பரிபாடல் – அறிமுகம்

பரிபாடல் – அறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113. மார்ச்சு 15, 2012.

எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல் பரிபாடல். எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பழம்பாடல் இதனை ‘ஓங்கு பரிபாடல்’ என்று சுட்டுகிறது. இதனால் இதன் சிறப்பு விளங்கும். பரிந்து செல்லும் ஓசையுடைய பாக்களால் அமைந்த ஒருவகைச் செய்யுளே பரிபாடலாகும். அதாவது, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், பலவகை அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் பாட்டு என்று பொருள்படும். பரிபாடலின் இலக்கணத்தைக் குறிப்பிடும் தொல்காப்பியர், ‘அது நான்கு வகைப்பட்ட வெண்பா இலக்கணத்தை உடையது. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா மருட்பா என்று கூறப்படும் எல்லாப் பாவினுடைய உறுப்புகளைப் பெற்று வரும்; அது காமப் பொருள் பற்றிப் பாடப்படும் என்கிறார். அதாவது, தமிழின் சிறந்த பாடல்களான அகப்பொருள் பாக்களைக் கலிப்பாவினாலும் பரிபாடலாலும் பாடவது வழக்கம் என்பது தொல்காப்பியர் கருத்து.

ஆயினும் பரிபாடல் நூலில் முருகன் பற்றியும், திருமால் பற்றியும் இறையுணர்வுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தொல்காப்பியர் காலத்திற்குப் பிந்தைய வழக்கமாக இதனைக் கருதலாம். 

பழம்பாடலொன்று,

   திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்                

தொரு பாட்டுக் காடுகிழாட் கொன்று – மருவினிய

                வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப

                செய்ய பரிபாடல் திறம்

என்று பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. இதில், திருமாலுக்கு எட்டுப் பாடல்களும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், காடுறை தெய்வமாகிய கொற்றவைக்கு ஒரு பாட்டும், வைகை ஆற்றுக்கு இருபத்தாறுப் பாடல்களும், மதுரைக்கு நான்கு பாடல்களுமாக எழுபது பாடல்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது.

ஆனால் தற்போது இருப்பத்திரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றுள் திருமாலைப் பற்றிய பாடல்கள் ஆறு (1, 2, 3, 4, 13, 15); முருகனைப் பற்றியப் பாடல்கள் எட்டு (5, 8, 9, 14, 17, 18, 19, 21); வைகையைப் பற்றிய பாடல்கள் எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22). கிடைத்திருக்கும் இந்த 22 பாடல்களில் முதற் பாடலையும் இறுதிப் பாடலையும் பாடிய புலவர்கள் யாரென்று தெரியவில்லை. மீதமுள்ள 20 பாடல்களை 13 புலவர்கள் பாடியுள்ளனர்.

இதில், நல்லந்துவனார் நான்கு பாடல்களையும், கடுவன் இள எயினனார் மூன்று பாடல்களையும், குன்றம் பூதனார் மற்றும் நல்லழுசியார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களையும் பாடியுள்ளனர். இளம்பெருவழுதியார், கரும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லெழுனியார், நல்வழுதியார், மையோடக் கோவனார் ஆகியோர் தலா ஒரு பாடல் பாடியுள்ளனர்.

பரிபாடலில் உள்ள ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்  போன்ற குறிப்புகள் உள்ளன. ஆனால்முதல் பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் தெளிவாக இல்லை. மேலும் முதல் பாடலில் 14 முதல் 28ஆம் அடிவரை உள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடிகளென்றும் பேரெல்லை 400 அடிகளென்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

நூற்சிறப்பு

பரிபாடலில் உள்ள பாடல்கள் அனைத்தும் மதுரையையும் பாண்டிய நாட்டையும் அதன் வளத்தையும், முருகன், திருமால் ஆகியோரின் சிறப்புகளையும், இருப்பையும், வையை ஆற்றையுமே பாடுகின்றன.

இசை பொருந்திய பாடல்களே பரிபாடல். பிற்காலத்தில் திவ்வியப் பிரபந்த நூல்கள் தோன்றக் காரணமானவை பரிபாடல்களே என்பர்.

முருகப் பெருமானின் தோற்றத்தை பற்றி இந்நூல் கூறும் செய்தி குறிப்பிடத்தக்கது.

சிறந்த உவமைகள், சிறந்த தொடர்கள், சிறந்த கருத்துகள் போன்றவை இந்நூலிற்கு இலக்கியச் சுவை கூட்டுவன.

இந்நூலின் உரையாசிரியர் பரிமேலழகர் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

ஐம்பூதங்கள் மற்றும் உலகத்தின் தோற்றம்

பரிபாடலின் செய்யுளொன்று,       ஐம்பூதங்களின் தோற்றம், உலகின் தோற்றம் பற்றி அறிவியல் அடிப்படையில் எடுத்தியம்புகிறது. இது பண்டைத் தமிழரின் அறிவு நுட்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பாடல் வருமாறு.

தொல்முறை இயற்கையின் மதியொ….
… … … … … … … … மரபிற்று ஆக.
 பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
(பரி.2;1-12)

        இப்பாடலில், பழங்காலம் தொட்டு ஒன்றுக்கு ஒன்று மாறிவரும் இயல்புடைய திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் அழிந்திட்டதால், அழகற்ற இயல்பை உடையதாய் மாறியதோடு, தன்னிடமிருந்த வான் உலகும் நிலவுலகும் பாழ்பட்டு ஒழிந்தன. ஒழிய, அந்த வானமும் இல்லையாய் ஒழிந்தன. இந்நிலையில் ஊழிகள் முறைமுறையே பல கழிந்தன.

        ஊழிகள் பல கழிந்த பின்பு, மூல அணுவிலிருந்து தன் குணமான ஒலியுடன் தோன்றி, காற்று முதலான மற்ற பூதங்களின் நுண் அணுக்கள் வளர்தற்கு இடமாகி, எத்தகைய வடிவமும் காணப்படாத வானத்தின் முதல் ஊழிக்காலமும், அந்த வானத்தினின்று பொருள்களை இயக்கும் காற்று தோன்றி வீசிய முறைமுறையான இரண்டாம் பூதத்து ஊழியும், அந்தக் காற்றினின்று சிவந்த தீயானது தோன்றிச் சுடர்வீசித் திகழ்ந்த மூன்றாம் பூதத்து ஊழியும், அத்தீயினின்று நீர் தோன்றிப் பனியும், குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும், அந்த நான்கு பூத அணுக்களினூடே பின்னர் பண்டு முறையாக வெள்ளத்தில் முழுகிக் கரைந்து, அழிந்த நில அணுக்கள் அங்கு இருந்து மீண்டும் தம் சிறப்பான ஆற்றல் மிக்குச் செறிந்து, திரண்டு முன் சொல்லப்பட்ட நான்கு பூதங்களின் உள்ளீடாகக் கொண்ட ஐந்தாவது பெரிய நிலத்து ஊழியும் என்று ஐம்பூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்றும், அவற்றின் வழி உலகமும் தோன்றின என்று அண்டத்தின் மாற்றமும், ஐம்பூதங்களின் தோற்றமும், உலகின் உருவாக்கமும் விவரிக்கப்பட்டுள்ளன்.

        அதேபோல,

               செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

                 தண்பெயல் தலைஇய ஊழியும் (பரி.2.5,6)

என்பதில், உலகம் உருண்டை வடிவினது; அது மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு; நெருப்பு உருண்டையாக ஒரு ஊழிக்காலம் விண்ணில் சுழன்று கொண்டிருந்தது; நாளடைவில் மேற்பகுதி வெப்பம் குறைந்து பனிப்படலமாகப் படிய ஒரு ஊழிக்காலம் எடுத்துக்கொண்டது. அதன்பின் பனி உருகி நீராக மாற, தரைப்பகுதி தலைதூக்க, அதில் உயிரினங்கள் உருவாகலாயின என்று உலகத்தின் உயிரனத் தோற்ற (பரிணாம) வரலாற்றையே திருக்குறள்போல, ஒன்றேமுக்கால் அடிகளில் கூறியுள்ளது பரிபாடல் என்பர் இன்றைய அறிவியலாளர்.

*****

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!