்றவர்களின் உறக்கம்கூட தலைவிக்குச் சினத்தை உண்டாக்குகிறது. உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர் (குறு.28) என்று ஊராரைப் பழிக்கிறாள். இது மனச்சிதைவின் உச்சமாகும். இதனால், உண்ணும் அளவு குறைதல் (குறு.356), உடல் அழகு குறைதல் (அகம். 148, 209), உடல் மெலிதல், வளை கழலல் (குறு.31, நற்.258, குறு.316), பசலை பூத்தல் (நற்.175, 378, அகம்.253, 317) போன்ற புற மாற்றங்கள் தலைவியிடத்து நிகழ்கின்றன. இதனால், தலைவி மட்டுமல்லாது அவள் சுற்றமும் துன்பச் சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

தலைவியின் இந்நிலைக்குத் தவறான காரணம் உணர்ந்த பெற்றோர், தெய்வக் குற்றமோ அல்லது பேயால் ஆட்கொள்ளப்பட்டாளோ (குறு.263:5) என எண்ணி, ‘வெறியாட்டு’ (குறு.52, 111, 214; ஐங்.210, நற்.351, குறு.32) நிகழ்த்துகின்றனர். மேலும், ஆடுகளைப் பலியிட்டுக் குருதி மண்ணை நெற்றியில் பூசுதல் (குறு.362); ஆட்டின் குருதியோடுத் தினையைக் கலந்து, பல இசைக் கருவிகள் முழங்க தெய்வத்திற்கு வழங்குதல் (குறு.23); மரத்திற்கு மாலை சூட்டி வணங்குதல் (குறு.214) போன்ற சடங்கு முறைகளை மேற்கொள்கின்றனர். இந்நிலை, தலைவியின் மனநிலையை மேலும் சிதைவடையச் செய்கிறது. தலைவியின் உள்ளத்தில் மிகு அச்சமான நடுக்கத்தை உண்டாக்குகிறது (குறு.52).

தோழியின் தேற்ற முறைமையும் உளநோய் மேலாண்மையும்

         சங்க இலக்கியத்தில் தோழியின் கூற்றாக அமைந்த பாடல்கள் 780. இதில் தோழி தலைவனுக்கு உரைப்பன 417, தலைவிக்கு உரைப்பன 290, செவிலிக்கு உரைப்பன 37. தோழி, மதிநுட்பம் நிறைந்தவளாகவும், தலைவியின் உள்ளப் போராட்டங்களையும், முறிவுகளையும் தீர்த்து வைப்பவளாகவும், சமூகத்துடன் இணங்கி, சமூக மரபுகளைக் காப்பவளாகவும், உளவியல் கூறுகளை நிரம்பப் பெற்றவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள். தலைவன்-தலைவி வாழ்வின் களவு, கற்பு இரு நிலைகளிலும் பெரும்பங்கு ஏற்கிறாள்.

தொல்காப்பியம் குறிப்பிடும் தோழி, தலைவன், தலைவி இருவரது மனநிலைகளை ஆய்ந்துணர்தலானும், தலைவிக்குத் தக்கதொரு தோழியாகவும், நன்று தீது உரைத்து திருத்துதலாலேயே பொலிவு பெறுவாள் என்கிறது தொல்காப்பியம்.

சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே (தொல்.பொருள்.கள., 35)

களவு காலத்தில் தலைவியின் மனம் சிதைந்த நிலையில், தோழியின் நம்பிக்கை மொழிகளும், ஆற்றுவித்தலும், தலைவனைப் பற்றிய நன்மொழிகளும், அறத்தொடு நிற்றலும் மனச்சிதைவிலிருந்து தலைவியை மீட்டெடுப்பதாக அமைகின்றன. தோழியின் செயல்பாடுகள் தலைவியைத் தேற்றுதல், தலைவனைத் திருமணத்தை நோக்கி உந்துதல், இல்லத்தார்க்கு அறத்தோடு நிற்றல் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பிடம் பெறுகிறது. அவளின் சொற்கள் தேர்ந்த மனநல மருத்துவருக்கானவையாக உள்ளன.

வரைவு காடாவுதல்

         தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி, அன்னையிடம் உண்மையை உரைத்து உன்னை விரும்பும் தலைவனை மணமகனாக ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வேன் என்று தலைவியின் உள்ளத்தில் அமைதியும் நம்பிக்கையும் ஏற்படும்படி எடுத்துக்கூறுகிறாள்.

பணிக்குறை வருத்தம் வீட

                        துணியின் எவனோ தோழிநம் மறையே (குறு.333:5-6)

தோழி, தலைவியை மணம் செய்து கொள்ளுமாறு வெளிப்படையாகவோ குறிப்பாகவோ தலைவனைக் கேட்பதே வரைவுகடாதல் எனப்படும். தோழி வரைவு கடாவும் முறையினைத் தொல்காப்பியம் உரைக்கிறது.

ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும்

                ——————————————–

                ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்

                பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்

(தொல்.பொருள்.கள.23:-29-38)

தலைவனே தலைவியின் நோய்க்கு மருந்தாவான், வெறியாட்டு போன்றவை அல்ல (குறு.23) என்பதை வீட்டார்க்குக் குறிப்பாகவும் தலைவனுக்கு வெளிப்படையாகவும் உணர்த்துகிறாள் தோழி. நீயில்லையென்றால் தலைவி இறந்துபடுவாள், எனவே விரைந்து மணமுடித்துக்கொள்க என்று தலைவனை வலியுறுத்துகிறாள் (குறு.69:1-4).

அறத்தொடு நிற்றல் – உளவியல்

தனிமனிதன், சமூக நடத்தை விதிகளுக்கு உட்பட்டுத் தன் சமூகத்தினருடன் இணக்கமாக வாழவேண்டுமென்ற உளவியல் நடத்தைப்படியே இத்துறை வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவியின் களவுச் சுவடு தெரியாமல், பல தீமைகள் முளைப்பதற்கு முன்னரே தலைவன் வரைந்துகொள்ள வேண்டும் என்பது தோழியின் நோக்கம். தலைவனிடம், “வெற்பனே, மான் கூட்டமும் மிளகுக் கொடியும் படரும் மலைப்பகுதியில் நீ நிகழ்த்திய களவொழுக்கத்தை எம் உறவினர் அறியார் அன்றோ? அவர் அறியாத நிலையில், மரபு மணம் செய்து கொள்க. கொள்வாயாயின், நின்னை முன்பின் அறியாதார் போல் நடந்துகொள்வோம். இவளும் முதன்முதல் நின்னைக் காண்பவள் போல் நாணம் அடைவாள். அவள் பொய்யாக நாணி நிற்பதைக் கண்டு நாங்கள் மகிழ்வோம்” (அகம்.112) என்கிறாள் தோழி.

‘வேலனே, நீ கொடுக்கும் பலியினைத் தலைவனது மார்பு ஏற்றுக்கொள்ளுமா?’ என நயமாக எடுத்துக்கூறி அறத்தோடு நிற்கிறாள் (குறு.362). வெறியாட்டு நடக்கும்போது தலைவன் வந்தால் அவளின் நோய் தீரும் என்று தலைவனுக்கு உண்மை உரைக்கிறாள் (குறு.360).

அகவன் மகளே அகவன் மகளே

                மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்

                அகவன் மகளே பாடுக பாட்டே

                 இன்னும் பாடுக பாட்டே

                அவர்நன் னெடுங்குன்றம் பாடிய பாட்டே (குறு.23)

என்ற பாடல் தோழியின் மனவள தேற்ற முறைமைக்கும் அறத்தொடு நிற்றலுக்குமான சிறந்த எடுத்துக்காட்டாகும். சமூக அக்கறை உடையவளாகத் தலைவியின் மன உணர்வுகளைத் தலைவனுக்கு எடுத்துக் கூறுபவளாகவும், தலைவியின் களவுக் காதலைச் செவிலிக்கும், நற்றாய்க்கும் தெளிவாக எடுத்துரைப்பவளாகவும் இருக்கிறாள் தோழி. இதனை,

முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைப்

           புரைதீர் கிளவித் தாயிடைப் புகுப்பினும்

          வரைவுடம் பட்டோர்க் கடாவல் வேண்டினும்

          ஆங்கதன் தனிமையின் வன்புறை உளப்படப்

           பாங்குற வந்த நாலெட்டு வகையினும்

           தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன (தொல்.களவு.116)

என்கிறது தொல்காப்பியம்.

உடன்போக்குவித்தல்

         தோழி, எந்தவொரு சிக்கலுமின்றி களவு, கற்பாக மாற தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுறும்போதும், நொதுமலர் வரைவு, அலர்ப்பெருக்கம், இற்செறிப்பு முதலிய கொடுமையினால் தலைவியின் துன்பமும் மனச்சிக்கலும் பெருகுகின்ற போதும், தலைவனோடு இணைவதுதான் தலைவியுற்ற நோய்க்கு மருந்து என்பதை உணர்கிறாள். சமூக ஒழுங்கை மீறிய நடத்தை என்பதாகவே இதனைத் தோழி கருதுகிறாள். ஆயினும், தலைவியின் உயிரைக் காக்கவேண்டும் என்ற தாய்மையுணர்வு அவளை இம்முடிவிற்குத் தள்ளுகிறது. இந்நிலையில், தமரின் துணையின்றித் தலைவியுடன் சேர்ந்து இல்லறத்தை இனிதே நடத்த உடன்போக்கை மேற்கொள்ளுமாறு தலைவனுக்குத் தோழி கூறுகிறாள். தலைவியையும் உடன்போக்கிற்கு உடன்படுத்துகிறாள். தலைவி உடன்பட்டதை அறிந்த தோழி தலைவனை நோக்கிப் பல அறிவுரைகளைக் கூறுகிறாள். உடன்போக்கின்போது பகரும் மொழிகளுக்கு,

தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்

                போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும் 

                நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்

                வாய்மையும் பொய்ம்மையுங் கண்டோர்ச் சுட்டித்

                தாய்நிலை நோக்கித் தலைபெயர்த்துக் கொளினும்

(தொல்.பொரு.42)

என விதி வகுத்திருக்கிறது தொல்காப்பியம். உடன்போக்குவித்த நிலையில் தலைவனிடம் தோழி உரைக்கும்,

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்

                பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

                நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்

                நீத்தல் ஓம்புமதி – பூக் கேழ் ஊர   (நற்.10:1-4)

என்ற சொற்கள், தலைவிமீதுகொண்ட தோழியின் தாய்மையுணர்வினை வெளிப்படுத்துகின்றன.

கற்பு வாழ்வில் தோழி

கற்பு வாழ்வில் பொருள்வயின் பிரிந்த தலைவனை எண்ணித் தலைவி அடையும் துன்ப நிலையானது தோழி, சான்றோர் ஆகியோர் மேற்கொள்ளும் மனவள மருத்துவ முறைகளால் சீர்செய்யப்படுகிறது. தோழியின் தேற்ற முறைகள் செலவழுங்குவிப்பதாகவும், பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் வந்துவிடுவான் என்று ஆறுதல் கூறுவதாகவும், தலைவன் சென்ற பாதைகளில் நிகழும் உயிர்களின் அன்பு நெறி வாழ்க்கையை (பிடிக்கு நீர் ஊட்டும் களிறு; பிணைக்கு நிழல் கொடுக்கும் கலை; இணைப் புறாவிற்குச் சிறகால் விசிறிவிடும் ஆண்புறா[கலி.11]) உவமையாகக் காட்டி அதைக் காணும் தலைவன் உன் நினைவால் விரைந்து வருவான் என்று தேற்றுவதாகவும் அமைகின்றன.

இணைந்து வாழ்வதன் சிறப்பு உணர்த்தல்

         மாட்சிமைப்பட்ட இல்லறத்தில் தலைவியைச் சேர்ந்து, அவள் அன்பில் ஒழுகிய தலைவன் அவளை விடுத்துப் பரத்தமை ஒழுக்கம் மேற்கொள்ளும்போது தோழி வெகுண்டெழுகிறாள். அவனை அன்பில்லாதவன், கொடியவன் எனவும் தூற்றுகிறாள். தோழியின் இச்செயல்களைத் தொல்காப்பியம் வரிசைப்படுத்துகிறது (தொல்.பொருள்.கற்பு.158). பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தலைவியின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு தோழியிடம் வாயில் வேண்டுகிறான். தோழி, தலைவனின் இத்தீய ஒழுக்கத்தைச் சாடுகிறாள். எனினும் இருவரும் இணைந்து வாழ்வதே சிறப்பு என்பதைத் தலைவிக்கு எடுத்துக்கூறி தலைவியைத் தலைவனோடு ஒன்றுவிக்கும் பணியில் ஈடுபடுகின்றாள் (தொல்.பொருள்.இளம்.148).

கற்புக் காலத்தில் தலைவியின் உளநோய்க்குச் சான்றோர்களின் சொற்கள் மருந்தாக உள்ளன. சான்றோரின் தேற்றுதல் முறைமையானது, உலக நியதியை எடுத்துக்காட்டுவதாகவும் பொருள் தேட மனைவியைப் பிரிதல் சமூக அறம் என்பதாகவும், தலைவி இல்வாழ்வில் சிறக்கவும், விருந்தோம்பல் முதலான இல்லறக் கடமைகளை இனிதே நிறைவேற்றவும் பொருள் இன்றியமையாதது; அதனைப்பெற தலைவனின் பிரிவை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் அமைகிறது.

தலைவனின் உளநோயும் மருத்துவ முறையும்

சங்கப் பாடல்களில் 346 பாடல்கள் தலைவன் கூற்றாக அமைந்துள்ளன. தலைவி, தோழி பாகன் ஆகியோருக்கு உரைக்கும் பாடல்கள் 143. தன் நெஞ்சிற்கு உரைப்பவை 163 பாடல்கள். பாங்கனுக்கு உரைப்பது 21 பாடல்கள். இவையனைத்தும் தலைவியைச் சுமந்துநிற்கும் தலைவனின் மனநிலையை உரைக்கின்றன.

புணர்ந்து நீங்குதல், அல்லகுறிப்படுதல், தோழியை இரந்துபின் நிற்றல், இடித்துரைக்கும் பாங்கன் முன், மடல் வலித்தல், உடன்போக்கு, பாசறைக்கண்,  பிரிவு வலித்தல், இடைச் சுரத்து நிற்றல், வினை முற்றி மீளுதல் எனப் பல்வேறு சூழல்கள் தலைவனின் மனநிலையை வெளிக்காட்டுகின்றன.

கார்ல் சி.காரிசன் அவர்கள், குமரப்பருவ நிலைமாற்றம், உடலியல் மாறுதல்கள், மனவெழுச்சி மாறுதல்கள், சமூக – பால் மாறுதல்கள், கல்வி, அறிவு மாறுதல்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும் என்கிறார் (இ.உ., ப.6). ஸ்டான்லி ஹெல் அவர்கள், இளையோர் பருவம் அழுத்தங்களும் குமுறல்களும் (stress and Strains) கொண்ட பருவம் என்றும், துடிக்கும் பருவம் (இ.உ., ப.8) என்றும் விளக்குகிறார்.

களவில், தலைவனுக்கு ஆற்றாமையினால் ஏற்படக்கூடிய மாற்றங்களாக,

               வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்,

             ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல்,

             நோக்குவ எல்லாம் அவையே போறல்,

            மறத்தல், மயக்கம், சாக்காடு (தொல்.பொருள்.களவு.97)

என்பனவற்றைப் பட்டியலிடுகிறார் தொல்காப்பியர். இவை மனநோயின் படிநிலை வளர்ச்சியாகும். இந்நிலை ஒவ்வொன்றும் மனச்சார்பு உடையதாகவும் மனச்சிதைவின் வளர்ச்சி நிலைகளாகவும் அமைவதைக் காணமுடிகிறது. குறிப்பாக, இறுதி மூன்று நிலைகளாகிய காண்பதெல்லாம் அவையே போறல், மயக்கம், சாக்காடு என்பன மனமும் அது இயக்கும் உடலும் தன் கட்டுப்பாட்டை இழந்த நிலைகளாகும். காதல் வயப்பட்ட ஒருவனை உளவியல் தன்மையோடு அணுகி, அவன் மனம் எவ்வகையான மாற்றத்திற்கு உள்ளாகிறது? அதன் விளைவுகள் எவ்வகையில் இருக்கும்? என்பதை உளப்பகுப்பு முறையில் நுண்ணாய்வு செய்து கொடுக்கப்பட்டதே மேற்கண்ட பட்டியல். உளநோய் மருத்துவத்தில் பழந்தமிழர் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இது மிகச்சிறந்த சான்றாக அமைகிறது.

தலைவனின் மனச்சிதைவில் காமம் முதன்மை பெறுகிறது. தனக்கேற்ற தலைவியைக் கண்டதும் அவன் மனம் மாறுதல் அடைகிறது. இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பிறகு மனம் அவன் கட்டுப்பாட்டை இழக்கிறது. தன்னிலை இழக்கிறான். தன் இயல்பு மாறுகிறான். தன் அன்றாடக் கடமைகளில் தவறுகிறான். உடல்நலம் குறைகிறான். இந்நிலையில், தலைவிக்குத் தோழி போலவே, தலைவனுக்குத் தோழன் மருத்துவ ஆலோசகராக அமைகிறான். முதலில் தலைவனின் நிலையைப் பழித்துப் பேசி அவனை இயல்பு நிலைக்கு மாற்ற முயல்கிறான் தோழன். தலைவனோ, தலைவியால் தான் ‘சிறு சங்கிலியால் கட்டுண்ட யானை’ (குறு.29) போல ஆனதைச் சொல்லிப் புலம்புகிறான்.

முதலில் தலைவனைப் பழித்துப் பேசிய தோழன், இப்போது தலைவனின் மனநிலையை அறிந்து அவனுக்கு ஆறுதல் மொழியைக் கூறித் தேற்றுகிறான். புலம்பலைச் செவிமடுத்தலும், தேற்றுவதும், அவனை நல்வழிப்படுத்த முனைவதும், தலைவனுக்கு மருந்தாகிய தலைவியைத் தலைவன் அடைவான் என்று நம்பிக்கை மொழி உரைத்தலும், அதற்கு வழிகாண்பதும் தோழனின் உளநோய் மருத்துவத்தில் தேற்ற முறைமைகளாக அமைகின்றன.

காமமிகுதியால் வருத்தமுற்ற தலைவனை நோக்கி, காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர்; அக்காமமானது வருத்தமும் நோயுமன்று; அது நினைக்க நினைக்க புதிய இன்பத்தைத் தருவதாகும் என்று அறிவுறுத்துகிறான் தோழன். மனத்தோடு தொடர்புடைய காமத்தை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியும் எனப் பாங்கன் தெளியவைக்கிறான்.

            காமம் காமம் என்பர் காமம்

            அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்

            முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்

            மூதா தைவந் தாங்கு

            விருந்தே காமம் பெருந்தோ ளோயே (குறு.204:1-5)

மனிதனுடைய சமூக நடத்தைகள் இயல்பாகவே உருவானவை அல்ல; அவை கற்பிக்கப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழ்நிலை, அச்சூழ்நிலையை நோக்கும் கண்ணோட்டம் (Perception), அதனால் மனிதனிடையே ஏற்படும் எதிர்விளைவுகள் முதலியவற்றைப் பொறுத்தே இந்நடத்தைகள் உருவாகின்றன. தற்சாதிப்பு (Self-Assertion) என்னும் சமூக உந்து (Social Drive) தன்னை வெளிக்காட்டும் வகையில் நெறிப்படுத்தப்படுகிறது. தன்னுடைய திறமையினை நிரூபிக்கவும், சக்திகளை விளக்கிக்காட்டவும் ஒரு தனியன் கடினமான செயல்களை மேற்கொள்ளலாம் (ச.இ.தா.சே.உ., ப.218) என சமூக உளவியல் குறிப்பிடுகிறது. இவற்றின் அடிப்படையில் சங்க இலக்கியத் தலைவனை நோக்கினால், மடலேறுதல், ஏறுதழுவுதல் போன்ற அவனின் நிலைப்பாட்டின் உளவியல் தன்மையை அறியலாம்.

தலைவன், குடும்பத் தலைவனாக மாறுகிறபோது தலைவிமீது கொண்ட காதலால் அவளைப் பிரிய மனம் மறுக்கிறது. பொருளா? தலைவியா? என்று மனம் தடுமாறுகிறது. இந்நிலையில், அவனுக்கான ஆலோசனைகளையும் வாழ்வியல் நெறிகளையும் சான்றோர்கள் வழங்குகின்றனர். வினை ஆடவர்க்கு உயிர் (குறு.135) என்று சமூகக் கடமை  வலியுறுத்தப்படுகிறது. வினை தேட்டமில்லா ஆண்மை ‘கூரில் ஆண்மை (புறம்.75) என்றும், ‘எலியனையை வாழ்க்கையைத் தவிர்த்துப் புலியனைய வாழ்க்கை வாழ வேண்டும்’ (புறம்.190) என்றும் அறிவுறுத்தப்பட்டு நெறிப்படுத்தப் படுகிறான். தனிமனிதனான தலைவன் சான்றோர்களின் அறிவுறுத்தல், ஆற்றுப்படுத்தல், சமூக சிந்தனையை ஊட்டுதல் போன்ற மனவள தேற்ற முறைகளால் சமூகப் பொறுப்பாளனாக உருப்பெறுகிறான்.

தாயின் மனச் சிதைவும் தேற்ற முறைகளும்

         சங்க இலக்கியத்தில் தாய் (செவிலி-நற்றாய்) தொடர்பான உளவியல் அணுகுமுறை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஃபிராய்டின் ‘அனைத்து மனச் சிதைவுகளுக்கும் காம உணர்வே அடிப்படையாக அமைகிறது’ என்ற கருத்தியலை மீள் ஆய்விற்கு உட்படுத்தவும், தமிழரின் உளநோய் மருத்துவ முறைகள் மேலை நாட்டவரின் மருத்துவ முறைகளைவிட முந்தியது, சிறப்புடையது என்பதை மெய்ப்பிக்கவும் தாயின் கூற்றுகளாக உள்ள பாடல்கள் உதவுகின்றன.

தாயின் மனம்

தம் இல்லத்தை அலங்கரித்து, உறவும் சுற்றமும் குழுமியிருக்க மகளுக்குத் திருமணம் செய்துவைத்தலையும், சிலம்பு கழி நோம்பைத் தம் இல்லத்தில் நடத்துவதையும் தம்முடைய கடமையாகவும் உரிமையாகவும் கருதுகிறது தாயின் மனம். மேலும், ‘தம் குடும்பத்தின் சமூகப் பொருளாதாரத் தகுதிகட்கொப்பான குடும்பத்திலேயே பெண் கொள்ளவும் கொடுக்கவும் விரும்பினர். மணமகனையும், மணமகன் குடும்பத்தின் தகுதிகளை ஆய்ந்து முடிவெடுத்தல் பண்டை மரபாக இருந்தது’ (ச.இ.உ.ம.உ. ப.149).   இதனை,

கொடுப்பி நன்குடைமையும் குடிநிர லுடைமையும்

                வண்ணமும், துணையும் பெரீஇய யெண்ணாது

                எமியேம் துணிந்த ஏமஞ்சா லருவினை  (குறிஞ்சி., 30-32)

எனும் கபிலர் கூற்று உறுதிசெய்கிறது.

தாயின் உணர்வுகள், தலைவியின் வாழ்க்கைமீது நம்பிக்கை கொண்டதாக, எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக, கனவுகளைச் சுமந்ததாக வெளிப்படுகின்றன. தலைவியின் களவு வாழ்க்கை தெரியவரும்போது, அது தாயின் மனநிலையைப் பாதிக்கிறது. தலைவியின் வாழ்வைக் காக்கவேண்டும் என்ற நிலையில் தலைவிக்கு அன்பாக எடுத்துச்சொல்லுதல்-அறிவுறுத்தல்-மிரட்டுதல் எனப் பல நிலைகளில் தாய் செயல்படவேண்டியிருக்கிறது. இற்செறித்தல் போன்ற கடுமையான செயல்களிலும் ஈடுபட்டு தலைவியின் மனத்தை மாற்ற முயல்கிறார். எப்படியும் தலைவியைத் தக்கவைக்கவேண்டும் என்ற தாயின் போராட்டம் தலைவியின் உடன்போக்கால் முடிவிற்கு வருகிறது. உடன் போக்கில் தலைவியின் நிலையை எண்ணி ஆற்றாத துயருக்கு ஆளாகிறாள். இவ்விதம் தலைவி பற்றியதான தாயின் கனவு குலையும் போது மனச்சிக்கல் ஏற்படுகிறது. உளநலம் பாதிக்கப்படுகிறது.

மகளின் வாழ்க்கை குறித்தான தாயின் கனவு பற்றிச் சங்க இலக்கியத்தின் பலப் பாடல்கள் காட்டுகின்றன. ‘மகளது தோழியர் கூட்டமும் செவிலியை ஒத்த பிற தாயரும் பார்த்து மகிழ, நெடுநகராம் உறந்தையை ஒப்பிடக்கூடிய இல்லத்தில், அறனறிந்து மூத்த சான்றோர் வதுவைக்குரிய கரணங்களை செய்ய மணந்து செல்ல வேண்டும்’ (அகம்.385) என்பதும், தன் மகளது திருமணம் நிகழும்போது அவள் எய்துகின்ற பெரிய நாணத்தைக் கண்டு உள் மகிழ்ந்து செவிலித்தாய் அவளைப் பாராட்டவும், ஈன்றதாய் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து மணம் முடிக்க வேண்டும் (அகம்.397) என்பதும், நிதியுடை நன்னகராகிய தந்தை இல்லத்தைப் புதிதாக அழகு செய்வித்துத் தன்னை ஈன்ற தாய், தந்தை உள்ளிட்ட சுற்றத்தினர் கூடி மணம் செய்து தரவேண்டும் (அகம். 369) என்பதும் அக்கனவு. அக்கனவு ஒருநாளில் திடீரெனத் தோன்றியது இல்லை. பெண் குழந்தை பிறந்தது முதலான தாயின் நீண்ட கனவு அது.  தலைவியின் உடன்போக்கினால் நொடியில் தகரும் இக்கனவால் தாயின் மனநிலை பெரிதும் பாதிக்கிறது. மனப் பிறழ்வுக்கு ஆளாகிறாள்.

ஈன்று புறந்தந்த என்னை மறந்துவிட்டுச் சென்று விட்டாளே(அகம்.35;1) என்றும்,  அன்பான சுற்றத்தையும் எம்மையும் நினைக்காமல் சென்றுவிட்டாளே (அகம்.17) என்றும், அவளைப் பெற்று வளர்த்த நம் துன்பத்தை எண்ணிப்பாராமல் சென்றுவிட்டாளே (அகம்.153) என்றும், வழியில் ஏற்படுகிற பலவித துன்பங்களை எண்ணிப் பாராமல் சென்றுவிட்டாளே(அகம்.385) என்றும், வளர்த்தெடுத்த என்னுடைய துயரையும் எண்ணிப்பாராது, தான் வளர்த்த வயலைக் கொடியையும் எண்ணாது சென்றுவிட்டாளே (அகம்.383) என்றும் மன வருத்தத்தில் பலவாறு புலம்புகிறாள். நான் அடைந்த இந்தப் பெருந்துன்பத்தை மகளை உடன்போக்கிய தலைவனின் தாயும் அடையட்டும் எனச் சபிக்கிறாள் (ஐங்.373; நற்.293:6-9).

தலைவி விரும்பி ஆடிய பந்து, பாவை, கழங்கு போன்ற விளையாட்டுப் பொருள்களையும், வளர்த்த கிளி, பூவை, வயலைக்கொடி, பூச்செடிகள், முற்றம், தெற்றி, ஓரை, ஆயம், சோலை ஆகியவையும் தற்போது வெறிச்சென்றிருக்கத் தாய் காண்கிறாள். அவள் வருத்தம் மேலும் அதிகரிக்கிறது(குறு.144). அதனால் மனநோய் அதிகரிக்கிறது. மனப் பித்திற்கு ஆளாகிறாள். சித்தம் கலங்கி இறந்துபோகவும் துணிகிறாள்(அகம்.5:5-17;நற்.271:10-12).

இந்நிலையில், தாயின் புலம்பலைக் கண்ட ஊரார் அவளைப் பலவாறு தேற்ற முனைகின்றனர். ஆனால் அத்தாயோ,

ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்

                செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு

                பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்

                இனியே, தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று

                யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே (நற்.184:1-5)

என்று, ஒருமகளை உடைய நான் அவளையும் பிரிந்து வாடுகிறேன், ஆறுதல் சொல்லும் உங்களுக்கு என் வருத்தம் புரியாது என்று தன் வருத்தத்தின் நியாயத்தைக் கூறுகிறாள்.

இந்நிலையில், செவிலியும் நற்றாயும் ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆறுதல் அடையும் சூழல் நிலவுகிறது. ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறி, தேற்றிக் கொள்கின்றனர். அன்பில்லாது மகள் செலினும், அவளை நினைந்து நினைந்து துயர்படும் செவிலியைப் பார்த்து,

தெறுவ தம்ம நும்மகள் விருப்பே (ஐங்.313)

என்று, உயிர்போவது போல் பாழ்படு நெஞ்சம் படரக் கலங்கும் வண்ணம் மகள் காடிறந்தனள்; அவள் மீது அன்பு வைத்தலை இனித் தாம் மறந்தாக வேண்டும் என ஆறுதல் உரைக்கிறாள் நற்றாய். அதேபோல, தலைவனோடு மகள் வைத்திருந்த நட்பு ‘நல்லூர்க்கோசர் நன்மொழி போல்’ இப்போது உண்மை என ஆகிவிட்டது. உடன் போக்கிலே அவர்க்கு மணம் நடந்து இருக்கும் என்பதால் அதைக்குறித்த வருத்தம் வேண்டாம் எனச் செவிலியும் நற்றாய்க்குத் தேறுதல் உரைக்கிறாள் (குறு.15).

கூடுதலாக, சான்றோர்களின் தேற்றுதலும், அறிவுறுத்தலும் தாய்க்கு மருந்தாக அமைகின்றன. மலையைத் தாண்டிச் சென்றுவிட்ட உன் மகளைக் கண்டோம். ‘நின் மகள் சிறந்தானை வழிபடச் சென்றனள்; இனித் துயர் ஒழிக. மலையில் வளரும் சந்தனமும், கடலில் விளையும் முத்துக்களும், யாழில் பிறக்கும் ஏழிசையும் நுகர்வோர்க்கே பயன் மிக்க இன்பம் தருகின்றன. இவற்றின் பிறப்பிடமான மலை, கடல், யாழ் ஆகியன அவற்றால் பயன் அடைவதில்லை. அதுபோலத்தான் உன் மகளும் (கலி.9;14-24) என்று உலக இயல்பை உரைக்கின்றனர்.

சிறிது காலம் பொறுத்திருந்து தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றுவந்த செவிலி, நற்றாயினிடத்தில், தலைவி தலைவன் உவக்கும்படி சமைத்து உண்பிக்கின்றாள்; இங்குச் சிறுமியாக இருந்தவள் அங்குச் சிறந்த இல்லறத் தலைவியாக இருக்கிறாள் என்றும், தலைவனும் தலைவியும் பிரிவின்று ஒன்றி வாழ்கின்றனர் என்றும் மனம் மகிழும்படிக் கூறி நற்றாயைத் தேற்றி, அவளின் மனநிலையைச் சீர்மை செய்கிறாள் (குறுந்.167; 242). இவ்விதமாகத் தாயின் மனநோயைத் தீர்ப்பதில் செவிலி, ஊரார், சான்றோர் ஆகியோரின் மனவளத் தேற்ற முறைமைகள் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன.

உளநோய் : மருத்துவர்களின் வரையறைகளும் இலக்கிய ஒப்பீடும்

         மனிதனுக்கு உயிர்வாழ உணவு, உடை, இருக்குமிடம் முதலியன இன்றியமையாதவை. இவை மனிதனின் உடல் தேவைகள் (Physical needs) எனலாம். இவற்றைப் போலவே உள்ளத் தேவைகள் (Psychological needs) மற்றும் சமூகத் தேவைகள் (Social needs)  உள்ளன. இவ்வுளத் தேவைகளின் இன்றியமையாமையை மாஸ்லோ (maslow), ஹாவிகர்ஸ்ட் போன்றோர் வலியுறுத்தியுள்ளனர். இவை நிறைவு பெற்றால்தான் ஒருவனால் முழுவாழ்க்கை வாழமுடியும். சமூகத் தொடர்பினால்தான் இவை நிறைவுப்பெறும். ‘சமூகம் ஒருவனுக்கு வலிமை உணர்வையும் (Strength), தற்காப்புணர்ச்சியையும் (Security) அளிக்கிறது. சமூகத்தில் பிறருடன் கூடி வாழ்ந்தால்தான் ஒருவனுக்கு அன்பும் (Affection) மனநிறையும் (Satisfaction) கிட்டும். சமூகமின்றித் தோழமை (companionship) இல்லை, தோழமையின்றி நம்மிடம் அன்பு செலுத்துவோர் இல்லை. அன்பு செலுத்தவும், பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பில்லாத சிறுவர்களே நெறி பிறழ்நடத்தைகளில் ஈடுபடுவர்’ என்று ’ஃப்ளமிங்’ என்னும் அறிஞர் கூறுவார் (க.ச., ப.17). சங்க இலக்கியத்தில் இடம்பெறும் தோழன், தோழி பாத்திரப் படைப்புகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன. தலைவன் தலைவியின் வாழ்வியல் செம்மையுற்று இன்பங்காண இவர்களின் உளவியல் மருத்துவ ஆற்றல்கள் வழிகோலுகின்றன.

உளவியலில் இளையோர் பருவம் பற்றிக் குறிப்பிடப்படுவதைப் போன்றே இலக்கியங்களில் இளையோர் பருவத்தினராகத் தலைவன், தலைவி குறிப்பிடப்பட்டுள்ளனர். ஏனைய நற்றாய், செவிலி, பார்ப்பார், கண்டோர், முதியோர் போன்றோர் பருவ அறிவுரைக் கூரல், சந்துசெய்வித்தல், உலக இயல்பு மொழிதல், சமூக அறம் வலியுறுத்தல்  ஆகிய உளவியல் நடத்தையினராகத் திகழ்கின்றனர்.

உள்ளும் புறமும் ஒத்து வாழ்வதே நல்ல ஆளுமையாகும் (க.க., ப.3730) என்றும், தன்னளவில் முரண்பாடுகள் அற்ற ஒத்திசைவும் சமூக அளவில் நல்லுறவான இணக்கமும் உளநலத்தின் இருபெரும் கூறுகள் என்றும் உளவியலார் சுட்டுகின்றனர். இப்பொருத்தப்பாட்டினைச் சிதைக்கும் சிக்கல்களை உளவியலார் மூவகைப்படுத்துவர். அவை,  1. உள்ள முறிவு (Frustration), 2. உள்ளப் போராட்டம் (Conflict), 3.  உள்ள இறுக்கம் (Pressures) ஆகும் (P.E.B.,P.176). தலைவன், தலைவி, நற்றாய், செவிலி ஆகியோர் இம்மூன்று சிக்கல்களுக்கும் ஆளாவதை இலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.

தற்கால உளவியல் மருத்துவம்

(மருத்துவர் ஹேமமாலினி)

இலக்கியத்தில் உளவியல் மேலாண்மை
1. நோயாளிகளை முழுவதுமாக பேசவைத்து, அவர்களின் கதைகளை முழுமையாக அறிதல். அவர்களை நம்புதல்; அவர்கள் நம்மீது நம்பிக்கைக்கொள்ளச் செய்தல். நோயாளியாக வரும்போது அவர்களுக்கு இருக்கும் கோவம், அச்சம் முதலான மன உணர்வுகளைப் போக்குதல்.  இலக்கியம் – தலைவன், தலைவி ஆகியோரின் மன உணர்வுகளைத் தோழன், தோழி ஆகியோர் முழுமையாக செவி மடுத்தல். ஆறுதல் வார்த்தை கூறுதல்.
2. நோயாளியின் அச்சம், நடுக்கம் முதலான ஆழமான உணர்வுகளை முழுமையாக வேளியேற்றிய பின்பு, நோயாளி மனத்தாக்குதலுக்கு உண்டான குறிப்பிட்ட நிகழ்வை அடையாளங் காணுதல். தலைவன் உற்ற நோய்க்கு தலைவியே காரணம் என்பதைத் தோழனும், தலைவி உள்ள நோய்க்குத் தலைவனே காரணம் என்பதைத் தோழியும் நுண்மாண் நுழைபுலக் கொண்டு அறிதல்
3. நம்வாழ்வில் மாற்றம் வேண்டின் நாம்தான் மாற வேண்டும்; பிறரை மாற்ற வாழ்நாள் முழுவதும் முயன்றுகொண்டிருக்கக் கூடாது என்பதைப் பாதிக்கப்பட்டோருக்கு உணர்த்துதல். வரைவு கடாதல் நிலையிலும், உடம்போக்குவித்தல் நிலையிலும் தலைவனிடமும், தலைவியிடமும் வெளிப்படுத்தும் தோழியின் வார்த்தைகளும் செயல்களும்.
4. தனியரின் வாழ்வில் நற்குணம் – தீய குணம் ஆகியவற்றை அடையாளங் காணுதல். நற்பண்பை மேலும் வளர்க்க ஊக்கப்படுத்துதல். தீயப் பண்பைக் களைய நோயாளி அறியா வண்ணம் எதிர்வினை ஆற்றுதல் அறிவுறுத்தல்களாகவும், வலியுறுத்தல்களாகவும், அறக்கருத்துகளாகவும் . நற்செயல்களின் பயனையும் தீயவற்றின் கேட்டையும் உணர்த்தும் சங்கச் சான்றோர்கள்.
5. எனக்கு மட்டுமே ஏன் இவ்வாறு நிகழ்கிறது? எல்லாம் என் விதிப்பயன் என்று புலம்பும் நோயாளிக்கு, நமக்கு நடக்கும் அனைத்திற்கும் நாமே காரணம் என்பதை உணர்த்துதல். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற சான்றோர் மொழி. .
6. எண்ணங்கள் தவறாக இருந்தால் செயல்கள் தவறாக இருக்கும் என்பதை நோயாளிக்கு உணர்த்துதல். மனத்தை ஒரு உறுப்பாகப் பார்த்தோடு,  அதில் தோன்றும் எண்ணங்கள் வாய்மையுடையதாக இருக்கவேண்டும் என்ற தமிழ்ச்சான்றோர்களின் வாக்கு.

7. நல்ல உறவு முறைகளைப் பேணுதல்; உறவுகளின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்தாமல் அன்போடு மகிழ்ந்திருத்தல்; நண்பர்களுடன் மகிழ்ந்திருத்தல்; நல்ல உறவுகள் தேவை என்பதை உணர்த்துதல்.

தலைமாந்தர்களுக்கு அமைந்து உறவுகள். தோழன், தோழி, செவிலி         பாத்திரப்படைப்பும் அவர்களின் அன்பும்.  நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல பணியாளர் அமைந்தால் முதுமையிலும் இளமையாக இருக்கமுடியும என்ற தமிழ்ச் சான்றோரின் வாக்கு.
8.  தீய வழியில் சென்றவர்கள் திருந்தி மீண்டு வந்தால், பழையதை அவர்களுக்கு நினைவூட்டாமல், அவர்களோடு இயல்பாகப் பழக குடும்பத்தார்க்கு ஆலோசனை வழங்கல். உடம்போகிய தலைவியைக் கண்டு மகிழும் செவிலி மற்றும் தலைவியின் இல்லறச் சிறப்பு அறிந்து மகிழும் தாய். அதேபோல, பரத்தமை ஒழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் மாண்டுவரும்போது அவனை முதலில் வெறுத்தாலும் குடும்ப பிணைப்பு கருதி பின்பு ஏற்றுக்கொள்ளும் தலைவி.

  உளநல மருத்துவர்களின் பொதுவான ஆலோசனைகள்:

  • உடல்நோயும் மன நோயும் ஒன்றோடொன்று தொடர்புடையது
  • நெருங்கிய நண்பர் (ம) குடும்ப உறுப்பினர்களிடம் பிரச்சினைகளைப் பகிர்தல் வேண்டும்
  • ஒருவரின் இயலாமையையும் புலம்பலையும் ஏளனம் செய்தல் கூடாது
  • அடிக்கடி சாவைப் பற்றி பேசுபவர், தனிமையை நாடுபவர், புலம்புபவரிடத்துக் கவனம் தேவை. மனநல ஆலோசனை தேவை.
  • விலை கொடுத்து வாங்க முடியாதது உயிர் என்பதை உணர்த்த வேண்டும்
  • அர்த்தமற்ற வாழ்க்கை என்பதை போக்கி – அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை விளங்கவைத்தல் வேண்டும்
  • உறவுகளின் சிறப்பையும் அறநெறிக் கருத்துகளையும் இளையோர்களுக்கு வழங்க வேண்டும்

நிறைவு

‘உளநல மருத்துவ மேலாண்மை’ என்ற அடிப்படையில் சங்க இலக்கியங்கள் நீண்ட ஆய்விற்குக் களமாக அமைகின்றன. ஆய்வின் கருதுகோளை மேற்கண்ட சங்க இலக்கியப் பாடல்களும் ஒப்பீடுகளும் உறுதிப்படுத்துகின்றன. மேலும், சங்க இலக்கியம் முதலாக சித்தர் இலக்கியம் வரையான தமிழர் வாழ்வியல் இலக்கியங்களை இப்பொருண்மையில் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வணுகுமுறை தமிழரின் உளநோய் மருத்துவ முறையில் பல நுணுக்கங்களை வெளிப்படுத்துவதாகவும் இன்றைய சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதாகவும் அமையும்.

*****

 

  சுருக்கக் குறியீட்டு விளக்கம்

அ.இ.கா.உ.கூ.                 – அக இலக்கணம் காட்டும் உளவியல் கூறுகள்

அகம்.                                   – அகநானூறு

இ.உ.                                     – இளையோர் உளவியல்

உ.து.                                     – உளவியற் துறைகள்

உள.                                      – உளநலவியல்

ஐங்.                                       – ஐங்குறுநூறு

க.உ.அ.                                – கல்வியின் உளவியல் அடிப்படைகள்

க.உ.ம.வ.                           – கல்வி உளவியல் மற்றும் வழிகாட்டி

க.க.                                       – கலைக்களஞ்சியம்

க.ச.                                       – கல்வியும் சமூகமும்

கலி.                                      – கலித்தொகை

கு.உ.                                     – குமர உள்ளம்

குறள்.                                  – திருக்குறள்

குறிஞ்சி.                             – குறிஞ்சிப்பாட்டு

குறு.                                      – குறுந்தொகை

ச.இ.உ.ம.உ.                      – சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்

ச.இ.க.நோ.                       – சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு

ச.இ.தா.சே.உ.                 – சங்க இலக்கியத்தில் தாய் சேய் உறவு

தொல்.                                 – தொல்காப்பியம்

தொல்.பொருள்.             – தொல்காப்பியம், பொருளதிகாரம்

தொல்.பொருள்.கள.    – தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்

தொல்.பொருள்.கற்பு  – தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல்

தொல்.பொருள்.மெய் – தொல்க்காப்பியம், பொருளதிகாரம், மெய்ப்பாட்டியல்

தொல்.மெய்.                    – தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்

நற்.                                        – நற்றிணை

P.A.I.,                                    – Psychology of Adolescents in India

P.E.B.                                    – Psychology and Effective Behaviour

துணைமைச் சான்றுகள்:

 அகத்திணை மாந்தர் – ஓர் ஆய்வு, இராமகிருட்டிணன், ஆ., சர்வோதய இலக்கியப் பண்ணை,

மதுரை, 1986.

அடிமனம் , தூரன், பெ., அமுத நிலையம், தேனாம்பேட்டை, சென்னை, 1957.

இலக்கியக் கனவுகள், சுப்பிரமணியன், ச.வே., தமிழ்ப் பதிப்பகம், சென்னை, 1979.

இலக்கியமும் உளவியலும், மறைமலை, சி.இ., மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மு.ப.1991.

இளையோர் உளவியல், அப்துல்கரீம்,அ., பார்க்கர் அச்சகம், சென்னை, மு.ப.1975.

இளையோர் வாழ்வியல், தொகுதி I & II, கார்ல் சி.காரிசன், பாரி அச்சகம், சென்னை, மு.ப.1964.

உள்ளக்கிளர்ச்சி, கலைக்களஞ்சியம், தொகுதி –II, நாராயணப்பிள்ளை, அ.ச., தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1955.

உளச்சுகாதாரம், திருமதி ஐ.மனுவேல், கலைக்களஞ்சியம், தொகுதி-2,

உளநலவியல், சண்முகம்,தா.ஏ., தமிழ் வெளியீட்டுக்கழகம், 1970.

உளவியல் துறைகள், இராசமாணிக்கம், மு., , தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.

உளவியல் துறைகள், இராசமாணிக்கம், மு., இரண்டாம் தொகுதி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1980.

உளவியலும் வாழ்வியலும், விஸ்வநாதன், ந., இன்லேண்ட் புக்ஸ், சென்னை, மு.ப.2002.

கல்வி உளவியல், கோகிலா தங்கசாமி, மாநிலா, மதுரை, மு.ப.1991.

கல்வி உளவியல், சந்தானம், எஸ்., கணபதி வி., சாந்தா பப்ளிசர்ஸ், சென்னை. மு.ப.2002.

கல்வியின் உளவியல் அடிப்படைகள், சந்தானம், எஸ்., பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, மு.ப.1981.

கல்வி உளவியல் கோட்பாடுகள், சுப்புரெட்டியார், ந., மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1989.

கல்வி உளவியலும் பாலர் இயல்பு ஆராய்ச்சியும், அப்பளாச்சாரியார், கே.ஆர்., வி.எஸ். வேங்கட்ராமன் கப்பெனி பப்ளிஷர்ஸ்,   கும்பகோணம், மு.ப.1968.

கல்வியும் உளவியலும், இராமலிங்கம், இரா., ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2000.

குமர உள்ளம்,  மு.அறம்., குமரன் அச்சகம், சென்னை, மு.ப.1965.

குழந்தைகளின் இயல்பும் போதனா முறையும்,  அருணாசதாய், வி., ஐயம் கம்பனியார், சென்னை, ஆ.ப., 1968.

சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், தட்சிணாமூர்த்தி, அ., மங்கையர்க்கரசி பதிப்பகம், தஞ்சாவூர், 2001.

சங்க இலக்கியத்தில் உளவியல், சிவராஜ், சிவம் பதிப்பகம், வேலூர், மு.ப.1984.

சங்க இலக்கியத்தில் தோழி,  சரளா ராஜகோபாலன், ஒளிப் பதிப்பகம், சென்னை, மு.ப.1986

சமூக உளவியல், சரஸ்வதி, ச., சாரு ஆப்செட், சிதம்பரம், மு.ப.2000.

சமூக உளவியலுக்கு ஓர் அறிமுகம், குப்புசாமி, பி., தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சங்கர் அச்சகம், சென்னை,         மு.ப.1978.

தற்காப்பு இயங்குமுறைகள், கலைக்களஞ்சியம் – X, முனிர் அஹமத் பருக்கி, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1968.

பிறழ்நிலை உளவியல், பேஜ், ஜேம்ஸ், பி., தமிழாக்கம் அ.பெசன்ட் கிரீப்பர் ராஜ், தமிழ் வெளியீட்டுக்      கழகம், 1965.

பொது உளவியல், தொகுதி ஒன்று, போவாஸ், ஜி.பி.,  தமிழாக்கம் அ. வரதரஜூலு, 1972.

பொது உளவியல், தொகுதி இரண்டு, போவாஸ், ஜி.பி.,  தமிழாக்கம் தி.இரா.அரங்கராசன், சென்னை, 1972.

மனநோய் உளவியல், இராஜமாணிக்கம், மு., சபாநாயகம் பப்ளிகேசன்ஸ், சிதம்பரம், மு.ப.2005.

மனித உள்ளம், ஆநிநாராயணன், எஸ்.பி., பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, இ.ப. 1977.

மனித உள்ளம், சண்முகம், தா.ஏ., வேலன் பதிப்புகம், கோயம்புத்தூர், மு.ப.1967.

மனிதனும் மனமும், மில்டன், சார்லஸ், வி., ஸ்ரீ மாருதி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2001.

மனோதத்துவ மருத்துவம், சோமசுந்தர், ஆர்.எம்., நர்மதா பதிப்பகம், சென்னை, 1981.

முனைவர் பட்ட ஆய்வேடுகள் (ம) ஆங்கில நூல்கள்:

அக இலக்கணங்கள் காட்டும் உளவியற் கூறுகள், முனைவர் பட்ட ஆய்வு, த.கவிதா, கரந்தை கல்லூரி, தஞ்சாவூர், 2010.

சங்க இலக்கியத்தில் உளவியல் நோக்கு, முனைவர் பட்ட ஆய்வு, ந.சேஷாத்திரி, சென்னைப் பல்கலைக்கழகம், 1986

 A Study of Psychopathology, Lupuz, Lourdes,V., University of Pholippines, Quezon City, 1973.

Educational Psychology and Guidance, Bhatia, B.D. and R.N. Safaya, Dhanpat Rai and Sons, Jullundur, Delhi, 1984.

Elements of Psychopathology,  White, Robert, B.Gilliland Robert, m., The Mechanisms of Defense, Grune and Strattion, New York, 1975.

Introduction to Psychology, Munn, Norman,L., IBH Publishing Company, Calcutta, 1967.

Know Yourself Help Yourself, Weinberg George, Sheldon Press, London, 1975.

Psychology and Effective Behaviour,  Coleman, James C., D.B. Tarapore Vela Sons and Co. Private Ltd., Bombay,      1971.

Psyche, Society and Tension, Avasthi, Rajendra, The Minerva Association Ltd., Calutta, 1973.

 உளவியல் மருத்துவர் நேர்காணல்

ஹேமமாலினி லட்சுமி நரசிம்மன், உளவியலாளர், குழந்தைகள் மற்றும் குடும்பநல மருத்துவர், சென்னை. 21.03.2019.

குறிச்சொற்கள்:

#சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவம் #சங்கத் தமிழரின் மனவள மருத்துவம் #பழந்தமிழரின் உளநோய் மருத்துவ மேலாண்மை #பண்டைத் தமிழரின் மனநோய் மருத்துவம் #தமிழரின் மனவள மருத்துவம் #தமிழரின் உளநோய் மருத்துவம் #தமிழரின் உளநல மருத்துவம் – அணுகுமுறைகளும் தீர்வுகளும் #மனவள மருத்துவம் #உளநோய் மருத்துவம்

Dr.A.Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai- 600113.

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

2 comments

  • மிக மிகச்சிறப்பு……
    வளம்பெற்று வாழ்க
    நலம் பெற்று நிறைக…

error: Content is protected !!