நற்றிணை – அறிமுகம்

நூலறிமுகம்

சங்க இலக்கியம் – நற்றிணை,

முனைவர் ஆ.மணவழகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். செப்டம்பர் 07, 2011.

 எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.

நூல் அமைப்பு

நற்றிணையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 400. பாடல்கள் 9 அடிகள்  முதல்  முதல் 12 அடிகள் வரை. இந்நானூறு பாடல்களையும் 175 புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டிய அரசன் மாறன்வழுதி என்பவனால் இந்நூல் தொகுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொகுத்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நற்றிணை ஆசிரியர்கள் சிலரின் இயற்பெயர் தெரியவில்லை. அதனால் அவர்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள அடிகளால் பெயர் பெற்றுள்ளனர். (எ.கா. தேய்புரி பழங்கயிற்றனார், தனிமகனார்).

சிறப்புகள்

நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றிருந்தது  போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.

நீரின்றமையாவுலகு’, ‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர், ‘விருந்தோம்பல்’ போன்ற குறள் கருத்துகள் பலவற்றிற்கு மூலம் நற்றிணையே. அதோடு, உவமைத்திறம், உள்ளுறை, இறைச்சிப் பொருள்களின் அமைப்பு என இலக்கியச் சுவையும்  மிகுந்ததாக நற்றிணைப் பாடல்கள் திகழ்கின்றன.

சுவைக்க சில செய்திகள்

 மரங்களையும் உடன்பிறந்தோராக எண்ணுதல்

         தாவரங்களுக்கு ஓர் அறிவாகிய ‘தொடு உணர்வு’ உண்டு என்பது தொல்காப்பியர் கூற்று. ஆனால் அதற்கு மேலேயும், பேச்சுகளை உணரும் தன்மையும், சூழலை உணரும் தன்மையும், செயல்களை உணரும் தன்மையும் அவைகளுக்கு உண்டு என்கிறது நற்றிணை. அதனாலேயே நற்றிணைப் பெண் ஒருத்தி தாவரத்தைத் தன்னுடைய மூத்த சகோதரி என்கிறாள். உடன்பிறந்தோரையே உதறித்தள்ளும் இன்றையக் காலச்சூழலில், தன் தாய் வளர்த்த புன்னை மரத்தைத்கூடத் தன் ‘உடன்பிறந்தோராக’ எண்ணும் உயரிய பண்பினை நற்றிணைக் காட்டுகிறது.

தன் காதலனோடு புன்னை மரத்தின்கீழ் நின்று பேசிக்கொண்டிருக்கும் பெண் ஒருத்தி, திடீரென இந்த மரத்தின் கீழ் நின்று பேச வேண்டாம், நாம் வேறு இடத்திற்குச் செல்வோம் என்கிறாள். காரணம் கேட்கும் காதலனிடம், ‘நான் பிறப்பதற்கு முன்பாகவே விதை ஊன்றி பாசத்தோடு வளர்க்கப்பட்டது இப்புன்னை மரம் என்றும்,  இது என்னை விடச் சிறந்ததென்றும், என் மூத்த சகோதரி என்றும் என் அம்மா கூறியிருக்கிறாள் அதனால் இதன் கீழ் நின்று உன்னோடு பேச எனக்கு நாணமாக இருக்கிறது’ என்கிறாள்.  இதனை,

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

------------- ------------  ----------

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

என்கிறது நற்றிணை. பழந்தமிழரின் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினையும், மரம் போன்று அஃறிணை உயிர்களிடத்தும் அன்புகொண்டு தம் பிள்ளைகளைவிட மேலானதாகப் போற்றிய உயிர் இரக்கத்தையும் இதில் அறிய முடிகிறது. இதுபோன்று, மரத்தைக்கூட சகோதரியாக எண்ணும் உயர் பண்பையும், தான் காதலிப்பதை மரம்கூட அறிந்துவிடக்கூடாதே என்றெண்ணி நாணும் பண்பட்ட நாகரிகத்தையும் உலகின் வேறு இலக்கியங்கள் காட்டுகிறதா என்பது கேள்விக்குறியே.

அரசுக்கு அறிவுறுத்தல்

 அரசிற்குப் பொருள் ஈட்டும் வழிகளில் ஒன்று ‘வரிவிதித்தல்’ என்பது. இந்த வரிவிதித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தினைக் கருத்தில்கொண்டு அமைய வேண்டுமே அன்றி, அரசிற்கு வரும் வருவாயின் அளவைக் கணக்கில்  கொண்டு அமைந்து விடுதல் கூடாது. வருவாய் ஒன்றையே நோக்கமாகக் கொண்டால் அவ்வரசு நல்லரசாக  அமையாது. மக்களும் நல்வாழ்வு வாழ முடியாது.  இக்கருத்தை, ‘மூலிகை மருத்துவத்தை மேற்கொள்ளும் மக்கள் மூலிகையைப் பறிக்கும்பொழுது மரமே இறந்துவிடும்படி வேரோடு பறிக்க மாட்டார்; தவம் மேற்கொள்ளும் மக்கள் உயர்தவமே ஆயினும் தம் வலிமை முழுதும் கெட்டு உயிர் போகும் அளவிற்கு அதனை மேற்கொள்ள மாட்டார்; அதுபோல, நல்லாட்சி செய்யும் மன்னர் குடிமக்கள் வளம் கெட்டு வருந்தும்படி வரி வாங்க மாட்டார் என்கிறது நற்றிணை.

மரம்சா மருந்தும் கொள்ளார்  மாந்தர்;

உரம் சாச் செய்யார் உயர்தவம்; வளம் கெடப்

பொன்னும் கொள்ளார் மன்னர்' ( நற். 226:1-3)

உண்மைச் செல்வம்

ஒருவர் உண்மையானச் செல்வம் எது என்பதை நற்றிணைப் பாடல் ஒன்று உலகிற்கு அழகாக உணர்த்துகிறது. செல்வம் என்பது, ஒருவன் சேர்த்து வைத்திருக்கும் பொன்னையோ, பொருளையோ, இனிதாகப் பயணம் செய்ய வைத்திருக்கும் ஊர்திகளையோ, இனியவை செய்யக் காத்திருக்கும் வேலையாட்களையோ  பொறுத்து  அமைவதல்லை; நல்லவர்களின் செல்வம் என்பது, அவரைச் சேர்ந்தோரின் துன்பங்களைக் கண்டு அவற்றைப் போக்கும் உயர்ந்த பண்பேயாகும் என்கிறது.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே,

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே (நற்.210:5-9)

உயிர் இரக்கம்

மரங்களையும், விலங்குகளையும் உடன் பிறந்தோராகவும், பிள்ளைகளாகவும்  எண்ணிப் போற்றிய காரணத்தால்தான், தென்னை மரத்திற்குத் ‘தென்னம்பிள்ளை’ என்றும் அணிலுக்கு ‘அணிற்பிள்ளை’ என்றும் கீரிக்குக் ‘கீரிப்பிள்ளை’ என்றும் பெயர்களை வைத்தனர் தமிழர். மேலும், உயிரிரக்கம் என்பது அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொள்வதுதானே. அதனால்தான் பழந்தமிழர் பறவைகளிடத்தும் இரக்கம் கொண்டிருந்தனர். பறவைகளுக்கும் கருணை காட்டினர். இதனை நற்றிணைப் பாடல்களில் அறியலாம். நிலத்தில் விளைந்த விளைச்சலை வீட்டில் சேர்க்கும் காலம் வந்தது. நல்ல வெண்ணெல் விளைந்திருந்தது. அதனை அரிந்து எடுக்க எண்ணிய உழவர்கள் ‘தண்ணுமை’ என்னும் கருவியை முழக்கி இசையை எழுப்பினர். இதனை,

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ

பழனப் பல் புள்இரிய (நற். 350: 1-2)

எனக் காட்டுகிறது பாடல். இசை முழங்கி நெற் அரிதல் ஒரு சடங்கு போல தோன்றினாலும் இதில் புதைந்திருக்கும் உண்மை வேறானது. நெற்பயிரில் சிறு குருவிகள் கூடுகட்டி வாழ்ந்திருக்கும். நெல்லை அரிந்தெடுக்கும் போது அக்குருவிகளுக்குத் தீங்கு நேரிடலாம். இசையை முழங்கி ஆராவாரம் செய்தால், அக்குருவிகள் தங்கள் கூட்டத்தோடு வேற்றிடம் பெயரும், தீங்கு நேராது என்ற உயிரிரக்கம் இதில் புலனாகிறது.

உயிர் இரக்கம் என்பது, பிறர்க்குச் சிறுதுன்பம்  நேர்ந்தபோதும், தன் நலனைக் கருதாது விரைந்து சென்று, அத்துன்பத்தைப் போக்க முயல்வதாகும். அதைத்தான், கண்ணிற்கு ஏதாவது துன்பம் என்றால், கை யோசிப்பதில்லை, விரைந்து சென்று துயர் நீக்கும். அதுபோலத்தான் நல்லவர்களின் மனம் உயிரிரக்கம் கொண்டாக இருக்கும் என்கிறது நற்றிணை.

கண்ணுறு விழுமம் கைபோல் உதவி (நற்.216:3)

 உயர் பண்பு

 விருந்தோம்பல் என்பது தமிழர்களின் உயர் பண்பு. விருந்தினர் என்பவர் இன்று வழங்கப்படுவதுபோல தெரிந்தவர்களோ உறவினர்களோ அல்ல; முன்பின் தெரியாதவர்கள்தான் விருந்தினர் என்பவர். முன்பின் தெரியாதவர்களையும் அன்போடு வரவேற்று, உபசரித்து, அவர்களுக்கு வேண்டும் உணவளித்து பசிபோக்குவதுதான் விருந்தோம்பல். அவ்வகையில், நடு இரவில் விருந்தினர் வந்தாலும்கூட அவர்களையும் அன்போடு வரவேற்று, இன்முகத்தோடு விருந்து உபசரிக்கும் இல்லத் தலைவியை,

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்

முல்லைசான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (நற்.142: 1)

என்று காட்டுகிறது நற்றிணை. மேலும் இதில், கற்பு என்பது இல்லத்திலிருந்து விருந்து உபசரிக்கும் நற்குணமே என்பதையும் அறியலாம்.

மருத்துவன் இயல்பு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பிற துறைகள் போலவே மருத்துவத்துறையும் வளர்ச்சியுற்று விளங்கியதற்கு நற்றிணைப் பாடல்கள் சான்றுகளாக உள்ளன. மருத்துவத் துறையைக் குறிப்பிடும் இடத்து மருத்துவனின் இயல்பு சுட்டப்படுகிறது.  மருத்துவன் என்பவன், நோயாளிகள் விரும்பி கேட்கும் அனைத்தையும் கொடுக்காமல், நோயின் தன்மை அறிந்து, அந்த நோய் தீர்வதற்கான மருந்துகள் எவையோ அவைகளை மட்டும் ஆராய்ந்து கொடுத்து, நோயினைக் குணப்படுத்துவான் என்கிறது.

அரும்பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல ( நற். 136: 2-3)

 இவைபோல இன்னும் ஏராளமான செய்திகளைக் கொண்டுள்ள நற்றிணையை முழுமையாகச் சுவைத்து இன்புறுங்கள். தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை உணருங்கள்.

தமிழியல்.காம்

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!