குறுந்தொகை – அறிமுகம்

குறுந்தொகை – அறிமுகம்

முனைவர் ஆ. மணவழகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. செப்டம்பர் 20,2011.

எட்டுத்தொகை நூல் வைப்பு முறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘குறுந்தொகை. இது அக இலக்கிய வகையைச் சார்ந்தது. இதற்கு உரை எழுதியவர் பேராசிரியர் என்றும், அவர் எழுதாமல் விட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்றும் கூறப்படுகிறது.  ஆனால், அவர்களுடைய உரைகள் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, மூலநூலே கி.பி.1915 வரை தமிழுலகிற்குக் கிடைக்காமல்தான் இருந்தது. குறுந்தொகை மூலமும், திருக்கண்ணபுரந்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கன் (தி.சௌ.அரங்கசாமி ஐயங்கார்) இயற்றிய புத்துரையும் 1915-இல், வித்யாரத்னாகர அச்சுகூடத்தாற் பதிப்பிக்கப்பட்டு முதன்முதலாக வெளிவந்தது.  

நூல் அமைப்பு

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல்கள் 401 (உ.வே.சா.வின் கூற்றுப்படி). இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ; தொகுப்பித்தவர் தெரியவில்லை. இந்நூலிலுள்ள பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். இவருள் பலரின் இயற்பெயர் தெரியவில்லை. மீனெறி தூண்டிலார், செம்புலப் பெயல்நீரால், கயமனார், நெடுவெண்ணிலவினார், விட்ட குதிரையார், ஓரேருழவரனார் போன்றோர் பாடலடிகளால் பெயற்பெற்றுள்ளனர். பாடல்களின் அடி அளவு நான்கடி முதல் எட்டடிவரை. கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.   

சிறப்புகள்

எட்டுத்தொகையை அறிமுகப்படுத்தும் பழம் பாடல் குறுந்தொகையை ‘நல்ல குறுந்தொகை’ என்று குறிப்பிடுகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 401 பாடல்களில் சுமார் 250 பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பெற்றுள்ளன. 29 உரையாசிரியர்கள் தத்தம் உரைகளிலே சுமார் 716 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியர் மட்டுமே 208 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளதன் மூலம் இதன் சிறப்பை அறிய முடிகிறது.

உள்ளம் இனிக்கும் உவமைகள் சில

        சமூகச் சூழலை உணர்த்தும் உவமைகள், தொழில்முறைகளோடு தொடர்புடைய உவமைகள், சுற்றுச் சூழலை மையமாகக் கொண்ட உவமைகள், பண்பாட்டை வெளிப்படுத்தும் உவமைகள் என பல எளிய இனிய உவமைகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.

 அவற்றுள் சில:

1.             செம்புலப் பெயர்நீர் போல

2.             குப்பைக் கோழித் தனிப்போர் போல

3.             கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

                     நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு

4.             ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து

                     ஓரேர் உழவன் போல

5.             ‘உலைவாங்கு மிதிதோல் போல’

6.             ‘——–  ——-  கள்வர்தம்

                     பொன்புனை பகழி செப்பங் கொண்மார்

                     உகிர்நுதி புரட்டும் மோசை போல’

7.             கையில் ஊமன் கண்ணில் காக்கும்

                     வெண்ணெ யுணங்கல் போலப் 

8.             பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன

                     நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல

குறுந்தொகை காட்டும் பண்பாடு

       குறுந்தொகைப் பாடல்களில் அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு புதைந்துகிடைப்பதைக் காணலாம். குறுந்தொகையில் சிறந்த உவமைகள் இடம்பெற்றுள்ளதைப் போலவே, சமூக நலன் நாடும் சிறந்த தொடர்களும் இடம்பெற்றுள்ளன. இத்தொடர்கள் அக்கால மக்களின் வாழ்வியல் உயர் பண்புகளை, சமூகச் சூழல்களை வெளிப்படுத்துவதாக உள்ளன. குறிப்பாக,

                       ‘உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்’

                       ‘வினையே ஆடவர்க்கு உயிரே’

                       ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’

                       ‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’

              ‘இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு’

போன்ற தொடர்களைக் குறிப்பிடலாம். இத்தொடர்கள் செல்வத்தின் பயனையும், முன்னோர் சேர்த்து வைத்த செல்வத்தை முறையாக செலவு செய்யாமல் வீணடிப்பவர் விரைவில் கெட்டழிவர் என்பதையும், ஆண்களுக்கு வினை என்பது உயிரைப் போன்றது என்பதையும், பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்த வாழ்க்கை நிலையையும், பொருளில்லாரின் வாழ்க்கையில் இன்பம் என்பதற்கு இடமில்லை என்பதையும் வலியுறுத்துகின்றன.

       குறுந்தொகை, அக இலக்கியம் என்றாலும், புறச் செய்திகளையும், சமூக உயர் பண்பு நெறிகளையும், விழுமியங்களையும் பல இடங்களில் சுட்டுகின்றது. சான்றோர் என்பவர் யார் என்பதையும், அவர்களின் தன்மையையும் பற்றிக் குறிப்பிடுமிடத்து,

சான்றோர், புகழு முன்னர் நாணுப

                                பழியாங் கொல்பவோ காணுங் காலே;(குறு.252)

என்று மிக அழகாக அடையாளப்படுத்துகிறது. மேடையமைத்து தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக்கொள்ளும் இன்றைய சமூக நிலையில், குறுந்தொகை, சான்றோர் என்பவர் தங்களைப் புகழும் முன்பாகவே நாணம் கொள்வர்; புகழ்ச்சியையே தாங்கிக் கொள்ளாதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் பழியை எப்படி ஏற்பர். அவற்றைப் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறது.  மேலும், பல பாடல்கள் விருந்தோம்பலின் சிறப்பினை வலியுறுத்துகின்றன.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

                                வருவீ ருளீரோ வெனவும் (குறு.11;3-4)

என்பதில் மாலையில் ஊரின் எல்லையை அடைக்கும் வாயில் காவலர்கள், உள்ளே வருவதற்கு விருந்தினர் எவரேனும் இருக்கிறீர்களா என்று கேட்டு வாயிலை அடைக்கும் விருந்தோம்பல் பண்பு காட்டப்படுகிறது. அதே போல இல்லத்திற்கு இரவலர்கள் வராத நாள் துன்ப நாளாக கருதபட்டது.

சுவை மிக்க பாடல்களில் சில

குக்கூ என்றது கோழி

       தம் உள்ளத்தின் உணர்வுகளை இம்மியும் தப்பாமல் பிறருக்கும் உணர்த்த முடியுமேயானால் அவனே சிறந்த எழுத்தாளனாகிறான். அந்த எழுத்தே அழியா காவியமாகிறது. குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் ஒரு காதல் காவியமாக உள்ளதைக் காணமுடிகிறது. காட்டாக ஒரு பாடல், இரவில் கணவனோடு சேர்ந்திருக்கிறாள் ஒரு தலைவி. இரவு முடிகிற விடியற்காலையில் கோழி கூவுகிறது. கோழி கூவுவதைக் கேட்டதும் ஏற்பட்ட  அவளின் மன நிலையை பின்வருமாறு உரைக்கிறது பாடல்.

                              குக்கூ என்றது கோழி அதனெதிர்

                                துட்கென்றன் என் தூய நெஞ்சம்

                                தோடாய் காதலர்ப் பிரிக்கும்

                                வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே (குறுந்.157)

தலைவனோடு சேர்ந்திருக்கும் பொழுது கோழி ‘குக்கூ’ என்று கூவியது, அதைக்கேட்ட என் நெஞ்சம் ‘துட்கென்றது’ என்கிறாள். இதில் உள்ள அழகான ஓசை நயம் உணரத்தக்கது. துன்பச் செய்தியைக் கேட்டதும் ‘திக்குனு’ ஆகிவிட்டது என்று இன்று நாம் சொல்லும் இந்த உணர்ச்சிநிலையை இங்கு இலக்கியம் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் வைகறை(விடியல்) வருகிறது. ஆனால் அன்று வந்த விடியல் காதலரைப் பிரிக்கும் வாள்போல் வந்தது என்கிறாள். சூழலை வார்த்தைகளில் காட்டும் வண்ணத்தை இங்குக் காணமுடிகிறது.

கண்ணால் காண்பதே இன்பம்

       காதலர்கள் சேர்ந்து இன்ப வாழ்க்கை வாழாவிடினும், ஒருவரை ஒருவர் அவ்வப்போது காண்பது மனதிற்கு மகிழ்வையும் நிம்மதியையும் தருகிறது.  சேர்ந்து வாழ முடியாத சூழலில் தன் காதலனைக் காண்பதே தற்போது இன்பமாக இருக்கிறது என்கிறார் ஒருத்தி. இதனை அழகான உவமையால் விளக்குகிறாள்.

                              குறுந்தாள் கூதளி ராடிய நெடுவரைப்

                                பெருந்தேன் கண்ட இருகை முடவன்

                                உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து

                                சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்

                                நல்கார் நயவார் ஆயினும்

                                பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே (60)

உயர்ந்த மலை. அம்மலை மீது உள்ள பெரிய மரத்தின் உச்சியில் பெரிய தேன்கூடு ஒன்று உள்ளது. அதனைக் கண்ட இரு கைகளும் இல்லாத முடவன் ஒருவன் மரத்தின் கீழ் நின்றுகொண்டு, தேன் கூட்டை நோக்கி கையை நீட்டி நீட்டி நக்குகிறான். தேன் கையில் வரவில்லை என்றாலும் வருவதுபோல எண்ணி இன்பம் அடைகிறான். அதைப்போல, காதலர் தன்மீது இரக்கம் கொண்டு தம்மைச் சேர வரவில்லை என்றாலும் அவரைக் கண்களால் காண்பதே உள்ளத்திற்கு இனிமை தருவதாக உள்ளது என்கிறாள் தலைவி.

       இதே மனநிலையில் இருக்கும் தலைவன் ஒருவனின் சூழலை விளக்கும் மற்றொரு பாடல் பின்வருமாறு உவமையை அமைத்துள்ளது.

                              தச்சன் செய்த சிறுமா வையம்

                                ஊர்ந்து இன்புறார் ஆயினும் கையின்

                                ஈர்ந்து இன்புறும் இளையோர் போல (61)

அதாவது, தச்சன் செய்து கொடுத்த அழகிய சிறிய தேரினை இழுத்துச் செல்லும் சிறுவர்கள், அத்தேரில் ஏறி அமர்ந்து அதனை ஓட்டி இன்புற வாய்ப்பு இல்லை என்றாலும், அதன் மீது அமர்ந்து செல்வதைப் போல எண்ணி, அதனை இழுத்து விளையாடி இன்பம் அடைகின்றனர். அதேபோல, காதலியோடு சேர வாய்ப்பு இல்லை என்றாலும் அவளோடு வாழ்வதுபோல  எண்ணி வாழ்ந்திருத்தலே இன்பம் தருகிறது என்கிறான் தலைவன்.

உயிர்ச் சிறிது காதலோ பெரிது

காதல் என்றால் எக்காலத்திலும் இடையூறுகள் இருக்கத்தானே செய்கின்றன. காதலித்ததால் வீட்டில் கண்டிக்கப்பட்ட ஒரு தலைவி தன் வீட்டு முற்றத்தில் இருக்கும் பலா மரத்தினை நோக்கி தன்னிலையோடு ஒப்பிடுகிறாள்.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசி னோரே? சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்

உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே! (18)

உயர்ந்த பலா மரத்தில் இருக்கும் பெரிய பலா பழமானது சிறிய காம்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. பலா பழம் நாளுக்குநாள் பெரியதாவதால், பழத்தின் எடை தாங்காது எந்த நேரத்திலும் காம்பு உடைந்த பழம் விழலாம். அதுபோல, என் உள்ளத்தின் காதலானது நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே செல்கிறது. ஆனால், என் உயிரோ பலா பழத்தின் காம்பைப் போல மிகச் சிறிது. பலா பழம் எந்த நேரத்திலும் அறுந்து விழுந்துவிடுவதைப் போல, தலைவன் மீது கொண்ட காதல் நாளுக்குநான் பெருகுவதால் என் உயிரும் எந்த நேரத்திலும் பிரிந்துவிடலாம் என்கிறாள்.

இல்வாழ்க்கை

        உடன் போக்கு சென்று (வீட்டை விட்டு வெளியேறுதல்) தனிக்குடித்தனம் மேற்கொள்ளும் புதுமணத் தம்பதிகளின் இல்லற வாழ்க்கையைக் குறுந்தொகைப் பாடலொன்று மிக அழகாகப் படம்பிடிக்கிறது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

இனிது எனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.(167)

முதல் முதலாக தன் கணவனுக்காகச் சமைக்கும் பெண் ஒருத்தியின் செயல்பாடுகளும், கணவனுக்குத் தான் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பமும் இங்குக் காட்டப்படுகின்றன.. கட்டித் தயிரினை அழகான விரல்களால் பிசைகிறாள்; தயிர் பிசைந்த கையினை தன் ஆடையில் துடைத்துக்கொள்கிறாள்; முதல் முதலாக சமைப்பதால் அடுப்பை சரியாக எரியூட்டத் தெரியவில்லை. அதனால் புகை கண்களில் பட்டு கண்கள் கலங்குகின்றன.  அதனையும் துடைத்துக்கொள்கிறாள். கண்களில் எல்லாம் கரி ஒட்டியிருக்கிறது. எப்படையே சமைத்து முடித்துவிட்ட உணவினை தன் கணவனுக்குப் பரிமாறுகிறாள். கணவன் இனிது என உண்கிறான். அந்த சொற்களைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறாள். கணவனை மகிழ்விக்க எண்ணும் மனைவியும், சுவை எப்படி இருந்தாலும் இனிது என உண்டு மனைவியை மகிழ்விக்கும் கணவனும் இன்ப இல்லறத்திற்கும் இங்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளனர்.  

காமம் என்றால் என்ன?

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

என்று, காதல் என்றால் என்ன என்பதற்கு அழகாக விளக்கம் சொன்ன குறுந்தொகை, காமம் என்றால் என்ன என்பதற்கும் விளக்கம் சொல்கிறது. இதனைக் கீழ்வரும் பாடலில் காணலாம்.

காமங் காம மென்ப காமம்

அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்

கடுத்தலுந் தணிதலு மின்றே யானை

குளகுமென் றாண்மதம் போலப்

பாணியு முடைத்தது காணுனர் பெறினே(136)

காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று. கடுத்தலும்(மிகுதலும்),தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல மனதிற்கு ஏற்ற பொருத்தமானவரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது என்கிறது. காமம் என்பது இன்று தவறான பொருளின் வழங்கப்படுவது உணரத்தக்கது.

குறிப்பிடத்தக்க குறுந்தொகைப் பதிப்புகள்

1.திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் (உரையும் மூலமும்-அச்சில் ஏற்றிய முதல்வர்- 1915) 2.உ.வே.சா – 1937, 3.பேரா. இராகவையங்கார்- 1946 4.பொ.வே. சோமசுந்தரனார் – 1955

ஆங்கில மொழிபெயர்ப்பு

                மு. சண்முகம்பிள்ளை மற்றும் டேவிட் இ.லூ

குறுந்தொகை எளிய வடிவம்

குறுந்தொகை வசனம், குறுந்தொகை விருந்து, குறுந்தொகைச் செல்வம் – மு.வ, குறுந்தொகைச் சொற்பொழிவுகள் – கழகம்

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!